மூடுபனி பற்றிய ஆவணப்படம்

மூன்று கவிதைகள்

மூடுபனி பற்றிய ஆவணப்படம்

- Advertisement -

வரி ஏய்த்தான்
கேள்வி கேட்டவரின் வாயை எச்சிலையால் அடைத்தான்
வச்ச இடம் கொடுத்த இடம் சொல்லாமல் போய் சேர்ந்தான்
ஊறல் விறுவிறுத்து பால் கட்டிக் கொண்டது
வலி தீர மண்ணில் பீச்சி விட்டபடி அழுதாள்
பூமிக்குள்ளிருந்து குழந்தை சிரிக்கிறது
அடித்து நொறுக்கிய போது அமைதியாயிருந்தீர்கள்
ஆணிகள் அறைந்து தொங்கவிட்டபோது வேடிக்ககை பார்த்தீர்கள்
வெற்றிடத்தில் விசும்பியழுது நினைவுகூருகிறீர்கள்
திரைப்பிரபலங்கள் அலறல்
வலைத்தளங்களில்
ஆபாச அத்தாட்சிகள்
தெரிந்தே சிக்குகின்றன
ஈக்களும் பூச்சிகளும்
பயந்து நடுங்குகிறேன்
நீருமில்லை நிழலுமில்லை
எதிர்கால சந்ததி நிலை மனதிலாடுகிறது
ஊனமாகிக் கிடக்கிறது
உருப்படியாய் எதுவும் நடக்கவில்லை
ஊறுகாயை நக்கிக் கொண்டு திரிகிறீர்கள்
இசையில் மூழ்கினான்
கவிதையில் கரைந்தான்
எரியும் உலகம் பற்றி அவனுக்கு கவலையில்லை
சிலாகிக்க மனசில்லை
வயிற்றுப் பாட்டிற்குள் சிக்கிச் சுழல்கிறது
விடுபடும் யோசனையில் கழிகிறது காலம்
நாறிக்கிடக்கிறது கக்கூஸ்
கண்கள் கொண்டு பாருங்கள் என்கிறோம்
மிரட்டிப் பூட்டுகிறீகள்
பெருங்கடல்கள் ஆராவரிக்கின்றன
துளிக்கடல் நான்
உயிரினங்கள் என்னுள்ளும் வளர்கின்றன
பசு கட்டுக்கயிறை அறுக்க முனைகிறது
புது இடம் பிடிக்கவில்லை
விற்றுப் போனவர்கள் மறந்து விட்டார்கள்
துணிகளை தைப்பதற்குக் கொடுத்தேன்
புதன்கிழமை வரச் சொன்னான்
அவன் சொன்ன நாள் மட்டும் வரவேயில்லை
கனவுகளை பின்தொடருகிறது பிரமிப்பு
அறியாத தேசத்தின் கதவுகள் திறக்கின்றன
ஒளிர்த் துகில் அணிந்த ஒருத்தி வரவேற்கிறாள்
தேவதைகள் அரக்கர்களிடம் சிக்குகிறார்கள்
தேயும் நிலவாய் சிதைக்கப்படுகிறார்கள்
திடீரென்று காணாமலாக்கப்படுகிறார்கள்
மலைப் பிரசங்கத்தை நிறுத்து
ஆடுகளுக்கு புல்வெளியைக் காட்டு
பசியை வார்த்தைகள் அதிகப்படுத்துகின்றன.

??????????????????????????

கடந்து செல்லும் துயரம்

நேசத்தை
தீண்டினேன்….
அப் பூ
சிறகை விரித்துப் பறந்தது
வண்ணத்துப்பூச்சியாய்
பறவையின் வாயில்
துடிதுடிக்கிறது
பட்டுச் சேலையாகும் சிறு துண்டு
செடிகளோடு விளையாடிக் களைத்துப்
பூவில் அமரும் வானவில்லாய்
அதை
கனவில் பார்க்கிறேன்
வண்ண இறகுகள் முளைத்த
சின்னஞ் சிறு குழந்தை
பூக்களுடன்
கண்ணமூச்சியாடுகிறது
பூக்களின் திருவிழாவில்
வண்ணஙகளின்
நாட்டியக் கச்சேரி.

??????????????????????????

ரத்த சரித்திரம்

ஏப்ரல்_13, 1919
மனிதக் கருணை
துப்பாக்கியாலும்..
பீரங்கியாலும்..
துளைக்கப்பட்டது.

இருபதாயிரம்
ஆண்கள்..
பெண்கள்..
குழந்தைகள்..
துடிதுடித்து
நெருப்பிலிட்ட மீன்களாய்
துள்ளிப் புரண்டனர்.

அறுவடைத் திருவிழா நிகழும்
வைகாசி நாள்
ஜாலியன்வாலாபாக் மைதானம்
முழுப்பிணங்களால்..
அரைப்பிணங்களால்..
நிரம்பித் ததும்பியது.

மரணம் கக்கிய
ஜெனரல் டயரும்.. கூலிப்படைகளும்..
கொலையுண்டவரின் உயிரை..
கந்தகப்புகையை..
உதிர வாசனையை..
ஊற்றெடுத்து பெருக்கெடுத்த கண்ணீரைக்
குடித்து
கெக்கொலித்தனர்.

அகிம்சை தேசத்தின்
இதிகாசத்தில் இருந்து
மனிதக் குருதியின் ஈரம்
கிளர்ச்சியுடன்
இன்னும்.

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -