காலணிகளின் வரலாறு
எல்லோரும் நடந்து
தேய்ந்த பாதையில்
பயணத்தைத் துவங்குகிறேன்.
பாதங்களைக் கழற்றியெறிந்தவர்களின்
காலணிகள் நிராதரவாய்க் கிடந்தன.
மிதிப்பட்டக் காலணிகள்
ஏக்கமிகுந்த தோரணையில்
மழைத்துளியைக் கண்ணீராய்
வரித்துக் கொண்டன.
பிரிக்கப்பட்ட காலணிகள்
துயரத்தின் பக்கம்
முதுகு காட்டி படுத்திருந்தன.
வாரறுந்த காலணிகள்
யாசகம் தேடி அண்ணாந்திருந்தன.
பாதம் சிதைந்த காலணிகள்
மிச்ச நினைவுகளாய்த்
தனக்கொரு ஆல்பம் வேண்டி
மௌனத்திருந்தன.
எல்லோரும் நடந்து தேய்த்த
ஒரு பாதையிலிருந்து
என் பயணத்தைத் தொடங்குகிறேன்.
-கே.பாலமுருகன்