முகங்கள்

ஆறாவது முகம்

- Advertisement -

கல்லூரி முடித்து என்ன செய்வது எங்கு போவது என்று தெரியாமல் சென்னையில் தஞ்சம் புகுந்து வேலை தேடிக்கொண்டிருந்தேன். நேர்முகத்தேர்வுக்கு செல்வது மட்டுமே அப்போதைய முழுநேர வேலை. எங்காவது நேர்முகத்தேர்வு (Walk in interview) நடக்கிறது என்று தெரிந்தால் போதும் விழுந்தடித்துக்கொண்டு அங்கு ஓடிவிடுவோம். அது என்ன மாதிரியான அலுவலகம்? அங்கு எந்தப் படிப்பிற்கு வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்? என்பதெல்லாம் பார்த்துவிட்டுச் செல்லும் அளவிற்கு நிலைமை இல்லை. எப்படியாவது ஒரு வேலையைக் கண்டடைந்து சம்பாதிக்கத் தொடங்க வேண்டும். சாப்பாட்டிற்கு வீட்டில் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

ஒருமுறை நானும் என் நண்பன் ஒருவனும் படத்திற்குச் சென்றுகொண்டிருந்தோம். இன்னொரு நண்பன் அலைபேசியில் அழைத்தான்.

“மச்சி நுங்கம்பாக்கத்துல ஒரு பார்மசிக் கம்பனி வேலைக்கு ஆள் எடுக்குறாங்கடா… போற எல்லாத்துக்கும் வேலை கிடைக்கிதாம் நாலாயிரத்து ஐநூறு ரூபா சம்பளமாம்.”

அவன் சொல்லி முடிக்க “டேய் மச்சி வண்டியத் திருப்புடா” என்று போகும் வழியில் ‘ரெசியுமை பிரின்ட் அவுட்’ எடுத்துக்கொண்டு ஓடினோம். என்னை நேர்முகத் தேர்வு கண்டவர் கேட்ட முதல் கேள்வி. “உங்க பெல்ட் எங்க?” என் நேரம் அன்றைக்கு பெல்ட் அணியாமல் சென்றுவிட்டேன். நேர்முகத்தேர்வு என்பதால் சட்டையை மட்டும் கால்சட்டைக்குள் திணித்திருந்தேன்.

“போயி பெல்ட் போட்டுட்டு இன்னொரு நாளைக்கு சாவகாசமா வாங்க…” என்று அனுப்பிவிட்டார். என் நண்பன் “மச்சி எனக்கு வேலை கிடைச்சிருச்சுடா. ஆனால் பார்மஸி கம்பெனில நாம என்னடா பண்ணப்போறோம்? அதனால இந்த வேலையை எடுத்துக்க மாட்டேன்டா” என்றான். நான் “எனக்கு இந்த வேலை கூட கிடைக்கலடா” என்றேன். “விடுடா மச்சி உனக்கு இதை விட பெரிய வேலை காத்திருக்கு” என்று சமாதானப்படுத்தினான். இது கூடப் பரவாயில்லை ஒருமுறை ஒரு கால் சென்டருக்கு செருப்பு அணிந்து சென்று “ஷு போட்டா மட்டும் தான் உள்ள விட சொல்லிருக்காங்க” என்று செக்யூரிட்டியிடம் செருப்படி வாங்கி வந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கு.

பல இடங்களில் எனக்கு ஆங்கிலம் தான் பெரிய எதிரியாக இருந்தது. பெரிய பெரிய நிறுவனங்களில் எல்லாம் ஒன்றிடண்டு தேர்வுகள் முடித்து ‘ஹெச்.ஆர். இன்டர்வியூ’ என்று அழைப்பார்கள். அதன் பின் எந்த அழைப்பும் இருக்காது. என்ன கொடுமை என்றால் தமிழகத்தில் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் என் ஆங்கிலம் புரியவில்லை. சிங்கப்பூர் வந்தவுடன் சீனருக்கு புரிந்துவிட்டது.

சென்னையில் ஒரு சிறிய இன்ஸ்டிடியூட்டில் ‘டாட் நெட்’ படித்தேன். அங்கே படித்து முடித்தபோது அவர்கள் அங்கேயே வேலைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறினார்கள். மாதம் 2500 ரூபாய் கொடுத்தார்கள். நானே முழுமையாகப் படிக்காமல் பத்துபேருக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் என் மாமா அழைத்து அவர் நண்பர் ஒருவரின் எண்ணைக் கொடுத்து அவரிடம் பேசச் சொன்னார். அந்த அவர் தான் இன்றைய நம்முடைய முகம். அவர் மலேசியாவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை வைத்து நடத்திவிட்டு பின் சென்னைக்குத் திரும்பி இங்கே ஒரு நிறுவனத்தில் பங்குதாரர் போன்று செயல்பட்டுவந்தார்.

அவரிடம் ஆங்கிலத்தில் பேசுவதா? தமிழில் பேசுவதா? ஒருவேளை ஆங்கிலத்தில் பேசி திக்கித்திணறிவிட்டால் என்ன செய்வது? இப்படியாக பலமுறை சிந்தித்து. ஆங்கிலத்தில் சில பயிற்சிகள் எடுத்துக்கொண்டு அவருக்கு அழைத்தேன்.

“ஹெலோ சார்” நான் இன்னார் என்று அறிமுகம் செய்துகொண்டேன். “ஓ நீயாப்பா. உங்க மாமா சொன்னாரு” என்று அவர் இயல்பாக தமிழிலேயே தொடங்கிவிட்டார். எனக்கு அப்பாடா என்று இருந்தது. “நான் இப்போக் கொஞ்சம் பிஸியா இருக்கேன்ப்பா. நீ அடுத்தவாரம் என்னை கூப்பிடு. பார்த்துக்கலாம்’ என்று வைத்துவிட்டார்.

அடுத்தவாரம் வரைக் காத்திருந்து மறுபடி அழைத்தேன். போனவாரம் சொன்ன அதே பதிலைச்சொன்னார். நான் அதற்கடுத்த வாரமும் அழைத்தேன். அதே பதில். இப்படியே ஒரு இரண்டு மாதங்களாக நான் விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தேன்.

ஒருநாள் “என்ன தம்பி நீ பாட்டுக்கு போன் பண்ணி போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்க. எனக்கு நிறைய வேலையிருக்குத் தம்பி. எப்பபார்த்தாலும் இப்படி டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி?” என்று கடுமையாகவே கூறினார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர் சொன்னதைத் தான் நான் செய்தேன். ஒரு சிறு அமைதிக்குப் பின் “சாரி சார். நீங்க கூப்பிடச் சொன்னாதால தான் சார் கூப்பிட்டேன்” என்றேன்.

“நான் சொன்னா நீ பாட்டுக்கு வாரவாரம் கூப்பிட்டுக்கிட்டே இருப்பியா?”

“சாரி சார்” என்று மட்டும் கூறிவிட்டு நான் அமைதியாக இருந்தேன்.

“நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்ப்பா. வெளியூர்ல இருக்கேன் சும்மா சும்மா கூப்பிட்டு தொந்தரவு பண்ணாத.”

“சாரி சார். நீங்க வேலையிருக்குன்னு சொல்லிருந்தீங்க. அதான் சார் கூப்பிட்டேன். நீங்க அடுத்து எப்போ ப்ரியா இருப்பீங்கன்னு சொல்லுங்க சார் நான் அப்போ கூப்பிடுறேன்.”

“என்னது? ம்ம்ம்… சரி ஒரு மூணு வாரம் கழிச்சு கூப்பிடு” என்று கூறி வைத்துவிட்டார்.

நான் சரியாக மூன்று வாரம் கழித்து அடித்தேன். அவர் அலுவலகத்தின் முகவரியைக் கொடுத்து “நாளைக்கு வந்து பாரு” என்றார்.

