கடற்கரைக்கு வரும்
ஒவ்வொருவரும்
அவர்களைத் தண்டித்துக்கொண்டு
காணாமல் போகின்றனர்.
நள்ளிரவில் நித்திரையிலிருந்து
திடுக்கிட்டு எழுந்து
காணாமல் போனவர்களைத்
தேடிப்பார்க்கிறேன்.
பெரும்இரைச்சலுக்கிடையில்
அண்ணாந்து பார்ப்பவனுக்குத்
தெரியும் பிறை
அழைத்துச்செல்கிறது
கடலுக்கு
அவர்கள் எப்போதாவது
திரும்ப அலைகளேறி வந்திவிடுவார்கள் என்றே
கடல் வேடிக்கைப்பார்க்கிறது.
இந்த இடத்தை விட்டு,
இந்த நகரத்தைவிட்டு
யாவரும் செல்வதற்கு
ஒரு இடமிருக்கையில்
கையசைத்து
ஒவ்வொருவராக வெளியேறுகிறார்கள்.
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
யமுனா இல்லை
யமுனா இருக்கிறாள்
ஆத்ம திருப்தியுடன்
மகிழ்ச்சியான காலத்தையே யமுனாவும் பார்க்கவேண்டும்.
ஒரு பறவையின்
திசையறிந்தவனுக்கு
பறந்து சென்றடையத்தோன்றும்
உயரமான மலை வரக்கூடும்
மெல்ல நடந்து போ
கைகளைக்கொடுக்க யமுனா காத்திருப்பாள்.




















