முகங்கள்

பதினெட்டாம் முகம்

- Advertisement -

கல்லூரி முதல் வருடம் விடுதியில் சேர்ந்திருந்தேன். எல்லாமே வருங்காலக் கனவுகளோடு வந்திருங்கியிருந்த புதிய முகங்கள். என் பள்ளி நண்பர்கள் ஊர்க்காரர்கள் என் அண்ணன் எனத் தெரிந்த சில முகங்கள் இருந்ததால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. யாராவது “டேய் நானும் மதுரை தான்டா…” என்று சொல்லிவிட்டால் போதும். அவனை நிற்க வைத்து வரலாறு பூகோளம் எல்லாம் விசாரிக்கத் தொடங்கிவிடுவேன்.

அவனும் அப்படித்தான் வந்து பேசத் தொடங்கினான். “நீ அஞ்சாவாது இந்தக் ஸ்கூல்ல தானே படிச்ச?” என்று. நான் படித்த பள்ளியின் பெயரைச் சரியாகச் சொன்னான். நான் மூன்றாவதில் இருந்து ஐந்தாவது வரை அந்தப் பள்ளியில் தான் படித்திருந்தேன். அந்த வயதில் என்னோடு படித்த வெகு சிலரைத் தவிர யாரையுமே எனக்கு நினைவில்லை. நினைவில் இருப்பவர்கள் கூட நேரில் வந்து நின்றால் கண்டுபிடிக்க முடியுமா? தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் என் வகுப்பு கூட கிடையாது என் அண்ணனின் வகுப்பு.

“இவன் தானே உங்க அண்ணே… சும்மா சும்மா ஃபர்ஸ்ட் மார்க்கு ஃபர்ஸ்ட் ரேங்குன்னு பரிசு வாங்கிட்டே இருப்பானே?” அத்தனையும் சரிதான். அபாரமான ஞாபக சக்தி தான் அவனுக்கு. நல்லவேளை நான் அறிவியலில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியையிடம் அடிவாங்கியதெல்லாம் அவனுக்குத் தெரியாது.

“என் அண்ணன் கிளாஸ்ன்னு சொல்ற… அப்பறம் இப்பத்தான் ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்திருக்க?” என்று கேட்டேன்.

“அதுவா வர்ற வழில தடுக்கி விழுந்துட்டேன்…” பெரிதாக நின்று பேசுவதற்கெல்லாம் அவனுக்கு நேரமில்லை என்பது போல் சிரிக்காமல் கூட டாட்டா காட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.

சரி நமக்குத் தெரிந்த இன்னொரு நம்மூர்க்காரன் சிக்கிவிட்டான். இவனையும் நண்பனாக்கிவிடலாம் என்று நினைத்தேன். ஐந்தேமுக்கலடி உயரம். சிவந்த நிறம். கட்டையான மீசை அடர்த்தியான தாடி. தரையைக் கூட்டும் பூட்கட் ஜீன்ஸ். டக்கின் செய்யப்பட்ட சட்டை. அவனை எப்போது பார்த்தாலும் அப்போதுதான் தூங்கி எழுந்தவன் போலவே இருப்பான். அடுத்தவரை அவன் பார்க்கும் பார்வையே அவனுக்கு அவர்களைப் பற்றி எல்லாம் தெரியும் என்பதுபோல ஒரு தினுசாகத் தானிருக்கும்.

அவனும் நானும் வேறுவேறு துறை. வெவ்வேறு வகுப்புகளில் படித்ததால் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகள் இல்லை. எப்போதாவது தான் விடுதியில் சந்தித்துக்கொள்ள முடியும். விடுதியில் என்னறைக்கு நேர் மேலே மூன்றாவது மாடியில் அவன் அறை. விடுதியில் இருந்து வெளியே செல்லும்போது என் அறைப்பக்கம் தலைகாட்டுவான்.

“டேய் தம்மடிக்க போறேன் ஒரு அஞ்சு ரூவா இருந்தா கொடு…” என்பான். இருந்தால் கொடுப்பேன். இல்லை என்றால் “ஓகே டா…” என்று கிளம்பிவிடுவான்.

காசு கொடுத்துத்தான் தம்மடிக்க வேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. கல்லூரிக்கு வெளியில் இருக்கும் குடிசைக் கடையில் சென்று அமர்ந்தாலே போதும். ஏதாவது ஒரு நண்பன் ஊதுவதில் இவனும் கொஞ்சம் இழுத்துக்கொள்வான். ஒரு நாலு பேரிடம் இழுத்தால் போதும். பின் அப்படியே கிளம்பி கிருஷ்ணன் கோவில் பக்கம் இருக்கும் பரோட்டா கடையில் சென்று எவன் கணக்கிலாவது பரோட்டாக்களையும் ஆபாயில்களையும் உள்ளே தள்ளிவிட்டு வந்துவிடுவான்.

ஒருநாள் என் அறையில் வந்து மடித்து வைக்கப்பட்டிருந்த என் கால்சட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அளவு பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் முக்கால்காலைத் தாண்டவில்லை. களைத்துப்போட்ட எந்த கால்சட்டையும் மடித்துவைக்கவெல்லாம் அவன் யோசிக்கக்கூட இல்லை. அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

“டேய் என்னடா நீபாட்டுக்கு ஓலைச்சுப்போட்டுட்டு போற” என்று கத்தினேன்.

“டேய்… மடிச்சுக்கோடா…” என்று ஒன்றுமே நடவாதது போல் சென்றுவிட்டான். என்ன தான் என் இடத்தை நான் குப்பையாக வைத்திருந்தாலும் யாராவது வந்து அதைக் களைத்துப்போட்டு விட்டுச் சென்றால் என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டே அவனை திட்டிக்கொண்டே மீண்டும் மடித்தேன்.

சிறிது நேரத்தில் பக்கத்து அறையில் இருந்த நண்பன் ஓடி வந்தான். “டேய் அவன் நான் காலேஜ் போக எடுத்து வச்சிருந்த என் பேன்ட்டை தூக்கிட்டு போயிட்டான்டா…”

“ஹஹஹா…” என சிரித்துவிட்டு “போனா என்ன டா சாயந்தரம் கொண்டு வந்துருவான்டா” என்றேன்.

“அட போடா… அவனாவது கொண்டு வர்றதாவது? அவனுக்கு இதே வேலை தான். ஒவ்வொரு ரூமா போய் நல்ல பேன்ட் சட்டைன்னு தூக்கி போட்டுட்டு போயிடுவான். அதை திருப்பிக்கொண்டு வந்து வைக்கிற பழக்கமெல்லாம் கிடையாது. போற போக்குல வேற எந்த ரூம்லயாவது கழட்டி போட்டுட்டு அங்க இருக்கதை எடுத்துப் போட்டுட்டு போய்டுவான்…”

நல்லவேளை அவனுக்கு என் பேன்ட் எதுவும் பத்தலை. புதுப்புது சட்டைகள் கூட இப்படி காணாமற் பல மாதங்களுக்குப் பின் பழையதாகி நஞ்சு இத்துப்போய் பலருக்கு கிடைத்திருக்கிறது. சிலருக்குக் கிடைக்காமலே கூட போயிருக்கிறது.

“டேய் மாப்ள… பேன்ட் நல்லாயிருக்கே யாருது டா?”

“தெர்ல மாப்ள… எங்க ரூம்ல ரொம்ப நாளா கிடந்துச்சு… நல்லா இருக்கேன்னு போட்டிருக்கேன்…”

“அப்படியா மாப்ள… இது என் பேன்ட் தான்டா… அப்பறம் கொண்டு வந்து கொடுத்துருடா…”

இப்படிப்பட்ட உரையாடல்கள் பலவற்றிக்கு காரணகர்த்தா நம் கதாநாயகன் தான். அவன் இஷ்டத்திற்கு யாருடைய கால் சட்டையையாவது எடுத்து வேறு யார் அறையிலாவது போட்டுவிட்டுப் போய் விடுவான். கேட்பாரற்று கிடக்கிறதே என்று அவர்கள் வெளியில் எடுத்துப் போட்டுக்கொண்டு வந்தால் மாட்டிக்கொள்வார்கள். ஆனால் அந்த கால் சட்டை எப்படிக் கால் முளைத்து அந்த அறைக்கு போயிருக்கும் என்பது அத்தனை பேருக்கும் தெரியும்.

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்களே அந்த வாக்கியம் அவனுக்கு அட்சரசுத்தமாகப் பொருந்தும். அவனுக்கு மற்றவர்கள் நம்மை இப்படித் திட்டுகிறார்களே. கேவலமாகப் பேசுகிறார்களே என்ற மான உணர்ச்சியெல்லாம் கொஞ்சமும் கிடையாது. அப்போதைக்கு அவனுக்கு வேண்டியது கிடைத்தால் சரி. அதைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்க மாட்டான். இப்படிப்பட்ட ஒரு ஜென் மனநிலை அமைவதெல்லாம் ஒரு வரம் தான். நாம் சாதரணமாகச் செய்யும் காரியத்திற்கே இவர் இதைச் சொல்லிவிடுவாரோ? அவர் அதைச் சொல்லிவிடுவாரோ என்று பயந்து பயந்தே பாதி செயல்களைச் செய்யாமல் விட்டுவிடுகிறோம்.

கல்லூரிக்கு பல நாள்கள் மட்டம் போட்டதால் கல்லூரியிலும் தடுக்கி விழுந்து எங்கள் ஜூனியர்களுடன் சேர்ந்து மீண்டும் முதலாமாண்டு படிக்கத் தொடங்கினான். இதனால் அவனுக்கு வருத்தம் எதுவும் இல்லை. அவனுக்கு இப்போது தம்மடிக்க காசு கேட்க பல நண்பர்கள் பெருகிவிட்டதில் மகிழ்ச்சி தான்.

மூன்றாமாண்டு கல்லூரி படித்துக்கொண்டிருந்த ஒரு சமயத்தில் என் அறைக்கு என்னைத் தேடி வந்தான். எப்போதும் போல தம்மடிக்க காசு கேட்டுத்தான் வந்தான். அறையில் யாருமில்லை என்றவுடன் தன் கைவரிசையை என் நண்பனின் பெட்டியில் இருந்த ஐநூறு ரூபாயிடம் காட்டிவிட்டுச் சென்றுவிட்டான். முகங்கள் தொடரின் முதல் முகமாக என் நண்பன் ஒருவனைப் பற்றி எழுதியிருந்தேன். அந்த நண்பன் தான் ஐநூறு ரூபாயை இழந்தவன்.

இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக பல திருட்டுகளை அரங்கேற்றினான். ஒருகட்டத்தில் நண்பர்கள் சிலர் இவனை இவன் தந்தையிடம் சொல்லித்தான் திருத்த முடியும் என்று முடிவு செய்து, அவன் தந்தைக்கு அழைத்தார்கள்.

“அந்தத் தறுதலைய நான் தலைமுழுகி பல வருஷம் ஆச்சு… அவனை நீங்க அடிச்சுக் கொன்னா கூட எனக்கு கவலையில்லை… என்கிட்ட இதுமாதிரி எல்லாம் சொல்லி ஒரு புரயோஜனும் இல்லை… நீங்களே புடிச்சு நாலு சாத்து சாத்துங்க” என்று கோபமாக பேசிவிட்டு வைத்துவிட்டார். இதில் அவர் ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் வேறு.

நண்பர்கள் என்றாலும் எத்தனை நாள்கள் தான் பொறுப்பார்கள். செல்போன்களை இழந்த என் ஜூனியர்கள் பலர் சேர்ந்து மூக்கு மொகரை எல்லாம் பெயர்த்துவிட்டார்கள். இந்த அடி வாங்கிய பின்னும் அவன் அடித்தவர்கள் யார் மீதும் கல்லூரியில் எந்த புகாரும் அளிக்கவில்லை. எங்கள் கல்லூரி விடுதியில் அலைபேசிகள் வைத்திருப்பது தடை செய்யப்பட்டிருந்தது. ஒருவேளை அவன் தன்னை அடித்தவர்கள் மீது புகாரளித்திருந்தால் அவனை விட மற்றகளுக்குத் தான் பிரச்சனை. அவன் யாரிடம் அடிவாங்கினானோ அவர்களிடமே அடுத்த இரண்டாவது நாள் சென்று “தம்மடிக்க காசு கொடுடா” என்று நின்றிருக்கிறான்.

“அண்ணே அவனை என்ன அடிச்சாலும் அவனால திருந்த முடியாதுண்ணே… அவனுக்கு திருட்டு இரத்தத்துல ஊறிருச்சுண்ணே… கொஞ்சம் கூட சூடு சொரணை எதுவும் இல்லை ண்ணே” என்று என் ஜூனியர்கள் வந்து சொல்லும்போது எனக்கே கொஞ்சம் வருத்தமாகத் தானிருந்தது. அதன் பின்னும் பலமுறை வந்து என்னிடம் “தம்மடிக்க காசு கொடு” என்று வாங்கிச் சென்றிருக்கிறான். அவனைப் பார்க்குபோது எல்லாம் ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் பரிதாப உணர்ச்சியும் சேர்ந்தே வரும்.

கல்லூரி நான்காமாண்டு இன்னும் சில மாதங்களில் எல்லோரும் கல்லூரியைக் காலி செய்யப்போகிறோம் எனும்போது பார்க்கும் அத்தனை பேர் நெஞ்சிலும் பாச உணர்ச்சி பொங்கிவழியும். அப்படி மிகப் பாசமாக ஒருநாள் என்னிடம் வந்து பேசினான். எங்கள் கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஏதோ நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. நான் எனக்காக கல்லூரிக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் ஒரு நண்பனைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தேன். இவன் ஓடி வந்து “டேய் எங்கடா போற… நானும் வர்றேன் டா” என்று என்னுடன் சேர்ந்துகொண்டான்.

சிறிது தூரம் தள்ளி என் வகுப்புத் தோழிகள் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். என்னுடன் பேசிக்கொண்டு வந்த இவன் திடீரென்று. “ஒரு நிம்சம் இருடா… வரேன்…” என்று கூறிவிட்டு அந்தப் பெண்களுடன் பேசச் சென்றுவிட்டான். இவனுக்கு ஆண்களை மட்டுமல்ல பெண்கள் அனைவரையும் தெரிந்திருக்கிறது. அதுவும் என் வகுப்புத் தோழிகள் இவனுக்கு எப்படிப் பழக்கம்? யோசித்துக்கொண்டே நான் அவர்களில் இருந்து ஒரு நாலடி தள்ளி நடந்து சென்றுகொண்டிருந்தேன்.

எங்கள் கல்லூரிக்கு வெளியே செல்ல பெண்கள் விடுதியைக் கடந்து தான் செல்ல வேண்டும். அந்தப் பெண்களுடன் பேசிக்கொண்டு வந்த அவன் அங்கிருந்து விலகி என்னிடம் வந்தான். “கொஞ்சம் இரு மச்சி… அந்தப் பொண்ணுகிட்ட ஒன்னு கேட்டிருக்கேன்… வந்தவுடனே போவோம்…” என்றான்.
இவன் அந்தப் பொண்ணுகிட்ட என்ன கேட்டிருப்பான்? அவர்களுக்குள் என்ன பழக்கமோ? எனக்குத் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் சிறிது நேரம் இவனுடன் நின்று பேசிக்கொண்டிருந்தேன். அந்தப் பெண் திரும்பி வந்தாள். என்னருகில் நின்ற இவன் வேகமாக ஓடினான். பின் வந்துவிட்டான். இருவரும் சேர்ந்து வெளியில் சென்றுவிட்டோம்.

அடுத்த நாள் காலை எங்கள் வகுப்பிற்குள் நுழைந்தேன். நேற்று அவன் சந்தித்த அந்தப் பெண் என்னிடம் வந்து “என்னாச்சு இப்போ சங்கர் எப்படி இருக்கான்… எல்லாம் ஓகே தானே?” என்றாள். எனக்கு ஒன்னும் புரியவில்லை. சங்கர் என்னுடைய இன்னொரு நண்பன். “அவனுக்கு என்ன அவன் நல்லாத் தான் இருக்கான்” என்றேன்.

“இல்லை நேத்து ஏதோ போலீஸ்ல மாட்டி ரொம்ப பிரச்சனை ஆகிடுச்சாமே… நீ கூட ரொம்ப டென்சனா நின்னுகிட்டு இருந்தியே? உன் ஃபிரண்டு வந்து என்கிட்டே ரெண்டாயிரம் ரூபாய் வாங்கிட்டு வந்தாரு” என்றாள்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. “என்னமா சொல்ற? நான் காசு கேட்டாலே நீ கொடுக்க மாட்டியே? அவன் வந்து கேட்ட உடனே எப்படிக் கொடுத்த” என்றேன்.

“இல்லை அவன் தான் ரொம்ப அவசரம்… பெரிய பிரச்சனை… அப்படின்னான்”

“நான் அங்க தானே இருந்தேன்… காசு கொடுக்க முன்ன என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே? நான்கூட உனக்குத் தெரிஞ்சவன் நீ ஏதோ கொடுக்குறன்னு நினைச்சேன்” என்றேன்.

“அய்யயோ…! என்னப்பா சொல்ற?” என்று ஏமாந்து போன அவள் முகம் வாட்டத்துடன் தொங்கியது. அதே சமயம் சங்கர் வகுப்பிற்குள் நுழைந்தான். அவனிடம் நடந்ததைக் கூறினேன். “அடப்பாவி ரெண்டாயிரம் ரூபா நாமத்தை போட்டானா?” என்றான் அவன்.

“அடப்பாவிகளா… உங்களை நம்பித்தானே நான் கொடுத்தேன்..” என்று எங்களையும் அவனோடு சேர்த்தாள் அந்தத் தோழி.

எங்களால் என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு வழிமுறை இருக்கிறது என்று முன்பே தெரிந்திருந்தால் நாங்களே கூட ஒரு இரண்டாயிரம் வாங்கி இருப்போம். இனி கேட்டாலும் அந்தப் பெண் கொடுக்கமாட்டாள். சிரிப்பைத் தவிர வேறு எதையும் எங்களால் திருப்பித் தரவும் முடியவில்லை.

கல்லூரி முடித்த பின்பு அவன் எந்த தொடர்பும் இல்லாமல் காணாமல் ஆகிவிட்டான். ஒருவேளை தொடர்பு வைத்துக்கொள்ளும் வாய்ப்பிருந்தாலும் அதை நான் தவிர்க்கவே செய்திருப்பேன்.

இவன் தேவைக்குத் திருடுபவன் அல்ல. அவன் இயல்பிலேயே திருடன். திருந்தும் வாய்ப்பற்றவன்.

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -19 (18/11/2021 வெளியிடப்படும்)

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -