நீள் இரவொன்றின் தனிமை
திட்டமிடாமல்
பாகுபாடில்லாமல்
விருப்பு வெறுப்பில்லாமல்
மழை நகரத்தைச்
சுத்தப்படுத்தி விடுகிறது.
ஒரு மழை இரவில்
மொத்தக் காட்சிகளும்
தம்மைத் தாம்
கழுவிக் கொண்டு
புதிதாய் உருவாகின்றன.
அதுவரை
பல முகங்களைக்
கொண்டிருக்கும் நகரம்
மழை இரவில்
அனைத்தையும்
ஒதுக்கிவிட்டு
தலை நனைக்கிறது.
கடைசியாக
ஒரு தள்ளு வண்டிக்காரரின்
அரை தூக்கத்தில்
கரைந்து மௌனிக்கிறது
மழையின்
கடைசித் துளி.