எதையோ சொல்ல சொல்ல நெஞ்சில் கீதம் எழுகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த எஸ்.பி.பியின் நிலை என்ன? வாருங்கள் பார்ப்போம்.
காதல் பாடல்கள் எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டன.. ஆனாலும் ஒவ்வொரு பாடலிலும் அக்காதலின் பரிமாணம் ஒவ்வொருவிதமாகவே மிளிர்கிறது. சொல்லித் தீர்வதில்லை காதல்..! அதுபோல எத்தனை கொண்டாடினாலும் சலிப்போ அலுப்போ தட்டுவதுமில்லை.. ஒரு மழலையின் சிரிப்பைப்போல காதலானது எப்போதுமே ஒரு புத்துணர்வையும் புதுத்தெம்பையும் நமக்குள் சட்டென்று கடத்தும் வல்லமை கொண்டது.
**** சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு
ஓடும்
அதைக் கண்டதும் மேகங்கள் மந்திரப் பூமழை தூவும்
தூவும்*****-
பார்ப்பதற்கு எளிமையான வரிகளாகத் தோன்றினாலும் அது தாங்கியிருக்கும் கற்பனையும் கவித்துவமும் உச்சம்.. எளிய எளிய சொற்களையே அழகாகக் கோத்தெடுக்கும் சொற்கட்டு எல்லோர்க்கும் கைவருவதில்லை. அப்படியமைந்த பாடல்கள் எக்காலமும் நம்மைத் தென்றலாய்த் தீண்டுமென்பதிலும் துளியும் ஐயமில்லை.
எங்கும் நிறைந்திருக்கும் காற்றுதான் புல்லாங்குழல் நுழைந்து வெளிவந்தால் இசையாகிறது.. அதுபோல கவிதையில் கொட்டிக்கிடக்கும் காதலானது எஸ்.பி.பியின் குரல்வளையில் நுழைந்து வெளிவரும்போது அத்தனை மென்மையைப்பூசி நம் உளம் மயக்கும் பாடலாக மாறிவிடுகிறது.
****நாணத்திலே முந்தானை நனைந்தது
நாயகனை எண்ணி எண்ணி
கன்னி இவள் தேகம் சிவந்தது
கை விரல்கள் பின்னிப் பின்னி**** – கைவிரல்கள் பின்னிக்கொண்டதன்மூலம் செம்மையைத் தேகமெங்கும் கடத்துகின்றன விரல்கள் என்னும் கவிஞரின் கற்பனை அருமை..
****வஞ்சியின் அழகை சொல்லச் சொல்ல
இங்கு செந்தமிழும் கொஞ்சம் சிந்தித்தது **** – காதலியின் அழகைப் புகழாத காதலன் இப்புவியில் யாரேனுமுண்டா என்ன? அழகைப் புகழும் காதலன் அதை அழகாய்ப் புகழ்கையில் கவிஞனாகிவிடுகிறான்.. அழகைச் சொல்வதற்கு நம் தமிழே சிந்தித்ததாம் ..!
இசைஞானியின் இசையல்லாத வேறொரு மாறுபட்ட இசையில் இப்பாடல் வடிவம் பெற்றிருக்கிறது. மென்மையோடு ஒருசிறு துள்ளலான மகிழ்வை மொழியும் இசை அது.. அதனால் தொடக்கம் முதல் இறுதிவரை நம் எஸ்.பி.பியின் குரலில் சிற்றோடை நீர்போல துள்ளிக்கொண்டு ஓடுவதை நாம் உணரலாம்.
***கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம்
தோட்டம்
அங்கு கட்டளைக்கு வந்துவட்டமிடும் வண்டு கூட்டம்
கூட்டம் ***** – என்று இரண்டாம் சரணத்தில் தொடங்கும் எஸ்.பி.பியின் குரலும் அவர் ஒவ்வொரு சொல்லையும் தெள்ளத்தெளிவாகப் பலுக்கும் முறையும் எப்போதுமே நம்மை வியப்பில் ஆழ்த்துபவை… எந்தப்பண்ணில் அவர் பாடினாலும் ” இது என்ன வார்த்தை சொல்கிறார்?” என்று நாம் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டியதில்லை.. ஒவ்வொரு சொல்லும் அப்படியே பளிங்குபோல தெளிவாய் வந்துவிழும். சிலநேரங்களில் அவர் கூடப்பாடும் பாடகியர் சிலரின் வார்த்தைகள் அங்ஙனம் தெளிவாக இல்லாமல் கீச்சென்ற குரலொலியில் பாடல் ஓடிவிடும்.. அவ்வகையில் எஸ்.பி.பி தனித்துவமாகவேதான் ஒவ்வொரு பாடலையும் பாடியிருக்கிறார் என்பது இறைவன் அவர்க்குக் கொடுத்த வரமன்றி வேறென்ன!!!
நிறைய பாடல்களில் ஆணை என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.. இங்கே கவிஞர் அதைவிடுத்து ” கட்டளை” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது அவரின் மாறுபட்ட பார்வையை நமக்கு புலப்படுத்துகிறது. என்னுடைய பாட்டுத்தோட்டத்தில் வந்து தேனில் குளித்து மகிழுங்கள் என்று சொல்வண்டுகளுக்குக் கட்டளை இட்டிருப்பாரோ எஸ்.பி.பி?
**** மோகத்திலே நெஞ்சு துடித்தது
மாலை இடும் நாளை எண்ணி
பூவிதழோ தந்தி அடித்தது
புன்னகையின் பேரெழுதி **** – புன்னகையின் பெயரை எழுதி அவளின் பூவிதழானது தந்தியடித்ததாம் ..! என்னவொரு கற்பனை பாருங்கள்.! யார் இந்தக் கவிஞர் என்று சிந்தித்துக்கொண்டே படிக்கிறீர்களா? எப்படியும் அவர் பெயரைச் சொல்லத்தானே போகிறேன்..
***** பேச மொழி இல்லை வார்த்தை வரவில்லை
இன்பத்திலே மனம் தித்தித்தது***** – காதலியோ புன்னகையை எழுதி தந்தியனுப்புகிறேன் என்று சொல்கிறாள்.. காதலனோ என்னிடம் பேசுவதற்கு மொழியே இல்லை.. அப்படியே ஒரு மொழி கிடைத்தாலும் வார்த்தைகள் எல்லாம் தொண்டைக்குழிக்குள்ளேயே புதைந்துவிடுகின்றன. வாயைவிட்டு வார்த்தைகள் வெளியே வரமாட்டேன் என்கின்றன என்கிறான்.
இன்பத்திலே மனம் தித்தித்தது என்று அதற்கான காரணத்தைப் பாடிவிட்டு மீண்டும் பல்லவிக்குச் செல்கிறார் எஸ்.பி.பி.
*****மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்லச் சொல்ல
நெஞ்சில் எழுந்தது கீதம்**** – மெல்ல மெல்ல என்ற சொல்லை அத்தனை அழகாக மென்மையில் தோய்த்தெடுத்துப் பாடுகிறார். அவர் பாடியதைக் கேட்டால் எல்லோர்க்குமே மெல்ல நடக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும்போல…
அடுத்த வரிகள் மிகவும் அழகாக எழுதப்பட்ட வரிகள்.. எழுதப்பட்டவிதத்திலும் பாடப்பட்டவிதத்திலும் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். சட்டென்று குற்றால அருவியின் கீழ்நின்றாற்போல் மனத்திற்குள் அப்படியொரு சாரலை அடித்துச்செல்லும் வரிகள்.. கேட்கும்பொழுது மெய்யாகவே காதில் தேன் பாய்ச்சும் வரிகள் அவை.
**** கன்னங்கரு விழிகள் பேசும்
புத்தம்புது மொழிகள்
கன்னங்கரு விழிகள் பேசும்
புத்தம்புது மொழிகள் கோடி *****-
என்று பாடிவிட்டு மீண்டும் மெல்ல மெல்ல என்று தொடங்கும் வரிகளில் நாமும் மயங்கத்தான் செய்கிறோம்..
உரிமைகீதம் என்ற படத்தில் நாயகன் பிரபுவும் நாயகி ரஞ்சனியும் பாடிய பாடல்தான் இது.. நம் பாடும்நிலா எஸ்.பி.பியுடன் சசிரேகா இணைந்து பாடிய பாடல் இது. முகத்தின் பாவனைகளை நொடிக்குநொடி மாற்றுவதில் பிரபு ஒரு கில்லாடிதான்..இப்பாடலில் அத்தனை ஈர்ப்பு இருக்கும் அவரின் பாவனைகளில்…
சரி இந்தப்பாடலை எழுதியவர் யாரென்றுதானே கேட்கிறீர்கள்! தனது முதல்படத்தை இயக்கும்போதே தனது கவித்திறனையும் பாடலாக்கி நமக்கு விருந்துவைத்திருப்பவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். இவருடைய படங்களில் பெரும்பாலும் பாடல்களை இவரே எழுதியிருப்பார். நம் எண்ணத்தை இன்னொருவரிடம் சொல்லி அதை எழுத்தாக்குவதைக்காட்டிலும் நாமே எழுதினால் முழுமையாய் நம் எண்ணம் உருப்பெற்றுவிடும் என்ற விருப்பமும் தன் எழுத்தின்மீதான நம்பிக்கையுமே ஆர்.வி.உதயகுமாரின் பெரும்பலமாக இருந்திருக்கிறது என்றால் மிகையில்லை. இப்பாடலில் நிறைய அடுக்குத்தொடரைப் பயன்படுத்தியிருப்பதிலிருந்தே அவரின் கவித்துவத்தின் அழகினை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
இசைஞானி இளையராஜா என்னும் மாயவலைக்குள் சிக்கி மயங்கிக்கிடந்த உள்ளங்களைக் கொஞ்சம் கொஞ்சம் வேறொரு மயக்கத்தையும் காட்டலாம் என்று முயன்று அதில் வெற்றிபெற்ற இசையமைப்பாளர்களின் வரிசையில் இப்பாடலுக்கு இசையமைத்த மனோஜ்-கியான் இணையரும் உண்டு. வடக்கிலிருந்து வீசும் வாடைக்காற்றைப்போல வடக்கிலிருந்து தமிழகம் வந்து இசையமைத்த இவர்களின் இசையில் கொஞ்சம் வடக்கத்திய இசையின் சாயல் இருக்கும்…
ஒருமுறை இந்தப்பாடலைக் கேட்டுப்பாருங்கள்.. அப்புறம் அடிக்கடி கேட்கத் தோன்றும்.. முணுமுணுக்கத் தோன்றும்.
பாடலாசிரியராக சட்டென்று நம் நினைவில் வராத ஒரு கவிஞர், ஆனால் அழகான பாடல்களை அள்ளிக்கொடுத்த திறனான பாடலாசிரியர் ஆர்.வி.உதயகுமாரின் பாடல்களை நாம் தொடர்ந்து பார்க்கலாம் , இல்லையில்லை கேட்கலாம் நம் பாடும் நிலாவின் தேன்குரலில்.
புத்தம்புது மொழிகள் பேசிக்கொண்டிருந்த எஸ்.பி.பி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை எனக்கு.. என்ன சொல்ல..? என்னதான் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று அடுத்தவாரம் பார்த்துவிடுவோமே..!
நிலாவின் உதயம் மஞ்சள் பூசும் இன்னும்..!
இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
மீண்டும் ஒரு சிறப்பான பதிவு வாழ்த்துகள்…
பிரபலமில்லாத பாடலாசிரியரின் வரிகளையும் பிரபலமில்லாத இசையமைப்பாளரின் இசை கோர்வையும் அழகாய் கோடிட்டு கண்முன் நிறுத்திய பிரபாவுக்கு வாழ்த்துகள் ??
பேரன்பும் பெருமகிழ்வும் அண்ணா ??❤???
அடடா.. இப்படியொரு பாடல் இருப்பதையே இப்பொழுதுதான் முதன்முறையாக கேட்கிறேன் அருமையான பாடல் விழிகள் மொழிகள் என்று ழ கரத்தை உச்சரிக்கும்போது அழுத்தமும்,இனிமையும் மாறாமல் பாடுவதில் நம் எஸ்.பி.பிக்கு நிகர் அவரேதான்..
தங்களின் பதிவின் வழியே நல்லதொரு பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
கேட்டு மகிழ்ந்தேன் தங்கள் பதிவைப் போலவே பாடலும் செம்மை..????
தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள் ?
பேரன்பும் மனமகிழ்வும் மோகன். ??❤??
இந்த இனிய பாடலை இனி அடிக்கடி கேட்டு மகிழுங்கள்.
பாடலாசிரியராக சட்டென்று நம் நினைவில் வராத ஒரு கவிஞர் – ஆமாம்… தொடர் அறிமுகத்தில் நிறைய சொல்லுங்கள் இப்படி
ஆமாங்க… நிறைய புகழ்பெற்ற பாடல்களை எழுதியிருக்கிறார் அவருடைய படத்தில். ஆனால் ஒரு பாடலாசிரியராக புகழொளி வட்டத்திற்குள் காணப்படாத நற்கவிஞர்.