இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். மாற்ற அதிகாரத்தில் உங்கள் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் பல்வேறு மாற்றங்களைப் பற்றியும் கடந்த பகுதிகளில் பார்த்தோம். மாற்றத்திற்கும் மாறா நிலைக்கும் இடையே இருக்கும் இருமையைப் பற்றி சென்ற பகுதியில் பார்க்க ஆரம்பித்தோம் அல்லவா? இந்த நிலைமைக்கு மூல காரணமாக இருப்பது என்ன என்பதை இந்த பகுதியில் விரிவாக பார்த்துவிட்டு மாற்ற அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து கொள்ளலாம்.
இக்கரைக்கு அக்கரை பச்சை
இந்த பழமொழி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். நதியின் ஒரு கரையில் இருந்து கொண்டு மற்றொரு கரையை பார்த்தால் என்னுடைய கரையை விட எதிர்க்கரை மிகவும் பசுமையாக இருப்பது போல தோன்றும். ஆனால் நதியைக் கடந்து மறு கரைக்கு சென்று பார்த்தால் பெரிதாக எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் தொலைவிலிருக்கும் இன்னொரு கரை பசுமையானதாக தோன்றும். பார்ப்பதற்கு மிகவும் எளிமையான பழமொழியாக தோன்றினால் கூட இது மிகவும் ஆழமான கருத்துடையதாகும். சுருக்கமாக சொல்லப்போனால் மாற்றத்தின் மூல வித்தே இங்கேதான் தொடங்குகிறது. அண்டத்தில் இருக்கும் பொருட்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு கூட இது மிகவும் பொருத்தமானதாகும்.
எந்த ஒரு பொருளும் காலப்போக்கில் தொடர்ச்சியாக சில மாற்றங்களை அடைந்து கொண்டு வரும். அதனை எளிமையாக உங்களால் அளக்கவும் முடியும். ஆனால் மனம் என்ற ஒன்றை அளப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மனதின் மாற்றத்தை அதன் வெளிப்பாடுகள் கொண்டே நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள். எந்த ஒரு ஸ்தூல பொருளும் மாற்றம் அடைவதற்கு சில காலங்கள் பிடிக்கலாம். மனமோ நினைத்த கணத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் உடனடியாக கொண்டு வரும் வல்லமை கொண்டது. ஆதிமனிதன் தனது வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்ததன் விளைவுதான் நெருப்பு முதல் நீங்கள் கண்டுபிடித்த அனைத்து விஞ்ஞான பொருட்களும். எந்த ஒரு பொருளும் மாற்றத்தை அடைவதற்கு முதலில் அதனை மாற்ற வேண்டும் என்ற நினைப்புதான் வித்தாகிறது. ஒரு சாதாரண பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு உங்கள் நினைவு வித்தானால், மொத்த அண்ட சராசரமும் இயங்குவதற்கு எந்த மனம் முதன்மையாக செயல்படுகிறது? இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க மனிதன் கண்டுபிடித்த கருவி தான் மதம் என்பது. மொத்த மாற்றத்தையும் கொண்டுவரும் மிகப்பெரிய மனமாக கடவுளை உருவகப்படுத்திக் கொண்டு பின்பு அதற்கு உருவங்களையும் விதிமுறைகளையும் கொடுக்க ஆரம்பித்தான் மனிதன்.
அவ்ளோ பெரிய மாற்றத்தின் காரணகர்த்தாவாக கடவுளை நினைத்துக் கொண்டாலும் அதன் துணைகொண்டு அவன் செய்ய முயற்சித்தது ஒன்றே ஒன்றுதான். தனது மனதை மாறாத நிலைமையை கொண்டு செல்வது! எவ்வளவு பெரிய இருமை பாருங்கள்! ஆகமொத்தத்தில் மாறாமல் இருப்பதற்கு அடிப்படையாக மாற்றத்தை தான் மனிதன் வைத்துள்ளான். மனதால் எப்படி மாறாத நிலையை அடைய முடியும். இருவேறு நிலமை இருந்தால்தான் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எந்த ஒரு பொருளாளும் மாறமுடியும். மனமானது இறந்தகாலம், வருங்காலம், நிகழ்காலம் ஆகிய மூன்று காலங்களுக்கும் இடையில் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதால் மனதில் மாற்றம் என்பது ஏற்படுகிறது. இதனை நிறுத்த வேண்டுமென்றால் முதலில் இந்த மூன்று காலங்களை ஒன்றாக மாற்ற வேண்டும். இறந்த காலம் மற்றும் வருங்காலம் ஆகியவை மனதில் ஏற்படும் ஒரு கற்பனைப் படைப்பு தான். ஆகவே இவை இரண்டையும் அறிவித்துவிட்டால் நிகழ்காலம் என்னும் ஒரே நிலை மட்டும்தான் மனதில் இருக்கும். அதன்பின்பு மனம் என்றுமே மாறாத நிலையை அடைந்துவிடும். இப்படிப்பட்ட நிலையை அடைபவர்களைதான் நீங்கள் ஞானி என்று அழைக்கிறீர்கள். இந்த மனநிலையை அடைபவர்கள் தான் மற்றவர்களது வாழ்வை முற்றிலும் மாற்ற முடிந்த சக்தியை பெறுகின்றனர். இதனை தவறுதலாகப் புரிந்து கொள்பவர்கள் முயற்சிக்கும் மாற்றங்களால் தான் உங்கள் சமூகத்தில் விபத்துகள் ஆக மாறி விடுகின்றன. மாற்றங்கள் அனைத்தும் மாறா நிலையை அடைகின்றன. மாறா நிலை அனைத்தும் மாற்றங்களை ஊக்குவிக்கின்றன. இந்த மாற்ற முடியா மாற்றத்தை உங்களால் கடக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்தப் பகுதியுடன் மாற்ற அதிகாரத்தை நிறைவு செய்துகொண்டு அடுத்த பகுதியில் இருந்து புதிய ஒரு அதிகாரத்தை தொடங்குவோம்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.
[…] நான்காம் பரிமாணம் – 95 […]
Excellent
Fine. High level.