இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
காலம் என்னும் நான் உண்டி அதிகாரத்தில் உணவைப் பற்றிய பல்வேறு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். உங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு உணவு வகைகளைப் பற்றியும் அதனை எடுத்துக் கொள்ளும் முறையைப் பற்றியும் சென்ற பகுதியில் கூறினேன். நான் கூறிய விஷயங்கள் மனிதர்களுக்கு மட்டும் பொதுவானதல்ல. உங்கள் உலகில் வாழும் பல்வேறு விலங்கினங்களுக்கும் இவை அனைத்தும் பொருந்தும். நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி சேர்கிறது என்னும் சூட்சமம்தான் இந்த அண்டத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. அதனை இந்த பகுதியில் பார்ப்போம்.
செல்களின் உணவு
நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உயிர் திசுவுக்கும் ஊட்டம் அளிக்க வேண்டும் அப்போது தான் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் உயிர் வாழ முடியும். நீங்கள் சாப்பிடும் பொருட்கள் பல்வேறாக இருந்தாலும் உங்கள் உயிர் திசுக்களுக்கு ஒரே ஒரு உணவை மட்டும் தான் உண்ண முடியும். அந்த உணவிற்கு நீங்கள் வைத்த ரசாயன பெயர்தான் ஏடிபி (ATP – Adenosine Tri Phosphate). ஏடிபி என்னும் இந்த சாப்பாட்டைக் கொண்டு தான் உங்கள் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்குகின்றன. ஒவ்வொரு உறுப்புக்கும் வேறுபட்ட வடிவம் மற்றும் செயல்பாடு இருந்தபோதும் அது இயங்கும் முறை என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறது. அப்படி என்றால் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டை ஏடிபி ஆக மாற்ற வேண்டும் அல்லவா? ஏடிபி உருவாக்குவதற்கு உங்கள் உடம்பில் தனியாக எந்த ஒரு உறுப்பும் கிடையாது. தனியாக ஒரே ஒரு உறுப்பு ஏடிபிஐ உருவாக்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனை காலதாமதம் இல்லாமல் உடம்பில் உள்ள அனைத்து செல்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதில் சிறு பிரச்சனை வந்தால் கூட அந்த செல் உடனடியாக உயிர் இழக்க நேரிடும். ஒரு செல் என்பது டிஎன்ஏ என்னும் அச்சுப் பிரதியில் வார்த்து எடுக்கப்பட்ட செயல் வடிவம் என்று சென்ற அதிகாரத்திலேயே கூறியிருந்தேன். ஆனால் உங்கள் டிஎன்ஏ விற்கு ஏடிபியை உருவாக்கும் ரகசியம் தெரியாது. அப்படியானால் ஏடிபி எங்கேதான் உருவாகிறது?
ஒவ்வொரு செல்லுக்கு உள்ளே சக்தியை உருவாக்குவதற்காக ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு நுண்ணுயிர் இருக்கிறது என்று உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அந்த நுண்ணுயிரின் பெயர்தான் மைட்டோகாண்ட்ரியா (Mitochondria). நீங்கள் செல்லுக்குள் இதனை ஒரு பகுதியாக அறிந்திருக்கலாம். ஆனால் இவை செல்லுக்குள் உள்ள டிஎன்ஏவிடம் (DNA) கட்டுப்படவில்லை. மாறாக ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரியாவுக்கு உள்ளே வேறுபட்ட ஒரு தனி டிஎன்ஏ (mt-DNA) உள்ளது. இந்த டிஎன்ஏ வின் உதவியால்தான் சாப்பாட்டில் உள்ள குளுக்கோஸ் மற்றும் சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜன் இரண்டும் கலந்து ஏடிபி மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுவாக மாறுகிறது. பின்பு ஏடிபி ஐ உணவாகக் கொண்டு மொத்த உடல் இயக்கமும் நடைபெறுகிறது. இங்கே இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. முதலாவதாக, இங்கே நடக்கும் ஆக்சிஜன் கார்பன் டை ஆக்சைடு சூழற்சி. உலகில் இருக்கும் உயிரினங்கள் அனைத்திற்கும் இந்த சுழற்சிதான் அடிப்படை உணவாக விளங்குகிறது. இரண்டாவதாக, உங்கள் உணவை செரிப்பதற்கு மட்டுமே தனி டிஎன்ஏ உடன் ஒரு நுண்ணுயிர்(Mitochondria) உங்களுடைய செல்கள் அனைத்திலும் உள்ளது.
இந்த மைட்டோகாண்ட்ரியாவின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. நீங்கள் பிறக்கும் பொழுது உங்கள் தாய் மற்றும் தந்தையின் டிஎன்ஏ வில் சரி பாதியை எடுத்து ஒரு புதிய டிஎன்ஏ உருவாக்கிக்கொண்டு தானே பிறக்குகிறீர்கள்? ஆனால் இந்த மைட்டோகாண்ட்ரியா அப்படி அல்ல. உங்கள் தாயிடம் எந்த மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ இருக்கிறதோ அது அப்படியே உங்களுக்கு வந்து விடும். தாய்-தந்தை கலப்பு என்பது இதற்கு மட்டும் ஏற்படுவது இல்லை! இவ்வாறு தாயிடமிருந்து எந்த ஒரு கலப்பும் இல்லாமல் வருவதால் இந்த மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவை வைத்துக்கொண்டு பல்லாயிர வருட தாய்வழி மரபை உங்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். மிகவும் குறைவாகவே இதில் மாறுதல் ஏற்படுவதால் இதன் பரிணாம வளர்ச்சி என்பது மிகவும் வித்தியாசமானது. பரிணாம வளர்ச்சி இல்லாமல் ஒரு இயற்கை விபத்தாக இது நிகழ்ந்ததாகவும் உங்கள் விஞ்ஞானிகள் கூறுவர். வெளி கிரகத்தில் இருந்து வந்த ஒரு நுண்ணுயிரி(Bacteria), தற்செயலாக ஒரு உயிரணுக்குள் புகுந்து கொண்டதால் உருவான விபத்துதான் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் என்றுகூட ஒரு கதை உண்டு. எது எப்படியோ, ஒரு நுண்ணுயிர் மைட்டோகாண்ட்ரியா வாக மாறி உங்களுக்கு சக்தி கொடுத்து வருகிறது என்பது உண்மை. இதனை நீங்கள் வழக்கு மொழியில் மாற்றி பார்த்தால் கூட ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. வெளியில் இருந்து வருவதை “பிற”, “பரா” என்று இந்திய மொழிகளில் குறிப்பிடுவதுண்டு. அப்படியானால், செல்களுக்கு சக்தியை கொடுக்கக்கூடிய இந்த மைட்டோகாண்ட்ரியாவை “பராசக்தி” என்று கூட நீங்கள் கூப்பிடலாம். தாய் வழியாக மட்டுமே இது வருவதால், இதனை நீங்கள் ஒரு பெண் வடிவமாகக் கூட பார்க்கலாம். இவ்வாறு உங்கள் உடலில் உருவாகும் சக்தியை வைத்துக்கொண்டு உடலிலுள்ள தாய்-தந்தை டிஎன்ஏ புதிய செல்களை உருவாக்கி உடலை வளர்த்துக் கொள்கிறது. தாய் தந்தை சரிபாதியாக இருக்கும் டிஎன்ஏவை அப்படியானால் பாதி ஆண் பாதி பெண் என்று கூறலாமா? இதனை சிவம் என்றும் அர்த்தநாரி என்றும் உங்கள் பண்டைய மதங்கள் கூறுகின்றன. சிவமும் சக்தியும் கலப்பதனால் தான் உலகம் உருவாகிறது என்றும் கூறுகின்றன. இப்படி மதத்திற்கும் அறிவியல் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
சரி. உணவோடு கலந்த ஒரு வரலாற்று கதையும் பார்த்தாகிவிட்டது. மீண்டும் உணவுக்குள் வருவோம். நான் கூறிய ஆக்சிஜன் கார்பன் டை ஆக்சைடு சுழற்சி இருக்கிறதல்லவா? இதுதான் உங்கள் உலகின் உணவு. உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் நடக்கும் பல்வேறு இயக்கத்துக்கும் இந்த சுழற்சி முறை தான் காரணமாகிறது. இங்கே ஒரு எடுத்துக்காட்டை கூறிவிடுகிறேன்.
வாகனங்களின் உணவு
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருளால் இயங்குகிறது அல்லவா? அப்படியானால் அந்த வாகனங்களுக்கு நீங்கள் போடும் எரிபொருள் தான் உணவு. அந்த எரிபொருளுடன் காற்றில் உள்ள ஆக்சிஜன் சேர்ந்து எரியும் பொழுது சக்தி மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு உருவாகிறது. இந்த சக்தியால் உங்கள் வாகனம் தொடர்ந்து நகர முடிகிறது. கார்பன் டை ஆக்சைட் காற்றோடு கலந்து விடுகிறது. இப்பொழுது கூறுங்கள், உங்கள் உடலில் உள்ள செல்லும் நீங்கள் பயன்படுத்தும் வாகனமும் ஒரே முறையில் தான் உணவு உட்கொள்கிறது! சரியா? உங்கள் உலகில் உள்ள பல்வேறு உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் கூட உணவு உட்கொள்ளும் முறை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. அதாவது, கார்பன் உள்ள ஏதேனும் ஒரு பொருளை உட்கொண்டு அத்துடன் காற்றில் உள்ள ஆக்சிஜனை சேர்த்து எரிப்பதனால் கிடைக்கும் சக்திதான் அனைத்திற்கும் ஆதாரம். தாவரங்கள் கூட இதே முறையில்தான் சுவாசித்து உணவு உட்கொள்கிறது.
நான் கூறிய வாகன எடுத்துக்காட்டை வைத்துக்கொண்டு உணவைப் பற்றிய பல்வேறுவிதமான விஷயங்களை பார்த்து விடலாம். இதன் மூலமாக உங்களுக்கு உணவின் அடிப்படையை நன்கு புரிந்துகொள்ள முடியும். அடுத்த பகுதியில் அதனை விளக்கமாக கூறுகிறேன். காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.