நான் அடுத்தநாள் டிப்டாப்பாக கிளம்பி என்னுடைய பைல், ரெஸ்யூம் எல்லாம் எடுத்துக்கொண்டு அவர் அலுவலகத்திற்குச் சென்றேன். எனக்கு முன்னேயே அவர் அங்கு வந்திருந்தார். ஐந்தேமுக்கால் அடி உயரம் இருப்பார். தொண்ணூறு கிலோ கருத்த உருவம். முன்தலையில் முடிகள் உதிர்ந்துவிட்டாதால் பக்கவாட்டில் இருக்கும் முடிகளை வைத்து மூடியிருந்தார். வாயைச் சுற்றி வட்டமாக பிரஞ்சு தாடி, கஞ்சி போட்டு துவைத்தது போன்ற விறைப்பான சட்டை, டை, கால் சட்டை, சப்பாத்துகள் என சினிமாக்களில் வரும் அலுவலக மேலாளர் போல இருந்தார்.

நேர்முகத்தேர்வெல்லாம் ஒன்றும் இல்லை “இது தான்ப்பா கம்பெனி. கொஞ்ம் சின்னக் கம்பெனி தான். இதோட பாஸ் வேற ஒருத்தர். நான் சாப்ட்வேர் போர்ஷன் மட்டும் எடுத்துப் பண்றேன். உனக்கு அஞ்சாயிரம் கொடுக்கச்சொல்லிருக்கேன். சின்னக் கம்பெனி தான் உனக்குப்பிடிக்குதா பாரு? இல்லைன்னா கொஞ்சநாள் கழிச்சு வேற ஏதாவது பெரிய கம்பெனிக்கு நானே ரெக்கமண்ட் பண்ணி அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

அவர் தான் என் மேலாளர். அன்றிலிருந்தே என் வேலை தொடங்கிவிட்டது. அது முழுக்க முழுக்க வன்பொருள்கள் (Hardware) சார்ந்த நிறுவனமாக இருந்தது. இன்றளவும் நான் வேலை செய்துகொண்டிருக்கும் RFID டெக்னொலஜி பற்றிய ஆரம்ப அறிவு அங்கு தான் கிடைத்தது. அங்கிருந்த வன்பொருள்களோடு மென்பொருளை இணைத்து ப்ரோகிராம்களை உருவாக்கினேன். சிறிய நிறுவனமாக இருந்தாலும் கற்றுக்கொள்ள ஏராளம் இருந்தது. என் மேலாளரும் தாராளமாகக் கற்றுக்கொடுத்தார். தேவையானதை மட்டுமே பேசுவார். வெட்டி அரட்டை மொக்கை ஜோக் போன்ற எதுவுமே அவரிடம் இல்லை. ஆறே மாதத்தில் என் சம்பளம் பத்தாயிரம் ஆனது. இன்னும் சில மென் பொறியாளர்களை எடுத்து சில ப்ராஜக்ட்கள் செய்வோம் என்றால். நான் என் நண்பர்கள் மூவரை பரிந்துரைத்தேன். மூன்று பேரையுமே எடுத்துக்கொண்டார்.

கடுமையாக உழைத்தோம். இந்தியாவில் பிரபலமடையாத டெக்னாலஜியை புரியவைத்து விற்பது மிகமிகச் சவாலாக இருந்தது. அதிலும் அதன் விலை டெக்னாலஜி புரிந்தவர்களையும் அலறி அடித்துக்கொண்டு ஓடச்செய்தது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ‘கிளைன்ட்’ வருகிறார் என்றால் அவசர அவசரமாக இரவு பகல் பாராமல் உழைத்து வரும் ‘கிளைன்ட்’ எந்த துறை சார்ந்தவரோ அந்தத் துறைக்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கி அவருக்கு காட்டுவோம். இப்படிப் பல நாள் இரவு முழுவதும் அங்கே தங்கிஇருக்கிறோம். அப்படித் தங்கும் போதெல்லாம் “சரி என் வேலை முடிந்துவிட்டது. இனி உங்கள் வேலை தான்” என்று கூறிவிட்டு சென்றுவிட மாட்டார். எங்களுடனேயே இருப்பார். ஒருவேளை வீட்டிற்குச் சென்றாலும் அடிக்கடி வருவார். உணவு முதலானவற்றை வாங்கித் தருவார். பெரிய பெரிய நிறுவனங்களில் இதெல்லாம் இயல்பாகவே கிடைத்தாலும். எங்கள் நிறுவனத்தில் இதெல்லாம் வாங்கித் தரவேண்டிய அவசியம் இல்லை அதுவும் அவர் சொந்தப் பணத்தில். கம்பெனி முதலாளிக்கு இதிலெல்லாம் பெரிய அக்கறை கிடையாது. அவருக்கு பெரிதாக லாபம் ஈட்டித் தராத இந்தத் தொழிலை அவர் வலுக்கட்டாயமாக பிடித்து தொங்கிக்கொண்டிருந்தார். நாங்களும் அவரோடு சேர்ந்து எப்படியாவது எதையாவது விற்று விட வேண்டும் என்று தொங்கிக்கொண்டிருந்தோம்.

தொடக்கத்தில் ஐந்தாம் தேதிக்குள் வந்துகொண்டிருந்த சம்பளம் படிப்படியாக கூடி சில சமயங்களில் இரண்டு மாதங்களுக்கு மேல் சம்பளமே இல்லாமல் வேலை செய்யும் நிலை எல்லாம் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் நம் இந்த வார முகமான என் மேலாளர் தான் ஆயிரம் ஐநூறு என தன் சொந்தப் பணத்தை என் சட்டைப்பையில் திணித்து விடுவார். அதில் எதையும் அவர் திருப்பிக்கேட்டதில்லை கொடுத்தாலும் வாங்க மாட்டார்.

அவரோடு சேர்ந்து டெல்லி, மும்மை, பங்களூரு என இந்தியாவின் பல பகுதிகளுக்கு தொழிற்முறைப் பயணம் மேற்கொண்டுள்ளேன். நாங்கள் செல்லும் எல்லா இடத்திலும் அவருக்கு இணையான வசதியையே எனக்கும் செய்துகொடுப்பார். விமானப்பயணம் தங்குமிடம் என எதிலும் எந்தக் குறையும் இருக்காது. நாங்கள் எங்கள் நிறுவனத்தின் மூலம் மும்பையில் ஒரு எக்ஸ்போ நடத்தினோம் அதற்காக ஒட்டுமொத்த கம்பெனியும் விமானம் ஏறினோம். இருபதில் இருந்து முப்பது பேர் இருப்போம் என்று நினைக்கிறேன். அது தான் என்னுடைய முதல் விமானப்பயணம். என்னோடு வேலை செய்த என் கல்லூரி நண்பர்கள் மூவரும் உடன் வந்தார்கள். நாங்கள் விமானத்தில் செய்த கூத்தும் ரகளையும் இப்போதும் மறக்க முடியாது. மும்பை விமான நிலையத்தில் லக்கேஜ் வைத்து தள்ளும் வண்டியை எடுத்துக்கொண்டு ரேஸ் ஓட்டினோம். நாங்கள் செய்யும் சேட்டைகளை எல்லாம் பார்த்துவிட்டு லேசாக ஒரு புன்னகை மட்டுமே புரிவார். இதைச் செய்யாதே அதைச் செய்யாதே இப்படி இரு அப்படி இரு என்று எந்த வெட்டி அறிவுரையும் இருக்காது.

