நாடக மேடை நினைவுகள் – பம்மல் சம்பந்த முதலியார்
கிண்டில் பதிப்பு
தமிழ் நாடக உலகையே புரட்டிப் போட்ட பம்மல் சம்பந்த முதலியார், சிறு வயதில் தமிழ் நாடகங்கள் பார்ப்பதையே வெறுத்தார் என்பதை நம்ப முடிகிறதா? அவர்கள் வீட்டின் அருகில் நடந்த ஹரிச்சந்திர நாடகத்திற்கு அவர் நண்பர் எவ்வளவோ வற்புறுத்தியும் வர மறுத்துவிட்டார். அந்த அளவிற்கு அப்போதிருந்த தமிழ் நாடகங்கள் மீது வெறுப்பு கொண்டிருந்தார். ஆனால் அத்தகைய எண்ணத்தை மாற்றி, தமிழ் நாடகங்களை இயற்ற அவருக்குப் பெரும் தூண்டுகோலாக இருந்தவர், பல்லாரியில் இருந்து வந்து தெலுங்கு பாஷையில் நாடகம் போட்ட ஶ்ரீ கிருஷ்ணமாச்சார்லு என்பவர்தாம். வக்கீலான இவர், ‘சரச வினோதினி சபா’ என்னும் தன் நாடகக் கம்பனியாருடன் வந்து சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்திய நாடகத்தைக் கண்ட சம்பந்தம் அன்றிரவு தூக்கம் இழந்தார். அதுவரை நாடகங்கள் மேல் அவர் கொண்டிருந்த அபிப்ராயத்தை அன்று அவர் பார்த்த நாடகம் மாற்றி எழுதியது. அன்றிரவே, கிருஷ்ணமாச்சார்லுவைப் போல தானும் தமிழில் ஒரு நாடக சபையை நிறுவி அதில் நடிக்க வேண்டும் என்கிற தீர்மானம் செய்துகொண்டார்.
சம்பந்த முதலியாரைப் போலவே அந்நாடகங்களால் ஈர்க்கப்பட்ட எழுவர் சேர்ந்து உருவாகியது தான் சுகுண விலாச சபை. அதனைத் தொடங்கும் போது, அவருக்கு வயது பதினெட்டுதான்.
தங்களின் இரண்டாவது நாடகத்தை வெற்றிகரமாக மேடை ஏற்றிய பின், அதே மேடையில் படுத்து உறங்கி அடுத்த நாள் தாங்கள் நன்றாக நடித்தோம் என்கிற சந்தோஷத்தில், ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த அவர்களின் கண்டக்டர் திருமலைப் பிள்ளையும் அவர்களின் நடிப்பைப் புகழ, ” உங்கள் மனதை திருப்தி செய்ததற்காக, எங்களுக்கெல்லாம் எதாவது மிட்டாய் வாங்கிக் கொடுக்க வேண்டும் ! ” என நிர்பந்திக்க, அவரும் இரண்டு ரூபாய்க்கு பக்கோடா வாங்கித் தந்துள்ளார். அன்று முதல் அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கு, ஒவ்வொரு நாடகத்தின் பிறகும் அதன் குறை நிறைகள் பேச கூட்டம் நடத்தியுள்ளனர். அவைகளுக்கு ‘ பகோடா மீட்டிங் ‘ என்று பெயர் அமைந்துவிட்டது.
புதிதாக நாடகம் எழுத நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல கையேடாக அமையும். சம்பந்த முதலியார் அந்த அளவிற்கு நாடகம் அமைப்பதில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். நாம் சாதாரணமாக தவற விடும் சின்ன சின்ன விஷயங்கள் பற்றியும் விரிவாகத் தந்துள்ளார். அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் அவற்றை மெனக்கெட்டு எழுதியுள்ளார். இன்று நாடகத் துறை பல பரிணாமங்களை அடைந்திருக்கலாம். ஆனால் இவரைப் போன்ற ஒரு முன்னோடியிடம் கற்றுக் கொள்ளும் அடிப்படைகள் எந்தக் காலத்திலும் உதவக் கூடியவை. அவ்வாறு கற்றுக் கொள்ள நினைப்போருக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்.
-இந்துமதி மனோகரன்