நான்காம் பரிமாணம் – 78

16. காற்றதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். எனது கண்ணோட்டத்தில் காற்றால் உங்கள் உலகுக்கு ஏற்பட்ட மற்றும் ஏற்படப்போகும் நிகழ்வுகளைத் சென்ற பகுதியில் கூறியிருந்தேன். இந்த பகுதியில் காற்றால் உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை கூறப்போகிறேன். தொடங்குவோம் வாருங்கள்.


“மூச்சுக்”காற்று

மூச்சு விடுவதற்கு காற்று இன்றியமையாதது என்று உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் பூமியின் தொடக்க காலத்தில் நிலைமை முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? உயிர்கள் அனைத்தும் மூச்சு விடுவதற்கு உயிர்வளியான ஆக்சிஜன் இன்றியமையாததாக இருந்தாலும் உலகின் ஆரம்ப காலத்தில் காற்று மண்டலம் என்ற ஒன்று சரியாக உருவாகவே இல்லை. அந்த நிலையில் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் என்ற ஒரு வாயுவே இல்லை. சூரியனிலிருந்து பிரிந்து வந்ததால் உலகம் முழுவதுமே பெரும் எரிமலைகள் மட்டும்தான் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. எரிமலை குழம்பு வெளிவரும் பொழுது அதனுடன் சேர்த்து அம்மோனியா மீத்தேன் போன்ற வாயுக்கள் சிறிது சிறிதாக வெளிவரும். இதனுடன் கரியமில வாயு( கார்பன் டை ஆக்சைடு) கூட சேர்ந்து வந்து இந்த வாயுக்கள் அனைத்தும் ஒன்றாக வளிமண்டலம் என்னும் காற்று அடுக்கை உலகில் உருவாக்கியது. அந்த நிலைமையில் நீங்கள் உலகில் இருந்திருந்தால் ஒரு நிமிடம் கூட உங்களால் உயிர் வாழ்ந்திருக்க முடியாது. அந்த நிலைமையில் உருவாகிய பாக்டீரியாக்களும் செடிகளும் தான் காற்றில் உள்ள அமோனியாவை தூய்மையான நைட்ரஜனாகவும் கார்பன்-டை-ஆக்சைடை நீங்கள் சுவாசிக்கக் கூடிய ஆக்சிஜன் ஆகவும் மாற்ற ஆரம்பித்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் சூரிய வெளிச்சத்தில் உள்ள சக்தியால் உயிர்பெற்று வளிமண்டலத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இதுமட்டுமல்லாமல், சூரிய ஒளியில் உள்ள அபரிமித சக்தியால் காற்றில் உள்ள வேதியியல் பொருட்கள் தாங்களாகவே உடைய ஆரம்பித்து மிகவும் இலகுவான காற்றாக மாறுகிறது. இதனை உங்கள் விஞ்ஞானிகள் போட்டோலைசிஸ் என்று கூறுகிறார்கள். 


நான் மேலே கூறிய மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. நுண்ணுயிர்களும் செடிகளும் பல லட்சம் ஆண்டுகள் தொடர்ச்சியாக உழைத்து தற்போது உங்களுக்கு உள்ள 78 சதவீதம் நைட்ரஜன் மற்றும் 21 சதவீதம் ஆக்ஸிஜன் என்ற நிலைக்கு வந்தது. தற்பொழுது கரியமிலவாயுவின் அளவு மிகவும் குறைந்து போய் ஆக்சிஜனின் அளவு அதிகரித்து விட்டதல்லவா? இதனால் முன்பு போல செடிகளுக்கு அவரின் மிதமான அளவு கரியமில வாயு கிடைக்கவில்லை. இதனை சரி கட்டுவதற்காக இயற்கை உருவாக்கிய பொருள் தான் விலங்கினங்கள்! செடிகள் பகல் நேரத்தில் சூரிய ஒளியின் கீழ் கரிமில வாயுவை சுவாசித்து ஆக்சிஜன் ஆக மாற்றி வெளிவிடுகிறது. அதே சமயத்தில் விலங்கினங்கள் அனைத்தும் ஆக்ஸிஜனை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகின்றன. இந்த சுழற்சி முறை சரியாக சென்று கொண்டிருக்கும் வரை காற்றில் இருக்கும் வாயுக்களின் அளவு ஒரே மாதிரியாக சரிவிகிதத்தில் இருக்கும். 


அது சரி. ஆக்சிஜனை மட்டும் தான் உயிரினங்கள் சுவாசிக்குமா என்றால் கண்டிப்பாக கிடையாது. இன்று வரைக்கும் கூட நீங்கள் வாழ்வதற்கு ஆதாரமாக ஆக்சிஜனை சுவாசிக்க சில உயிரிகள் தான் காரணமாக இருக்கின்றன. நீங்கள் சாப்பிடும் உணவுகளை நொதிக்க வைக்கும் பூஞ்சைகள் (Yeast) உட்பட பல்வேறுவிதமான நுண்ணுயிரிகள் காற்றை சுவாசிக்கும் தங்களுக்குள் நடக்கும் ரசாயன மாற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு உயிர்வாழ்கின்றன. இந்த நுண்ணுயிர்கள் காற்றை சுவாசிக்காதலால் இவை மூச்சுவிட்டு முடிக்கும் பொழுது அதன் முடிவில் சில கசடுகள் தங்கிவிடுகின்றன. இந்த கசடுகள் நான் நீங்கள் விரும்பி உண்ணும் ரொட்டி, இட்லி, தோசை முதலியவற்றை உருவாக்கும் புளித்த மாவு ஆகும்! ஒருவகையில் பார்த்தால் பரிணாம வளர்ச்சி என்பது, முதல் தலைமுறை விட்டுச்சென்ற கழிவு பொருட்களை உணவாகக் கொண்டு மூச்சுவிடும் முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுதல் என்று கூட கூறலாம். அதிகப்படியான கழிவுகளை மூச்சு விடுவதன் மூலம் வெளியிட்ட ஆதிகால உயிரினங்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் முதல் படி. அதன்பின்பு விலங்கினங்களின் மூச்சு விடும் திறன் சிறிது சிறிதாக அதிகரித்து ஆக்சிஜனை கொண்டு சுவாசித்து எந்த ஒரு கழிவையும் விட்டுவைக்காமல் இருக்கும் வரை நீங்கள் வளர்ந்துள்ளது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் தான்.


இயற்கையாக நடந்து வந்த இந்த வளர்ச்சியில் மனிதன் செயற்கையான மூச்சை உருவாக்கியதன் விளைவு தான் இந்த Industrialization எனப்படும் தொழில்மயமாக்கல்! இதனைப் பற்றி அடுத்த பகுதியில் இன்னும் விரிவாக கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -