ஒருவனைத் துண்டித்துவிடுவதற்கு
செருப்பைக் கொண்டு அடிக்கத்தேவையில்லை
அழுத்தமான சொற்கள்போதும்
தனித்தலையட்டும் அவனுக்குள்
உணரும் வலிகளை
ஒருபோதும் நீ பகிராதே
உன் நிதானம்
மௌனமாக இருப்பதே
வீற்றிருக்கும் தெய்வங்கள் எல்லோருக்குமானது
எத்தனை இரவுகளைக் கடந்திருப்பாய்
காதலுமில்லாத
தாய்மையுமில்லாத
இந்தப்பகல் உனக்குப் புதிதுதான்
நிற்கத்தெரியாது துடிக்குமிதயத்திற்கு
அண்ணாந்து வானம் பார்த்து
நடக்கத்தொடங்கிவிடு
வாழும் காலத்தில்
யாரும், யாரையும் அறிவதில்லை
எதனொன்றிலும் ஆழ்ந்துவிடுவதில்லை
மெல்லக்கண்களை மூடுகிறேன்
அறிவது ஒரு தியானநிலை
திக்கற்றவனுக்கு தெய்வம்தானே துணை
எதுவும் பேசாமல் உன்னிடத்தில் மண்டியிடுகிறேன் யமுனா
உனக்குக் கொடுக்கும் என் கைகள்
சின்னஞ் சிறிதாகிவிடுகின்றன.