சகடக் கவிதைகள் – 20

ஒரு சலிப்பூட்டும் சுயபுராணம்

- Advertisement -

ஒரு சலிப்பூட்டும் சுயபுராணம்

நீர்க்குழிழ்கள் நிறைந்த
நந்தவனம் ஒன்று
நில்லாது சுழன்றபடி
நாட்டியம் ஆடுகிறது

பெரிதும் சிறிதுமாய்
பெரும் குமிழ்க் கூட்டம்

பெரிய குமிழ்களின்
பெருமையைப் பார்த்துப்
பெருமூச்சு விடும்
பெரும்பான்மைச் சமூகம்

சாமானிய குமிழ்களில் சில
சமத்துவம் வேண்டுமென
சர்ச்சைகள் செய்ய

புத்திசாலிப் பெரும் குமிழ்கள் சில
புகலிடமாய்த் தன்னைக் காட்டிப்
புரட்சிக்காரன் அவதாரத்தால்
புகைச்சலில் இருந்து தப்பியது

சிறு குமிழ்களின் ஓலம்
சிறிதளவும் கேட்காதபடி
சிறிதே பயணம் செய்து
சத்தமில்லாமல் மறைகிறது

குமிழ்களுக்குள் பல்வேறு
குறுநில மன்னர்கள்
குறுக்கும் நெடுக்குமாய்
குன்றாத பேதங்கள்

ஏற்றத் தாழ்வினை
ஏற்க முடியாதென்று கூறியே
ஏற்றம் மட்டுமே அடைந்து
ஏமாற்றும் குமிழ்கள் பல

பெரும் குமிழ்களின் கவர்ச்சியைப்
பெரிதாக எண்ணிப்
பொறாமை கொண்டு

ஒன்றை ஒன்று முந்த நினைத்து
ஒன்றோடு ஒன்று மோதி
ஒன்றுமே இல்லாமல் போனவை பல

உயர்ந்து பறக்கும் குமிழ்கள் சில – தம்
உழைப்பால் வளந்ததாய் எண்ணி
காற்றின் உதவியை மறந்து
கர்வம் கொண்டு திரிகிறது

ஏமாந்ததாய் நினைக்கும் குமிழ்கள்
ஏக்கத்தால் வாதை கொண்டும்

ஏமாற்றியதாய் நினைக்கும் குமிழ்களோ
எக்காளமாய்ச் சிரித்துக் கொண்டும்

எத்தனை விதங்கள்? எத்தனை ரகங்கள்?
எத்துணை தூரம்தான் சென்றிட முடியும்?
எத்துணை காலம்தான் வாழ்ந்திட முடியும்?

உடைபடும் நேரம்
உணருமாம் குமிழ்கள்
பெரிதென்ன சிறிதென்ன
பெரு நேர விவாதத்தால்
பெற்றதென்ன? வென்றதென்ன?

குமிழ்களின் தோற்றமும் மறைவும்
குறைவதே இல்லை – ஆதலால்
நாட்டியமாடும் நந்தவனத்திற்கோ
நாள் தோறும் இது வேடிக்கை

உடையாத வரை பிதற்றுவதும் – பின்
சுவடே இன்றிக் கரைவதும் என்ற ஒரே
சுயசரிதத்தைத் தவிர வேறென்ன
சுவாரஸ்யம் குமிழ்களின் திமிருக்கு

மென்மையாய் அமரும் குமிழ்கள் மட்டுமே
மெளனமாய் நன்றிகள் சொல்லியபடி
மேன்மையாய்த் தாக்குப் பிடிக்கிறது
பூங்காற்றின் ஆரத் தழுவலை….

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -