வெப்பம் கூடினால் பால் பொங்கத்தானே செய்யும்? இதையேன் இங்கே கூறுகிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள்.. காதல்கூட ஒருவகையில் பாலைப் போன்றதுதான்.. பால் என்பது ஒரு பொருள்தான்.. ஆனால் அதற்குள்ளேதான் பாலாடை தயிர் மோர் வெண்ணெய் நெய் என்பவை ஒன்றாய்க் கலந்திருக்கின்றன. அதைப்போலவே காதலுக்குள்ளும் உளநேயம், உடலீர்ப்பு, அவா, ஏக்கம், மோகம், மயக்கம் எனப் பல்வகையான உணர்வுகள் அமிழ்ந்து கிடக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்தனியாகவோ, ஒன்றோடொன்று இணைந்தோ அல்லது கூட்டமாகவோ வெளிப்படும் தன்மை கொண்டவை. உயிரும் உடலும் இணைந்து வெளிப்படுத்தும் உணர்வுதான் காதல். அகமும் புறமும் இணைந்த அழகிய இலக்கியமே காதல். இவற்றைப் பிரித்துப் பார்த்தல் பெரும்பிழை.
இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது ஓர் இணைப்பாட்டு. பாடும் நிலாவுடன் இணைப்பாட்டு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவர் ஜானகியம்மாதான். ஆம் இன்றைய பாட்டு அவர்களிருவரும் இணைந்து கலக்கிய பாட்டுத்தான். இப்பாட்டின் பல்லவியைத் தொடங்குபவர் ஜானகியம்மா.
நம் எஸ்.பி.பியோ முதல் சரணத்தைக் கையிலெடுத்துக்கொண்டார். இது முழுக்க முழுக்க மோகம் பொங்கிவழியும் ஒரு பாட்டு.. வெப்பம் சூடேற சூடேற பால் பொங்கும்.. மாறாகக் காதலில் மோகம் பொங்கபொங்க தேகம் சூடேறும்.
தேகம் பளிங்குக்கல் சாம்ராஜ்ஜியம்
ஹான்.ஹான்.
பல்சுவை சிந்தும் எழிலோவியம்
ஹோ ஹோ
மேற்சொன்ன இருவரிகளுக்கும் இசையமைத்திருக்கும்விதம் தனித்துவமானது.. வரிகளும்தான்.. பளிங்குக்கல் சிற்பம் என்றுதான் பொதுவாக வர்ணனைகள் இருக்கும்.. நம் டி.ஆரோ பளிங்குக்கல் சாம்ராஜ்ஜியம் என்கிறார். காதல் ஆட்சி செய்யும் பேரரசு ஒன்றின் பேரரசி அப்படித்தானே இருக்க முடியும்! உண்டிவில்லால் மரத்தில் தொங்கும் மாங்காயைக் குறிபார்த்து அடிப்பதைப்போல தொய்வில்லாத நேர்க்கோட்டில் குரலின் அதிர்வெண் பயணம் செய்யும்படிப் பாடுகிறார். இடையே ஜானகியம்மாவின் சிறுசிறு இசைப்பண்கள் மோகத்தை இன்னும் கூட்டுமாறு அமைகின்றது.
தேவலோக அமுதத்தைக் குழம்பாக எடுத்து
தங்கநிற வர்ணத்தைக் குழைக்கின்ற போது
நேர்கோட்டில் பயணம் செய்த நம் எஸ்.பி.பியின் குரல் அடுத்த இருவரிகளில் அலையலையாய் மெல்லாட்டம் போட்டு வளைந்து நெளிகின்றது. இரு வரப்புகளினூடே வளைந்து நெளிந்து பாய்ந்தோடும் வாய்க்கால் நீரைப்போல அவ்வரிகளைப் பாடுகிறார்..
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க
இறுதி இருவரிகளையும் எஸ்.பி.பி பாடும்போது அவர் குரலில் ஒரு புதுமையைக் கண்ட வியப்பும் மகிழ்வும் ஒன்றாய்க்கலந்து வெளிப்படுகின்றது. மறைபொருளை அறிந்துகொள்ளும் பேராவல், அரைகுறையாய் அறிந்ததினால் வந்த மயக்கம் இவ்விரண்டையும் தன் குரலில் புகுத்திப் பாடுகிறார். மோகத்தின் அதிர்வுகள் கூடக்கூட அவர் குரலின் அதிர்வெண் மென்மையை மேலும் மேலும் பூசிக்கொள்கின்றது.
முதல் சரணத்தின் முடிவினால் எஸ்.பி.பி பாடி முடித்ததும் ஜானகியம்மா ஒற்றை ஒற்றைச் சொல்லாக கேள்வியெழுப்புகிறார்.. அதற்குப் பதிலாக நம் எஸ்.பி.பி குழைந்து குழைந்து சிற்றொலிகளை எழுப்பும் அழகில் மயங்காதோர் யாரேனும் இருக்க முடியுமா? பேச்சே வராத நிலையில் மூச்சுக்காற்றின் ஒலியாக மெல்லிய ஓசையாக அவற்றைப் பாடுகிறார்.
தவிப்பதா?
ஆஹ்
துடிப்பதா?
ஓ
கொதிப்பதா?
ஹான் ஹான்
சிலிர்ப்பதா?
இதே கேள்விகளைச் சற்றே இசையை மாற்றி நம் எஸ்.பி.பி திரும்பக் கேட்கிறார். அதே இடைஇடைச் சிற்றொலிகளில் ஜானகியம்மாவும் மோகத்தைக் கிளர்த்துகிறார்.
தவிப்பதா?
ஆஹ்
துடிப்பதா?
ஆஹ்
அழைப்பதா?
ஆஹ்
அணைப்பதா?
ஆஹ் ஆஹ் ஆஹ்
அதன்பின் வரும் இடையிசையில் நடுவே, இமயமலையின் கொடுமுடியான எவெரெஸ்ட்டில் பனிப்பாறைகளுக்கு நடுவில் நின்று குளிரில் நடுங்கிக்கொண்டே பாடுவதைப்போலவே சில இசைக்குறிப்புகளைப் பாடுகிறார் நம் பாடும்நிலா… அதில் இன்னும் மோகத்தைத் தூண்டுமாறு சிற்றொலிகளை எழுப்புகிறார் ஜானகியம்மா.
தீம்தனக்கு தீம்
ஆஹ்
தீம்தனக்கு தீம்
ஆஹ்
தீம்தனக்கு தீம்
ஆஹ்
தீம்தனக்கு தீம்
ஆஹ்
ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
வெப்பம் மேலோங்க பால் பொங்குமாம்
ஏ ஏ ஏ ஏஹ் ஏஹ்
இது நீ படிக்கும் நூலாகுமாம்
ஹான் ஹான் ஹான்
இரண்டாவது சரணத்தை ஜானகியம்மா பாட, முதலிருவரிகளுக்கு நடுவே இசைப்பண்களைப் பாடும் எஸ்.பி.பின் குரலைக் கேட்கையில் பூந்தாதுக்குள் தேனெடுக்கச்சென்ற வண்டானது மூச்சுமுட்ட தேனைக்குடித்துவிட்டு பாடுவதைப்போலவே அத்துணை கிறக்கமாக மயக்கமாக இருக்கின்றது.
அஞ்சுதலை நாகமென
நெளிகின்ற கையானது
பிஞ்சு மலர் மேனியினைத்
தொட்டு விட சுடுகின்றது
ஒரு கணம் தடுத்திட நினைக்குது
பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது
என்று சரணத்தை ஜானகியம்மா முடித்து வைக்கிறார்.. அடுத்து பல்லவியை நம் எஸ்.பி.பி தான் பாடுகிறார்.
மோகம் வந்து தாகம் வந்து
என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து
உன்னைத் தடுக்க அ அ அ அ
என்று பாடும்போது உன்னைத் தடுக்க என்று சட்டென்று முடிக்காமல், தடுக்கும் அச்சத் தடையினை விட்டுவிடேன் என்று காதலியிடம் சிணுங்கும் குரலுடன் இழுத்து முடிக்கிறார்.
தவிப்பதா?
ஆஹ்
துடிப்பதா?
ஆஹ்
கொதிப்பதா?
ஓ
சிலிர்ப்பதா?
லலல லா
ஆஹ்
லாலல லா
ஆஹ்
லலல லா லாலல லா
பாடலின் இறுதியில் இசைப்பண்ணொலிகளை இருவரும் இணைந்து பாடுகின்றனர்.. இருந்தாலும் எஸ்.பி.பியின் குரலே தூக்கலாக அமைந்துவிடுகின்றது.. இத்துணைக் கிறங்கடிக்கும் மோகத்துடன் ஒரு லாலலா இருக்குமா? என்று சொக்கும் அளவுக்குப் பாடி நம்மை அயர்த்தி இசையென்னும் அமுதக்கடலில் நம்மை அமிழ்த்தியும் விடுகின்றார்…
உயிருள்ளவரை உஷா என்னும் திரைப்படத்தில் வரும் பாடல்தான் இது.. கங்கா நளினி இருவரும் நடித்திருந்த இப்பாடலின் உயிர்நாடி நான்கு முடிச்சுகளுக்கு நடுவே பலமாக அமர்ந்துகொண்டது.. ஆம் .. எஸ்.பி.பி , ஜானகியம்மா, இசை மற்றும் பாடலின் வரிகள்.. பாடலின் வரிகளுக்காகவும் இசைக்காகவும் நம் டி.ஆரைப் பாராட்டாமல் கடந்துசெல்லவே முடியாது.
இதுவரையிலும் டி.ஆரின் பாடல்வரிகளில் (இசையும் தான்) நம் எஸ்.பி.பி பாடிய பத்து பாடல்களைப் பார்த்திருக்கிறோம்.. இன்னும் சொல்லாத சில பாடல்களோடு அடுத்த செவ்வாயன்று இறுதிப்பதிவுடன் வருகிறேன்… அதுவரை காத்திருங்கள் மக்களே..!
தேசிங்குராசாவின் வானில் பாடும்நிலாவின் உலா தொடரும்..!
இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.