வல்லமை தாராயோ…

- Advertisement -

வித்ரா தோளுக்குக் கீழ் சுற்றிய துண்டை இடது கையால் பிடித்துக் கொண்டே வலது கையால் கழுத்துப் பகுதியைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். ஷவரில் இருந்து வழிந்த நீர் அந்தச் சிறிய துண்டை விலக்கி விட்டபடி அவளோடு விளையாடியது. அவள் கைகள் பதட்டத்துடன் துண்டை உடம்போடு சேர்த்துப் பிடித்தது. இரண்டு பேர் ஒரே சமயத்தில் உள்ளே குதிக்கக் கூடியதாய் இருந்த அந்த அகலமான மூடப்படாத ஜன்னலைத் திரும்பி பார்த்தாள்.

அங்கே ஒரு உருவம் ஒரு கையில் சிகரெட் புகைத்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது. அது அவள் தங்கியிருக்கும் பெண்கள் விடுதி இருக்கும் தெருவின் முனையில் இருக்கும் பெட்டிக் கடையின் முதலாளி. கடையில் நிற்கும் போது எப்போதும் அணிந்திருக்கும் வெள்ளை வேட்டி புஜம் வரை மடக்கப் பட்டிருக்கும் வெள்ளை சட்டையோடு நின்றிருந்தார்.

திரும்பிப் பார்ப்பதற்கு முன்பே பவித்ராவிற்கு அங்கு அவர் தான் நின்று கொண்டிருப்பார் என்று தெரிந்திருந்தது. அவரை அங்கே பார்த்தவுடன் சட்டெனத் தரையோடு உட்கார்ந்தாள். உடல் முழுக்க பல நூறு கரப்பான் பூச்சிகள் நகர்வதைப் போல் இருந்தது.

விழித்த பின்னும் உடம்பில் இன்னும் அந்த நடுக்கம் இருந்தது. போர்வையை இன்னும் இறுக்கமாய்ப் போர்த்திக் கொண்டாள். இடது கால் மேல் ஏதோ மீசையின் குறுகுறுப்பு தெரிய வேகமாக கட்டிலை விட்டு எழுந்து நின்றாள். அந்தக் குறுகுறுப்பு இப்போது இடுப்பில் தெரிந்தது. திறந்த வாயைச் சிரமம்பட்டு மூடி நெடிய மூச்சுக்களால் அலறலை வெளி விட்டாள். பின் நைட்டியை வேகமாக உதறினாள். ஒரு கரப்பான் பூச்சி தரையில் ‘தொப்’பென விழுந்து உடனே கட்டிலின் அடியில் ஓடி மறைந்தது.

பக்கத்துப் படுக்கையில் இருந்தவள் முகம் வரை மூடிக் கொண்டு ஒரு துணி மூட்டையைப் போல் தூங்கிக் கொண்டிருந்தாள். பவித்ராவின் விரல்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. கட்டிலின் மேல் அமர்ந்தவள், அடியில் துழாவி தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து மட மடவெனக் குடித்தாள். கைப்பேசித் திரை மூன்று பத்து என்று காட்டியது. ஒருமுறை மெத்தை முழுவதும் போர்வையால் தட்டி விட்டுப் படுத்தாள்.

பவித்ராவிற்குக் கனவுகள் வராத நாட்களே இல்லை. ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு விதமாய் வரும். ஆனால் மனதுக்குத் சந்தோஷம் தரும் கனவுகள் மிகச் சொற்பம். அதிகம் வருபவை உடம்பைப் பதற வைக்கும் இது போன்ற அரை நிர்வாணக் கனவுகள்தான்.

ஒரு பெரும் ஜனத் திரள் நடுவே உள்ளாடைகளோடு நின்றவளைப் பல கண்கள் மொய்த்துக் கொண்டும் கடந்து செல்லும் பெண்களின் வாய் அவளை வசை பாடிக் கொண்டே செல்வதுமாய் ஒரு கனவு. மற்றொரு கனவில், ஆபீசில் மேனேஜர் அவள் குழுவுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவள் மட்டும் இடுப்பிற்கு மேல் பறந்து கொண்டிருந்த பாவாடையைச் சங்கடத்தோடு பிடித்துக் கொண்டே நிற்க, மேனேஜர் அவளை உடனே வெளியேறுமாறு கத்தினார். அந்தக் கனவு வந்த அந்த வாரம் அவள் மேனேஜரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் திணறினாள்.

ஆனால் பிரேமிடம் சொன்னால் “சில்லி” என்று ஏளனமாய்ச் சிரிப்பான். அதோடு தனக்குக் கனவுகளே வந்ததில்லை என்று கூறுவான். அது எப்படி ஒரு மனிதனுக்குக் கனவுகள் வராமல் இருக்க முடியும் என்று கேட்டால், “அது எனக்குத் தெரியாது. ஆனா எனக்குக் கனவுகள் வரதில்ல.” தோளைக் குலுக்கியபடி கூறுவான்.

‘ஹிப்போக்ரட். எல்லாருக்கும் நடக்குறது உனக்கும் நடக்கும்னு சொன்னா தலையில இருந்து கிரீடம் இறங்கிடுமா? இன்னைக்கு நைட் உனக்கு வர்ற கனவுல உன்னக் கருந்தேள் தின்னட்டும்’ அவள் மனதிற்குள் முணுமுணுப்பாள்.அவள் பிரேமைக் காதலித்தாள். அது உண்மையில் காதல்தானா? இவன் தன்னால் காதலிக்கப்படுமளவுக்கு தகுதியானவன் தானா? என அவளுக்குப் பல சந்தேகங்கள் உண்டு. ஆனால் அந்தச் சந்தேகங்களை மீறி அவனை அவள் காதலித்தாள். அப்படித்தான் நம்பினாள். இருபத்தி மூன்று வருடங்களில் எந்த ஆண்மகனும் அவளுக்களித்திராத கௌரவத்தை பிரேம் கொடுத்திருந்தான். அவளைக் காதலிப்பதாய்க் கூறினான்.“ஒய் மீ?”

அவள் எல்லாப் பெண்களும் கேட்கும் கேள்விகளைக் கேட்டாள்.“நீ அழகா இருக்க. கேரிங்கா இருக்க. ம்ம்ம்.. தெர்ல .. குறிப்பிட்டுச் சொல்ல முடியல. ஆனா உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு.”

அவன் பெரும்பாலான ஆண்கள் கூறும் பதிலைக் கூறினான். ஆனால் அவளுக்கு அது மிகவும் புதிதாய் இருந்தது. அவளை நோக்கி முதன் முறையாகச் சொல்லப் பட்டது. அந்தப் பதில் வயிற்றில் தந்த குழைவு பிடித்திருந்தது. ஒரு வாளி நிறைய ஐஸ் கட்டிகளை அவள் மேல் கவிழ்த்ததாய்க் குளிர்ந்தாள். அதற்காக அவனுக்கு தான் என்றென்றும் கடமைப்பட்டவள் என நினைத்தாள்.

விடிந்ததும் பவித்ரா எழுந்து பல் துலக்கிக் குளித்து விடுதியின் கூடத்தில் மூன்று இட்லிகள் சாப்பிட்டு புளியோதரையைக் கட்டிக்கொண்டு கிளம்பினாள். தெரு முனையில் திரும்புகையில் அந்தப் பெட்டிக் கடையைத் தயக்கத்துடன் பார்த்தாள். முதலாளி அதே வெள்ளை வேட்டி சட்டையோடு உட்கார்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும் சிரித்தார். கரப்பான் பூச்சிகள் ஊர்ந்தன.

“ஆபீசுக்குக் கிளம்பியாச்சா? என்ன இன்னைக்குப் பேப்பர் வாங்க வரல?”

“இல்ல. நாளைக்கு வாங்கிக்குறேன். லேட் ஆகிருச்சு.” சொல்லும்போது பாதி நிமிர்ந்த தலை அவர் முகத்தை அடையும் முன்னே குனிந்து கொண்டது.அலுவலகத்திற்குச் சென்று அவள் நாற்காலியில் அமரும்போது தான் நினைவிற்கு வந்தது. அம்மாவைப் பார்க்க அந்த வாரம் வருவதாய்ச் சொல்லியிருந்தாள். ஆன்லைனில் டிக்கெட் பதிவு சேயும் போதே சீக்கிரம் அம்மாவை இங்கேயே அழைத்து வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். சித்தியையும் கூப்பிடலாம். ஆனால் வரமாட்டாள்.

வித்ராவின் அம்மா இந்திராவிற்கு ஊட்டியில் ஒரு வீட்டில் அங்கேயே தங்கி வயதான பெண்மணி ஒருவரைப் பார்த்துக்கொள்ளும் வேலை கிடைத்திருந்தது. ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பவித்ராவை மதுரையில் இருந்த அவள் தங்கை குமுதாவின் வீட்டில் விட்டுச் சென்றாள். சித்தி சித்தப்பாவிற்குக் குழந்தைகள் இல்லை. முத்து சித்தப்பாவிற்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். கையைப் பிடித்துத் தலையைத் தடவித் தன்னோடு அணைத்துக் கொள்வார். குமுதா சித்தி எப்போதும் அது போன்ற வாஞ்சையைக் காட்டியதில்லை. ஆனால் அக்கறை இல்லாமல் இல்லை. பல நேரங்களில் தன் அம்மாவை விடவும் தன் தேவை அறிந்து செயல்படுவது சித்திதான் என்று பவித்ரா நினைப்பதுண்டு.

“அவ சின்ன வயசிலேருந்தே அப்படித்தான். அழுத்தக்காரி. ஒரு வார்த்தை வெளிய விடமாட்டா. பிள்ள இல்லைன்னு ஆனதுக்கப்புறம் கூட அவ கண்ணுல ஒரு சொட்டுக் கண்ணீரப் பாக்கணுமே. ம்ஹூம்..”.

இந்திராவிற்கு அவள் தங்கை மனம் திறந்து பேசாததை விட அவள் முன் கண்ணீர் விடாததுதான் பெரிய குறையாய்த் தெரிந்தது. இந்திராவிற்கு ‘முனுக்’கென்றால் கண்ணில் நீர் எட்டிப் பார்த்து விடும். கணவன் இருந்தவரை அவளை ஒரு ராணியைப் போல் தாங்கினான். வசதி அதிகம் இல்லையென்றாலும் சொல்லிக் கொள்ளும்படியாய் குறையும் இல்லாமல் தான் அவள் வாழ்க்கை சென்றது. பவித்ராவும் நன்றாகவே படித்து வந்தாள்.

கணவனை மஞ்சள் காமாலைக்குப் பலி கொடுத்த பின் தான் இந்திரா வாழ்க்கையின் கோர முகத்தை முதல் முறையாகப் பார்த்தாள். அதுவரை வாழ்ந்த இடமே அதன் பின் அந்நியமாகத் தெரிய ஆரம்பித்தது.

பவித்ராவை அவள் வீட்டில் விட்டுச் செல்லப் போவதாய் சொன்னபோது குமுதா அதை விரும்பவில்லையோ என்று கூட அவளுக்குத் தோன்றிற்று. ஆனாலும் வேறு வழியில்லை. நம்பிக்கையாய்ப் பெண்ணை வேறு எவரிமும் விட முடியாது. மகளைத் தங்கையிடம் ஒப்படைத்துவிட்டு ஊட்டிக்குப் சென்றாள்.

ஒரு நாள் தூரத்து உறவினர் கல்யாணத்திற்கு சிவகங்கை சென்றிருந்த சித்தி அன்று இரவு அங்கேயே தங்கும்படி நேர்ந்தது. அடுத்த நாள் காலையில் முதல் பஸ் பிடித்து வந்துவிடுவதாகவும் பவித்ராவை பத்திரமாய் இருந்து கொள்ளுமாறும் அங்கிருந்து பக்கத்து வீட்டிற்கு போன் போட்டுச் சொன்னாள்.

அன்றிரவு நல்ல தூக்கத்திலிருந்த பவித்ராவிற்குத் திடீரென மூச்சு முட்டியது. ஒரு ராட்சத சணல் கயிறு அவள் நெஞ்சை இறுக்குவதைப் போல் உணர்ந்தாள். விழித்துப் பார்த்த போது அது கயிறல்ல உரோமங்கள் நிறைந்த கைகள். திரும்பிப் பார்த்தாள். முத்து சித்தப்பா. அதிர்ச்சி ஒரு இரும்புப் பந்தாய் அவள் இதயத்தை அழுத்தியது. சில நொடிகள் செய்வதறியாது திகைத்தாள். அவளுக்கு அழுகை வெடித்துக் கிளம்பியது.

“விடுங்க சித்தப்பா..” அழுகையால் அவள் குரல் கனத்து குழறலாய் வெளிவந்தது. அவள் அவர் கைகளைப் பலம் கொண்ட மட்டும் தள்ளினாள். திமிங்கலத்தின் வாய் முன் மீன் குஞ்சின் நீந்துதலாய் அவள் முயற்சிகள் வீணாகின. சிறிது நேரத் தொடர்ந்த திமிறல்களுக்குப் பின் அவர் அசந்த நேரம் அவர் கைகளை விலக்கி விடுபட்டவள் வேகமாக கதவைத் திறந்து வெளியே ஓடினாள்.

ஐந்து லைன் வீடுகள் கொண்ட அந்தச் சின்ன சந்தின் வாசலுக்கு வந்தாள். அங்கிருந்த சிமென்ட் மேடையில் அமர்ந்தவளுக்குத் துக்கம் பொங்கி வந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்து தன்னைத் தூக்கி வளர்த்த சித்தப்பாவா இப்படி…? அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அந்தத் தெருவில் அந்த நேரத்திலும் எங்கோ ஆட்கள் பேசும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தமே தைரியம் தர, அவள் அங்கேயே ஓரமாக நடுநடுங்கியபடி அமர்ந்தாள். வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்துவிட்டு உடனே மறைந்து போனது சித்தப்பாவின் தலை.

அடுத்த நாள் விடியத் தொடங்கும் முன்பே சித்தி வந்துவிட்டாள். பவித்ராவை இரவு முழுக்க அழுது வீங்கிய முகத்தைப் அங்கே பார்த்ததும் நெற்றியைச் சுருக்கினாலே தவிர வேறு எதுவும் அவளிடம் கேட்கவில்லை. ‘வா’ என்று அவள் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

அடுத்த ஆறு ஆண்டுகள் பவித்ரா மதுரையில் தான் படித்தாள். அன்றைய சம்பவத்திற்குப் பிறகு,சித்தி முற்றிலுமாக சித்தப்பாவுடன் பேசுவதை நிறுத்தி விட்டிருந்தாள். பவித்ராவை வீட்டில் தனியே விட்டு ஒருநாளும் வெளியே சென்றதில்லை. இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் அதிகாலையிலேயே வீட்டை விட்டுச் சென்ற சித்தப்பா பிறகு திரும்பவே இல்லை. சித்தி அன்று இரவு தலைக்குக் குளித்தாள். அடுத்த மாதமே பவித்ராவைக் கூட்டிக் கொண்டு அரசரடிப் பக்கம் குடியேறிவிட்டாள்.

கல்லூரிப் படிப்பு வேலை என்ற சென்னை வந்த இத்தனை வருடங்களில் விடுமுறைக்குப் பவித்ரா ஊட்டிக்குச் சென்றதை விட மதுரைக்குச் சென்றதே அதிகம். தன்னை விடத் தன் பெண் குமுதாவிடம் ஒட்டிக் கொண்டுவிட்டதில் இந்திராவிற்குப் பொறாமைதான்.

“என்னதான் இருந்தாலும் நான் தாண்டி உன்னப் பெத்தவ. ஒரு வார்த்தை சிரிச்சி பேசி இருக்க மாட்டா. அவ பின்னாடி போறியே. அப்படி என்னதான் சொக்குப் போடி போட்டா அந்த ஊமைக் கோட்டான்?” என்று அலுத்துக் கொள்வாள்.

ன்று மாலை அலுவலகத்தில் நிறுவனத்திற்குப் புதிதாய் கிடைத்த ஒரு ஒப்பந்தத்தால் கிளம்பும் நேரத்தில் ஒரு அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு மணிக்கு ஆரம்பித்த கூட்டம் ஆறு மணி ஆகியும் முடிந்த பாடில்லை. அன்று மாலை பிரேமை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்திப்பதாய்ச் சொல்லியிருந்தாள். வரத் தாமதமாகும் என்று அவனுக்குக் கைப்பேசியில் தகவல் அனுப்பினாள். அனுப்பிய சில நிமிடங்களிலேயே அவன் அழைப்பு வந்தது. அதைத் துண்டித்தவள், மீட்டிங்கில் இருப்பதாய்த் தகவலனுப்பினாள். ஆனாலும் அவனிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அவள் அனைத்து அழைப்புகளையும் துண்டித்தாள். ‘இன்று சந்திக்க முடியாது. நாளை பார்க்கலாம்’ என்று தகவல் அனுப்பினாள்.

“பெண் நாயே. நான் என்ன உன் வேலைக்காரனா? இன்னும் அரை மணி நேரத்தில நீ இங்க வரலன்னா என்னை மறக்க வேண்டியிருக்கும்.” படித்தவள் முகம் கன்றிச் சிவந்தது. அவள் பதிலேதும் அனுப்பவில்லை. சிறிது நிமிடங்களில் அவன் அழைப்புகள் தொடர ஆரம்பித்தன. மேனேஜரின் பார்வை அடிக்கடி தன்னைத் தொட்டுச் செல்வதை உணர்ந்தவள் கைப்பேசியை அணைத்தாள்.

கடந்த சில நாட்களாகவே அவன் நடத்தையில் பல மாற்றங்கள். அவன் சொல்லும் அத்தனைக்கும் அவள் தலையாட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தான். இல்லையென்றால் சின்ன விசயங்களுக்குக் கூடப்  பெரிதாய்ச் சண்டையிட்டு மனதளவிலும் உடலளவிலும் அவளைக் காயப்படுத்தினான். ஆனால் அவளால் சகிக்க முடியாததாய் இருந்தது அவன் உபயோகித்த கெட்ட வார்த்தைகள். அவை அவளை ஒவ்வொரு முறையும் சேற்றில் முக்கி எடுத்தன. அவன் இல்லாத போதும் அந்த வார்த்தைகள் தன்னைப் பின் தொடர்ந்து அசிங்கப் படுத்துவதைப் போல் உணர்ந்தாள்.

அவளுக்கு அவன் செய்கைக்கான காரணம் தெரிந்திருந்தது. அவனுக்கு அவள் அலுத்திருந்தாள். கடற்கரையின் இருட்டில், ரயில் நிலையங்களின் தனிமையில், திரையரங்குகளின் மங்கிய வெளிச்சத்தில் நடக்கும் சீண்டல்களும் தழுவல்களும் அவனுக்குச் சலிக்க ஆரம்பித்துவிட்டன. அவன் அடுத்த கட்டத்துக்கு போகும் அவசரத்திலிருந்தான். அவள் ஏற்கனவே நடந்த மீறல்களை எண்ணி உள்ளுக்குள் கூசிக் கொண்டிருந்தாள்.

மூன்று மாதம் முன்னால் தான் அவன் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள் பிரத்யுஷா. பவித்ராவோடு இருக்கும் போதும் ஒரு குறுஞ்சிரிப்புடன் அவள் வாட்ஸ்அப் தகவல்களுக்குப் பதில் அனுப்புவான். ஆரம்பத்தில் அவளைப் பற்றிப் பவித்ராவிடம் அதிகம் பேசியவன் கடந்த சில நாட்களாக இவளே அவளைப் பற்றிக் கேட்டாலும் அதிகம் பேசுவதில்லை. இரவு நேரங்களில் இவள் அழைக்கையில் அடிக்கடி ‘பிசி டோன்’ கேட்கிறது. பவித்ராவிற்குப் புரிந்திருந்தது. அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது பவித்ராவுடனான பிரிவிற்கு ஒரு காரணத்தை. அவள் அதை அறிந்தும் அமைதியாய் இருந்தாள். அவன் துரோகத்தை அவள் மனம் அறிவதை அவள் விரும்பவில்லை.

ன்றிரவு அவள் அறைக்குச் சென்ற பின் கைப்பேசியை ‘ஆன்’ செய்தாள். அவனிடமிருந்து 24 வாட்ஸ் அப் தகவல்கள் வந்திருந்தன. திறந்து படிக்காமலேயே அழித்தாள். அவனை அழைத்து ‘எல்லாம் என் தவறு தான். மன்னித்து விடு. கெஞ்சிக் கேட்கிறேன் என்னைக் கைவிட்டுவிடாதே’ என்று கேட்கலாமா எனத் தோன்றியது. தனது பலவீனத்தை நினைக்கையில் அவளுக்கே கேவலமாக இருந்தது.

மன்னிப்பு கேட்டால் மட்டும் ஆகப் போவது என்ன? அவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டான். தான் ஏன் ஒவ்வொரு முறையும் கீழிறங்கிப் போக வேண்டும். சில முத்தங்களை அவனோடு பகிர்ந்து கொண்டதற்காகவா? சமயங்களில் அத்துமீறிய அவன் விரல்களை அனுமதித்ததற்காகவா? அவன் மேல் கொண்ட காதலினால் கண்டிப்பாக இல்லை. அது நிச்சயம். பின் எதற்கு இந்த உறவை இன்னும் தான் நீட்டிக்க விரும்புகிறோம்? தனக்கு முன்னால் எத்தனையோ யுகங்களாய் அடிமைப் பட்டுக் கிடந்த பெண்களின் மிச்சம் இன்னும் தன் உடம்பில் இருக்கிறதோ? ஒவ்வொரு முறையும் அவன் போடும் சில்லறைகளைப் பொறுக்கும் ஒரு பிச்சைக்காரியாய்த் தான் நிற்பது போலத் தோன்றியது.

அவளுக்கு சித்தியின் மடியில் படுத்து அழ வேண்டும் போல் இருந்தது. அவளிடமிருந்து ஒரு வருடல் கூட கிடைக்காது என்று தெரியும். ஆனால் அவளின் வாசம் போதும். அது தரும் பாதுகாப்பு போதும்.

அன்றிரவு வெகுநேரம் கழித்து அவள் உறங்கினாள். காலை நேரக் கூட்டத்தால் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது அந்த ரயில். பிரேம் பவித்ராவின் கழுத்து வளைவில் முகம் பதித்திருந்தான். அவன் கைகள் அவள் அங்கங்களின் மேல் கண்டபடி அலைபாய்ந்து கொண்டிருந்தன. ‘வேண்டாம் பிரேம். கூட்டமாயிருக்கு’ என வாய் முணுமுணுத்த வார்த்தைகள் அவள் காதுகளை எட்டவில்லை.அப்போது தான் அந்தக் கண்களைப் பவித்ரா பார்த்தாள். அத்தனை நெருக்கமான ஜன சந்தடியிலும் தனித்துத் தெரிந்தன. கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெரிதாகிக் கொண்டே அவளருகில் வந்தக் கண்கள் தீப்பிழம்பாய் அவளைச் சுட அவள் கைகள் வெடவெடத்தன. அந்தக் கனலின் வெளிச்சத்தில் அவள் கண்கள் கூசியது. வெப்பம் தாங்காமல் அவள் உடல் முழுவதும் எரிந்தது. அவை குமுதா சித்தியின் கண்கள்.அதை உணர்ந்தவுடன் பிரேமை ஆவேசமாய்த் தள்ளினாள் பவித்ரா. அவன் தடுமாற, சுதாரிக்கும் முன்னே அவனின் இரு கன்னங்களிலும் பலம் கொண்ட மட்டும் மாறி மாறி அறைந்தாள். “யூ பிட்ச்..” அவன் கன்னங்களைப் பிடித்துக் கொண்டு அலறினான்.

காலையில் எழுந்த போது வலது கையில் எரிச்சல் இருந்தது. உள்ளங்கையைத் திருப்பிப் பார்த்தாள் பவித்ரா. சிவந்திருந்தது.

-கணையாழி (ஜனவரி 2019)

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -