சகடக் கவிதைகள் – 16

வேர்களின் வேர்கள் எது?

- Advertisement -

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வேர்களின் வேர்கள் எது?

வேர்கள் எப்போதும்
விழிகளுக்குப் புலப்படுவதில்லை
விழிகளுக்குத் தெரிவதோ
வேர்களாய் இருப்பதில்லை

கண்களுக்குத் தெரியும்
கிளைகளின் உச்சியும்
இலைகளின் பச்சையும்
அளக்கத் தான் முடியுமோ – வேர்களின்
ஆழத்தையும் அகலத்தையும்

எவரும் காணாத இருளுக்குள்
எப்போதும் தன்னை மறைபொருளாக்கி

யாதுக்கும் காரணமாகி
யாவற்றையும் காப்பதால்
யாரோ வைத்த பெயர்தான்
இறைவன் என்றானதாம்

வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு – தான்
வெளியே எட்டிப் பார்த்தால்
வெந்து போகாதோ மரமென்ற கருணையன்றி
வேறென்ன சொல்ல
வேரடிகளின் ரகசியத்தை

விதை என்ற உருவோடு
தன்னைத் தான் பிரதியெடுத்து
தானே ஆனதாம் கனிகளாய்க் கிளைகளில்

தாயினின்று வந்த சேய்
தன்நிலை மறந்து போய்
தேன் சுரக்கும் பூக்களாகி

கனிகளான பின் – தான்
தனியானவைகளென்று எண்ணி
தற்பெருமை கொண்டு
தம்பட்டம் அடித்ததாம்
தன் மூலத்தை மறந்ததாம்

சுற்றித் தெரிவதைக் கொண்டே – தன்னைப்
பற்றிய நிர்ணயம் செய்து
கற்றவை அனைத்தையும் திரட்டித்

தனக்குத் தெரியாததில்லை எனும் போதையால்
தன்முனைப்பின் உச்சம் தொட்டதாம்

தன் சுவைக்குத் தானே காரணம்
தன் நிறத்துக்கும் தானே காரணம் என்று
தகுதியை அடையாளமாக்கித்
தாழ்வோ உயர்வோ கொண்டதாம்

கருத்து வேறுபாடுகளால்
கலகங்கள் உருவானதாம்

ஓர் விதையின் பிரதிகள்
ஒன்றுக்கொன்று எதிராகி
ஒற்றுமையை இழந்ததாம்

படைத்தவனை நம்புவது
பகுத்தறிவாகாதென்றும்

கிடைத்த வாழ்வென்பது
கிளைகளின் முயற்சியே என்றதாம்

கடவுள் இருந்தால் எங்கே ? கண்முன்னே
காட்டென்று கேள்விக் கணைகள் ஏவி

கற்பனைக் கதைகளென்றும்
காலத்தின் புனைவுகளென்றும்
கருத்தியல் பல உருவானதாம்

அழுகும் சில கனிகளைக் காட்டி
அக்கடவுளின் மனசாட்சி எங்கே என்றும்
அவர் இருந்தால் ஏன் இந்த அவலம் என்றும்

கல்லை எறிந்து பழங்களைப் பறிகொடுக்கும் சமயம்
கடவுள் இருப்பது உண்மையானால்
காப்பாற்றாமல் எங்கே போனாரென்றும்

பொத்தென்று ஒரு நாள் கீழே விழும் வரை
பொய்களின் உருவே கடவுள் என்றதாம்

பொறுமையாய்க் கேட்ட வேர்கள்
புன்முறுவல் பூத்தபடி சொன்னதாம்

மண்ணடியில் புதையுண்டு
மரத்தைத் தாங்கும் வேர்களாய்த்
தானே ஆனாலன்றித் தன்னிலை உணருமா கனி?

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -