பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 21

தாய்மொழி நீ கேளு நேர்வழி நீ தேடு…!

- Advertisement -

சிங்காரவேலன் படத்தில் பாட்டு பாடிக்கொண்டிருந்தவர் அதை முடித்ததும் ஏதோ பாட்டு சிங்காரமான பாட்டு ஒன்னு கேட்குதுன்னு நம் எஸ்.பி.பி சொல்லிக்கொண்டு இருந்தாரே என்னவாயிற்று என்று பார்க்கலாம் வாருங்கள்.

நம் எஸ்.பி.பிக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. படத்தின் தொடக்கப்பாடல் எஸ்.பி.பி பாடினால் அது அப்படத்தில் ஆகச்சிறந்த பாடலாகவும் வெற்றிப்பாடலாகவும் அமைந்துவிடும். அதைப்போன்றதொரு வெற்றிப்பாடலைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

இணைப்பாடல்களிலேயே தன்னுடைய தனிச்சிறப்பினை மிக அழகாக வெளிப்படுத்தும் நம் எஸ்.பி.பி தனிப்பாட்டு என்றால் சொல்லவா வேண்டும்? சும்மா புகுந்து விளையாடி, வீடென்ன மாளிகையே கட்டிவிடுவார்.

பொதுவாகவே மெய்யியல் கூற்றுகள் , அறிவுரைகள் என்று அமைந்த பாடல்கள் சோகம் மகிழ்ச்சி என்று இரு பரிமாணத்தையும் தன்னோடு பொருத்திக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை.. இந்தப்பாடல் மகிழ்வினை மற்றவர்க்குக் கடத்திக்கொண்டே நற்சிந்தனையையும் ஊட்டும் பாடலாக அமைந்திருக்கிறது. மகிழ்ச்சி என்றதுமே முதலில் நம் கண்முன் விரிவது மழலையுலகம்தான்… ஆதலால் சிறார்களுக்குப் பாடுவதாக அமைந்திருக்கிறது இப்பாட்டு.

பாராட்டுவார் பலர் வாழ்த்துவார்

பலனில்லையேல் பின் தூற்றுவார்

உண்மை சொன்னால் விலை பேசுவார்

உறவாடியே உனை மாற்றுவார்

இசை கொஞ்சம் மென்துள்ளிசையாக இருந்தாலும் எஸ்.பி.பி பாடுவது மெல்லிசைப்பா தான்.. பட்டென்று நறுக்குவதுபோல் பாடாமல் கொஞ்சம் இழுத்துநீட்டிப் பாடுவது விரலிலிருக்கும் தேனைத் தரையில் சொட்டவிட்டால் கொஞ்சம் கம்பியாய் இழுத்து அது தரையைத்தொடுவதுபோல இருக்கிறது. தூற்றுவார் மாற்றுவார் என்று எஸ்.பி.பி பாடுவதையெல்லாம் பிள்ளைகளுக்குப் போட்டுக்காட்டுங்கள். று என்ற எழுத்தின்முன் வேறு எழுத்துக்கள் இருக்கும்போது அதை எவ்வாறு சொல்லவேண்டுமென்றும் (நன்று, மிடறு, ஏறு, அவ்வாறு ) அதுவே அதன்முன் ற் என்ற ஒற்றெழுத்தே வரும்போது எவ்வாறு சொல்லவேண்டுமென்றும் (ஒற்று, கற்றல், வற்றல், நற்றமிழ்) நாம் தெரிந்திருக்க வேண்டும். இதையெல்லாம் சிலர் கவனத்தில் கொள்வதேயில்லை… மொழியினைப் பலுக்கும் முறையென்பது நாம் மொழிக்குச் செய்யும் முதல்மதிப்பு, முதல்சீர். அதை என்றுமே எம்மொழிக்குமே எஸ்.பி.பி தவறியும் குறைத்துச் செய்ததேயில்லை. பாட்டுக்காதலனாக மட்டுமல்ல மொழிக்காதலனாக இருந்தால் மட்டுமே இதெல்லாம் நிகழும்.

தாய்மொழி நீ கேளு நேர்வழி நீ தேடு

நேர்மையுள்ள தோளில் மாலை விழும்

என்றும் சொந்தமும் பந்தமும்

உன் வழி தேடி வரும்..ஹ்ஹ்ஹாஆஆ….

தாய்மொழி நீ கேளு நேர்வழி நீ தேடு என்ற வரியை கொஞ்சமாய் அழுத்தம் கூட்டிப்பாடும்போதெல்லாம் நீரானது தன் வட்டத்திற்குள் வரும் எதையும் வெகு இயல்பாகத் தனக்குள் இழுத்துக்கொள்வதுபோல நம் மனத்தையும் தன் குரல்சுழலால் தனக்குள் இழுத்துவிடுகிறார். இதை அடிக்கடி கேட்டாலே ஒவ்வொருவர்க்கும் தாய்மொழியின்மீது பெரும்பிடிப்பு வந்துவிடும்.

என்றும் சொந்தமும் பந்தமும்

உன் வழி தேடி வரும்..ஹ்ஹ்ஹாஆஆ…. என்ற வரியைப் பாடும்போது படிக்கட்டுகளில் துள்ளியிறங்கும் இளைஞனின் உடல்மொழியைப்போலவே அவரின் குரல்மொழி இருக்கிறது.. அதுவும் இறுதியில்வரும் அந்தப் பண்  (இசையொலி, ஹம்மிங்) அடர்வான மகிழ்வினைக் கடத்துவதாக, அதாவது படிக்கட்டுகளில் துள்ளலோடு இறங்கி இறுதியில் இரண்டு மூன்று படிகளைத் தாண்டித் தரையில் குதிப்பதைப்போல இருக்கிறது..

நீ கேட்டிட பாட்டாகிறேன்

சோறு ஊட்டிட  தாயாகிறேன்

சுவை கூட்டிட கரும்பாகிறேன்

சுமை தீர்க்கவே மருந்தாகிறேன்

இந்த வரிகளைக் கேட்கும்போது சட்டென்று ஓர் அமைதி உள்ளுக்குள் புகுந்து மனத்தை அடைத்துக்கொள்கிறது.. ஒவ்வொரு வரிக்கும் ” ஆமாம் ஆமாம்” என்று அவர் கூற்றினை மனம் ஒத்துக்கொள்கிறது.. நீ பாடுவதைக் கேட்கத் தொடங்கி, நீயே பாட்டாக எமக்குள் புகுந்து பரிமாணம் கொண்டதையெல்லாம் இறைச்செயல் என்றுதானே சொல்லவேண்டும் என்று பாட்டுத்தலைவனை, எஸ்.பி.பி எனும் பாட்டுத்தகப்பனை மனம் கொண்டாடுகிறது.. அம்மாதிரியான உணர்வுதான் இப்பாட்டைக் கேட்கும் ஒவ்வொருமுறையும் எனக்குள் எழுந்தது. உங்களுக்கும் அதே உணர்வு கட்டாயம் வரும் என்றே தோன்றுகிறது… கேட்டுப் பாருங்கள்.

நான் இங்கு நானில்லை

சாய்ந்திட தோளில்லை

நீயும் உண்டு உனக்கு நானும் உண்டு

இந்த வையகம் யாவிலும்

சொந்தங்கள் கோடி உண்டு ..ஹ்ஹ்ஹாஆ

நான் இங்கு நானில்லை சாய்ந்திட தோளில்லை என்ற வரியை அவர் பாடும்போது மெய்யாகவே ஒரு சோகம் வரவேண்டும்.. ஆனால் அந்தச் சோகத்தையும் தாண்டி நம் இதழ்களில் மென்முறுவல் தவழ்கிறது.. இல்லை என்பதைக்கூட இத்தனை சுவையாகப்பாடி நமக்குள் தன்னம்பிக்கை விதையை ஊன்றிட நம் எஸ்.பி.பியால் மட்டுமே முடியும்.

நீயும் உண்டு உனக்கு நானும் உண்டு

இந்த வையகம் யாவிலும்

சொந்தங்கள் கோடி உண்டு… ஹ்ஹ்ஹாஆ – கண்ணைமூடி இவ்வரியைக் கேட்கையில் பாடும்நிலா எஸ்.பி.பி, நம் அம்மாவைப்போல அப்பாவைப்போல நம் பக்கத்தில் உட்கார்ந்து நம் தலையைக்கோதி விடுவதுபோலவே இருக்கிறது.. ஆறுதலையும் தேறுதலையும் ஒருங்கே சுமந்து அவர் பாடியிருப்பது மட்டுமல்ல, அவர் அப்படித்தானே வாழவும் செய்தார்..

இரண்டு சரணத்தையும் எஸ்.பி.பியின் குரல்வழி நம் செவிக்குள் தேனாய்ப்பாய்ச்சி விட்டோமல்லவா! இப்போது பல்லவியைப் பார்க்கலாம் வாருங்கள்.

கிண்ணாரம் கிண்ணாரம் கேட்குது கேட்குது

கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது

ரோஜாக்களே..

காதோரம் சிங்காரம் பாட்டு ஒன்னு கேட்குது

தந்தன தந்தன தாளங்கள் போடுது

ரோஜாக்களே..

அன்பெனும் கோட்டையிலே

அண்ணனின் ராஜ்ஜியமே

இன்பங்கள் என்றென்றும்

உங்களின் கைவசம் தானே….

பாட்டின் தொடக்கமே அடிக்கடி பயன்படுத்தப்படாத ஒரு சொல்லாக இருக்கிறது.. அதுவே மிக அழகாகவும் ஈர்க்கும் காரணியாகவும் இருக்கிறது. கிண்ணாரம் என்னும் இசைக்கருவியின் ஒலி கேட்கிறது என்று ஒரு கிண்ணாரக்குரலோனே பாடுவது அழகுக்கு அழகு சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது..

இந்தப்பாடலில் னகரம், ணகரம் , ழகரம் , ளகரம் , லகரம் எல்லாமே வந்திருக்கின்றன.. அதை அதற்கேற்றவாறு கொஞ்சமும் மாற்றாமல் பலுக்கிப் பாடுவதில் எஸ்.பி.பிக்கு நிகர் எஸ்.பி.பியே தான். பாட்டுக்கோட்டையிலே கொடிகட்டிப்பறந்த அரசாட்சி அவருடையது என்றும் இவ்வரிகள் பொருளைத் தருவதாக நான் பார்க்கிறேன்..

அதிலும் பாடல் தொடக்கத்தில் லாலாலா என்று வரும் அந்தப்பண் அப்படியொரு மயக்கும் தென்றலாக நம்மை வருடிச் செல்கிறது..

எஸ்.பி.பி தன் குரலில் செய்யும் மயக்கம் கிறக்கம் அழுத்தம் வியப்பு என ஒன்பான் சுவைகளையும் தன் முகத்தில் காட்டி நடித்திருப்பார் நம் இளையதிலகம் பிரபு… நடிகர் திலகத்தால் கூட செய்ய முடியாத முகபாவனைகளைப் பிரபு மிக எளிதாகவே செய்துவிடுவார், அதிலும் வெகுளித்தனமும் குறும்பும் கலந்த மகிழ்வினைப் பிரபு வெளிப்படுத்துவதற்கு மாற்று என்ற ஒன்றை நாம் கண்டிடவே முடியாது. இப்பாட்டிலும் அப்படித்தான்.. எஸ்.பி.பியின் குரலும் பிரபுவின் நடிப்பும் இசைஞானியின் இசையும் ஆர்.வி.உதயகுமாரின் வரிகளும் என ஒன்று கலந்து ஓர் அழகிய பாட்டுவானவில்லை உருவாக்கி நம் மனத்தைக் கட்டிப்போடுகின்றன.

இயக்குநர் செய்யாறு இரவி இயக்கிய  தர்மசீலன்  படத்திற்காக , பாடலாசிரியர் ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்தான் இது. காதுக்கும் கண்ணுக்கும் இனிமை சேர்க்கும்விதமாக அமைந்த இப்பாடல் நம்மைத் திரும்ப திரும்ப அதைக்கேட்கத்தூண்டும் தன்மையுடைத்தது… எத்தனைமுறை கேட்டாலும் திகட்டவில்லை.. கேட்டுப்பாருங்கள்…

பாட்டுவானில் நிலவின் உதயம் எத்தனை அழகானது என்று நாம் அறிந்து கொண்டோம்.. இன்னும் என்னென்ன உதயமாகியிருக்கின்றன என்று வரும்வாரத்தில் பார்க்கலாம்..

நிலா இன்னும் உதயகீதம் பாடும்…!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

4 COMMENTS

  1. மீண்டும் கவிதாயினி பிரபாதேவி அவர்களின் மிகச்சிறந்த விமர்சனம் பாடல் விமர்சனம் என்றில்லாமல் அதிலுள்ள உச்சரிப்பின் ஒழுக்கம் அதன் சிறப்பு அதற்காக இசையமைப்பாளர் பாடலாசிரியர் பாடகர் எல்லோரும் எவ்வளவு சிறப்பாக பணி செய்து இருக்கிறார்கள் போன்ற மிகச்சிறந்த விஷயங்களைச் சொல்லி பாடலை மீண்டும் நம்மை கேட்க வைத்த பிரபா தேவி அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துகள் ??

    • மிக அழகானதொரு பாட்டு அண்ணா. செய்வன திருந்தச் செய் என்பதில் அத்தனைபேரும் கவனமாக இருந்திருப்பது பாடலில் நன்கு தெரியும்.

  2. அடடா அருமைங்க!!…பாடலைக் கேட்கும் சுகம் போல உங்கள் எழுத்தும் படிக்க இதம் தருகிறது பிரபா.

    • மகிழ்வும் அன்பும் பிரியா… தனது நண்பனுக்காக இப்பாடலை இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் எழுதிக் கொடுத்திருக்கிறார். மிகச்சிறப்பான பாட்டு ??

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -