தெருவிளக்குகள்
போர்த்திவிடலாம் என்கிற
தீர்மானத்துடன்
வந்து சேர்கிறது இரவு.
அசைத்துவிடலாம் என்கிற
முடிவுகளுடன்
படர்கிறது வெப்பமிகுந்த காற்று.
கொத்திவிடலாம் என்கிற
ஆசையுடன்
குவிந்து கலைகிறது பறவை.
தொட்டுவிடலாம் என்கிற
திட்டத்துடன்
பெய்து வடிகிறது மழை.
சாய்ந்துகொள்ளலாம் என்கிற
ஆயாசத்துடன்
நடந்து வருகிறார் கிழவர்.
சலனமில்லாமல்
தியானியாக நிற்கின்றன
தெருவிளக்குகள்.
-கே.பாலமுருகன்