எக்ஸ்போவில் நான் டெமோ காட்டவேண்டிய ஒரு குறிப்பிட்ட மென்பொருள் அன்று காலை முதல் மக்கர் பண்ண தொடங்கிவிட்டது. அந்த இடத்தில் காண்பிப்பதற்காக செய்த அத்தனை நாள்களின் உழைப்பு அப்படியே வீணாகிவிடுமோ என்று பதறித் துடித்துக்கொண்டிருந்தேன். “என்னப்பா என்னாச்சு? நேத்துவரை ஒழுங்கா வேலை செஞ்சுக்கிட்டுத் தானே இருந்துச்சு?” என்றார் படபடப்பாக. “தெர்ல சார். அதான் பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்று மண்டையை சொறிந்துகொண்டு உட்காந்திருந்தேன். என் இதயத்துடிப்பு பன்மடங்கு பெருகியிருந்தது. கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது. என் அருகில் நின்று கவனித்துக்கொண்டே இருந்தார். “காலைல சாப்பிட்டியா?” என்றார்.

“இல்லை சார்” என்றேன்.

“சரி வெளில போய் சாப்பிட்டு வா. வந்து பாரு சரியாகிடும்”

“இல்லை சார். இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ள இதை முடிக்கணும் சார். எனக்கு பசிக்கல”

“அதெல்லாம் சரி பண்ணிடலாம். நீ போய் முதல்ல சாப்பிட்டு வா..” என் நண்பன் ஒருவனை அழைத்து எங்களை அனுப்பிவிட்டார்.

என்ன ஆச்சரியம் சாப்பிட்டு முடித்து வந்த சிறிது நேரத்திலேயே அதை நான் சரி செய்துவிட்டேன். தீவிரமாக எதையாவது சிந்துக்குக்கொண்டிருக்கும் போது ஒரு ‘ப்ரேக்’ எடுத்துவிட்டு வந்தால் நாம் மூளை நன்கு வேலை செய்யும் என்று தெரிந்தாலும் மனம் அதற்கு ஒப்புவதேயில்லை. அந்த ‘ப்ரேக்’கை அவர் என்னை வற்புறுத்தி எடுக்க வைத்தார். அதற்கான பலனும் இருந்தது. வேறு மேலாளராக இருந்திருந்தால் கடைசி நிமிடத்தில் குளறுபடி செய்ததற்கு என்னைக் கரித்துகொட்டியிருப்பார்.

அலுவகத்தின் நிலை மோசமடைந்து சம்பளப்பாக்கி கூடிக்கொண்டே சென்றது. எங்கள் முதலாளி கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. ஒருநாள் இனிமேல் நீ அலுவலகத்திற்குப் போக வேண்டாம் உன் நண்பர்களை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்துவிடு என்றார். நாங்கள் அனைவரும் அவர் வீட்டிற்குச் சென்றோம். எங்களோடு சேர்ந்து இன்னும் இரண்டு பேர்களும் வந்தார்கள். அடுக்குமாடி வீடானாலும் அவர் பெரிய வீடு. எங்களுக்கென்று ஒரு பெரிய அறையை ஒதுக்கித் தந்தார். அலுவகத்தில் செய்யும் வேலையை அவர் வீட்டில் இருந்து செய்யத் தொடங்கினோம். “இந்த மாசம் பார்ப்போம். இல்லைன்னா அடுத்த மாசத்துல இருந்த நாம தனியா பிசினஸ் பண்ணுவோம். நான் உங்களுக்கு சம்பளம் தரேன்” என்றார்.

மூன்று வாரங்கள் ஓடின. இடையில் நான் அவரின் ஹோண்டா ஆகிட்டிவாவை எடுத்துக்கொண்டு போய் அவர் அப்பார்ட்மெண்ட் செக்யூர்ட்டி அறைக் கண்ணாடிக் கதவில் மோதி கையில் பதினாலு தையல் போட்டுக்கொண்டேன். இதற்கான செலவும் அவர் தலையில் தான் விழுந்தது. மூன்று வாரங்கள் கழித்து ஒரு நாள் எங்கள் முதலாளி அவர் வீட்டுக்கு வந்தார். “என்னப்பா திடிர்னு எல்லோரும் காணமப் போயிட்டீங்க” என்றார்.

என் மேலாளர் “பசங்களோட சம்பளப் பாக்கிய மொத்தமா செட்டில் பண்ணுங்க. இனிமேல் டிலே பண்ணாம மாசம் மாசம் ஒழுங்கா சம்பளம் கொடுக்குறதுன்னா சொல்லுங்க நாங்க வாரோம். இல்லை நாங்க வேற வழியப் பார்த்துகிறோம்” என்று கறாராகப் பேசி எங்கள் சம்பள பாக்கி மொத்தத்தையும் வாங்கிக்கொடுத்தார்.

மிகவும் நல்ல மனிதர். அலைபேசியில் தொடக்கத்தில் என்னோடு கடுமையாக பேசியது போல வேறு எப்போதும் பேசியது இல்லை. சாந்தமான முகம் அதற்கேற்ற குணமும். அவர் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் விருந்து உபசரிப்பு சிறப்பாகவே இருக்கும். வெளியில் சாப்பிட்டு நாக்கு செத்துப்போய் கிடந்த நாங்கள் வாய்ப்பு வரும்போதெல்லாம் தின்பதற்காகவே அவர் வீட்டிற்கு ஓடிவிடுவோம்.

ஒன்னரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து பணிபுரிந்தேன். நிறுவனம் பெரிதாக வளரவில்லை. என் மாமா என்னை சிங்கப்பூர் வந்து வேலை தேடச் சொன்னார். நான் சிங்கப்பூர் கிளம்புவதை அவரிடம் கூறினேன். “நீ சிங்கப்பூர் போன உனக்கு நிச்சயம் வேலை கிடைச்சிரும். ஒருவேளை கிடைக்கலைன்னா நீ மறுபடி இங்கயே வந்துரு. நாம இன்னும் வேற மாதிரி பண்ணுவோம்” என்று நிறைய பேசினார். அவர் முன்னர் சிங்கப்பூரில் வேலை செய்த அனுபவத்தைக் கூறினார். எப்படி வேலை தேட வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது போல் சில குறிப்புகளை வழங்கினார். நான் முதல் முறை சிங்கப்பூர் பயணிப்பதற்கான விமானப் பயணச்சீட்டை அவர் தான் வாங்கிக்கொடுத்தார்.

சமீபத்தில் அவரிடம் அலைபேசியில் உரையாடிய போது தான் தொழிலை முற்றிலும் மாற்றிவிட்டதாகக் கூறினார். எங்களோடு வேலை செய்தவர்களில் நான் மட்டும்தான் இன்னும் RFIDயில் வேலை செய்வதாகக் கூறினார். இன்னும் ஆஸ்திரேலியா போ அமேரிக்கா போ நிறைய வாய்ப்பு இருக்கு. அப்போதான் வளர முடியும். என்று பேசிக்கொண்டிருந்தவர் “நீயெல்லாம் இருந்திருந்தா இன்னும் நாம இங்கயே நிறைய பண்ணிருக்கலாம். நீதான் ஓடிப்போய்ட்டியே” என்றார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இருவரும் சிரித்துக்கொண்டோம்.

ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்குப் பின்னாலும் நிறைய மனிதர்கள் இருப்பார்கள். அப்படி என்னைத் உயர்த்திவிட்ட ஏணிப் படிகளில் இவர் முக்கியமானவர்.

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -7

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

3 COMMENTS

  1. நல்ல மனிதர் சகோ தொடக்கத்தில் அவர் உங்களோடு தொலைபேசியில் கடுமையாக உரையாடியதற்கும் அவருடைய செயல்பாடுகளுக்கும் எவ்வளவு வேறுபாடு..இதுபோன்ற மனிதர்களை வாழ்நாள் முழுவதும் நன்றியோடு நினைவுகூரக் கடன்பட்டிருக்கிறோம் நாம்.

    • ஒவ்வொரு வாரமும் தாங்கள் தரும் ஊக்கத்திற்கு… நன்றி மோகன்…. உண்மை தான் நல்ல மனிதர்கள் நம் நினைவுகளில் இருந்து எப்போதும் மறைவதே இல்லை…

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -