ஒரு கனவை
கைகளால் உந்தித்தள்ளி
அலறியபடி
விழித்து திகைத்த ஒருவன்
நேற்றைய பொழுதினை
வரிசைப்படுத்தி
எந்த ஒன்றில் சஞ்சலமடைந்தோமென
மௌனமாகத் திரும்பப் பார்க்கிறான்.
இரவிலிருந்து பகலுக்குள்
நிதானமாக இந்த நாளைத்
தெளிவாய் கடக்கும் ஒருவனாகிடவே
மனிதர்களுக்குள் நுழைந்து
நெளிந்து செல்வதாகிட்டது
யாரோ ஒரு கோட்டை வரைய
அதில் நடந்து பழகியவனுக்கு
இன்னொரு கோட்டை
யார் வரையப்போகிறார்களோ
நடப்பதற்கு சிரமம்தான்.
நடந்துசெல்,
நடந்துசெல்,
நடந்துசெல்,
திரும்பிப்பார்க்காமல்
நடந்துசெல்.
வாகனத்தின் பேரிரைச்சலில்
மனம் அமைதியடையுமட்டும்
நடந்துசெல்,
திரும்பிப்பார்க்காமல்
நடந்துசெல்.
பின்தொடர
யமுனா எதிர்ப்படுவாள்,
நீ தொடர்ந்து
நடந்துசெல்.
உள்ளொளியின் உணர்தலில்தான்
சாத்தான் கடவுளாவதும்
கடவுள் சாத்தானாவதும்
நடந்து செல்வதனைத்தையும்
குறிப்புகளாக எழுதிவை
குழந்தையைப்போல
யமுனா கலைத்துப்போடட்டும்
வெட்டவெளியொன்றில்
அமரப்போகும் இடமொன்றை
எந்தப்பறவை காட்டப்போகிறதோ
அதுவரைக்குமான அன்பில் திளைத்திரு
யமுனா எதிர்ப்படுவாள்
பின்தொடர்வாள்.