ஊற்று

கவிதை

- Advertisement -

ஒரு முனையில் தாளிப்புத் தாளம் போட
மறுமுனையில் கறை படிந்த
சமையல் பத்திரங்களைத் தேய்த்துக்கொண்டே
கைபேசியில் கல்லூரி நட்பு நுரை பொங்குகிறது.
எழும்பும் ஒவ்வொரு நுரைக்குமிழிகளும்
அவ்வளவு லேசானவை.
எங்கெங்கோ பறந்து சிரிக்கின்றன.
நம்பவியலாத ஆச்சர்யங்களால் வண்ணம் கூடுகின்றன.
இன்னும் சில இதழில்பட்டு இனிக்கின்றன.
மறுமுனையில் மணக்க மணக்க
சமைத்திறக்கி மூடப்படுகிறது உரையாடலும்.

இப்போதிருப்பவளுக்கும்
அப்போதிருந்தவளுக்கும்
எவ்வித சம்மந்தமுமின்றி வெடித்து நொறுங்குகின்றன
அனைத்துக் குமிழிகளும்.

ஓர் ஓரமாய் கைபேசி மின் நுரையை அருந்தியும்
கறை நீங்கிய பாத்திரங்கள்
காற்றின் நுரையை அருந்தியும்
தண்ணீர்க் குழாய் அடைக்கப்பட்ட போதிலும்
மனத்தின் ஊற்று மட்டும் ஊறி வழிகிறது
வறண்ட அப்பெருவெளியில்!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -