முகங்கள்

பதினான்காம் முகம்

- Advertisement -

நான் சிங்கப்பூர் வந்த புதிதில் என் மாமா வீட்டில் தான் தங்கி வேலை தேடினேன். என் அத்தை மருத்துவத் துறையில் மேல் படிப்பிற்காக இந்தியா சென்றிருந்ததால் அது ஒரு பேச்சுலர் வீடு போலத்தான் இருக்கும். நான் ஹாலில் படுத்துக்கொள்வேன் எனக்கு ஹால் தோழராக ஒருவரும் இருந்தார். ஆரம்ப காலத்தில் சிங்கப்பூரின் பல பகுதிகளை எனக்கு இவர் தான் அறிமுகப்படுத்தினார். 

எப்போதும் முழுவதுமாக மழிக்கப்பட்ட முகம். வெளியில் செல்லும்போது டிப் டாப்பாக டை எல்லாம் அணிந்து செல்வார். அவர் பெரும்பாலும் வேலைத் தேடி ஏதாவது நேர்முகதேர்விற்குத் தான் செல்வார். குண்டானவர் என்று செல்ல முடியாது அதே நேரம் ஒல்லியும் கிடையாது. நெஞ்சும் தொப்பையும் ஒரே அளவில் இருந்ததால் தொப்பை வெளியில் தெரியாது. ஐந்தேகாலடி உயரம். படிந்து வாரப்பட்ட தலை. சில இளநரைகள் அங்காங்கே எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும். அன்றைய தினம் அவர் எவ்வளவு அலைந்திருக்கிறார் என்பதை அவர் குறட்டைச் சத்தமே கூறிவிடும். இரவு பத்து மணிக்கு மேல் அசந்துபோய் தான் தான் வீட்டிற்கு வருவார். காலை மற்றும் இரவு வீட்டிற்கு வந்து உண்ணுவார். பெரும்பாலும் மதியம் எதுவும் சாப்பிடவில்லை என்று தான் கூறுவார்.

நான் சிங்கப்பூர் வந்த முதல் வாரத்திலேயே அவருடன் நெருங்கிப் பழகிவிட்டேன். அப்போது எனக்கும் அவரை விட்டால் வேறு வழிகிடையாது. பகல் முழுவதும் மொத்தமாக ரெஸ்யூம்களை பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு தஞ்சோங் பாகர், ராபிள்ஸ் பிளேஸ், சிட்டிஹால் போன்ற இடங்களில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்களை நோக்கி கிளம்பிவிடுவேன். ஒவ்வொரு கட்டிடத்தின் கீழே ரிசப்சன் பகுதிக்கு அருகில் இருக்கும் அனைத்து கம்பனிகள் பெயர்களையும் நோட்டமிடுவேன். அதில் எதெல்லாம் மென்பொருள் துறை சார்ந்தது என்று குறித்துக்கொள்வேன். பின் ஒவ்வொரு நிறுவனமாகச் சென்று என்னுடைய ரெஸ்யூமை நீட்டுவேன். பெரும்பாலும் எங்களுக்கு சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி தான் தேவை என்பார்கள். சில இடங்களில் வேலை இல்லை என்பார்கள். சிலர் என் மேல் பரிதாபப்பட்டு வாங்கி வைத்துக்கொள்வார்கள். இன்றைய இன்டர்நெட் உலகில் அதிலும் சிங்கப்பூர் போல் ஒரு நாட்டில் இப்படி எல்லாம் நேரில் சென்றால் பெரிய பலன் எதுவும் இருக்காது. இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் எப்படியாவது ஒரு வேலை கிடைத்தாக வேண்டும். ஒரு மாத சிங்கப்பூர் வீசாவில் வந்திருந்ததால் வந்த முதல்நாளே வேலை தேடிக் கிளம்பிவிட்டேன். ஒரு வேலை, அது எந்த வழியில் வந்தால் தான் என்ன? வாய்ப்பிருக்கும் எல்லா கதவுகளையும் தட்டினேன். 

இரவு நேரங்களில் பெரும்பாலும் வேலை தேடும் இணையதளைங்களில் மூழ்கிக்கிடப்பேன். அப்போது எனக்கு பல வகையில் உதவியாக இருந்தவர் தான் என் ஹால் தோழர். எவ்வளவு தான் இரவு தாமதமாக வந்தாலும் என்னோடு அமர்ந்துகொண்டு வேலை தேடுவது, கம்பெனிகளுக்கு மின்னஞ்சல் அனுப்புவது என்று என்னுடைய வேலை தேடும் வேலைக்கு பேருதவியாக இருந்தார். செய்தித்தாள்களில் வரும் வேலை வாய்ப்புச் செய்திகளில் எனக்குத் தேவையானதையும் வெட்டி கொண்டுவந்து கொடுப்பார். இப்போதும் அவர் சொல்லிக்கொடுத்த பல நுணுக்கங்கள் எனக்கு வேலை தேடும்போது கைகொடுத்துகொண்டு தானிருக்கின்றன. என்னுடைய ரெஸ்யூம் கேவலமாக இருக்கிறது என்று அதை முற்றாக மாற்றிக்கொடுத்தவரும் இவரே. கொடுமை என்னவென்றால் அவர் சிங்கப்பூரிலேயே எம்.பி.ஏ. படித்தும் கூட அவரால் ஒரு நல்ல வேலையில் சென்று அமர முடியாமல் ஆறு மாதங்களுக்கு மேல் அலைந்துகொண்டிருந்தார். ஒரு கிரடிட்கார்ட் கம்பெனியில் கால் சென்டர் வேலை போல் ஒரு வேலை கிடைத்தது. அதுவும் வெறும் ஐநூறு டாலர் மாதச்சம்பளத்திற்கு. இங்கு சாதாரண கம்பி கட்டும் வேலைக்கு வருபரே இதை விட அதிகம் சம்பளம் வாங்குவார். அவருடைய மாணவர் வீசா முடிவுற்றதால் வேறு வழியில்லாமல் இந்த வேலையை ஒப்புக்கொண்டார். எப்படியாவது சிங்கப்பூரில் தங்க வீசா இருந்தால் போதும் ஒரு நல்ல வேலையை கண்டடைந்துவிடலாம் என்பது அவர் எண்ணம்.

அவரின் நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் குடும்ப விழா ஒன்று நடந்தது. அந்த விழாவிற்கு அவரவர் குடும்பத்தை சந்தோஷா தீவிற்கு அழைத்து வரலாம். அதுமட்டுமல்லாமல் சந்தோஷா தீவில் இருக்கும் குறிப்பிட்ட விளையாட்டு மற்றும் கேளிக்கை இடங்களுக்கு இலவச பற்றுச்சீட்டு வேறு கொடுத்திருந்தார்கள். என் ஹால் தோழரின் நண்பரும் ஒண்டிக்கட்டை என்பதால் அந்த இலவச டிக்கெட்கள் எங்களுக்கு வந்தது. சந்தோஷா தீவிற்கு நான் பலமுறை சென்றிருந்தாலும் முதல்முதலில் சென்றது யாரென்றே தெரிவாதவர்  கொடுத்த ஓசி டிக்கெட்டில்  தான்.

பொதுவாக வேலை தேடுவதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எங்களுக்கு சந்தோஷா தீவு ஒரு மாறுதலைக் கொடுத்தது. எங்கள் சொந்த வாழ்க்கையைப்பற்றியும் கொஞ்சம் பேசினோம். 

அவர் மதுரையில் ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து பின் எப்படியாவது சிங்கப்பூர் சென்று எம்.பி.ஏ. படித்து அங்கேயே வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு தன் காதல் மனைவியின் நகைகளை வங்கியில் வைத்துவிட்டு வந்திருக்கிறார். வந்தவர் படித்து முடித்து வேலை தேடத் தொடங்கும்போது உலக பொருளாதார மந்தநிலையும் தொடங்கிவிட்டது. வேலை தேடித்தேடி அலைந்து கையில் இருந்த கொஞ்ச நஞ்ச பணமும் கரைய. அவர் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரும் வெளியே போகச்சொல்லி விட்டார். தஞ்சோங் பாகர் “இன்டெர் நேஷனல் பிளாஷா”விற்கு முன் இருக்கும் சிறிய பூங்காவில் மூட்டை முடிச்சுகளோடு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறார். அப்போது தான் என் மாமாவின் கண்களில் சிக்கியிருக்கிறார். அவரின் பரிதாப நிலையை அறிந்த என் மாமா “சரி வா… வந்து என் வீட்ல தங்கிக்க வேலை கிடைச்சா அதுக்கப்பறம் வாடகை கொடு..” என்று கூறி அழைத்து வந்திருக்கிறார். 

இப்படித்தான் நம்மூரில் இருந்து எப்படியாவது சிங்கப்பூர் வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல இலட்சங்களை செலவு செய்து ஏதாவது ஒரு ஊர் பேர் தெரியாத பல்கலைகழகத்தில் படிக்கப்போகிறோம் என்று கிளம்பி வந்துவிடுகிறார்கள். அப்படி வருபவர்கள் பலரின் நிலை இதுதான். சிலர் தப்பித்துக்கொள்கிறார்கள். சிங்கப்பூரில் பல உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழகங்கள் இருக்கிறன அப்படிப்பட்ட பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தால் வாருங்கள். அவற்றில் படித்தால் அதற்கான பலன் நிச்சயம் உண்டு. அப்படி இல்லாமல் ஊரில் இருக்கும் காடுகரைகளை விற்று ஏதாவது ஒரு பல்கலைகழகத்தில் படித்தாலே வேலை கிடைத்துவிடும் என்று நம்பி வராதீர்கள். இல்லை என்னிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது நான் ஒரு “ஃபாரின் ரிட்டர்ன்” என்ற பெயர் பெறுவது தான் என் நோக்கம் என்றால் நீங்கள் தாரளமாக வரலாம் எந்த பல்கலைகழத்திலும் படிக்கலாம்.

என் நண்பர் ஒவ்வொரு நாளும் வந்து புலம்புவார். ஐநூறு டாலர் தான் சம்பளம் என்றாலும் அவன் அதை சும்மா கொடுத்துவிடுவானா போதுமான அளவு அவரை பிழிந்துதான் அனுப்புவான். அதன் பின் வேலை தேடுவது அவருக்கு இன்னுமும் சிரமாகிவிட்டது. நானும் அப்போது வேலை தேடியதால் ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று அடிக்கடி கணினியை முறைத்துக்கொண்டிருப்பேன். வெளியில் எங்கும் செல்லமாட்டேன். வார இறுதிநாள்களில் பெரிதாக எங்கும் வேலை தேடமுடியாது. அதனால் என்னை எங்காவது அழைத்துச்செல்வார். பெரும்பாலும் தேக்கா செல்வோம் அங்கே அவர் யாரையாவது சந்திப்பார். அது சீனப்புத்தாண்டு சமயம் என்பதால் “சைனா டவுன்” அழைத்துச்சென்று வண்ண விளக்குகளை காண்பித்தார். 

“யோவ்… நீ பாட்டுக்கு உங்க மாமாட்ட போய்.. அவன் என்னை இங்க கூட்டிட்டு போனான்னு சொல்லிடாதயா” என்று பலமுறை கூறிக்கொண்டே வந்து ஆர்சர்ட் டவரின் முன் நிறுத்தினார். நிமிர்ந்து பார்த்தேன் ஒன்றும் வித்தியாசமாக இல்லை எல்லா மால்களையும் போல இதுவும் ஒரு மால் என்று தான் தோன்றியது. உள்ளே நுழைந்து ஒரு ஒடுக்கமான மின் படிக்கட்டில் ஏறினோம். இரண்டு பக்கங்களிலும் பல பெண்கள் பலவிதமான சிறிய ஆடைகளோடு பளிச்சென்று அவர்களின் பிதுங்கிய மார்பகங்களைக் காட்டிக்கொண்டு கையசைத்து அழைத்துகொண்டிருந்தனர்.

“யோவ் என்னய்யா? எதுக்குயா கூப்பிடுறாங்க?”

“யோவ் எல்லாம் மசாஜ் பார்லர்யா….”

“பார்த்தா அப்படி தெரியலையேயா…?”

“எல்லாம் அப்படித்தான்… நீ கம்முன்னு வா…”

“என்னை எதுக்குயா இங்க கூட்டிட்டு வந்த?”

“சும்மா வேடிக்கை பார்க்கத் தான்….”

எப்போதுமே துணிக்கடை, ஃபோன் கடை, ஷூ கடை இப்படியே போய் வேடிக்கைப் பார்த்து பழகிட்டு இது கொஞ்சம் புதுசா இருந்தது. சரி வந்தது வந்துட்டோம் வேடிக்கை தானே என்று ஏதோ ஒரு பதட்ட நிலையில் அவசர அவசரமாக வேடிக்கை பார்த்துவிட்டு வீடு திரும்பிவிட்டோம். நான் என் மாமாவிடம் சொல்லிவிடுவேனோ என்ற சந்தேகம் அவரை விட்டு அகலவேயில்லை. “யோவ் சொல்லிறாதயா… சொல்லிறாதயா…” என்று சொல்லிக்கொண்டே வந்தார். 

தன் மனைவி மீது அதீத அன்பு கொண்டவர். தன்னை காதலித்து வீட்டில் போராடி திருமணம் செய்துகொண்டதோடு அவரின் படிப்பிற்காக தன் நகைகளை எல்லாம் கழட்டிக்கொடுத்து சிங்கப்பூர் அனுப்பி வைத்தவர் அவர். தன் மனைவியை எப்படியாவது சிங்கப்பூர் அழைத்துவந்துவிட வேண்டும் என்று எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார். 

“உன் புருஷன் உன்னை ஏமாத்திட்டு சிங்கப்பூர்ல போய் வேற ஒருத்திய கட்டிக்கிட்டான். அவன் உன்னை நடுரோட்ல தான் விட்டுட்டு போகப்போறான்.” என்று பல விதங்களில் யாரோ ஒரு நாரதர் தன் வேலையை என் நண்பரின் மனைவியிடம் காட்ட தொடங்கிவிட்டார். 

அதை கொஞ்சம் கொஞ்சமாக நம்பத் தொடங்கிய அவர் மனைவியும் “நீ முதல்ல இங்க கிளம்பி வா… நகைநட்டெல்லாம் போனா கூடப் பரவால்ல… நீ என்னை விட்டு போய்டாத…” என்று புலம்பினார். “இன்னும் கொஞ்ச நாள் பொறு எப்படியும் ஒரு நல்ல வேலை கிடைச்சிரும்” என என் நண்பர் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவர் மனைவி காதில் அது ஏறவேயில்லை. சந்தேகம் அப்படித்தான் அது எதையும் யாரையும் நம்பவிடாது. ஒவ்வொரு நாளும் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி சண்டையில் வந்து முடியும்.

இப்படி ஒரு நாள் நானும் அவரும் லிட்டில் இந்தியா சென்றிருந்த போது. இவர் அலைபேசியில் சண்டையிட்டுக்கொண்டே என்னை விட்டு சிறிது தூரம் நகர்ந்து சென்றுவிட்டார். நான் ஒரு கட்டிடத்தின் வாசல் படியில் சவடாலாக அமர்ந்துகொண்டு வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே அதிகாமான போலிஸ் வாகனங்கள் நின்றிந்த போதே நான் சுதாரித்து இருக்க வேண்டும். அது காவல் நிலையமாம். எனக்குப் பார்க்க ஏதோ மென்பொருள் அலவலகம் போலத் தான் தெரிந்தது. நம்மூரில் எல்லாம் காவல்நிலையங்கள் சிவப்பு செங்கல் வைத்த கட்டிடங்களாகத் தானே இருக்கும்? 

நான்கு காவல் அதிகாரிகள் என்னைச் சுற்றி நின்றார்கள். நான் என்ன என்பது போல் தலையசைத்தேன். “உன் வொர்க் பர்மிட் எடு?” என்றார்கள். 

“இல்லை இப்போத் தான் எனக்கு வேலை கிடைச்சிருக்கு. பாஸ் அப்பளை பண்ணிருக்காங்க…” என்றேன்.

“சரி பாஸ்போர்ட் எடு” என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “எதுக்கு பாஸ்போர்ட்? அது என் வீட்ல இருக்கு.” என்றேன்.

சிங்கப்பூரில் எங்கு சென்றாலும் ஒவ்வொருவரும் அவர்களின் குடியுரிமை அட்டையையோ அல்லது நிரந்தரவாசி என்பதற்கான அட்டையையோ அல்லது வேலை செய்வதற்கான அனுமதி அட்டையையோ வைத்துக்கொண்டு தான் செல்ல வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்தவராக இருந்தால் பாஸ்போர்ட் அவசியம். ஒன்றும் தெரியாமல் நான் இவர்களிடம் மாட்டிக்கொண்டேன். நான் எவ்வளவு கெஞ்சிக்கூத்தாடிப் பார்த்தேன் ஆண் காவல் அதிகாரிகள் என்னை கொஞ்சமேனும் நம்பினார்கள். ஒரு மலாய் பெண் போலிஸ் அதிகாரி மட்டும் “இவன் முழியே சரியில்லை… இவன் பொய் தான் சொல்றான்…” என்று என் முழியிலேயே குறியாக இருந்தார். நானும் எப்படி எப்படியோ முழியை மாற்றிப் பார்த்தேன். ஒன்றும் ப்ரோயோஜனம் இல்லை. கைகளில் விலங்கிட்டு கம்பிகளுக்குப் பின் தள்ளிவிட்டார்கள். அந்த அனுபமே ஒரு சுவாரஸ்யமான அனுபவம் தான். ஏற்கனவே எக்கச்சக்கமாக எழுதிவிட்டதால் அதை இங்கே கொஞ்சம் சுருக்கிக்கொள்கிறேன்.

பின் என் மாமா பாஸ்போர்ட்டோடு வந்து விடுவித்துவிட்டார். இடையில் என் நண்பர் சிக்கிக்கொண்டார். என்னை மீட்க்கும் முன் என் மாமா “உன்னை நம்பித் தானே அவனை அனுப்பினேன்… இப்படிப் பண்ணிட்டியே… மரியாதையா உன் பெட்டிய தூக்கிட்டு நீ வீட்டை விட்டு கிளம்பிடு…” என்று லெப்ட் ரைட் வாங்கிவிட்டாராம். டாக்ஸியில் நாங்கள் வீடு திரும்பும் போது என் நண்பர் என் காதுகளுக்குள் ஓதினார். 

“மாமா அப்படித்தான் கோவம் வந்தா ஏதாவது கத்துவாரு ஒன்னும் கண்டுக்காதீங்க… நீங்க நைட்டு கொஞ்ச நேரம் சாப்பிடாம இருந்தீங்கன்னாலே அவரே வந்து என்ன இன்னும் சாப்பிடாம இருக்க… முதல்ல சாப்பிட வான்னு கூப்ட்ருவாரு” என்றேன் அதே போல் தான் நடந்தது.

எத்தனையோ முறை வெளியில் செல்லும்போது மனைவியோ, அல்லது வேறு யாராக இருந்தாலும் அலைபேசியில் அழைத்து வாக்குவாதம் முற்றினால். அலைபேசியை வைத்துவிட்டு வீட்டில் போய் மீதி சண்டையை போட்டுக்கொள்ளலாம் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். உண்மையில் அவருக்கு அதனால் ஏதாவது விபத்தோ தீங்கோ வந்துவிடும் என்பதால் அதைக் கூறினேன். ஆனால் தீங்கு எனக்கு வந்துவிட்டது.

இந்தச் சம்பவம் முடிந்து ஒரு மாதம் வேலை தேடினார். ஒவ்வொரு நாளும் அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை முற்றிக்கொண்டே வந்தது. “சரி இப்படியே நான் எத்தனை நாள் தான் ஓட்றது… நான் ஊருக்கே போறேன்…” என்று கிளம்பிவிட்டார். அப்போது எனக்கு வேலை கிடைத்து நான் போகத் தொடங்கியிருந்தேன். குடும்பப் பிரச்சனைகள் நாளடைவில் சரியாகிவிடும் என்று நான் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர் ஊர் திரும்பும் முடிவில் இருந்து மாறவேயில்லை.

ஊர் திரும்பி அதே வங்கி மேலாளர் வேலையில் சேர்ந்துகொண்டார். ஆனால் மதுரையில் இல்லை தூத்துக்குடி சென்றுவிட்டார்.

சில மனிதர்களிடம் நாம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் ஏராளம் இருக்கும். அப்படிப்பட்டவர் தான் இவர்….

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -15 (21/10/2021 வெளியிடப்படும்)

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -