யமுனா வீடு -37

- Advertisement -

எதுவெல்லாம் நினைவிலிருக்கிறது
வரிசைப்படுத்திப் பார்த்தேன்
ஆழிப்பேரலையின் இரவொன்றில்
தனித்துவிடப்பட்ட ஒருவன்
நடுங்கி, அரற்றிக்கொண்டிருந்த கனவுவர
உரக்க யாரையெல்லாமோ அழைத்து
விழித்துக்கொண்டேன்

நினைவிலிருப்பவை பின்தொடர்ந்து வரலாம்
நான் யார் முன்னே அமர்ந்திருந்தேன்
நான் யார் முன்னே மண்டியிட்டிருந்தேன்
நான் யார் பாதத்தையோ பற்றிக்கொண்டிருந்தேன்

யமுனா நீ அழைத்தாய்
இல்லை யமுனா உன்னை நான் அழைத்தேன்
இப்போதும் எனக்கு தெரிகிறது
நீ தான் அழைத்தாய் யமுனா
கண்கள் கலங்குவதைத் தவிர்க்க
தேநீரைப் பருகச்சொன்னாய்

நினைத்துப் பார்க்கவில்லை யமுனா
நீ அழைக்கும் போதெல்லாம்
உன்னன்பு கூடுமென்று
உன்னைப்பற்றி
நீ பேசும்போதெல்லாம்
என்னைப்பற்றி முன்னழைத்துச் செல்கிறாய்

அக்கறையுடன் தேநீரைத் தயாரித்து பருகிக்கொண்டிருக்கும்
இந்தப்பொழுதை
அவ்வளவு பிடிக்கும்
தேநீரைத் தயாரிப்பது
தேநீரைப் பருகுவதென்பை
உன்னிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்

இப்போது நான்
நின்று பொறுமையாகப் போகிறேன்
கருணை மேலெழும்பும்
கண்ணீர் துளிர்க்கிறது
ஆறுதலான ஒரு சொல் யமுனா
தேநீரைத் தயாரிக்கும்
இந்தப்பொழுதை அவ்வளவு பிடிக்கிறது.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -