மாடத்தி

சினிமா விமர்சனம்

- Advertisement -

மாடத்தி எனும் சிறுதெய்வத்தின் கதை. வாழ்ந்து தேய்ந்து கொண்டிருக்கும் மாடத்திகளின் கதை.

இன்னும் ஏன் இப்படியே இருக்கிறோம் என வெட்கப் படவைக்கும் படம். என்று நாம் மனிதர்கள் ஆவோம்? என ஏங்க வைக்கும் படம். பலருக்கு இப்படியெல்லாம் நடக்குமா! என ஆச்சரியப் பட வைக்கும் படம். இப்படத்தை லீலா மணிமேகலை எழுதி, இயக்கி, தயாரித்திருகிறார்.

பார்த்தாலே தீட்டு என கிராமத்தால் ஒதுக்கப்பட்ட புதிரை வண்ணார் சமூகத்தில், ஒரு 13 வயதுப் பெண், தனது வயதுக்கே உரிய துள்ளல்களுடன் வெளியே வந்து, உயர் சாதியினரின் உடல் பசிக்கு ஆளாகி, மாடத்தியாகும் கதை.

வேணியாக செம்மலர் அன்னம் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் கொடி கட்டிப் பறக்கிறார். தான்படுகிற கஷ்டம் தன் குழந்தை படக்கூடாது என்ற ஒரு தாயின் வலியை அழகாக பதிவு செய்திருக்கிறார். “ஏம்மா எப்பப்பாறு வஞ்சிக்கிட்டே இருக்கற?” என அழும் மகளை, அணைத்து ஆறுதல் கூறுமிடத்தில் நடிப்பின் உச்சம் தொடுகிறார். யோசானாவாக அஜ்மினா அருமை.கடைசியில் அழ வைக்கிறார்.

வசனங்கள் எந்த வித சமரசமும் இன்றி அத்தனை வசவுகளுடனும் வருகிறது. தொழில் நுட்பத்திலும் கடின உழைப்பு தெரிகிறது. ஜெஃப் டோலனும், அபிநந்தன் ராமானுஜனும், ஒளிப்பதிவில் மாயாஜாலம் செய்திருக்கிறார்கள்.சர்வதேச தரம். ஒலிப்பதிவு மிகத்துல்லியம். புகை வண்டி கடக்கும் காட்சியில் ஒலியும் ஒரு பாத்திரமாகிறது. திரைக்கதை யவனிகா ஸ்ரீராமும், ரபீக் இஸ்மாயிலும் அடிப்படையில் கவிஞர்கள் என்பதால் கவிதையாகவே நகர்கின்றன காட்சிகள்.

பெண்கள் வாழ்வில் பொதி சுமந்து கொண்டே இருப்பதை கழுதை எனும் படிமம் உணர்த்துகிறது. ஒன்றரை மணி நேரம் தான் சொல்ல வந்ததை எந்த ஒரு சமரசமும் செய்யாமல் சொன்னதற்காக லீனா மணிமேகலைக்கும், படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

படம் பார்த்த பின்னரும் வெகு நேரத்திற்கு மனதைப் பிசைகிறது. சற்றே ஆவணப் படம் பார்க்கும் உணர்வும், ஏற்கனவே படங்களில் பார்த்த க்ளைமாக்ஸ் காட்சியும் பலவீனங்கள். இந்த படம் பல இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. படம் நீஸ்டிரீம் எனும் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழில் இதுபோன்ற படங்கள் மேலும் பல வரவேண்டும். மலையாள சினிமா பாய்ச்சல் காட்ட. நாம் இன்னும் நாயகர்களையே நம்பிக்கொண்டிருக்கிறோம்.

சிதைத்த பெண்ணையே தெய்வமாக வழிபடும் முரண்பாடான சமூகம் என்றாவது ஒரு நாள் திருந்துமா?

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -