நான்காம் பரிமாணம் – 23

5. அனல் அதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். அனல் அதிகாரத்தில் வெப்பத்தைப் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். வெப்பம் எந்த வடிவத்தில் இருக்கிறது என்று சென்ற பதிவில் பார்த்தோம் அல்லவா? வெப்பத்திற்கும் வெளிக்கும் (Space) என்ன சம்பந்தம் என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம், வாருங்கள்.

வெப்பமும் வெளியும்

எந்த ஒரு பொருளின் வெப்பத்தையும் அதிகரிப்பதன் மூலமாக அதன் அடர்த்தி குறைந்து கொண்டே வரும் என்று முன்பே கூறியிருந்தேன். அடர்த்தி குறைந்து வரும் பொழுது அது எடுத்துக் கொள்ளும் பரப்பளவு(வெளி) கூடிக் கொண்டே வரும். இது உண்மையானால், வெப்பம் குறையும் பொழுது அதன் அடர்த்தியும் குறைந்து கொண்டே வரும் அல்லவா? இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் கண்டுபிடித்த விஞ்ஞானத்திற்கு பெயர்தான் கிரையோஜனிக்ஸ் (Cryogenics). சொல்லப்போனால் இந்த விஞ்ஞானத்தில் தலைசிறந்து விளங்கும் நாடுகள்தான் உங்கள் உலகத்தின் வல்லரசுகளாக விளங்குகிறது. எப்படி தெரியுமா?

ஒரு நாடு வல்லரசாக வேண்டும் என்றால் தன்னுடைய கட்டுப்பாட்டில் மற்ற நாடுகள் அனைத்தையும் கொண்டு வரவேண்டும். அதற்கு முதலாவதாக அதிக பலம் கொண்ட ராணுவம் தேவைப்படும். அதற்குப் பின் மற்ற நாடுகள் எதுவுமே செய்யமுடியாத ஒரு விஷயத்தை தான் செய்து முடிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரே காரணமாக விளங்கக் கூடியது இந்த கிரையோஜெனிக் தொழில்நுட்பம் தான். ராணுவத்தில் மிகவும் வலிமையாக விளங்க வேண்டுமென்றால் எந்த நாட்டையும் சென்று தாக்கும் அளவிற்கு ஏவுகணை தொழில்நுட்பம் தேவைப்படும். ஆனால் ஏவுகணையில் ஒரு பிரச்சனை உள்ளது. வானத்திலுள்ள வளிமண்டலத்தை தாண்டி இது பறந்து செல்வதால் காற்றில் உள்ள உயிர் வாயுவை இதனால் பயன்படுத்த முடியாது. அதனால் இந்த ஏவுகணைகளில் எவ்வளவு எரிபொருள் கொண்டுசெல்லப்படுகிறதோ அதற்கு சமமான அளவு திரவ ஆக்சிஜன் போன்ற எரிக்கும் பொருட்களையும் தனியாக கொண்டு செல்லவேண்டும். இப்படி எரிபொருளையும்  எரிக்கும் வாயுக்களையும் சேர்த்து கொண்டு செல்வதால் இதன் கொள்ளளவு மிகவும் அதிகமாகி தன்னுடைய பருமனை தூக்கமுடியாமல் குறிப்பிட்ட தொலைவு மட்டுமே செல்ல முடியும். இதனை தவிர்ப்பதற்கு எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜனை -100 டிகிரிக்கும் குறைவாக குளிர வைப்பதால் அதன் அளவு மிகவும் சுருங்கி விடும். இப்பொழுது அந்த குளிர்ச்சியான திரவத்தை எரிப்பதன் மூலம் நீண்ட தொலைவுக்கு சென்று எதிரியை தாக்க முடியும். இதனை செய்ய முடிந்த நாடுகளால் மட்டும்தான் அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்க முடியும். வெடிமருந்து தயாரிக்கும் தொழில்நுட்பம் அனேகமான நாடுகளில் இருந்த போதும் அதிக குளிர்ச்சியால் கொள்ளளவை குறைத்து பறக்கும் தொழில்நுட்பத்தின் மூலமாக மட்டும்தான் பல நாடுகளால் தழைத்தோங்க முடிகிறது. இதே தொழில்நுட்பத்தின் மூலமாகத்தான் வான்வெளியில் செயற்கைகோள் அனுப்புவது முதல் மற்ற கிரகங்களுக்கு செல்லும் கலன்களை அமைப்பது வரை சாதிக்க முடிகிறது.

சரி. ஒரு பொருளை சூடாக்கினால் அது அளவில் விரியும் என்றும் குளிர்வித்தால் சுருங்கும் என்றும் நன்கு புரிகிறது. கிரையோஜெனிக் போன்ற உயர் விஞ்ஞானத்தில் மட்டும்தான் இது பயன்படுமா? இந்த உலகத்தின் தொடக்கம் முதல் உங்களுடைய இயக்கம் வரை அனைத்திற்கும் அடிப்படையான விஷயம் இந்த வெப்பமும் வெளியும் தான். பொருட்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் தான் வெப்பம் ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் அந்த வெப்பத்தை தணிப்பதற்காகத்தான் இயற்கையாகவே அது விரிவடைந்து உராய்வை குறைத்துக் கொள்கிறது. அண்டசராசரத்தில் தொடக்கத்தில் ஏற்பட்ட பெரு வெடிப்புக்கு (Big Bang) இதுதான் காரணம். அவ்வாறு வெடித்து சிதறிய துகள்களில் ஒரு சிறிய துகள் தான் சூரிய மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பூமி போன்ற கிரகங்களும் ஆனது. அதன் பின்பு பூமியில் உள்ள நிலப் பரப்புகள் வெப்பத்தினால் உடைந்து தனித்தனி கண்டங்கள் ஆனது. வெப்பத்தினால் ஏற்படும் மாற்றத்தால் தான் உயிர்களின் பரிணாம மாற்றம் ஏற்பட்டு பல்வேறு உயிரினங்களும் உருவானது. ஒரு தாயின் வயிற்றில் வளரும் கரு வெப்பத்தினால் தான் விரிவடைந்து குழந்தையாக மாறுகிறது. இந்த வெப்பம் ஏற்றும் கருவியை நீங்கள் செயற்கையாக உருவாக்கி நீங்களே பல உயிர்களை உருவாக்கும் திறமையை வளர்த்துக் கொண்டீர்கள். அப்படி வெப்பத்தைக் கொடுக்கும் கருவிக்கு பெயர்தான் இன்குபேட்டர் (Incubator). உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் உளவியல் ரீதியாக கூட இந்த வெப்பம் உங்களை வழிநடத்துகிறது. ஒருவரை உங்களுடன் சேர்ந்து இருக்க வைப்பதற்கு நீங்கள் அவரை உளவியல் ரீதியாக “குளிர்விக்க” வேண்டும். அதே சமயத்தில் பிரிந்து வெவ்வேறு வழியில் செல்ல அவரிடம் “அனல் வீசுவது” போன்று நடந்து கொள்ள வேண்டும். இப்படி அண்டசராசரத்தில் நடக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் வெப்பம் தான் அடிப்படைக் காரணம். வெப்பத்தை அதிகரித்தால் அணு முதல் அனைத்து உயிரினங்களும் பிரிந்து அதிக வெளியை எடுத்துக்கொள்ளும். வெப்பம் குறைய குறைய, அவை அனைத்தும் இணைந்து காணப்படும். 

பிரிந்து சென்று உராய்வை குறைத்துக்கொண்டால் வெப்பம் தணிந்து விடும் என்பது உண்மையானால் சூரியனிலிருந்து பூமி பிரிந்து வந்த பின்பும் கூட சூரியனின் வெப்பம் பூமியை எப்படி தாக்குகிறது? சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வெட்டவெளியில் எங்குமே வெப்பம் கிடையாது. சொல்லப்போனால் -250 டிகிரிக்கும் குறைவாக கடுங்குளிர் தான் நிலவும். அப்படி இருக்கையில் சூரியனில் இருந்து நேரடியாக வெப்பம் எப்படி பூமியை வந்தடைகிறது? இந்த நிகழ்வால் உங்களுடைய வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் ஏற்படுகிறது என்பதையும் அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

  1. மிக நல்ல விரிவான, தெளிவான பதிவு. வாழ்த்துகள்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -