நான்காம் பரிமாணம் – 77

16. காற்றதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


காலம் என்னும் நான் காற்றதிகாரத்தில் பஞ்ச பூதங்களில் ஒன்றாக நீங்கள் கருதும் காற்றைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளேன். காற்று என்பது சுவாசிக்க மட்டும்தான் உதவுகிறது என்று நினைத்துவிடாதீர்கள். அண்டத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உருவாவதற்கு முன்னரே அந்த இடத்தை உருவாக்குதல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் செய்யும் முதன்மையான விஷயம் காற்று தான். அது எப்படி என்று இந்த பகுதியில் கூறுகிறேன் கேளுங்கள்.

காற்றின் பணி

எந்த ஒரு பொருளுக்கும் தொடக்கம், வாழ்வு மற்றும் அழிவு ஆகிய மூன்று நிலைகள் இருக்கும். இவற்றில் காற்று எப்படி ஒவ்வொரு கிரகத்தையும் உருவாக்கி காத்து அழிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு உங்கள் கண் முன்னாலேயே இரண்டு முக்கியமான எடுத்துக்காட்டு இருக்கிறது. முதலில் பூமியில் காற்று எப்படி அனைத்து உயிர்களையும் காத்து வருகிறது என்பதை உங்களால் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இதனை இன்னும் விளக்கமாக அடுத்த பகுதியில் நானும் கூறப்போகிறேன். அதற்கு முன்பாக ஒரு கிரகத்தை எப்படி முழுமையாக அழிக்க முடியும் என்பதை வெள்ளி கிரகத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.


சூரிய குடும்பத்தில் பூமிப்பந்தை போலவே இருக்கும் கோள்களில் முக்கியமானது வெள்ளிக்(Venus) கிரகமாகும். சூரியன் மற்றும் நிலவுக்கு அடுத்தபடியாக நீங்கள் வானில் பார்க்கும் பொழுது மிகவும் பிரகாசமாக தெரியக்கூடிய பொருள் இதுதான். உடனே இதனை மிகவும் பிரகாசமான கிரகமாக நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. அளவிலும் குணத்திலும் பூமியைப் போலவே நிலப்பரப்பை கொண்டிருந்தாலும் வெள்ளி கிரகத்துக்கு நீங்கள் காலடி எடுத்து வைத்தால் பகல் மற்றும் இரவு இரண்டிலுமே இருள் மட்டும் தான் உங்களுக்கு மிஞ்சும். அதற்கு மேற்கொண்டு ஈயத்தை கூட உருக்கக் கூடிய அளவுக்கு கடுமையான வெப்பம் மற்றும் எரிமலைகள் மட்டும் தான் உங்களுக்கு கிடைக்கும். இவ்வளவு மோசமான நிலைமைக்கு காரணம் என்ன தெரியுமா? அங்கு உள்ள காற்று மண்டலம் தான்!

வெள்ளி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளியும் பூமியைப் போலவே மனிதர்கள் வாழ தகுந்த ஒரு இடமாகத்தான் இருந்தது. உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் மற்றும் வாயுக்கள் மொத்தமும் அங்கு இருந்தன. அந்த சமயத்தில் சூரியன் தற்போது இருக்கும் நிலையைவிட சற்று சிறியதாக இருந்தது. இதனால் வெள்ளி கிரகத்தில் மிதமான வெப்பநிலை கூட இருந்தது. அப்போது ஆரம்பித்ததுதான் வினை. பூமியில் இப்பொழுது நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பைங்குடில் வளிகள் (Greenhouse gasses) போலவே வெள்ளி கிரகத்திலும் நடந்தது. அதாவது, இந்த பைங்குடில் வளிகள் அனைத்தும் சூரியனிலிருந்து பெற்றுக்கொள்ளும் வெப்பத்தை வெளியே விட்டுவிடாமல் தொடர்ச்சியாக அந்த கிரகத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு வெப்பத்தை தொடர்ச்சியாக ஏற்றிக் கொண்டே வந்தது. இதன் விளைவாக அங்கிருந்த சமுத்திரங்களில் உள்ள தண்ணீர் அனைத்தும் ஆவியாக மாறி காற்றின் தன்மையை மொத்தமாக மாற்றி விட்டது. இதன் விளைவாக தொடர்ச்சியாக ஏறிவந்த வெப்பத்தால் மொத்த நிலப்பரப்பும் அமிலத்தன்மை உடையதாக மாறி உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. 

நீங்கள் பூமியில் இருந்து கொண்டு சூரிய உதயத்திற்கு முன்னால் வெளியில் பிரகாசமாக தெரிவதால் அதனை விடிவெள்ளி என்று கூறுகிறீர்கள் அல்லவா? ஆனால் அந்த வெளிச்சத்திற்கு காரணம் வெள்ளியில் மேற்பரப்பில் இருக்கும் கொடுமையான சல்பியூரிக் அமிலத்தின் மேகம் தான்! வெள்ளியின் தரைப் பரப்பில் இருந்து 50 கிலோமீட்டர் உயரத்தில் இந்த அபாயகரமான சூழல்தான் நிலவுகிறது. இதனால் உங்களால் அந்த 50 கிலோ மீட்டர் பருமனான பரப்பில் நுழையக்கூட முடியாது. இந்த மேகத்தின் அடர்த்தியால் சூரிய வெளிச்சம் கூட அந்த தரைப் பரப்பில் விழுகாது. காற்றில் ஏற்பட்ட சிறிய மூலக்கூறு மாற்றம் ஒரு கோளை எவ்வாறு முழு நரகமாக மாற்றி அழித்துவிட்டது என்று பார்த்தீர்களா? வெள்ளியில் நடந்த இதே மாற்றம் தான் உங்கள் முன் பூமியில் சிறிது சிறிதாக நடந்துகொண்டு வருகிறது. நீங்கள் கவனமாக இருந்தால் இன்னும் லட்சக்கணக்கான ஆண்டுகள் பூமி பசுமை மாறாமல் இருக்க முடியும். ஆனால் கவனக்குறைவாக பூமியில் உள்ள இயற்கை வளத்தை பாழாக்கி காற்றை மாசுபடுத்தி வந்தால் வெள்ளியில் ஏற்பட்ட நிலைமை பூமியில் ஏற்பட்ட சில நூறு ஆண்டுகள் கூட ஆகாது.


காற்று எவ்வாறு அழிவை உண்டாக்குகிறது என்பதை இங்கு தெளிவாக பார்த்துவிட்டோம். ஆனால் காற்று பல்வேறு ஆக்கப் பணிகளை திறம்பட செய்து வருகிறது. நீங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவை கூட காற்றுதான் கொடுக்கிறது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் நீங்கள் உருவாகி நடமாடிக் கொண்டிருக்கும் நிலைக்கு வர வேண்டிய பல்வேறு பரிணாம வளர்ச்சியை கூட காற்றுதான் வழங்கியுள்ளது. அது எப்படி என்பதை அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -