அபிஷேகம்

கவிதைகள்

- Advertisement -

அபிஷேகம்

தண்ணீர் வரவில்லை
அபிஷேகம் தாமதம்
‘எங்க போய்ட்டார் குருக்கள்?’
‘வாகன பூஜை, கோவில் வெளியே’
இன்னும் குளிக்காமல்
அம்போவென
கருவறையில்
மூலவர்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பூரணம்

அலைகளெல்லாம்
கடல் தானே?
மணல்களெல்லாம்
பாறைதானே?
கிளைகளெல்லாம்
மரங்கள் தானே?
வீழும் துளியெல்லாம்
மழை தானே?
சப்தமெல்லாம்
இடிதானே?
வெளிச்சமெல்லாம்
மின்னல் தானே?
கோள்களெல்லாம்
பிரபஞ்சம் தானே?
நாதன் உள்ளிருந்தால்
நாமெல்லாம்
கடவுள் தானே?

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

முறையீடு

கருத்தமுகம்
நரைத்த முடி
மூங்கில் தேகம்
‘எங்கப்பங்கொலம்
தேவர்கொலம்’
கைவீசி கடவுளிடம்
பேசிய படி
தன்னை மறந்த கிழவி
‘பாட்டிய ஒக்காரச் சொல்லுங்கப்பா’
‘ஏதோ மனக்குறை,
கடவுள் கிட்டச் சொல்லுது’
பிரகாரம் சுற்றி
முடித்த பின்பும்
தொடர்ந்தது
‘முடிஞ்சா செய்யி
முடியலின்னா
சொல்லிரு’
நம்மாலும்
பேசமுடிந்தால்
எப்படி இருக்கும்
பாரத்தை இறக்கி விட்டு
லேசாகத் தூங்கி விடலாம்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

உத்தரவு

பட்டுத்துணியை
பட்டென விசிறினார்
‘ஒரு சீட்டு எடு’
‘வெள்ள வந்திருக்கு, சிறப்பு’
‘இன்னொன்னு எடு’
‘செவப்பு வந்திருக்கு,
எடுத்த காரியம் முடியும்’
‘அய்யா, வண்டி ஒன்னு வாங்கறன்’
‘அம்மா சொல்லிட்டா, தாராளமாச் செய்யி’
‘ஒரு இரவது ரூவா வையி’
நம்பிக்கை தானே எல்லாம்
பாரத்தை இறக்கி விட்டு
லேசாக நடக்கிறார்
முண்டாசு கட்டிய பெரியவர்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

நடுவுளவன்

தறிகெட்டுப் போனாலும்
தலைச்சம்புள்ள
ஊர் சுற்றியானாலும்
கடைக்குட்டி
இணையரிடம் சொல்வார் அம்மா:
‘இவன யாருக்குமே தெரியாது’
‘ரெண்டே பசங்கன்னுதான்
நினைச்சாங்க’
இவனுக்குப் பிடித்தது
எவருக்கும் தெரியாது
மேலும் சொல்வாள் அம்மா:
‘அண்ணன் இருந்தாப் போதும்’
‘நீங்க எங்க வேணாப்போங்க’
அண்ணன் பாட்டி செல்லம்
தம்பி அம்மா செல்லம்
இவனுக்குத் தான் யாருமில்லை
பேரனைத் திட்டினாலும்
இழுக்காமல் விடமாட்டாள்
‘அப்பன மாதிரியே’
‘கட்டயா, குட்டயா’
இருந்து பார்த்தால் தான்
இருப்பின் வலி தெரியும்
மேலயும் போகாம
கீழேயும் விழாமல்
நடுப்பட்ட வாழ்வு

நடுவுளவனுக்கு

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -