இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
காலம் என்னும் நான் அக அதிகாரத்தில் வீடுகளின் குணாதிசயங்களைப் பற்றி கூறிக் கொண்டு வருகிறேன். வீடு என்பதை ஒரு அடையாளமாக வைத்துக் கொண்டால் அதன்மூலம் புரிந்து கொள்ளவேண்டிய தகவல்களை பார்த்து முடித்து விட்டு இன்று மனதுக்கும் வீட்டிற்கும் எப்படி எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று பார்க்கப்போகிறோம்.
அகத்தின் இருமை
மனிதன் ஒரு குழுவாக சேர்ந்து வாழும் பொழுது அவனுக்கு ஏற்பட்ட நன்மைகளைப் பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். பல்வேறு இன்னல்களில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள குழு, கிராமம், நகரம், மாநிலம், நாடு
என்ற வகையில் தன்னை வகைப்படுத்திக் கொண்டுள்ளான். அப்படியானால் மனிதனுக்கு ஒற்றுமையாக வாழும் குணம் இயற்கையாகவே இருக்கிறது என்று உங்களுக்கு நினைக்கத் தோன்றலாம். ஆனால் இது உண்மையிலேயே மனிதனின் இருமை குணத்தை வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடியாக இருக்கிறது.
இதனைப் புரிந்து கொள்வதற்கு மனிதனின் வீடு எவ்வாறு மாறுபட்டு வந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு எடுக்கும் பொழுது தனது உடலைப் பாதுகாப்பதற்காக தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வீட்டை மனிதன் சிறிதுசிறிதாக பெரிதாக்கிக் கொண்டு வந்தான். ஒரு கட்டத்தில் உணவு தயாரிப்பதற்காக வேட்டையாடாமல் வீட்டுக்குள்ளேயே உணவை உருவாக்கிக்கொள்ளும் வித்தையை அவன் கண்டு பிடித்த பொழுது உருவானதுதான் சமையலறை என்னும் புதிய அறை. இந்த அறை உருவாக்கிய உடன் அனைவரும் மொத்தமாக சேர்ந்து உணவை உருவாக்கி ஒன்றாக சாப்பிட்டு வந்தனர். உணவை வேட்டையாடி சாப்பிடுவதற்கான தேவை குறைந்து கொண்டே வந்ததால் மக்கள் தொகை பெருக்கம் மிகவும் அதிகரித்து வந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் மக்கள் தொகை பெருக்கத்தின் ஒரு முக்கிய காரணமாக சமயலறை இருந்தது என்று கூட கூறலாம். மக்கள்தொகை பெருக்கத்தால் ஒரு மிகப்பெரிய ஜனசந்தடிக்குள் மாட்டிக் கொண்ட மனிதன் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு கண்டுபிடித்த தனிப்பட்ட அறைதான் தற்காலத்தில் படுக்கை அறையாக மாறிப்போனது. அதுபோலவே தனது உடலை தூய்மைப் படுத்திக் கொள்ளவும் ஆரம்ப காலங்களில் சமூகக் கூடங்கள் தான் பரவலாக காணப்பட்டன. சிந்துசமவெளி நாகரீகம் போன்ற வரலாற்றை படித்தாலே குளிப்பதற்கான சமூக கூடங்கள் இருப்பதை நீங்கள் காணலாம். மக்கள்தொகை அபரிமிதமாக வளர்ந்து வந்த காரணத்தால் மனிதனுக்கு உடலைத் தூய்மை செய்து கொள்வது கூட மிகவும் தனிப்பட்ட செயலாக மாறிப்போனது. ஒரு வீட்டுக்குள் தனித்து வாழ்வது, சேர்ந்து வாழ்வது என்னும் இரண்டு எதிர்மறை குணங்களும் ஒன்றாக குடி கொண்டிருக்கின்றன!
நான் மேற்கூறிய வரலாற்றில் உங்களுக்கு மனிதனின் ஒரு அடிப்படை குணம் புரிந்திருக்கும். மனித மனம் என்றுமே தனித்து இருக்கும்பொழுது சேர வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து இருக்கும் போது தனித்து இருக்க வேண்டிய ஆசையும் கொண்டிருக்கும். இதைத்தான் எளிமையாக இக்கரைக்கு அக்கரை பச்சை என்று கூறுவார்கள். எந்த ஒரு இடத்திலும் நிலை கொள்ளாத ஒரு பண்பை இப்படிக் குறிப்பிடலாம். வீடு என்பதே நிலை கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பொருளாகும். ஆனால் அதற்குள்ளும் தனித்து வாழ்வதா இல்லை சேர்ந்து வாழ்வதா என்று தொடர் போராட்டமே நடந்து கொண்டே வருகிறது. இந்தப் போராட்டம் ஒவ்வொரு மனதுக்குள்ளும் நித்தமும் நடந்து கொண்டே வருகிறது என்று உங்களுக்கே புரிந்திருக்கும். இதனால்தான் சரித்திரங்களில் வீட்டிற்கு மனதுக்கும் என்றுமே ஒரு தொடர்பை உருவாக்கியிருந்தார்கள். அதாவது மனத்தை வீடு என்றும் வீட்டை மனம் என்றும் உருவகப்படுத்துவது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனித சமூகத்தில் இருந்து வந்தது. நார்டிக்(Nordic) இனக்குழுக்கள் தாங்கள் இறந்தவுடன் Valhalla இன்னும் ஒரு வீட்டுக்குள் தங்கள் ஆன்மா தங்குகிறது என்று உருவகப்படுத்தி உள்ளார்கள். தமிழ் மொழியில் அதற்கு ஒரு படிக்கு மேல் போய், வீட்டிற்கும் மனதிற்கும் ஒரே சொல்லான அகத்தை உருவாக்கினார்கள். இந்த இரண்டு அகத்தின் தன்மையை அளப்பதற்காக உருவாக்கப்பட்ட அளவை கூட ஒன்றுதான் தெரியுமா! அதுதான் நீடிப்புதிறன் (Sustainability) எனப்படுகிறது. வீடுகள் தனித்து வாழ்வதற்கும் சேர்ந்து வாழ்வதற்கும் இடையில் மாறி மாறி உருவெடுத்து கொண்டிருப்பதால் இவை இரண்டில் எது சரி என்பதை முடிவு செய்யவே முடியாது. அதனால், இப்போது இருக்கும் நிலைப்பாட்டை எவ்வளவு காலம் தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும் என்பதைத்தான் சஸ்டைநபிலிடி(Sustainability) என்னும் அளவை குறிக்கிறது. உதாரணமாக, உங்கள் வீட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு அருகில் உள்ள நிலத்தை பயன்படுத்தினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அந்த நிலம் முழுவதும் நிரம்பி உங்களால் அதற்குமேல் குப்பைகளை போட முடியாமலே போகலாம். இந்த நிலை Unsustainable என்று குறிப்பிடப்படுகிறது. உங்கள் மனதும் இதேபோல்தான். அனைத்து அகங்களில் செயல்பாடும் செயல்படும் முறையும் குணாதிசயங்களும் ஒன்றுதான். ஆனால் வீட்டை எளிதாக அளவிடுவது போல் மனதை அளவிட முடியாது. அதற்கென்று பிரத்தியேக வழிகள் உள்ளன. அதனை அடுத்த பகுதியில் கூறி அகத்தின் அழகை இன்னும் விவரமாக சொல்கிறேன், காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.