முகங்கள்

ஏழாவது முகம்

- Advertisement -

முதலில் கடந்த இரண்டு வாரங்களாக எழுதமுடியாமல் போனதற்கு வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கடுமையான பணிச்சுமை இடையில் முட்டுக்கட்டையாக வந்து விழுந்துவிட்டது. மீண்டும் கட்டை விழாது என்ற நம்பிக்கையில் இந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து எழுதவும் உறுதியளிக்கிறேன்.

நான் முதன்முதலில் சிங்கப்பூர் வந்து வேலை தேடி அது கிடைத்து அதற்கான அனுமதி அட்டை எல்லாம் ஒப்புதல் பெற்று வேலையில் சேர்வதற்கே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. மூன்றாவது மாதத்தில் இருந்து தான் வேலைக்குச் செல்லத் தொடங்கினேன். என் மாமா இங்கிருந்ததால் அவரின் வீட்டில் தான் தங்கியிருந்தேன். அது நான்கு அறைகொண்ட பெரிய வீடு. ஒரு அறையில் ஒரு ஆந்திராக்காரர் வாடகைக்குத் தங்கியிருந்தார்.

என் மாமா திடீரென்று அவசர வேலை காரணமாக இந்தியா சென்றுவிட்டார். இத்தனை நாள் மணிக்கொரு முறை அலைபேசியில் அழைத்து “என்ன செய்ற? எங்க இருக்க?” “அங்க அந்த எம்.ஆர்.டி.ல (மெட்ரோ இரயில்) போ.” “இங்க இந்த பஸ்ல வா” என வழிகாட்டிக் கொண்டிருந்தவர் இப்போது ஊருக்குப் போய்விட்டார். என்ன தான் முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டாலும் அதனால் பலனேதும் இல்லை. வேலைக்குச் சென்று முதல் மாதச் சம்பளம் கூட வாங்காதவன், கையில் இருக்கும் பணத்தை வைத்து மாதத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன். வீடு விட்டால் வேலை வேலை விட்டால் வீடு. இரயில் மற்றும் பேருந்தில் பயணம் செய்வதற்கான பயண அட்டையில் (MRT Card) பணம் நிரப்பி வைத்திருந்தேன். மாமா வீட்டில் வேலைக்கு ஆள் வைத்திருந்தார். அந்தப் பெண்மணி தினமும் சமைத்து கட்டி கொடுத்துவிடுவார். கிட்டத்தட்ட “சாமி” பட திரிஷா போல ஒரு வாழ்க்கை.

என் மாமா வீட்டிற்கும், என் வேலையிடத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். வேலைக்குச் சேர்ந்த புதிதில் புது விளக்குமாறு சிறப்பாகக் கூட்டும் என்பதைப் போல ஒவ்வொரு நாளும் இரவு ஒன்பது மணி வரை அலுவலக இருக்கையைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். அதன் பின் வீடு வந்து சேர பத்து மணிக்கு மேல் ஆகிவிடும். எத்தனை மணிக்கு வந்தாலும் ஆர்குட்டையும், ஜீமெயிலயும் பார்க்காமல் தூங்க முடியாது. அப்போதெல்லாம் பேஸ்புக் ட்விட்டர் வாட்ஸப் எல்லாம் கிடையாது ஆர்குட், ஜீமெயில் தான். யாரவது நண்பர்கள் ஆன்லைனில் வந்தால் கொஞ்ச நேரம் கடலை போடலாம். எந்தப் பெயருக்கு முன்னாவது பச்சை பல்ப் எரிகிறதா என பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எதிர்பார்க்காத ஒரு நபரிடம் இருந்து “ஹாய்” வந்தது.

எனக்கு ஒரே ஆச்சரியம். இந்த நபரா நமக்கு ‘ஹாய்’ சொல்கிறார்? அவர் பெரிய ஆள் அச்சே? நம்மை எல்லாம் அவர் கடைக்கண்ணில் கூட பார்க்க மாட்டாரே? அவரே நமக்கு ‘ஹாய்’ சொல்லும்போது நாம் சும்மா இருக்க முடியுமா? நானும் ஒரு ‘ஹாய்’ போட்டுவிட்டேன்.

அதற்கு முன் இந்த நபர் எனக்கு எப்படி அறிமுகம் என்பதை உங்களிடம் கூறிவிடுகிறேன். நம்முடைய இந்த வார முகமும் இவர் தான். நான் சென்னையில் வேலை செய்த அலுவலகத்தில் வேலை செய்தவர். இட்டிலிகளை இரண்டு பக்கமும் ஒதுக்கி வைத்திருப்பது போன்ற கன்னங்கள். கழுத்து இருக்கிறதா என்பதை நெரித்துப் பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். பெருத்த உடலோடு தலையை ஒட்டிவைத்தது போலிருக்கும். நல்ல சிவப்பு. அலுவகத்திற்குள் நுழைந்து அவர் இருக்கையில் அமரும் வரையில் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பார். மடிப்புக் கலையாத முழுக்கைச் சட்டை ‘டக் இன்’ செய்யப்பட்டு இருக்கும். அவர் உடையின் மடிப்பு களைந்து நான் பார்த்ததே இல்லை. டிப் டாப் ஆசாமி என்றுகூட கூறலாம். பொதுவாக அவர் வேலைக்கும் என் வேலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை ஆதலால் எங்களுக்குள் எந்த பெரிய தொடர்பும் இல்லை. உண்மையில் எந்த சிறிய தொடர்பும் கூட இல்லை.

அது பதினைந்திலிருந்து இருபது பேர் கொண்ட ஒரு சிறிய அலுவகம் தான். அங்கு வேலை செய்த அனைவருமே அனைவருக்கும் பரிச்சியம் தான் என்றாலும் இந்த நபரிடம் மட்டும் என்னால் நெருங்கவே முடியவில்லை. அவர் முதலாளி, மேலாளர் போன்ற பெரிய அந்தஸ்த்தில் எல்லாம் வேலை பார்க்கவில்லை. கம்பெனி போஸ்ட்டர்களை ‘போட்டோஷாப்’, ‘காரல்டுரா’ போன்ற மென்பொருள்களின் உதவியோட தயார் செய்து கொடுப்பவர்.

கம்பெனி முதலாளி மற்றும் எங்கள் மேலாளர் தவிர்த்து மகிழுந்தில் அலுவலகம் வரும் ஒரே நபர் இவர் தான். கொஞ்சம் பணம் மிதப்பில் இவர் நம்மையெல்லாம் கண்டுகொள்ளமல் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றியதால் நானும் இவரை பெரிதாக கண்டுகொண்டதில்லை.

உண்மையில் என் மின்னஞ்சல் இவருக்கு எப்படித் தெரியும் என்பதே எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் தான். அவரிடமே கேட்டேன். நான் சிங்கப்பூரில் இருப்பதை அறிந்து எங்கள் அலுவகத்தில் வேலை செய்த இன்னொரு நண்பரிடம் வாங்கியதாகக் கூறினார்.

சரி எப்படி இருக்கிறீர்கள் என்றேன்.

“காலைல இருந்து சாப்பிடவே இல்லை” என்றார்.

ஏன்? என்னாச்சு? என்று வினவியபோது அலைபேசி எண்ணைக் கேட்டார். கொடுத்தேன். ஒரு சிங்கப்பூர் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவர் தான்.தான் சிங்கப்பூரில் இருப்பதாகக் கூறினார். மலேசியாவிற்குச் சுற்றுலா சென்று அதை முடித்து சிங்கப்பூர் திரும்பியிருக்கிறார்.

பொதுவாக யார் மலேசியா சென்றாலும் ‘பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்’ ‘நகையை பத்திரமாக வைத்துக்கொள்’ என்று அறிவுரை வழங்குபவர்களை விட ‘பாஸ்ப்போர்ட்டை பத்திரமாக வைத்துக்கொள்’ என்று தான் பலர் அறிவுரை வழங்குவார்கள். அப்படி எந்த அறிவுரையுமே நம் நண்பருக்கு யாரும் வழங்கவில்லை போல. மலேசியாவில் பாஸ்ப்போர்ட்டைத் தொலைத்துவிட்டு போலிஸ் ஸ்டேசனுக்கு அலையோ அலை என அலைந்திருக்கிறார். அங்கிருந்த சில அப்பழுக்கற்ற காவலர்கள் அவரிடமிருந்து மூன்று லட்ச ரூபாயை கறந்துவிட்டு. பாஸ்போர்ட் கிடைக்கவில்லை “இந்தா இதைப் புடி” என்று ஒரு காகிதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டனர். இதைப் படித்து மலேசியா போலிஸ் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்தக்கதை எல்லாம் அவர் சொன்னது தான். எனக்கு ஒன்றும் தெரியாது.

மலேசியாவைச் சுற்றி முடித்து சிங்கப்பூர் வரும் திட்டம் ஏற்கனவே அவரிடம் இருந்ததால் சிங்கப்பூர் விசாவும் கொண்டு வந்திருக்கிறார். மலேசியா போலிஸ் தந்த காகிதத்தையும் சிங்கப்பூர் விசாவையும் வைத்து சிங்கப்பூருக்கு வந்துவிட்டார். கையில் இருந்த சொற்ப பணத்தை வைத்து தேக்காவில் ஒரு இடத்தில் தங்கிக்கொண்டார். ஆனால் சாப்பாட்டிற்கு காசு இல்லை. அங்கு இங்கு தேடி என்னைக் கண்டுபிடித்திருக்கார்.

“ஐய்யோ! என்னங்க இப்படிச் சொல்றீங்க? இருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வர்றேன்” என்று நான் வைத்திருந்த நூற்றைம்பது வெள்ளியிலிருந்து ஐம்பதைத் தூக்கிக்கொண்டு ஓடினேன்.

“ஒன்னும் பிரச்சினை இல்லை. என் நண்பர் மலேசியாவுல இருந்து வந்துக்கிட்டு இருக்கார். அவர் கிட்ட என் பணம் ஆறு லட்ச ரூபா இருக்கு. வந்தவுடனே உங்களுக்கு செட்டில் பண்ணிறேன்” என்றார்.

“அட பரவாயில்லங்க விடுங்க… இதுக்குப்போயி…” என்று சொன்னாலும் அன்றைய சூழலில் ஐம்பது வெள்ளியை இனாமாகக் குடுக்கும் அளவிற்கு நான் வள்ளல் கிடையாது ஆகவே “அவரு வந்ததுக்கு அப்பறம் மெதுவாவே குடுங்க” என்று முடித்தேன்.

மூன்று நாள்கள் சென்றன. ஐம்பது வெள்ளி இன்னும் வரவில்லையே என யோசித்துக்கொண்டிருந்தேன். அவரிடமிருந்து அழைப்பு வந்தது. “கைல இருந்த காசெல்லாம் முடிஞ்சிருச்சுங்க… என் நண்பர் நாளைக்குத் தான் வர்றாரு… இன்னொரு ஐம்பது வெள்ளி கொடுத்தீங்கன்னா…?”

அலுவகம் முடிந்து இரயிலைப் பிடித்து தேக்கா சென்று இன்னொரு ஐம்பது வெள்ளியைக் கொடுத்தேன். மீண்டும் மீண்டும் நன்றி கூறினார்.

இதற்கு மேல் என்னிடம் பணம் இல்லை. சம்பளம் வர வேண்டும், இல்லை என் மாமா வர வேண்டும், இல்லை என்றால் உங்கள் நிலைமையும் என் நிலைமையும் ஒன்று தான் என்று விளக்கினேன்.

அவர் நண்பர் நாளை அல்லது நாளை மறுநாள் வந்துவிடுவார் அதன் பின் நமக்கு கவலையில்லை என்றார்.

மூன்றாம் நாள் அழைப்பு வந்ததது. “‘சீமே’ல நீங்க எங்க இருக்கீங்க? உங்க அட்ரஸ் குடுங்க” என வாங்கிக்கொண்டு அவரே தேடி வந்தார்.

வந்தவர் “எனக்கு ஒரு இருநூறு வெள்ளி பணம் ரொம்ப அவசரமா வேணும். நிச்சயமா நாளைக்கு என் பிரண்டு வந்திருவாரு… இப்போத்தான் பேசினேன்… பஸ்ல டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டாரு…. அவர் வந்த உடனே உங்க பணத்தை மொத்தமா கொடுத்துறேன்” என்றார்.

“எங்கிட்ட சத்தியமா இல்லைங்க” என்று தலையில் அடித்து சத்தியம் செய்தேன்.

அவர் விடுவதாய் இல்லை. யாரிடமாவது வாங்கிக்கொடுங்கள் என்று கெஞ்சினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேறுவழியில்லாமல் என் மாமா வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த அந்த ஆந்திரா நண்பரிடம் கேட்டேன். அவர் உடனே கொடுத்துவிட்டார்.

நானும் அதை வாங்கி அவரிடம் கொடுத்துவிட்டு. சரி இவ்வளவு தூரம் இந்தப் பணத்திற்குகாக கெஞ்சுறாரே அப்படி என்ன தான் அவசரம் என்று அவரிடம் மெதுவாகக் கேட்டேன்.

“இல்லைங்க என் கூட வேலை பார்த்த பொண்ணு ஒன்னு சிங்கப்பூர்ல இருக்கு. அது இன்னைக்கு என்னை டின்னர் கூப்பிட்டிருக்கு. அவங்க கூட வெளிய போகும்போது காசில்லாம போக முடியாதுல்லங்க… சாப்பாட்டுக்கு அவங்க காசு குடுத்தா நல்லாவா இருக்கும்?” என்றார்.

‘அடப்பாவி கஞ்சிக்கு இல்லாம தெருவுல சுத்திக்கிட்டு இருக்கப்பவே உனக்கு டின்னர் கேக்குதா? இப்படி அவசரப்பட்டு காச குடுத்துட்டோமே. ஆக மொத்தம் முன்னூறு. இந்தாளு திருப்பிக்கொடுப்பாரா?’ என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே “ஒன்னும் கவலைப் படாதீங்க… நாளைக்கு என் ப்ரண்டு வந்தவுடனே நானே உங்களைத் தேடி வந்து பணத்தைக் குடுத்துடுறேன்…” என்று கூறிவிட்டு மகிழ்ச்சியாகச் சென்றார்.

அது தான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. இரண்டு நாள்கள் கழித்து நானே அழைத்தேன். இப்போது முன்னூறு அவரிடம் இருக்கிறதே. விடமுடியுமா?

அவர் தான் தற்போது விமானத்தில் இருப்பதாகவும், தன் நண்பர் வந்துவுடன் அவசரமாக கிளம்பும் சூழல் ஏற்பட்டதாலும் என்னிடம் சொல்ல முடியாமல் போய்விட்டதாகக் கூறினார். மேலும் இந்திய வங்கி எண்னை அனுப்பிவைக்கும் படியும் அந்தப் பணத்தை அவர் இந்தியா சென்றவுடன் என் வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவிடுவதாகவும் கூறினார்.

அவரிடமிருந்து பணம் வந்திருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? ஒருவேளை வந்திருந்தால் பதின்மூன்று ஆண்டுகள் கழித்து இன்று இதை நான் எழுதியிருக்கவே மாட்டேன். அதன் பின் பல முறை அவரிடம் கேட்டுப்பார்த்தேன். மரியாதையாகக் கேட்டேன். மரியாதை இல்லாமல் கேட்டேன். எப்படிக் கேட்டாலும் அவரிடமிருந்து வரும் பதில் “இதோ இதோ அனுப்பிடுறேங்க… பணம் வந்துக்கிட்டே இருக்கு… நாளைக்கு நானே பாங்ல போய் டெப்பாசிட் பண்ணிடுறேன்….” இப்படி வந்து கொண்டிருக்குமே தவிர பணம் வரவேயில்லை. ஒருமுறை கூட அவர் தர முடியாது என்று சொல்லியதே இல்லை.

என்னால் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதன் பின் யாராவது தெரிந்தவர் ஊரில் இருந்து வந்திருக்கிறார் என்றால் கூட “இந்தாள் கூட பேசுனா காசு கேட்பாரோ” என்ற பீதியிலேயே தான் பேசிக்கொண்டிருந்தேன்.

சென்னையில் இருக்கும் என் நண்பர்களை அழைத்து. “உங்களால முடிஞ்சா அந்தப் பணத்தை வசூல் பண்ணி நீங்களே வச்சுக்கோங்க டா ” என்று கூறினேன். அவர்களும் முட்டி முட்டிப் பார்த்து மண்டை வீக்கத்தொடு தான் திரும்பினார்களே தவிர பணம் வரவில்லை.

சிங்கப்பூர் வந்து முதல் மாதம் சம்பளம் வாங்கி அந்த ஆந்திரா நண்பரின் கடனைத் தான் அடைத்தேன்.

உண்மையில் அவரைப் பொறுத்த வரை அது பெரிய தொகையேயில்லை ஆனாலும் அதைக் கொடுக்க அவருக்கு ஏன் மனம் வரவில்லை?

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -8

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

3 COMMENTS

  1. உண்மையிலேயே அந்தாளின் கடப்பிதழ் தொலைந்து போய்விட்டதா அல்லது நீங்கள் இங்கிருப்பதை எப்படியோ தெரிந்துகொண்டு இங்கு வந்த இடத்தில் உங்களை ஏமாற்றலாமென முயன்று அதில் வெற்றியும் கண்டிருப்பாரோ
    எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

    மீண்டும் எழுதத் தொடங்கியதற்கு வாழ்த்துகள். தங்களின் இதுபோன்ற படிப்பினைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகட்டும்.

    • அவரின் கடப்பிதழ் தொலைந்து போனது, அவர் இங்கு வந்து உணவில்லாமல் சிரமப்பட்டது எல்லாமே உண்மை தான். அவருக்கு பணத்தைத் திருப்பித்தர மனமில்லை அவ்வளவு தான். அவருக்கு வேறு ஏதேனும் குடும்பச்சூழல் இருந்ததா தெரியவில்லை. இதோ அனுப்பிட்டேன், காலைல வந்துரும், இப்படிச் சொல்லிச் சொல்லி ஏமாற்றியது தான் உறுத்தலாக இருந்தது…

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -