முகங்கள்

அப்பாவியா? அடப்பாவியா?

- Advertisement -

வெளிநாடு வெளியூர்களில் அறை எடுத்து தனியாக தங்கும் போது அறைத்தோழர்கள் அமைவதென்பது மிக முக்கியம். நல்லவர்களாக வாய்த்துவிட்டால் அதைவிட வேறு குடுப்பினை இருக்க முடியாது. ஆனால் எல்லா நேரமும் அப்படி அமைந்துவிடுவதில்லை. அப்படி நான் சிங்கப்பூர் வந்த புதிதில் முதல் வருடம் மாமா வீட்டிலேயே தங்கிவிட்டேன். அதன் பின் சில காரணங்களால் என் அலுவகத்திற்கு அருகில் அறை தேடினேன். ஒரு ‘மாஸ்டர் ரூம்’ ஏற்கனவே இருவர் தங்கி இருந்தார்கள். மூன்றாவதாக நான் சேர்ந்துகொண்டேன். வாடகையும் குறையும். சமைக்கவே தெரியாத எனக்கு சமைத்துப்போடவும் இருவர் கிடைத்தார்கள்.

பாத்திரம் கழுவுவது மட்டுமே என் வேலையாக இருந்த போதிலும் அப்படி இப்படி இவர்களிடம் ஓரளவு சமையல் கற்றுக்கொண்டேன். அப்படிக் கற்றுகொண்ட அந்த ஆரம்பப்பாடம் தான் அதன் பின் பல காலம் எனக்கு கைகொடுத்தது.

ஒருநாள் வீட்டு உரிமையாளருக்கும் என்னோடு தங்கியிருந்தவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அவர்கள் இருவரும் அறையைக் காலி செய்யவேண்டியதாகிவிட்டது. இப்போது நான் புதிய அறைத்தோழர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். வந்த இரு புதியவர்களில் ஒருவர்தான் இந்த வார முகம். ஆள் ஐந்தேமுக்காலடிக்கு மேல் இருப்பார். எண்பது கிலோ உருவம். மீசை தாடி என்று எதுவும் வளராத வட்டமான கருத்த முகம். முகத்தில் எப்போதும் ஒரு அப்பாவித்தனம் ஒட்டிக்கொண்டிருக்கும். முதல் முதலில் பார்ப்பவர் யாரும் ஐயோ பாவம் அப்பாவி என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் உண்மையில் அவர் அப்பாவியா? அடப்பாவியா என்பதை கட்டுரை முடியும் போது நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

புதிய இரண்டு அறைத்தோழர்கள் வந்தவுடன் கழிப்பறையை யார் யார் எப்போது சுத்தம் செய்ய வேண்டும், யார்? என்று அறையைக் கூட்ட வேண்டும்? அலமாரியில் யார் யாருக்கு எந்தப் பகுதி? படுக்கும் இடம் முதலானவற்றை பேசி முடிவு செய்துகொண்டோம். அவர்கள் இருவருமே என்னைப்போலவே ஓரளவு சமைக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் ஒவ்வொரு நாளும் அவர்கள் நிறுவனத்தில் (“ஓவர் டைம்”) இரவு ஒன்பது மணி வரை வேலை செய்ய வேண்டியதிருக்கும். நான் வேலை முடிந்து சரியாக ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன். அவர்கள் இருவரில் ஒருவர் தான் ஏழு மணிக்கு வர இயலும். ஆக நான் தினமும் வந்து சமைக்க வேண்டும் அவர்கள் இருவரில் ஒருவர் வந்து என்னோடு இணைந்துகொள்ள வேண்டும். வீட்டு உரிமையாளர் ரொம்ப கறார் பேர்வழி. எட்டரைக்குள் சமைத்து முடிக்காவிட்டால் காச்சு மூச்சு காச்சு மூச்சு என்று கிளம்பி வந்துவிடுவார்.

தொடக்க நாள்களில் எல்லாம் சரியாகத்தான் சென்றது. ஒரு மாதம் சென்றது. அறையின் இன்னொரு தோழர் அவருக்கு “ஓவர் டைம்” இல்லாத நாள்களில் சரியாக வந்துவிடுவார். நாங்கள் இருவரும் சேர்ந்து சமைத்துவிடுவோம். ஆனால் நம் நாயகன் அவர் சமைக்க வேண்டிய நாள்களில் வருவதேயில்லை. தொடர்ச்சியாக நானும் மூன்று வாரங்கள் பார்த்தேன் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஒரு நாள் “என்னங்க இப்படிப் பண்றீங்க? நான் ஒரே ஆள் எவ்வளோ வேலை தான் பாக்குறது? எட்டரைக்குள்ள வேலை முடிக்கைலைன்னா அவர் வேற கத்துறாரு. கொஞ்சமாவது வேகமா வாங்க” என்று கொஞ்சம் கண்டிப்பாகவே கூறினேன்.

அவர் பதிலுக்கு மிகக் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு “என்னங்க ஓவரா பேசுறீங்க? எங்களுக்கெல்லாம் வேற வேலையில்லைன்னு நினைச்சீங்களா? சும்மா இங்க வந்து சமைச்சு போடுறது தான் என் வேலையா?” என்றுவிட்டு கழிப்பறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார்.

நமக்கு யாராவது சும்மா போடா என்றாலே மண்டை சூடாகிவிடும். இதில் இவர் கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டார். சிங்கப்பூர் வந்து கொஞ்சம் பொருமையாக இருக்க பழகியிருந்தேன். அதற்கு காரணம் எனக்கு இங்கே அமைந்த முதல் மேலாளர். அவரைப்பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன். இப்போது இவரைக் கவனிப்போம்.

மண்டைக்குள் இடி இடித்தது “அப்போ இவனுக்கு சமைச்சுப்போடத் தான் நாம வந்தோமா? பேசாமா இந்த அறையைக் காலி பண்ணிட்டு வேறு அறை பாத்துட வேண்டியதுதான். நாம ஏன் போகணும்? இனி சேர்ந்து சமைக்க வேண்டாம்?” இப்படி பல எண்ணங்கள் வந்துகொண்டே இருந்தன.

அவர் கழிப்பறையில் இருந்து வெளியே வந்து ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு எதுவுமே நடவாதது போல் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். இன்னொரு அறைத்தோழர் உள்ளே நுழைந்தார். அவர் முகம் கைகால் கழுவி வரும் வரை காத்திருந்தேன்.

“நீங்க என் கூட சேர்ந்து சமைக்கிறீங்களா? இல்லை தனியா சமைச்சுகிறீங்களா?” என்றேன்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன பாஸ்? என்னாச்சு?” என்றார்.

“யாருக்கும் சமைச்சுப்போடுறதுக்காக நான் சிங்கபூருக்கு வரல. நீங்க என் கூட சேர்ந்து சமைக்கிறதுன்னா ரெண்டு பேரும் சேர்ந்து சமைச்சுக்கிறுவோம். இல்லை நீங்க உங்க வழியப் பார்த்துகோங்க. இனிமேல் அவருக்கெல்லாம் என்னால சமைக்க முடியாது.” சொல்லிவிட்டு என் அலைபேசியை எடுத்துக்கொண்டு நான் அறையை விட்டு கிளம்பி வெளியே சென்றுவிட்டேன்.

ஊருக்கு அலைபேசியில் அழைத்து பேசிவிட்டு ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தேன். அந்த இன்னொரு தோழர் கீழே வந்தார்.

“என்ன பாஸ்? என்னாச்சு? நீங்க பாட்டுக்கு சடனா இவளோ கோபப்பட்டுடீங்க?” என்றார்.

நான் நடந்ததைக் கூறினேன்.

“ஆமா பாஸ். அவன் அப்படித்தான் ரொம்ப விவரக்கொளுந்துன்னு நினைப்பு. நீங்க பேசினது சரிதான்” என்றார்.

“என்ன பண்றான். உங்ககிட்ட ஏதாவது சொன்னானா?” என்றேன்.

“அதெல்லாம் ஒன்னும் வாயே திறக்கல”

“சாப்ட்டானா?”

“ஒன்னும் குறையே இல்ல. புள் கட்டு கட்டுனான்” என்றார்.

இருவரும் சிரித்துக்கொண்டோம்.

“அவன் எப்பவுமே அப்படித்தான் பாஸ். இப்படித்தான் போன வாரம் வேலை முடிஞ்சு சைட்ல இருந்து எங்க ப்ரன்ஸ் அஞ்சு பேரு எம்.ஆர்.டி வந்துகிட்டு இருந்தோம். ஒருத்தர் கிட்ட மட்டும் எம்.ஆர்.டி கார்டுல காசு இல்லை. அதனால எல்லாரும் ஒன்னரை கிலோமீட்டர் நடந்து போக வேண்டியிருந்தது. பஸ்ல போக சில்லறைக்காசு வேணும். யார்கிட்டயாவது ஒரு டாலர் இருக்கான்னு கேட்டுப்பார்த்தோம். யார் கிட்டயும் இல்லை. சரி வாங்க எல்லோரும் நடந்தே போவோம்ன்னு நடந்தே போனோம். சரியான டையர்டு. எம்.ஆர்.டி பக்குத்துல வந்தவுடனே இவன் மட்டும் போயி வெண்டிங் மெசின்ல ஒரு டாலர் போட்டு கூல்டிரிங்ஸ் எடுத்து குடிக்கிறான் பாஸ்…” ஒரு நொடி அதிர்ச்சியில் இருந்து மீளாதவர் போல என்னைப் பார்த்தார்.

அவரே தொடர்ந்தார் “ஏன்டா ஒரு டாலர் வச்சுக்கிட்டே அப்போ ஏன்டா இல்லைன்னு சொன்னன்னு நண்பர் ஒருத்தர் கேட்டாரு. இவன் அப்போ நான் சரியா பார்க்கல இப்போத் தான் பார்த்தேன் இருந்துச்சுன்னு சொல்லறான் பாஸ்”

“அடப்பாவி… ஏன் அப்படிப் பண்ணுனான்?”

“அதாவது பெரிய அமோன்ட் கடனா கொடுத்தா திருப்பி வாங்கிடலாமாம். ஒரு டாலர்லாம் திரும்ப கிடைக்காதாம். அவனே என்கிட்டே இரயில்ல வரப்போ சொல்றான் பாஸ்…”

வாய்விட்டு சத்தமாகவே சிரித்துவிட்டேன். “இவரு வரமாட்டாராம் இவருக்கு வேலை இருக்குமாம் நாங்க வேகமா ஓடி வந்து தினம் சமைச்சு வைக்கணுமாம். இனிமேல்லாம் இவனுக்கு என்னால சமைக்க முடியாது.” என்றேன்.

“விடுங்க பாஸ்… அதெல்லாம் பத்தி ரொம்ப ஒரி பண்ணிக்காதீங்க… பார்ப்போம் அவன் என்ன பண்றான்னு” என்றார்.

ஒருநாள் முடிந்து அடுத்து நம் நாயகனுடன் சேர்ந்து சமைக்கும் நாள் வந்தது. அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போதே இன்று அவருக்கு சேர்த்து சமைக்கக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன். வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன் அடுப்படிக்குள் நம்மாளு ஏற்கனவே சமையல் வேலையைத் தொடங்கியிருந்தார். நான் முகம் கழுவிவிட்டு வந்து பார்த்தேன் கிட்டத்தட்ட சமையல் முடிந்திருந்தது.

“எல்லா வேலையும் முடிச்சுட்டேன் பாஸு… கொழம்பு கொதிச்ச உடனே அமத்தனும்… அப்பளம் பொரிக்கணும்… அவளோ தான்” என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அவருக்கு சமைக்கூடாது என்று வந்தேன் அவர் எனக்கும் சேர்த்து சமைத்திருந்தார். “சரி மிச்ச வேலைய நான் பார்த்துக்கிறேன்” என்றேன்.

“பரவல்ல பாஸு… இதுல என்ன இருக்கு…” என்று அவரே பாத்திரம் கழுவுவது முதல் மற்ற வேலைகளையும் வேக வேகமாக செய்தார்.

இதுவும் சில நாள்கள் மட்டுமே நீடித்தது பின் பழைய குருடி கதைவை திறடி என்று தொடங்கிவிட்டார். ஒவ்வொரு முறை கடுப்பாகி முகத்தைத் திருப்பினால் அடுத்த நாள் சமைக்க வந்துவிடுவார்.

அவர்கள் இருவருக்குமே புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. என் அறையின் மற்ற தோழரிடம் நம் நாயகன் “பாஸு ஒரு சிகரெட் கொடுங்களே” என்பார். அவர் முகத்தை மிகவும் கடுப்பாகத் திருப்பிக்கொண்டு சிகரெட் பெட்டியை அவரின் முன் தூக்கி வீசுவார். ஒரு பிச்சைக்காரனுக்கு எட்டணாவைத் தூக்கி வீசும் ஒரு தோரணை இருக்கும் அவரிடம். அதைப் பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருந்தது.

“என்ன பாஸு? யாரா இருந்தா என்ன? இப்படியா கொஞ்சம் கூட மரியாதை இல்லாம தூக்கி எறிவீங்க? விருப்பம் இருந்தா கொடுங்க இல்லைன்னா இல்லைன்னு சொல்லுங்க?” என்றேன்.

“விடுங்க பாஸு… இப்போ நான் தூக்கி எரிஞ்சதால அவன் எடுக்காமலா போனான்?” என்றார்.

ஆம் அவர் எடுத்துவிட்டுத் தான் சென்றார். பிச்சைக்காரன் கூட பரவாயில்லை எனும் படி எந்த ஒரு மான உணர்ச்சியும் இல்லாமல் ஒரு சிகரெட்டைப் பெட்டியில் இருந்து உருவிக்கொண்டு முகத்தைக் கோணலாக்கி ஒரு வலிசல் வலிந்துவிட்டுச் சென்றார்.

ஒருநாள் நம் நாயகன் அவரின் அன்றாட செலவுகளைக் கணக்குப்பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று என்னிடம் வந்து “பாஸு ஓவர் செலவாகுது எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னே தெரியல… ஏதாவது வழி சொல்லுங்க” என்றார்.

நான் என் மூளையின் பொருளாதார நரம்பைத் தட்டி உலுக்கி அவரிடம் “ஒரு சிகரெட் பாக்கெட் பத்திலிருந்து பதினஞ்சு டாலர். நீங்க ஒரு நாளைக்கு ஒரே ஒரு பாக்கெட் குடிச்சா கூட மாசத்துக்கு முன்னூறுல இருந்து முன்னுத்தம்பது வெள்ளி ஆகும். தண்ணியடிக்கிறத கூட விடுங்க அதை நீங்க மாசத்துக்கு ஒரு தடவை தான் பண்றீங்க. சிகரெட் பழக்கத்தை மட்டும் விட்டீங்கன்னாலே எவளோ மிச்சம் பண்ணலாம் பாருங்க?” என்றேன்.

மிகவும் பெருமிதமாக முகத்தை வைத்துக்கொண்டு “பாஸு நான் இதுவரை ஒரு தடவ கூட என் காசுல தண்ணியோ சிகரெட்டோ அடிச்சதே கிடையாது” என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. உண்மையில் பேரதிர்ச்சி தான். அன்று என் அறையின் மற்ற தோழர் ஏன் அப்படி சிகரெட் பெட்டியைத் தூக்கி எறிந்தார் என்பதன் காரணம் இப்போது புரிந்தது.

“தெய்வமே… நான் தெரியாம உங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டேன்… நீங்க தான் எனக்கு பணத்தை எப்படி மிச்சம் பண்ணனும்ன்னு கத்துக்கொடுக்கணும்.” என்று கையெடுத்து கும்பிட்டேன்.

“அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு.. நானே உங்ககிட்ட கேக்குறேன்” என்று சிரித்து மழுப்பி அதன் இரகசியத்தை சொல்லாமே சென்றுவிட்டார்.

இவரிடமிருந்து தப்பிப்பதற்காகவே நானும் அறையின் மற்ற தோழரும் பல திட்டங்கள் தீட்டி புதிய அறை ஒன்றைப் பார்த்துக்கொண்டு ஓடிவிட்டோம். அப்படி ஓடுவதற்கு சில நாள்கள் முன்பு நான் எப்போதும் பாட்டுகேட்டுக்கொண்டிருக்கும் ஒரு சிறிய ‘ஐபாட்’ தொலைந்து போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இப்போது புதிய அறையில் நானும் மற்றொரு தோழரும் மட்டும் இருந்தோம். ஒரு இரண்டு மாதங்கள் கழிந்து ஒரு நாள் திடீரென்று என் அறைத்தோழர் என் ஐபாடை கொண்டு வந்து நீட்டினார். கிட்டத்தட்ட அதை நான் மறந்தே போயிருந்தேன்.

“எப்படிங்க கிடைச்சது? எங்க கிடந்தது?” என்றேன்

“மத்தியானம் நம்மாளு வச்சு கேட்டுக்கிட்டு இருந்தான். நான் பக்கத்துல போயி யாரோடதுன்னு கேட்டேன்.கழட்டிக் குடுத்துட்டான்” என்று கூறி சிரித்தார்.

“என்னோடது தான்” என்று சண்டை போடாமல் கேட்டவுடனே கொடுத்துவிட்ட அவரின் நேர்மையைப் பாராட்டுவதா? இல்லை கூடவே இருந்து திருடிட்டுப் போயிருக்காரே என்று அவரை திட்டுவதா என்று குழம்பிப்போய் நானும் என் நண்பரோடு சேர்ந்து சிரித்துவிட்டேன்….

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -6

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

2 COMMENTS

  1. அந்த சிகரெட் பழக்கத்தை விடச்சொல்லி நீங்கள் கூறியதும் அதற்கு அந்த நண்பர் கூறிய பதிலைப் படித்ததும் சத்தமாகச் சிரித்துவிட்டேன்..?

    அந்த ஒரு வெள்ளிச் செயல் நம்ம வாழ்க்கைலகூட நடந்திருக்கு. உங்கள் அறை நண்பர்கூறிய அதே பதிலைத்தான் எங்கள் நண்பனும் கூறினான்.

    கொஞ்சம் குறையுள்ள மனிதரைப்பற்றிய நல்ல பதிவு தொடருங்கள் படித்துப் பண்படக் காத்திருக்கிறோம்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -