இல்லத்திலிருந்து பரபரப்புடன் வெளியே ஓடிவந்த வீரதேவன் பாய்ந்து குதிரையின் மீது ஏறினான்.
‘ஏன் இவன் எவ்வளவு பதட்டத்துடன் ஓடி வந்து முதுகில் ஏறுகிறான் ஒருவேளை எதிரி மன்னன் படையெடுத்து வருகிறானா..அல்லது ஊருக்குள் எங்காவது தீப்பிடித்துவிட்டதா..’ என்று யோசித்த வீரதேவனின் குதிரை கோவை நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது.
கோவையை ஆற்றங்கரைக்கு விரட்டி வந்த வீரதேவன் பாய்ந்து இறங்கி ஓடி, ஒரு புதருக்குள் போய் குந்த வைத்தான்.
‘அட நாதாரி பயலே.. இதற்குதான் இப்படி பாய்ந்து வந்தாயா.. காலையிலிருந்து நான்கைந்து முறை இப்படி அவசர அவசரமாய் ஆற்றங்கரைக்கு வரும்படி ஆகிவிட்டதே.. அப்படி என்னத்தை தின்று தொலைத்தான் என்று தெரியவில்லையே..’
அனைத்தையும் முடித்துக்கொண்டு ஆற்றில் சுத்தம் சுகாதாரம் செய்துவிட்டு வந்த வீரதேவன் கோவையின் முதுகில் கை வைத்து நின்று பெருமூச்சுவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
‘’ராத்திரி உடும்புக்கறிக்குள் ஆட்டுக்கறியை வைத்து சமைத்த மனைவியின் புது விதமான சமையல் தொழில்நுட்பம் தோல்வி அடைந்து விட்டது..’’ என்று முணுமுணுத்தான்.
கோவை கனைத்தது.
‘’சிரிக்காதே.. சில பரிசோதனை முயற்சிகளில் இதுபோன்று பிழை நிகழ்வது இயல்புதான்..’’
கோவை மறுபடியும் கனைத்தது.
‘’மீண்டும் மீண்டும் சிரித்து என்னை கடுப்பேத்தாதே.. அப்புறம் உனக்கு கோவை என்று எப்படி பெயர் வந்தது என்று சொல்லி நானும் கிண்டல் செய்வேன்..’’ என்றான் வீரதேவன்
கோவை திரும்பி அவனை முறைத்து விட்டு, வெடுக்கென நடக்க ஆரம்பித்தது.
ஓடிவந்து அதன் முதுகில் ஏறிக் கொண்ட வீரதேவன், ‘’இப்போது புரிகிறதா..ஒருவர் மனம் புண்படும் புன்னகை கூட தவறுதான்..’’’
கோவை நடையோட்டமாய் செல்லத் துவங்கியது.
கோவைக்கு கடந்த வருடம் வரை வல்லன் என்கிற பெயர்தான் இருந்தது. ஒரு முறை பொருட்காட்சி திடலுக்கு சென்றிருந்த வீரதேவன்,வல்லனை குதிரைகள் கட்டும் இடத்தில் கட்டி விட்டு உள்ளே போனான்.
வல்லனை அருகில் கட்டப்பட்டிருந்த இரண்டு குதிரைகள் கேலி கிண்டல் செய்தபடி சீண்டத் தொடங்கின. வாலால் அடிப்பதும், இடுப்பால் இடிப்பதுமாயிருந்த அவற்றின் இம்சை பொறுக்கமாட்டாமல் பொங்கி எழுந்த வல்லன் கட்டை அவிழ்த்துக் கொண்டு பாய்ந்தது. வந்த கோபத்தை வீரம் என்று நினைத்துக்கொண்டு பாய்ந்ததில் தவறில்லை. ஆனால் வல்லனுக்கு விவேகம்தான் போதாமல் போயிற்று. எதிரிகள் இரண்டு பேர் என்றவுடன் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். இரண்டு பேரும் நம்மைவிட ஊட்டமாய் இருக்கிறார்களே என்பதை பார்த்து இன்னும் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். இது எதையும் யோசிக்காமல் பாய்ந்த வல்லனை எதிரிகள் இருவரும் துவைத்தெடுக்க ஆரம்பித்தார்கள்.
மக்களின் கூச்சலை கேட்டு ஓடிவந்த வீரதேவன் வல்லனை இழுத்து காப்பாற்றி சமாதானப்படுத்த முயன்றான்.
அவனிடமிருந்து திமிறி விலகி ,’இத்தனை அடிகள் வாங்கிவிட்டேன், எதிரிகளை ஒரு கடியாவது கடிக்காமல் விடமாட்டேன்’ என்கிற மாதிரி கனைத்துக் கொண்டு வாயை திறந்தபடி பாய்ந்தது வல்லன்.
எதிரிகள் பலசாலிகள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட என்பது அவர்கள் விலகிக் கொண்ட பிறகுதான் வல்லனுக்கு புரிந்தது.
ஏனென்றால் வல்லனின் வாய் போய் பதிந்து நின்றது ஒரு கோவேறு கழுதையின் முதுகில்.
‘’வீல்..’’ என்று அலறிய கோவேறு இரு பின்னங்கால்களையும் தூக்கி விட்ட உதை வல்லனின் வாயில் வெடித்தது.
வீரதேவன் வல்லனை இல்லத்திற்கு அழைத்து வந்து சேர்க்கும்போது வல்லனின் முன் உதடுகள் இரண்டும் வீங்கி கோவை பழம் போல் சிவந்து தொங்கின.
வல்லன் ஒரு வாரத்திற்கு திரவ உணவு மட்டும் உட்கொள்ளும் படி ஆனது.
கோவை பழம் போல் சிவந்த உதடுகளுடன், உதட்டு சாயம் பூசப்பட்ட அழகி போல் காட்சியளித்த வல்லனுக்கு பெயர் அன்றிலிருந்துதான் கோவை என்றானது.
கடந்த காலத்தை எண்ணிப் பார்த்த கோவை, ‘வீரர்கள் வாழ்வில் இதெல்லாம் சகஜம் என்று நானே என்னை தேற்றிக் கொண்டு விட்டேன் மறுபடியும் அதை ஞாபகப்படுத்தி மண்டை காய வைக்கிறானே.. எனக்கு வருகிற கோபத்திற்கு இவனை குப்புறத் தள்ளி குழியைப் பறித்து விடுவேன். ஆனால்.. கேலி கிண்டல் செய்தாலும் இவன் ஒரு நல்ல மனிதன். முதலாளி போல் நடந்து கொள்ளாமல் ஒரு சகோதரனை போல் நடந்து கொள்ளும் ஒரு குதிரைநேயவாதி..
எதிரில் வந்த குதிரை வண்டி ஒன்று வீரதேவனை பார்த்ததும் நின்றது.
உள்ளிருந்து ஒரு நடுத்தர வயது நபர் இறங்கினார்.
‘’வணக்கம் ஜெயதேவன் அவர்களே..’’
‘’அது என் மூத்த சகோதரனின் பெயர்..’’
‘’மன்னிக்கவும் வெற்றி தேவன் அவர்களே..’’
‘’அது என் இளைய சகோதரனின் பெயர்..’’
தலையை சொறிந்து கொண்ட அவர், ‘’மீண்டும் மன்னிக்க வேண்டும் சுபதேவன் அவர்களே..’’
அது என் இளைய இளைய சகோதரனின் பெயர்..’’
‘’உஷ்..’’ என்று பெருமூச்சு விட்ட அவர், ‘’இவ்வளவு சிரமப்படுகிறேனே.. தங்கள் பெயரை தாங்களே கூறி விடலாமே..’’
‘’தாங்கள் முதலிலே கேட்டிருக்கலாமே..என் பெயர் வீரதேவன்..’’
‘’மீதி தேவர்கள் யாராவது உள்ளார்களா..’’
‘’இல்லை மீதி ஆறு பேரும் வீரதேவி ஜெயதேவி என்கிற தேவிகள்தான் என் சகோதரிகள்..’’
‘’ஆக மொத்தம் பத்து மக்கள். உங்கள் தாயார் நல்ல திடகாத்திரமான பெண்மணி என்று எண்ணுகிறேன்..’’
‘’அப்படி சொல்ல முடியாது..’’
‘’ஏன்..’’
‘’நான்கு பேரை என் தந்தை என் சித்தியின் மூலம் உருவாக்கினார்..’’
‘ஞே’ என்று விழித்த அவர் சுதாரித்துக் கொண்டு, ‘’இந்த பெயர் குழப்பத்தில் சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிட்டேன்..’’
‘’மறந்தே விட்டீர்களா..’’
‘’சொல்ல மறந்து விட்டேன் என்றேன்..’’
‘’அப்படியானால் இப்போது சொல்லலாமே..’’
‘’நான் வியாபார விஷயமாக அடுத்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்..வழியில் சந்தித்த ஒரு குதிரை வீரர், ‘நான் படைவீரர் வீரதேவன் என்பவரை காண வந்தேன். இல்லத்தில் அவர் இல்லை. நான் கிழக்குப் புறமாக தேடிச் செல்கிறேன். மேற்குப்புறம் பயணம் செய்யும் தாங்கள் அவரை சந்திக்க நேர்ந்தால் உச்சிப் பொழுதிற்குள் அம்மன் கோயிலுக்கு வரும்படி கூறுவீர்களாக’ என்று தகவல் சொன்னார். அவர் கூறிய அடையாளம் தங்களுக்கு பொருந்தியதால் தங்களை வழி மறித்தேன். வியாபார யோசனையில் தங்கள் பெயரைதான் மறந்து விட்டேன்..’’
‘’உங்கள் தகவலுக்கு நன்றி..’’ என்ற வீரதேவன் கோவையை கோயிலை நோக்கி விரட்டினான்.
மதிய வேலை என்பதால் கோயிலில் கூட்டம் குறைவாக இருந்தது.
வீரதேவன் உள்ளே நுழைந்தான்.
சிலர் அவனை அடையாளம் கண்டு கொண்டு வணக்கம் தெரிவித்தார்கள்.
ஒரு அரசாங்க ஊழியனுக்கு மக்கள் தரும் மரியாதை.
வீட்டில் பொண்டாட்டியிடம் இடி வாங்கும் போதெல்லாம் வீரதேவன் இந்த மக்கள் மரியாதை நினைத்துதான் ஆறுதல் பட்டுக் கொள்வான்.
முதலில் அட்டசக்தி மண்டபம் சென்று பார்வையிட்டான். சந்தேகப்படும்படி யாருமில்லை.
அடுத்து சித்திர கோபுரம், பொற்றாமரைக்குளம், ஊஞ்சல் மண்டபம் என்று சுற்றி வந்தான்.
கிளிக்கூட்டு மண்டபம்தான் பாக்கி.
அவனுக்கு வந்திருப்பது யார் என்று புரிந்து விட்டது.
இருள்சேனர். உளவுத்துறை தலைவர்.
அவருக்கு இந்த கோயிலில் மிகவும் பிடித்த இடம் கிளிக்கூட்டு மண்டபத்தின் மேல் விதானம். அங்கிருந்து கோயிலையும் ஊரையும் பறவை பார்வை பார்ப்பது ஒரு இனிய அனுபவம் என்று அவரே கூறியிருக்கிறார்.
வீரதேவன் படியேறி மேலே போனான்.
பச்சை புல்வெளி ரசித்தபடி இருந்த இருள்சேனர் திரும்பினார்.
‘’வா வீரா..’’ என்றார்.
‘’வணக்கம் இருள்சேனரே..’’ என்றான் வீரதேவன்.
‘’அரண்மனையிலும் நகரத்திலும்தான் என்னை அப்படி அழைக்கிறார்கள் நீயாவது என்னை அருள்சேனர் என்று விளிக்கக் கூடாதா..’’
‘’மன்னிக்க வேண்டும்..’’
‘’ஹா ஹா..’’ என்று சிரித்த இருள்சேனர், ‘’வருந்தாதே சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. அருள்சேனர் என்கிற பெயர் எனக்கே மறந்து விட்டது எப்போது மன்னர் இப்படி இருள் மாதிரி கருப்பாக இருக்கிறாயே உனக்கு அருள்சேனர் என்கிற பெயரை விட இருள்சேனர் என்கிற பெயர்தான் பொருத்தம் என்று பகடி செய்தாரோ அன்றிலிருந்து அனைவராலும் இருள்சேனர் என்றே அழைக்கப்படுகிறேன்..’’
‘’ச்சே இந்தக் கதையில்தான் எத்தனை பெயர் குழப்பங்கள்..’’ என்று முணுமுணுத்தான் வீரதேவன்.
‘’என்ன வீரா..’’
‘’ஒன்றுமில்லையே சேனரே..’’;
‘’நலம்தானே..’’
‘’தங்கள் அன்பிருக்கும் போது நலத்திற்கு என்ன குறை..’’
‘’என் அன்பு போதும் என்றால் இந்த மாதத்தில் இருந்து உன் சம்பளத்தை நிறுத்த சொல்லி விடலாமா..’’
‘’சேனரே..’’ என்றான் வீரதேவன்.
‘’பதறாதே.. பகடி செய்தேன்..’’ என்ற இருள்சேனர் முகத்தை சுருக்கிக்கொண்டு, ‘’வழக்கமான கேள்விதான் உண்மையில் நீ யார் என்பது இங்குள்ள யாருக்கும் தெரியாதுதானே..’’
‘’தெரியாது சேனரே.. மக்களும் என் உறவுகளும் சாதாரண படைவீரன் என்றே என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் அரசின் உளவுத் துறையின் முக்கிய பொறுப்பில் இருப்பவன் என்கிற விஷயம் யாருக்கும் தெரியாது..’’
‘’நன்று. அதனால்தான் மன்னர், வந்திருக்கிற புது பிரச்சினையின் காரணகர்த்தா யார் என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறார்..’’ என்ற இருள்சேனர் சொல்ல ஆரம்பித்தார்.
அந்தி சாயும் பொழுதில்தான் சொல்லி முடித்தார்.
‘’இந்த திட்டத்திற்கு நாங்கள் ‘வாரிசு’ என்ற பெயர் சூட்டி உள்ளோம். அந்த வாரிசு யார் என்பதை நீதான் கண்டுபிடிக்க வேண்டும்..’’
‘’உத்தரவு..’’ என்றான் வீரதேவன்.
மன்னரின் உத்தரவின் பேரில் வீரதேவன் ஆராய போகும் ‘வாரிசு’ திட்டத்தின் மூலத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் மன்னர் மாடவர்மரின் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம்.
மாடவர்மர் அவரது பெற்றோர்களுக்கு ஒரே வாரிசாக அறியப்பட்டவர். அவரது தந்தை மானாவர்மருக்கும், தாய் நேசதேவிக்கும் திருமணமாகி, ஏழு வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்தார்கள். கோயில் கோயிலாக அலைந்தார்கள். அவர்களே புது கோயில்களை கட்டி சுற்றிச் சுற்றி வந்தார்கள். நாட்டில் உள்ள சந்து கடை மருத்துவர்களிடம் கூட மருந்து வாங்கி உண்டார்கள் நேசதேவிக்கு பித்த வாந்தி கூட வரவில்லை.
அறுபது வயதில் இருபது வயது பெண்ணை இச்சையுடன் அணுகியதால் மக்களிடம் தர்ம அடி வாங்கி தப்பித்து ஓடி காட்டுக்குள் புகுந்து, கிடைத்த காய்கனி, இலைதளைகளைத் தின்று உயிர் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவன், இரண்டு வருடங்களுக்கு பிறகு தாடியும் மீசையுமாய், ‘மக்கள் அந்த சம்பவத்தை மறந்திருப்பார்கள், நம்மையும் அடையாளம் தெரியாது’ என்றெண்ணி காட்டை விட்டு வெளியே வந்தான்.
தீரா வயிற்று வலியால் தற்கொலை செய்யும் பொருட்டு கானகம் வந்த ஒருவன், தாடி, மீசை கந்தலுடையுடன் வந்தவனை ‘பெரிய முனிவன் போல’ என்று எண்ணி காலில் விழுந்து தன் அல்லலை சொல்லி ஆற்றுப்படுத்த வேண்டினான்.
என்ன சொல்வதென்று அறியாமல் திகைத்த முனிவன் தன் பாட்டியின் கை மருத்துவம் ஒன்றை யோசித்து கையில் இருந்த சில பழங்களை கொடுத்து ‘இவைகளை நன்கு வேகவைத்து உண் நலம் பெறுவாய்’ என்று ஆசியளித்து விட்டு அகன்றான்.
ஆச்சரியமாய் அவன் வயிற்றுவலி குணமாகிப் போக அந்த சிறுமதியாளன் முனிவராக புகழடைந்தார்.
நோயுடன் வரிசைகட்டி வந்த மக்களுக்கு கையில் வந்த பழங்களை எடுத்துக் கொடுத்து வேக வைத்து உண்ண சொல்லி கொண்டிருந்தார் முனிவர்.
அவர் வைத்திய முறையையும் புகழையும் கேள்விப்பட்டு புல்லரித்துப் போன மன்னன் மானாவர்மர் அவரை ஆசிரமத்தோடு தூக்கி வந்து அரண்மனையில் வைத்து தன் பிரச்சனையை சொன்னார்.
ஆதி முதல் அந்தம் வரை கிடுகிடுத்துப் போன முனிவர் நான்கு மணி நேரம் யோசித்து ஒன்பது பழங்களின் பெயரைக் கூறி அவற்றை வேக வைத்து கூழாக்கி உண்ணும்படி சொல்லிவிட்டு அந்தர்தியானம் ஆனார்.
குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல் பலித்த அந்த வைத்தியத்தால் அடுத்த மாசமே நேசதேவி வேலைக்கு ஒரு குடமென வாந்தி எடுத்தாள்.
பத்தாவது மாதம் மாடவர்மர் பூமியில் அவதரித்தார்.
அந்த முனிவர் அரசின் ஆஸ்தான வைத்தியராக நியமிக்கப்பட்டது தனிக்கதை.
அப்படி ஏகபத்தினி விரதனாக இருந்த தந்தை போய் சேர்ந்த பிறகு மன்னர் பொறுப்பிற்கு வந்த மாடவர்மர் ‘இந்த நாட்டு இளவரசி அழகாய் இருக்கிறாளே.. அந்த நாட்டு இளவரசி நளினமாய் இருக்கிறாளே என்று நான்கு குறுநில மன்னர்களின் மகள்களை மணந்து ‘நாலும் தெரிந்தவராக’ வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஏகபத்தினி விரதனாக இருந்த தந்தையின் பிரச்சனை ஏகப்பட்டபத்தினி விரதனான அவருக்கில்லை. ஆகையால் தலைக்கு மூன்று, நான்கு என்று மகாராணிகள் பெற்று தள்ளியதில் அந்தப்புறம் குழந்தைகள் காப்பகம் போலானது.
காலம் ஓடியது.
மூத்த மகாராணிக்கு பிறந்த மூத்தமகன் இடிகொண்ட வர்மனை அடுத்த மன்னனாக அறிவித்து அடுத்த சில மாதங்களில் அவனுக்கு மகுடம் சூட்டி அமைச்சர், தளபதிகளை அருகில் விட்டு விட்டு ஓய்வு பெறலாம் என்று எண்ணினார் மாடவர்மர்.
மன்னர் மாடவர்மர் அப்படியொன்றும் தளர்ந்து போய் விடவில்லை. அகவை ஐம்பதுக்கும் நல்ல வாலிபத்துடன்தான் இருந்தார். இன்னும் பல்லாண்டு காலம் அவர் அரசராக நீடிக்க முடியும் என்றாலும் அவர் அதை விரும்பவில்லை.
மக்கள் இதை ஒரு தியாகமாக போற்றி காவியம் பாடாத குறையாக பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் மாடவர்மரின் கணக்கோ வேறு.
ஓய்வுபெற்று நைசாக ஒதுங்கிக் கொண்டு வேட்டைக்கு போவது, எல்லைப்புற மக்களை சந்திப்பது என்று திட்டம் வகுத்து நாலாபுறமும் சென்று மிச்சமுள்ள இளமையை ‘அஜால் குஜாலாக’ அனுபவிக்கலாம் என்று திட்டம் போட்டிருந்தார்.
மற்றபடி எல்லாமே முறையாகவே நடந்தது
அடுத்த மன்னனாக மகுடம் தரிக்க காத்திருந்த இடிகொண்ட வர்மன் இருபத்தைந்து வயது இளம் கட்டிளம்காளை.
அடுத்து மகுடம் சூட்டப்போவது அவனே என்கிற பதத்தில் அவனுக்கு அவன் தாயும்,தந்தையும் வைத்தப் பெயர் மகுடவர்மன்தான்.
அவன் பத்து வயதில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கையில் இடியுடன் கூடிய மழை பிடித்துக்கொண்டது. மகுடவர்மன் ஒதுங்கிய மரத்தின் மீது ஒரு இடி விழுந்ததில், ஆளுக்கொன்றும் ஆகவில்லை.ஆனால் தலையில் இருந்த கேசம்தான் சுத்தமாய் பொசுங்கி தலை வழுக்கையாகிவிட்டது. ஆயிரம் மருந்துகள் தடவையும் அம்மஞ்சல்லிக்கு பயனில்லாமல் போனது.
வெறுத்துப்போன மன்னன் மாடவர்மர் புலவர்களை விட்டு சில பல காவியங்களை புனைய செய்தார்.
அதாவது அரண்மனை மீது இறங்கயிருந்த இடியை ஓடிப்போய் தன் தலையில் தாங்கிய வீரன் என்று பாடிய அந்த காவியங்கள், அவன் வழுக்கையை மறக்கடித்து அவனுக்கு இடிகொண்ட வர்மன் என்று பெயர் சூட்ட, மக்களும் அதை நம்ப ஆரம்பித்தார்கள்.
இப்படியாகப்பட்ட இளவரசன், மன்னனாக மகுடம் தரிக்க அடுத்த மாதத்தில் ஒரு சுபயோக சுபதினத்தை அறிவித்த அரசு, அதன் முன்னேற்பாடுகளில் தீவிரமாய் இறங்க ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான் நாட்டின் மூன்று இடங்களில் சில விரோத சக்திகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும், ஏதோ சதி ஆலோசனைக்கு அவர்கள் திட்டமிடுவதாகவும் உளவுத்துறை மோப்பம் பிடித்தது.
வீரர்கள் அந்த இடத்தை வளைக்க முற்படும் முன் அந்த இடம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.ஆட்களும் சிக்கவில்லை. ஆதாரங்களும் சிக்கவில்லை.
புரட்சி, அண்டை நாட்டு சதி என்று தோன்றிய கோணத்தில் அனைவரும் அலசிக் கொண்டிருக்க உளவுத்துறை தலைவர் இருள்சேனர்தான் அந்த இடத்திலிருந்து ஒரு தடயத்தை கண்டுபிடித்தார்.
அது ஒரு துண்டு பதாகை.
அதில் ஒரு பிரகடனம் எழுதி இருந்தது.
‘நாட்டு மக்களே..இந்த நாட்டின் உண்மையான வாரிசு இன்னும் இரண்டு வாரங்களில் வெளிப்பட போகிறார் வரவேற்க தயாராகுங்கள்’.
மன்னர் மாடவர்மர் மண்டை குழம்பி போனார்.
திருமணத்திற்கு முன் கொஞ்சம் அப்படி இப்படி இருந்ததில் தோன்றிய பிழையா..
அப்படி ஏதும் தோன்றி விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுடன்தானே செயல்பட்டோம். தொடர்பில் இருந்த பெண்கள் அனைவரும் ரகசிய படையால் கண்காணிக்கப்பட்டு அதற்குண்டான வாய்ப்புகள் இல்லை என்ற பிறகே கண்காணிப்பில் இருந்து விலக்கப்பட்டார்கள்.
அப்படியிருக்க எப்படி நிகழ்ந்திருக்கும் இந்த தவறு.. எனக்கு தெரியாமல் எனக்கொரு வாரிசா..
இல்லை அதற்கு வாய்ப்பே இல்லை. இது வேறு ஏதோ சூது சூழ்ச்சி.
இளவரசனின் முடிசூட்டு விழாவிற்கு முன் அவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்கிற பொறுப்புதான் வீரதேவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பத்து நாட்கள் கழித்து இருள்சேனருக்கு வீரதேவனிடமிருந்து ஓலை வந்தது.
நூறு படை வீரர்கள் வேண்டும். என் சமிக்க்ஷ கிடைத்ததும் குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைக்க வேண்டும்.
அவன் கூறிய படியே படைகளை அனுப்பிவிட்டு பதட்டத்தில் கைவிரல் நகங்களை கடித்துத் துப்பியபடி காத்திருந்த இருள்சேனர்,கடிக்க நகம் சிக்காததால்,ஒரு வேக வைத்த ஆட்டுத்தொடையை வரவழைத்து கடித்தபடி காத்திருந்தார்.
சற்று நேரத்தில் தகவல் வந்தது.
மொத்தம் பதினெட்டு பேர் அனைவரையும் வளைத்துப் பிடித்து விட்டோம்.
அரசின் ரகசிய காப்பகத்தில் அனைவரும் கூடியிருந்தார்கள். மன்னர் மாடவர்மர்,அமைச்சர் மதியூகர், தளபதி வெற்றி வேலன், உளவுத்துறை தலைவர் இருள்சேனர் இன்னும் நம்பிக்கைக்குரிய சிலஅதிகாரிகள், மற்றும் வீரதேவன்
அவர்கள் பதினெட்டு பேரும் கைகள் பின்னால் கட்டப்பட்டு வரிசையாய் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்.ஆறு ஆண்கள், அதில் மூன்று பேர் இளைஞர்கள், ஒன்பது பெண்கள்.அதில் ஐந்துபேர் இளம்பெண்கள்.தவிர இரண்டு சிறுவர்கள். ஒரு சிறுமி.
மன்னர் மாடவர்மர் அவர் வயதையொத்த நான்கு பெண்களையும் நெருங்கி பார்த்துவிட்டு ‘’அப்பாடா..’’ என்று நெஞ்சைத் தடவிக்கொண்டார்.
‘’என்னாச்சு மன்னா..’’ என்று கேட்டார் இருள்சேனர்.
மாடவர்மர் குனிந்து அவர் காதில் கிசுகிசுத்தார்.
‘’இந்த விஷயத்தில் என் ஞாபகசக்தி சிறப்பானது.. இந்தப் பெண்கள் யாரும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அல்ல..’’
இருள்சேனர் வாயில் வந்த எச்சிலை துப்பாமல் விழுங்கிக் கொண்டார்.
வீரதேவனை பார்த்து சொன்னார்.
‘’வீரதேவா.. யார் இவர்கள்.. இவர்களை எப்படி கண்டுபிடித்தாய்.. அந்த உண்மையான வாரிசு எனப்படுவது யார்..’’
‘’அதற்கு முன் ஒரு விஷயம்..’’ என்று அவரை அணுகிய வீரதேவன் தணிந்த குரலில் சொன்னான்.
‘’இங்கு மருத்துவர்கள் யாராவது உள்ளார்களா..’’
‘’ஏன் எதற்கு கேட்கிறாய்..’’
‘’நான் கூறும் விஷயம் மன்னரின் உடல்நலத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.. அதனால் கேட்டேன்..’’
‘’நீ பீதியூட்டுவதை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கிறது.. நான் மருத்துவர்களை வரவழைக்கிறேன்.. நீ விஷயத்தை விளக்கு..’’
வீரதேவன் தொண்டையை கனைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.
‘’நான் முதலில் இவர்களை எப்படி பிடித்தேன் என்று சொல்லிவிடுகிறேன் நாம் அவர்களின் மறைவிடம் என்று கருதி அணுகியபோது அவர்களால் எரியூட்டப்பட்ட மூன்று இடங்களும் நகரின் மூன்று திக்குகளில் இருந்தன மூன்று திக்களுக்கும் இடைப்பட்ட தூரம் சமமாய் இருந்தது. அதன்படி பார்த்தால் அவர்களின் இன்னொரு குழு அதே இடைப்பட்ட தூரத்தில் நான்காவது திசையில் இருக்க வேண்டும் என்று அனுமானித்து ஒரு ஏரியாவை தேர்ந்தெடுத்தேன். மாறுவேடத்தில் அலைந்து திரிந்து சமீபத்தில் மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த இவர்களை கண்டு பிடித்தேன்.வளைத்து விட்டேன்..’’
‘’நன்று அந்த உண்மையான வாரிசு என்பது..’’ என்று வினா எழுப்பினார் தளபதி வெற்றி வேலன்.
‘’அனைவரும் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் நம் நாட்டின் உண்மையான மன்னர் இங்கேதான் இருக்கிறார்..’’
‘’ஆம் நம் மன்னர் மாடவர்மர் இங்கேயேதான் இருக்கிறார்..’’ என்றார் அமைச்சர் மதியூகர்.
‘’நான் அவரைச் சொல்ல வில்லை..’’ என்ற வீரதேவன் உரையிலிருந்து வாளை உருவிக்கொண்டு நடந்துசென்று அந்த பதினெட்டு பேரில் நடுநாயகமாக நின்று இருந்தவரை அணுகினான்.
அவர் முன் மண்டியிட்டு வாளை கிடைமட்டமாக கைகளில் ஏந்தியபடி கூறினான்.
‘’மன்னருக்கு என் வணக்கங்கள்..’’
‘’நலம் திகழட்டும்..’’ என்று அவன் தலையில் கை வைத்து வாழ்த்தினார் அவர்.
‘’வீ..வீர தேவா என்ன இது..’’ என்று ஏக சமயத்தில் அலறினார்கள் அத்தனைப்பேரும்.
புதிய மன்னர் தன் முண்டாசையும் ,முகத்தை பாதி மூடி சுற்றியிருந்த அங்கவஸ்திரத்தையும் அகற்றினார்.
அமைச்சர், தளபதி, தலைவர் அனைவருடைய விழிகளும் விரிந்தன.
இவரை.. இவரை.. எங்கேயோ பார்த்திருக்கிறோமே எங்கே.. எங்கே.. அடக்கடவுளே.. நம் மன்னர் மாடவர்மரின் ஜாடை அப்படியே இருக்கிறதே..
வீரதேவன் சொன்னான்.
‘’அடுத்த வாரிசு என்றவுடன் நாம் நம் மன்னர் மாடவர்மரின் வாரிசு என்ற கோணத்திலேயே பார்த்துக்கொண்டிருந்தோம். அது தவறு ஆம்.நம் மன்னரின் தந்தை மானாவர்மர் ஒன்றும் ஏகபத்தினி விரதர் அல்ல. இளம்வயதில் காட்டுக்கு வேட்டைக்கு போனவர் ஒரு மலைக்கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை கண்டு மையல் கொண்டு, தான் ஒரு இளவரசர் என்பதை மறைத்து தன்னை ஒரு வேடன் என்று சொல்லிக் கொண்டு அந்த பெண்ணை மணம் செய்து கொண்டிருக்கிறார். சில மாதங்கள் அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டார்.
அவருக்கும், அண்டை நாட்டு இளவரசி நேசதேவிக்கும் திருமணம் முடிவான சமயத்தில் தன் மலைக்கிராம மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததை அறிகிறார். அந்தப் பெண்ணும் குழந்தையும் உயிரோடு இருந்தால் தனக்கு அவமானம்தான் ஏற்படும் என்று நினைத்து இருவரையும் கொல்ல நான்கு வீரர்களை அனுப்பி வைத்தார்.
அதற்குள் தன்னை மணந்தவர் நாட்டின் இளவரசர் என்பதையும், இளவரசரின் வாரிசைதான் தாம் பெற்றெடுத்தோம் என்பதையும் அந்த பெண் தெரிந்து கொண்டாள். ஊர் முக்கியஸ்தர்களிடம் சொல்லி உதவி நாடினாள்.
ஊர் முக்கியஸ்தர்கள் கூடிப்பேசி முடிவெடுத்து அவளையும் குழந்தையும் கொல்ல வந்த நான்கு படைவீரர்களை மடக்கி பேரம் பேசினார்கள். அந்த நான்கு வீரர்களுக்கும் ஒரு பெரும் தொகை கையூட்டாக வழங்கப்பட்டது.
பெண்ணையும் குழந்தையையும் கொன்று விட்டதாக கூறும்படி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
மானாவர்மர் அந்த தகவலை கேட்டு சாந்தியடைந்து நேசதேவியை மணந்து கொண்டார்.
ஏழு வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்தார்.
தான் செய்த பாவமே தன்னைப் பழி வாங்கி வாங்குகிறது என்று நொந்து நூலானார்.
மாடவர்மர் பிறந்த பிறகே அவர் அமைதி அடைந்தார்.
ஆனாலும் அவர் தன் தவறை எண்ணி கடைசி காலம் வரை கண்ணீர் வடித்தார்.
அந்தப் பெண்ணும், வேழ வேந்தன் என்று பெயரிடப்பட்ட குழந்தையும் வேறு ஒரு எல்லைக்கு இடம் பெயர்ந்திருந்ததால் அவரால், அவர்களை தேடி அணுக முடியவில்லை.
தன் தாய் இறந்த பிறகு அவர் பொக்கிஷமாய் வைத்திருந்த பெட்டியில் இருந்த ஓலைச்சுவடிகள் வழியாக அனைத்தையும் அறிந்த வேழ வேந்தன் இத்தனை வருட காலம் கழித்து தன்னுடைய ஐம்பத்தியேழாவது வயதில் தன் உரிமையை நிலைநாட்ட வந்துள்ளார்..’’
‘’இதற்கெல்லாம் என்ன ஆதாரம்..’’
‘’மன்னர்களின் ரகசியங்களை அந்த மன்னர்களை விட அவர்களின் நிழலாய் வாழும் அமைச்சர்கள்தான் அறிவார்கள் என்பது ஊரறிந்த ஒன்றுதான்.. மன்னர் மானாவர்மர் காலத்தில் அமைச்சராயிருந்து மன்னர் மாடவர்மர் பதவியேற்ற சில ஆண்டுகளில் ஓய்வு பெற்ற தூலகரை சந்தித்தேன். நான் கேட்டது மன்னர் மாடவர்மரைப் பற்றி.. ஆனால் வயோதிகத்தின் காரணமாக செவித்திறன் பாதிக்கப்பட்டிருந்த தூலகர் குழம்பிபோய் மன்னர் மானாவர்மரைப் பற்றிய ரகசியங்களை பந்தி விரித்து விட்டார்.. அவர் கூற்றின் படி மன்னர் மானாவர்மர் தன் மனைவி, மகனை கொலைபுரிய அனுப்பிய நான்கு வீரர்களில் இருவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.. அவர்களே இதற்கெல்லாம் சாட்சி..’’
‘’அப்படியென்றால்..’’
‘’நம் நாட்டின் அரசியல் சாசனத்தின் படி மன்னரின் முதல் ஆண் வாரிசுதான் மன்னர் பொறுப்பிற்கு வர இயலும். அப்படியென்றால் இவர்தான் இந்த வேழவேந்தன்தான் நம் மன்னர்.. ‘’என்ற வீரதேவன் இருள்சேனரை நோக்கி, ‘’மருத்துவர்களை வரவழைக்கச் சொன்னேனே வந்துவிட்டார்களா..’’
குழப்பத்தில் மூளை கொதிப்புக்கு உள்ளாகியிருந்த இருள்சேனர், ‘’எதற்கு கேட்கிறாய்..’’ என்று இரைந்தார்.
‘’நம் பழைய மன்னர் மாடவர்மர் மயங்கி விழுந்து கால் மணி நேரம் ஆகிறதே..அவரை எழுப்ப வேண்டாமா..’’ என்றான் வீரதேவன்.