பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி 6

****** கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் *******

- Advertisement -

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

சீரெடுத்து வாரேன் யம்மா சேர்த்து என்ன தேத்து என்று கொஞ்சிக்கொண்டிருந்த எஸ்.பி.பி திடீரென தன் காதலியைச் சீர் கொண்டுவரச் சொல்லக் காரணமென்ன? அதுவும் என்னவென்றுதான் பார்த்துவிடுவோமே!

வெண்மை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது தூய்மை. அறிவியலின்படி பார்த்தால் அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது வெண்ணிறம். முக்கோணப்பட்டகத்தில் வெள்ளொளியைச் செலுத்தினால் அது பல நிறங்களையும் பிரித்துக்காட்டும் என்கிறது இயற்பியல் கூற்று.

அமைதியை விரும்பும்போதும் வலியுறுத்தும்போதும் வெண்ணிறமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. அமைதிக்கொடியின் நிறமும் வெள்ளைதான். அமைதிக்கான தூதுவனாய்க் கருதப்படும் புறாவும் வெண்ணிறம்தான். வெள்ளைநிறத்துக்கு மனத்தை அமைதிப்படுத்தும் குணம் இருப்பதாலேயே பள்ளிச்சீருடையின் மேற்சட்டைகள் வெள்ளை நிறத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. பார்த்ததும் கண்ணுக்குத் தெரியும் மேலாடை வெண்ணிறத்தில் இருக்கும்போது மாணவர்களின் மனத்தில் வன்மம் தோன்றாது.

வெள்ளைநிறம் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருபவை பால், மேகம், பஞ்சு,மல்லிகைப்பூ, சுண்ணம் …இன்னும் பல..! நீலவானத்தில் திட்டுத்திட்டாக வெண்மேகங்கள் பஞ்சுமூட்டைகள் போல மிதந்துவரும் அழகை விரும்பாதவரும் உண்டோ! 

வெண்மேகம் பார்க்க அழகு .. அந்த வெண்மேகமே நீர்ச்சூல் கொண்ட கார்மேகமாய் மாறி இவ்வுலகும் உயிர்களும் தழைக்க மழையாய்ப் பொழிகிறது. மழை என்பதே வெண்மேகம் இப்புவிக்குத் தரும் சீர்தான். அப்படியொரு வெண்மேகத்திடம்தான் சீர் கேட்கிறார் நம் எஸ்.பி.பி.

திருமணமாகி மூன்றே நாள்களில் தன் கணவனை இழந்த ஒரு பெண். அவளாகவே விரும்பிக் கைம்பெண் கோலத்தை ஏற்றுக்கொண்டு வாழ்கிறாள். அவளை விரும்பி மணக்க எண்ணும் ஓர் இளைஞன் அவளோடு கனவினில்  பாடுகிறான். கைம்பெண் என்பதால் அவள் வெள்ளைப்புடவை கட்டவில்லை என்றாலும் பொட்டில்லாத நெற்றியில் தீற்றியிருக்கும் வெண்ணிற திருநீற்றுக் கீற்றின்மூலம் சொல்லிவிடுகிறார் இயக்குநர். 

வெண்மேகமே .. காதல்மழை  என்னும் சீர் கொண்டு வா.. நான் நிலமாய்க் காத்திருக்கிறேன் உனக்காக என்கிறார் எஸ்.பி.பி. காதல்மன்னன் என்று கலைஞானி கமலஹாசனைச் சொல்கிறார்கள்.. என்னைக் கேட்டால் எஸ்.பி.பிதான் காதல்மன்னன் என்பேன்.. அத்தனை காதல் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொருவிதத்தில் காதலால் கசிந்துருகியிருப்பார். எஸ்.பி.பியுடன் பலர் இணைந்து பாடினாலும் ஜானகியம்மா இணைந்து பாடும்போது அந்தப்பாட்டில் கூடுதல் அழகும் இனிமையும் சேர்ந்துவிடும். இருவருமே குரலில் பலவிளையாட்டுகள் விளையாடுவதில் ஒருவர்க்கொருவர் சளைத்தவர் அல்லர்.

இந்தப்பாடலில் ஒரு வியப்பு என்னவென்றால் கைம்பெண்ணான நாயகி மங்கலகரமான இளமஞ்சள் நிறத்தில் புடவை கட்டிக் கைகளில் ஒளியேற்றப்பட்ட சிற்றகல்கள் நிரம்பிய தட்டினை எடுத்து வருகிறாள். ஆனால் நாயகனோ பாட்டில் முக்காற்பகுதியில் ( வெறும் முப்பதே நொடிகள்தாம் சிவப்புநிற உடையில் வருகிறார் ) வெண்ணிற ஆடையே அணிந்திருப்பார். இதெல்லாம் புரட்சியா? என்று நீங்கள் நினைக்கலாம். இயக்குநரின் சிறுசிறு குறியீடுகளாக நான் பார்க்கிறேன்.

“ஸ்ரீ ராகம் ஒன்று நீ பாடு கண்ணே” என்று ஆசையில் தோய்த்து பாடுபவர் அடுத்தவரியான “செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே” என்பதில் ஏக்கத்தில் தோய்ந்து உருகுகிறார். பாட்டொன்று பாடி அதன்பின்னே தேனை ஊற்ற/ஊட்ட வேண்டுமாம்… இதற்குப் பெயர்தான் இசைத்தேன் போல. பெயரிலேயே கங்கையை வைத்திருப்பதால் சொற்பாய்ச்சலுக்குச் சொல்லவா வேண்டும்?! ஒவ்வொரு வரியிலும் அவரின் தமிழ்ச்சுவை மிளிர்கிறது.

செவ்வாயில் தேனை ஊற்றினால் மனம் ஓரிடத்தில் எங்கே நிலைகொள்ளும்? ” காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்” கூட்டிச்செல்கிறேன் வா என்று சொல்கிறார் எஸ்.பி.பி. அதைத் தொடர்ந்து சீர்கொண்டு வா என்னும் வரியில் அவர் இன்னும் குரலை மென்மையாக்கி வா என்றழைக்கிறார். இதே வரியினை இப்பாடலில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமாகக் கொஞ்சிப் பாடியிருக்கிறார்.

உன் கண்களும் கைகளும் என்னைத் தீண்டாத போது என் தேகமானது நீர்காணா மலர்போல வாடிவிடுகிறது, நீ தீண்டியதும் தேகமானது இன்பப்பூக்களைப் பூக்கத் தொடங்குகிறது என்று நாயகிக்காக ஜானகியம்மா உருகிப்பாட …. அந்த உருகுதலையும் கொஞ்சுதலையும் இருமடங்காக்கி “ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ” என்று தவிப்பின் உச்சத்தில் ஏங்குகிறார். கேட்கும் ஒவ்வொருவருக்கும் அதே தவிப்பினைக் கடத்தவும் செய்கிறார். அதுதான் அவரது குரல் செய்யும் மாயம். 

இது இனிய வசந்த காலம் என்று பாடியதும் இலைகளில் இளமை துளிரும் கோலம் , இதுவே இனி என்றும் நிரந்தரம் என்று மனத்தில் காதலையும் நம்பிக்கையையும் சேர்த்தே விதைக்கப் பாடுகிறார். இலைகளில் இளமை துளிர்ந்தால் எங்ஙனம் இருக்கும்? செழிப்பான இலை, பசுமையான இலை என்றெல்லாம் சொல்லாமல் இலைகளில் இளமை துளிர்க்கிறது என்பதில்தான் கங்கைஅமரனின் புலமையும் உச்சத்தில் நிற்கிறது.

நான் பாடும் பாடல் என்னும் படத்திலுள்ள ” சீர் கொண்டு வா வெண்மேகமே ” என்ற பாடலைத்தான் இவ்வளவு நேரமும் பார்த்தோம். பொறுமையும் மென்மனமும் கொண்ட கதாப்பாத்திரத்திற்கு நடிகர் சிவகுமார் சரியான தேர்வு. பல படங்களில் துறுதுறுவென நடித்திருக்கும் நடிகை அம்பிகாவோ இதில் அமைதியான கதாப்பாத்திரத்தில் சிறப்பித்திருக்கிறார்.

கைம்பெண் விதிமுறைகள் என்ற வலைக்குள் சிக்கி மறுமணம் எனும் மான் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் கதைதான் இது… படத்தின் முடிவு இப்போது பார்க்கும்போது ஏற்கும்படியாக இல்லையென்றாலும் பாடல்கள் அத்தனையும் தேன்சொட்டுகள் தான்.

இப்பாடல் முழுவதும் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் சொற்களுக்கு அழுத்தம் தராமல் பூப்போன்று கைக்குழந்தையைத் தூக்குவதுபோல மிகமென்மையாகவே பாடியிருப்பர். மென்மையான உணர்வுகளைக் கடத்துவதற்கு ஏற்றவாறு தம் குரல்வளையைப் பண்படுத்தி, அதிர்வெண்ணைக் கூட்டிக்குறைத்து தம் குரலை வெளிப்படுத்துவதில்தான் எஸ்.பி.பி மகா கில்லாடியாயிற்றே.

ஒரு அழகான, நல்ல பாடல் என்று சொல்லவேண்டுமென்றால் பாடல் வரிகளும் அதைத் தாங்கிச் செல்லும் இசையும் பாடலைக் காட்சிப்படுத்தும் முறையும் அப்பாடலை அதற்கான உயிர்ப்போடும் உணர்வோடும் பாடும்விதமும் மிகச்சரியாக அமையவேண்டும். அப்படி அமையப்பட்ட பாடல்தான் இதுவும். பதிவைப் படித்துவிட்டுப் பாடலைப் பார்த்தால்தான் விருந்து நிறைவாக அமையும். பார்த்துவிடுங்கள்.

கனவில் வெண்மேகத்திடம் சீர் கேட்ட எஸ்.பி.பிக்கு மெய்யாகவே தாகம் எடுத்துவிட்டது போலும்.. எனக்கு தாகமாக இருக்கிறதே நீ தண்ணீர் தர வேண்டாமா? என்று தலைவியிடம் கேட்கிறார்.. அதுவம் சும்மா கேட்கவில்லை… ஆட்டமாடிக்கொண்டே கேட்கிறார். அவர் தாகம் தணிய தண்ணீர் கிடைத்ததா? செவ்வாயில் தண்ணீர் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரிந்துகொள்வோம்.

கங்கையின் காதல்தேரில் நிலாவின் ஊர்கோலம் தொடரும்…..

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

10 COMMENTS

  1. பாடல்கள் தான் அந்த காலகட்டத்தின் திரைப்படங்களில் உயிர்நாடியாக அமைந்திருக்கிறது. இப்போது அந்த திரைப்படங்களை பார்ப்பது பெரிய காமெடி ஆகவே இருக்கிறது. அதிலும் இந்தப் பாடலில் சிவகமாரின் காதல் ரசம் சொட்டும் நடிப்பு அடடா ஆஹா… முடியல…???? . மற்றபடி அருமையான கட்டுரை பிரபா. வாழ்த்துக்கள். ??

  2. வெண்மை நிறம் பற்றி விவரித்த அழகு.. சிறப்பு அக்கா..
    மாணவர்களின் மனத்தில் வன்மம் தோன்றாமல் இருக்கவே பள்ளிச்சீருடைகள் வெண்மையாக இருக்கின்றன என்ற கருத்து புதுமையாக உள்ளது. ஆனால் இந்த காலகட்டத்திற்குத் தாங்கள் கூறும் வெண்மை பற்றிய உண்மை ஏற்புடையதாக இல்லை ஏனென்றால் வெள்ளை உடை அணிந்துதான் கொள்ளையடிக்கிறது ஒரு பெருங்கூட்டம்.

    ‘மழையே வெண்மேகம் தரும் சீர்தான்’ அருமை ?

    வெள்ளொளி, முப்பட்டகம் என்று எனக்கு மிகப்பிடித்த இயற்பியல் பாடத்தை மீண்டுமொருமுறை நினைவூட்டியதில் மகிழ்ச்சி..

    பாடும் நிலா பாடும் விதங்களைப் பற்றிய விவரிப்புகளில் சற்று போதாமைகள் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது மற்றபடி
    தங்களின் பதிவு அருமை தொடர்ந்து எழுதுங்கள் படித்துச் சுவைக்கிறோம்..

    • தொடர்ந்து படித்து ஊக்கமளிக்கும் தங்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்வும் மோகன் 

  3. சிறப்பு தொடர்ந்து ஒவ்வொரு கங்கை அமரன் கட்டமைத்த பாடல்களை மீண்டும் நீங்கள் உங்கள் சொற்களில் கட்டமைத்து எங்களை இன்னும் ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறீர்கள்.. சீர் கொண்டு வரும் வெண் மேகத்தை எங்கள் குடைக்குள் அள்ளித் தெளிக்கும் உங்கள் வார்த்தையில் கரைந்துபோகிறேன்.சிறப்பான ஒரு பாடலை எடுத்து சொன்னதில் மகிழ்ச்சி தொடரட்டும்…. ??

    • நிறைய அருமையான பாடல்களைக் கங்கைஅமரன் எழுதியிருக்கிறார் அண்ணா. அதில் சிலவற்றை எழுதும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

  4. அருமையான படைப்பு
    வாழ்த்துக்கள்
    பிரபா தேவி

    • மிக்க நன்றி இரஞ்சித். தொடர்ந்து படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். 

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -