மறுபக்க ரகசியம்
கோட்டைச் சுவரில் முளைத்த
கொடி ஒன்று தலைகீழாய்
கீழிறங்கித் தரை தொட்டு
கிளர்ந்து படர்கிறது
இரு எறும்புகள் அதனடியே
இளைப்பாறும் எப்போதும்
சிறு எறும்பு அதன்வழி
சிறுகச் சிறுக மேலேறி
சிகரம் தொட நினைக்கிறது
முதிய எறும்போ
முழுமையை அறிந்ததுபோல்
மெளனமாய் இருக்கிறது
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கரை தெரியாத ஓர் பயணம்
நடுக்கடல் மாலுமியின்
நம்பிக்கையைத் தகர்க்குமோ?
எல்லை தெரியாததால் மட்டுமே ஒன்று
எல்லையற்றதாகிடுமோ ?
பருந்தின் பார்வையில்
கோட்டையும் ஓர் எறும்பன்றோ?
என்றேனும் ஒரு நாள்
எட்ட முடியா உயரம் தொட்டு
மதில் சுவரின் மீதேறி
மறுபக்கம் பார்த்தபின்
மீண்டும் வருவேனென்று கூறி
மீளாப் பயணம் போனது
மழையோ புயலோ
மலைக்காமல் தொடர்ந்து
மாமாங்கங்கள் பல கடந்து
மறையாத சுவற்றின் உச்சியை
முதன் முதலாய்க் கண்டது
ஆவலாய் மேலேறிச் சென்று
அடுத்த பக்கத்தை எட்டிப் பார்க்க
அதிர்ந்து போனதாம்
ஆரவாரச் சிற்றெறும்பு
அதிக அசைவுகளின்றி
அதே மெளனத்தோடு
அங்கே ஒரு கட்டெறும்பு
அடக்கமாய் அமர்ந்திருக்க
முடிவற்றதன் எல்லையைத் தேடி
ஆர்வமாய்க் கீழிறங்கியதாம் ஒரு
ஆரவாரக் கட்டெறும்பு
இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்