முகங்கள்

வள்ளல்

- Advertisement -

அதிகாலை எழுந்த வேப்பமரத்து குருவிகள் கிகி… கிகி…. கிகிலி… கிகிலி… என சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தன. எங்கள் வீட்டுச் சேவல் கூவி அரைமணிநேரம் இருக்கும். பால்கார அண்ணன் வீட்டிற்கு வெளியே வந்து கத்தினார். பால்காரர் என்றால் எங்கள் வீட்டில் பால் விற்க வந்தவர் இல்லை. எங்கள் வீட்டில் இருந்து பாலை வாங்கி வெளியில் விற்பவர். என் அம்மா வீட்டிற்கு வெளியே சென்ற போது திண்ணையில் ஒருவர் இழுத்துப் போர்த்திக்கொண்டு சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் கைலியால் மூடிய ஒரு துணி மூட்டை இருந்தது.

எங்கள் வீட்டுத்திண்ணைகள் இரண்டும் மிகப்பெரியது. ஒவ்வொன்றும் ஆறடி நீளமும் பத்தடிக்கு மேல் அகலமும் கொண்டது. பழைய காலத்து வீடு. இப்போது இந்த வீடு இல்லை. இடித்துக்கட்டிவிட்டோம். அவ்வப்போது அந்த பழைய வீட்டை இடிக்காமல் இருந்திருக்கலாமோ? என்று எனக்குத் தோன்றும். அந்த வீட்டில் தான் எவ்வளவு நினைவுகள் கொட்டிக்கிடக்கின்றன. இன்று வசதி வாய்ப்புகளுடன் பெரிய வீடாக இருந்தாலும் ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

சரி கதைக்கு வருகிறேன். உறங்கிக்கொண்டிருந்தவர் எழுந்துவிட்டிருந்தார். நானும் எழுந்து திண்ணைக்கு வந்திருந்தேன். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பால்காரர் “வேகமா வாங்கமா… லேட் ஆகுது… நான் வேகமா போனாத் தான் பாலை எல்லாம் விக்க முடியும்” அவசரப் படுத்திக்கொண்டிருந்தார். இரண்டு மாடுகளில் பாலைக்கறந்து அவற்றை அளந்து வாங்கிக்கொண்டு வெளியில் சென்று விற்க வேண்டும்.

பால்காரர் எழுந்து உட்காந்திருந்தவரின் முதுகில் ஒரு தட்டுத்தட்டி “யோவ் செகுடு என்னா இங்க வந்து படுத்திருக்க?” என்று சத்தமாகக் கத்திக் கேட்டார்.

அவரின் வாயை உன்னிப்பாகக் கவனித்த அந்த மனிதர். “ஓவே… ஓவே….” என்று சத்தமாக ஏதோ கூறி ஒன்றுமில்லை என்று கையையும் தலையையும் அசைத்துக் கூறினார்.

ஒல்லியான முறுக்கிய கயிறு போன்ற உடல். மேற்சட்டை அணியாமல் கைலியை வரிந்து கட்டியிருந்தார். அறுபத்து ஐந்து வயதுக்கு மேல் இருக்கும். பற்கள் பல உதிர்ந்து விட்டதால் கன்னங்களில் கடப்பாரையை வைத்துக் குடைந்தது போல் குழி விழுந்திருக்கும். அவரின் கைலி கட்டும் சட்டைபோடாத உடம்பும் ஒரு கோணத்தில் காந்தியை நினைவுபடுத்தும். ஒரு பெரிய தடித்த கருப்பு கண்ணாடி போட்டிருப்பார். அதன் வழியே அவரின் ஒரு கண் மட்டும் கொஞ்சம் பெரிதாகத் தெரியும். பால்காரர் செல்லும் வரை அமைதியாக திண்ணையில் அமர்ந்திருந்தார். 

எங்களுக்கும் அதிகாலையில் வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். வந்திருப்பவர் காது சுத்தமாகக் கேட்க முடியாதவர். மாடுகளைப் பத்திக்கொண்டு எங்கள் தெருவழியாக அவர் நடந்துபோகக் கண்டிருக்கிறேன். அவரிடம் என்ன விஷயம் என்று கைகளை ஆட்டி வாயைப் பெரிதாக திறந்து செய்கை செய்து கேட்டோம்.

“ஆ… ஊ… ஈ…” என்று பெரிது பெரிதாக சத்தம் எழுப்பி சொல்ல வேண்டியதை ஒருவழியாக சொல்லி முடித்தார். அவரின் வார்த்தைகள் தெளிவாக இல்லாவிட்டாலும் சொல்ல வேண்டியதை எப்படியும் சொல்லிவிடுவார்.

நான் உங்க வீட்ல மாடு கண்டல்லாம் பாத்துக்கிறேன். எனக்கு வேலை குடுன்னு கேட்டார்.

பொதுவாக எங்கள் வீட்டில் இருக்கும் வேலைகள் அனைத்தையும் நாங்களே செய்துவிடுவோம். வேலைக்கு என்று ஒரு ஆள் எல்லாம் தேவை இருக்கவில்லை. இருந்தாலும் வெறும் “கஞ்சி மட்டும் ஊத்து உன் வீட்ல நான் வேலை பாக்குறேன்” என்று வருபவரை எப்படி விட முடியும்.

திண்ணையில் ஒரு பகுதியை அவருக்காக ஒதுக்கிக்கொண்டார். எங்களுகெல்லாம் வேலை பாதியாக குறைந்துவிட்டது. அவரால் முடிந்த எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார். கால்கள் இரண்டும் இரண்டு உள்நோக்கி வளைந்த விற்களைப்போன்று இருக்கும். குழந்தை போல அசைந்து அசைந்து தான் நடப்பார். ஆனாலும் தண்ணி தூக்குவதில் தொடங்கி மாடுகளை அவிழ்த்து மேய்த்து குளிப்பாட்டுவது என எல்லா வேலைகளையும் சாதாரணமாக செய்து முடித்துவிடுவார்.

அவர் வந்த பின் எனக்கெல்லாம் வேலையே இல்லாமல் போய்விட்டது. நானாக ஏதாவது சிறு சிறு வேலைகள் செய்தாலும் “போ…. போ… போய் படி… போ… போ…” என்று கத்துவார். 

அவருக்கு பெயர் என்று ஏதாவது இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. ஒருமுறை கேட்ட போது ஏதோ சொன்னார் மறந்துவிட்டது. அந்தப் பெயர் அவருக்கு தேவையும் படவில்லை. அவரை அழைக்க வேண்டுமென்றால் அவரின் கண்ணில் படும்படி கையசைக்க வேண்டும். இல்லை அவரைத் தொட்டு அழைக்க வேண்டும். செய்கை மற்றும் வாய் அசைவின் மூலம் நாம் சொல்வதை பெரும்பாலும் புரிந்துகொள்வார். அப்படியும் புரியவில்லை என்றால் அவரின் கையை நீட்டச்சொல்லி மணிக்கட்டில் எழுதி காண்பித்தால் புரிந்துகொள்வார்.

தமிழ் வாசிக்கத் தெரிகிறதே “என்ன படிச்சிருக்கீங்க?” என்று ஒரு நாள் வினவினேன். ஆறாம் வகுப்பு என்றார். பொட்டணம் மடித்து வரும் காகிதம் எங்காவது குப்பையில் பறந்து வரும் காகிதம் என கையில் கிடைக்கும் காகிதங்களை எல்லாம் சேமித்து வைப்பார். நேரம் கிடைக்கும் போது அதில் ஒன்றை எடுத்து வாசித்துக்கொண்டிருப்பார். அவருக்கு தமிழ் வாசிப்பதில் எந்த சிரமும் இருக்கவில்லை. கடைக்குப் போவதில் இருந்து எந்த வேலை சொன்னாலும் செய்வார். ஆனால் அவரைத் திட்டுகிறோம் மரியாதை இல்லாமல் பேசுகிறோம் என்றால் கோபித்துக்கொள்வார். அப்படித்தான் இதற்கு முன் வேலை பார்த்தவர்களிடம் கோபித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். அவர்கள் வந்து இவரை மறுபடி அழைத்தும் கூட போக மறுத்துவிட்டார்.

யாரோ பெரிய குடும்பத்துப்பையன் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிவந்து இப்படி ஆகிவிட்டார் என்று ஊருக்குள் ஒரு பேச்சு இருந்தது. அதை அவரிடம் கேட்டால் ஒன்றும் பதில் சொல்ல மாட்டார். அவர் பூர்வீகம் பற்றி எல்லாம் அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர் மிகச் சிறுவதிலேயே வேறு ஒரு ஊரில் இருந்து இங்கு வந்துவிட்டதால் அவரின் சொந்த வாழ்க்கையைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

“படி படி படிச்சாத்தான் பெரிய ஆளா வர முடியும்” என்று என்னிடம் கூறிக்கொண்டே இருப்பார். நான் ஏதாவது சேட்டை செய்யும்போது “ஆ… ஊ.. அம்மாட்ட சொல்லிடுவேன்” என்று மிரட்டுவார் அறிவுரை வழங்குவார். நகைச்சுவையாக எதுவும் நடந்தால் “ஹா… ஹா… ஹா…” என்று பொக்கை வாய்க்குள் ஒளிந்திருக்கும் நாலு பற்களும் தெரியும் வண்ணம் சிரிப்பார். தீபாவளி பொங்கலுக்கு ஒன்றிரண்டு கைலிகளும் துண்டும் மட்டுமே வாங்கிக்கொள்வார். சட்டை எல்லாம் அவருக்கு பிடிக்காது. அவருக்கு பொடி போடும் பழக்கம் மட்டும் இருந்தது அதற்காக மட்டும் காசு கேட்பார். பண்டிகை தினங்களில் அதிகம் காசு கிடைத்தால் எனக்கெல்லாம் கூட ஏதாவது வாங்கி வந்து கொடுத்து சாப்பிடச்சொல்வார்.

வெகுளித்தனமான நல்ல மனிதர். தன் உயிருள்ளவரை அவருக்கான சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர். ஏதோ ஒரு தருணத்தில் எங்கள் வீட்டில் சண்டை பிடித்துக்கொண்டு வேறு ஒரு வீட்டிற்கு சென்றுவிட்டார். நான் அழைத்தும் வர மறுத்துவிட்டார். பின் அங்கும் சண்டை பிடித்துக்கொண்டு வேறு ஒரு வீட்டிற்கு சென்றுவிட்டார். எந்த தொல்லையும் தராமல் எல்லா வேலைகளையும் செய்யும் ஒரு வேலைக்காரரை யார் தான் வேண்டாம் என்பார்கள். அவர் எங்கு சென்றாலும் சேர்த்துக்கொள்வார்கள் ஆனால் எங்கு செல்வது என்பதை அவர் தான் முடிவு செய்வார் யார் அழைத்தாலும் செல்ல மாட்டார். காசு பணமெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை.

சில வருடங்களுக்குப்பின் நான் கல்லூரி விடுதிக்குச் சென்று விட்டேன். ஒருமுறை ஊர் வந்த போது அவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும் அவரின் உறவினர்கள் சொந்த ஊரில் இருந்து வந்து அவரின் பிணத்தை வாங்கிச்சென்று பெரிய தேர் கட்டி பெரிய அளவில் வான வெடியெல்லாம் வெடித்து அடக்கம் செய்ததாகவும் கேள்விப்பட்டேன்.

செத்தும் கெடுப்பவர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் இவர் வாழும்போது அவரின் உழைப்பையும் செத்தபின் அவரின் உறவினர்களுக்கு சொத்தையும் அள்ளிக்கொடுத்த வள்ளல்.

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் – 4

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

3 COMMENTS

  1. இப்படியும் சில மனிதர்கள்
    பிறருக்காக வாழ்வதிலேயே அவர்களுக்கு அலாதி இன்பம் அதுவும் ஒரு போதைபோலத்தான். சிறு உறுத்தல்கூட இல்லாது அடுத்தவர்களின் உழைப்பில் சொகுசாக வாழ்பவர்களையே பார்த்துப் பழகிப்போன என்போன்றோர்க்கு இதுபோன்ற மனிதர்களின்மேல் மதிப்பு கூடுகிறது. அவர் யார் அவரின் குடும்பபிண்ணனி என்வென்பதையைல்லாம் நீங்கள் அறிந்து கொண்டீர்களா சகோ? படிக்கும் நமக்கே அதைத் தெரிந்துகொள்ள ஆவல்மேலிடுகிறதே பழகிய உங்களுக்கு எப்படியிருந்திருக்கும்.

    முகங்கள் தொடரட்டும் உள்ளத்தைப் பண்படுத்தும் தொடராக உள்ளது.

    • மிக்க நன்றி சகோ… அவருக்கு என்று தனியாக குடும்பம் எல்லாம் இல்லை… அவர் திருமணம் செய்துகொள்ளாதவர். அவர் இருக்கும் வரை காத்திருந்த உறவினர்கள் அவர் இறந்த பின் உடலை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்கள்… அதன் பின் ஒன்றும் தகவல் இல்லை… உங்களின் கருத்து என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -