ஞாபகத்தில் நீந்தும் ராட்சசன்
பாறையை
வார்த்தை கொண்டு
உடைத்தாள்
அரற்றும் ஒலி
மோதும் குரலை விட
மீறி
பாறையிலிருந்து ஊற்றெடுத்தது.
வேர் பிளக்க நெகிழும் நிலமென
பாறை வெடித்து விலக
அழுகிய புண்களோடு
அவன்
துர் நாற்றம் ஏறி வந்தான்.
கண்களில்
காமவெறி ததும்பம் புழுக்கள்
மொய்க்க
நாவு நீட்டி
சொட்டுத் தண்ணீருக்கு
பரபரத்தான்.
மனம் பிய்த்து
கால அம்மியில் அரைத்து
அவனது ரணங்களுக்கு
அவள் மருந்திட்டாள்.
தொலி ஆறி
சதை சீழ் பிடித்து
உறுத்தலெடுக்க
அவளை அவன்
வீட்டிற்குள் புதைத்து
பூ விளைவிக்க
இமைகளறுத்து
காத்திருந்தான்.
??????????????????????????
யுத்த காண்டம்
அவள்களின்
வியர்வையும், குருதியும்
வழிந்து பெருக்கெடுக்க
வயல்வெளி வடிவெடுத்தது.
அகக் கண்களில்
வலி
ஊற்றெடுக்க
அவள்கள்
நாற்றுக்களைப் பாவினர்.
வரப்பு நண்டுகளின்
கீச்சொலியாய்
அவள்களின்
மனக்குமுறல்கள்
நடவுப் பாடல்களாய் ரீங்கரிக்கின்றன.
குனிவு யோகாசனத்தால்
அவள்களுக்கு
அடிமைகளுக்கான
நுகத்தடி பூட்டப்பட்டது.
அவள்களின்
கண்ணீரையும், விசும்பல்களையும்
குடித்தே…
பயிர்களும்
தலையாட்டிச் சிரிக்கின்றன.
களையெடுக்கும் கைகளால்
அவள்களின் கனவுகள்
அரித்தெடுக்கப்படுகின்றன.
அவன்களின்
பன்னரிவாள் வீச்சில்
அவள்களின்
ஆன்மாவின் தாள்கள்
அறுபட்டுச் சாய்கின்றன.
சுமக்கும்
வம்ச
தானியக்கதிர் குலைக்கட்டுகளின் இழிவின் கனம்…
தலை பாரமாய்
அவள்களை
பூமியோடு அமிழ்த்த
பிரயத்தனப்படுகிறது.
தலையடி..
சூடடியாய்..
அவன்கள் மிதிக்கையில்
அவள்கள்
முட்களாய்.
??????????????????????????
அன்றாடியின் கதை
கரகம் சுமக்கும் பூஜாரியாய்
கர்வத்துடன்
அவள்
சுமந்து வந்தாள்.
மனசு
கிரீடம் சூடியது போல
மகிழ்ந்தாடியது.
“அம்மாவுக்கு புரோட்டா..
அக்கா பையனுக்கு சவ்வு மிட்டாய்..
கழற்றி எறிந்து விட்டுப் போன
கணவனாய் இருந்தவன்
ஒரு நாளும் வாங்கித் தராத
மல்லிகைப்பூ..
மிச்சத்தில்
தனம் தியேட்டர் சினிமா….”
அளவில்லாமல் அவளுக்கு
கனவுகள் பூத்தன.
மார்க்கெட்டில்
போட்டிக்கு எவருமில்லை..!
அவளுள்
சந்தோஷம் பொங்கியது.
விலை கேட்ட பலரால்
நேரம் தான்…
விரையமானது.
“உச்சியைப் பிளந்த வெயிலிலே..
உடலைப் பிளந்த முள் காட்டிலிலே..
தேடிச் சேகரித்த
திரவியம் அல்லவா..
அற்பமாய் விற்பேனோ…”
அவள்
இறுமாந்தாள்.
வானம்
அழத் தொடங்கியது..
கூட்டம்
வடியத் தொடங்கியது..
வெட்ட வெளியில்
வைக்கப்பட்ட
சிம்னி விளக்காய்…
அவள்
ஆடத் தொடங்கினாள்…..