முகங்கள்

பதினொன்றாம் முகம்

- Advertisement -

என்ன தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற ஆங்கிலத்தைப் போலவே கிரிக்கெட்டும் நம்முடன் ஒட்டிக்கொண்டது. சந்து பொந்து என கிடைக்கும் எந்த இடத்தையும் மைதானம் ஆக்கும் திறமை நம் இளைஞர்களுக்கு உண்டு. சச்சின் விளையாடும் மட்டையை வெறும் தென்னமட்டையைக்கீறி MRF என்று எழுதியே உருவாக்கிவிடுவார்கள். கசங்கிய காகிதம், கடித்துப்போட்ட சோளக்கட்டை, சப்பிப்போட்ட மாங்கொட்டை என எதுவும் பந்தாகிவிடும். இது சாதாரண ஆட்டத்திற்கு மட்டும் தான்.

பந்தயம் கட்டி ஆடும் ஆட்டத்திற்கு இதெல்லாம் செல்லாது. ஒரு நல்ல கிரிக்கெட் மட்டை மற்றும் இரப்பர் பந்து அவசியம். அதிலும் ‘பவர்’ என்று எழுதியிருக்கும் இரப்பர் பந்தை வாங்கி அதில் ஊக்கை வைத்து ஒரு ஓட்டை போட்டு விடுவோம். இல்லை என்றால் பந்து வேகமாக பிளந்துவிடும். அன்று அப்படித்தான் ஒரு ஆக்ரோஷமான ஆட்டத்தில் எப்படியும் அந்த மட்டையாளரை வெளியேற்றி விட வேண்டும் என்ற வெறியில் கையை அப்படி இப்படி மடக்கிப் பந்தை வீசிக்கொண்டிருந்தேன். கிரிக்கெட் ஆட்டத்தில் ஓடி வந்து பந்து வீசும் போது வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் நாங்கள் நின்று கொண்டு பந்து வீசும் போதே வேகப்பந்து, சுழற்பந்து என எல்லா பந்துகளையும் வீசுவோம். அதிலும் என் தம்பி ஒருவன் வீசும் சுழற்பந்து முத்தையா முரளிதரனையே மிஞ்சும் அளவிற்கு இருக்கும். பந்து சுழற்சியில் இல்லை வாய் மூஞ்சி கோணுவதில்.

“தம்பி இங்க வா… உன்னைத் தான்… நீ தானே குமாரு?” இப்படி ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் என்னை அழைத்தார். தோளில் தொங்கும் பை, அதற்குள் இருக்கும் பரிட்சைத் தாள்கள், கண்ணாடி என அவரைப் பார்த்த உடனேயே ஆசிரியர் என்று கூறிவிடலாம். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் அந்தப் பகுதிக்கு ஆசிரியர் காலனி என்ற ஒரு பெயரும் உண்டு. இவர் எதற்கு நம்மை அழைக்கிறார்? அருகில் சென்று. “என்னக்கா?” என்றேன்.

“என்ன நீ ஒழுங்காவே படிக்க மாட்ரியாமே? எப்பப்பார்த்தாலும் விளையாண்டுக்கிட்டே திரியிரயாமே? பத்தாவது நல்ல மார்க் எடுத்தா தான் நல்ல குரூப் கிடைக்கும் தெரியும்ல?”

திடீரென்று நமக்கு இதுவரை அறிமுகமில்லாத ஒருவர் வந்து கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் ஒரு ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தின் நடுவே.

“இல்லையே… நான் ஒழுங்காத் தான் படிக்கிறேன்” என்றேன்.

“இப்போத் தான் உங்க அம்மா என்னைப் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டாங்க. கணக்குல வெறும் 58 மார்க் தான் எடுக்குறியாம்?”

என் பள்ளிக்கு வந்து என் ஆசிரியர்களிடம் மட்டுமில்லாமல் இப்படி வேறு பள்ளி ஆசிரியர்களிடமும் என் அம்மா புகார் அளிக்கத் தொடங்கிவிட்டாரே என்று எனக்கு கொஞ்சம் கோபமாக வந்தது. நான் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தேன்.

அங்கிருந்த ஒரு தெருவைக் காண்பித்து “இந்தத் தெருவுல கடைசி வீடு. சாயங்காலம் வந்து என்னைப் பாரு.” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நானெல்லாம் பிரம்பு பிய்யப்பிய்ய அடிக்கும் எங்கள் பள்ளி ஆசிரியர்களைப் பார்த்தே பயம்கொள்வது கிடையாது. இவரைப் பார்த்தா பயப்படப்போகிறேன்? இவர் கூப்பிட்டால் நான் போக வேண்டுமா? பத்தாம் வகுப்பில் அரையாண்டுப் பரிட்சையில் ஐம்பத்தெட்டு மதிப்பெண் எடுப்பது ஒரு குற்றமா?

ஐம்பத்தெட்டிற்கு என்னை ஏன் அவ்வளவு பிடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை அரையாண்டு மட்டுமல்ல அதற்கு முன் நடந்த இடைத்தேர்வுகள் மற்றும் காலாண்டு தேர்விலும் கணிதத்தில் ஐம்பத்தெட்டு தான் கிடைத்திருந்தது. அதனால் கடுப்பான என் அம்மா இவரிடம் புகார் அளித்திருக்கிறார்.

விளையாடி முடித்து வீட்டிற்கு வந்தேன். என் அம்மா “டேய் அந்த மேடத்துட்ட உன்னைப் பத்தி சொல்லிருக்கேன். அவங்க கிட்ட கொஞ்ச நாள் போய் படி..” என்றார்.

“எதுக்குமா? என்னால எல்லாம் போக முடியாது”

“அவங்க டியூசனே எடுக்க மாட்டாங்க… உனக்காக நான் கெஞ்சிக் கேட்டதால ஒத்துக்கிட்டாங்க… நீ போக மாட்டியா?” என்று தன் கையிலிருந்த விளக்குமாறை கையில் தட்டிக்கொண்டே கேட்டார்.

அது நல்ல வழுவான விளக்குமார். கொஞ்சம் பழசாகிவிட்டதால் முனைகள் எல்லாம் உடைந்து கூறாக வேறு இருந்தது. வேறு வழியில்லாமல் அன்று சாயுங்காலம் அந்த ஆசிரியரின் வீட்டிற்குச் சென்றேன்.

நான் வழியில் பார்த்த போது அணிந்திருந்த அதே சேலையை அணிந்திருந்தார். மூக்கின் மேல் மெல்லிய அடர் ஊதா நிற ப்ரேம் கொண்ட கண்ணாடி இருந்தது. நம் மொழியில் சொல்ல வேண்டுமானால் அவர் மாநிறம். முகத்தில் அமைதியும் சாந்தமும் எப்போதும் குடிகொண்டிருக்கும். அவருக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தாள். அந்த ஆசிரியை தன் அண்ணனுடன் வசித்து வந்தார். அவர் கணவர் இல்லை. அந்த வீட்டில் நான் ஒருவன் தான் மாணவன். அவருக்கு டியூசன் எடுத்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. ஆதலால் அவர் அதைத் தொழிலாகச் செய்யவில்லை. என் அம்மாவிற்காக எனக்கு மட்டும் சொல்லிக்கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

என்ன தான் என் பள்ளியில் நான் பெரிய வாயாடனாக இருந்தாலும் ஊருக்குள் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியானவன் என்ற பெயர் எடுத்துவைத்திருந்தேன். என் ஊரில் உள்ள அனைவரும் என்னை இவன் அமைதியானவன் அமைதியானவன் என்று சொல்லிச் சொல்லியே என்னை அமைதியாக்கிவிட்டார்களா? அல்லது உண்மையிலேயே நான் அமைதியானவன் தானா? என்கிற சந்தேகம் எனக்கு இப்போதும் உள்ளது. இதைப் படிக்கும் நண்பர்கள் யாராவது உண்மையை உடைத்துச் சொல்லுங்கள். ஊருக்குள் உலவிய அந்த வதந்தி இந்த ஆசிரியரையும் வந்தடைந்திருந்தது.

நான் ஓரளவு கணிதம் நன்றாகப் படிக்கக் கூடியவன் தான். ஆனாலும் ஏனோ ஐம்பதெட்டை தாண்டவில்லை. அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது எனக்கு இன்னுமும் தெளிவாகப் புரிந்தது போல் இருந்தது. அவர் புத்தகத்தில் இருக்கும் எடுத்துக்காட்டு கணக்கை மட்டும் தான் சொல்லிக்கொடுப்பார். அதிகபட்சம் ஒரு நாளில் இரண்டு கணக்குகளைத் தாண்டாது. அந்த எடுத்துக்காட்டு கணக்கைப் போல் ஒரு கணக்கை என்னைப் போடச் சொல்லுவார். ஒவ்வொரு முறையும் அவர் சொல்லிக்கொடுத்து முடித்து சந்தேகம் கேட்கச் சொல்லுவார். நான் அமைதியாகப் புரிந்தது போல் தலையாட்டுவேன். உடனே அவர் “வாயைத்திறந்து பேசு… அமைதியா இருக்கலாம்? அதுக்காக நீ ரொம்ப அமைதிப்பா… இந்த உலகத்துல பேசுனாத் தான் பிழைக்க முடியும்…” இப்படி எல்லாம் அறிவுரை வழங்குவார். அந்த அறிவுரை எல்லாம் நிச்சயம் எனக்குப் பொருந்தாது என்று தெரிந்தாலும், ஒரு மெல்லிய புன்னகையோடு தலையை மட்டும் ஆட்டுவேன்.

அந்த மாத இறுதியில் அவருக்கு எவ்வளவு சம்பளம் என்று என் அம்மா கேட்டு வரச்சொன்னார். அவர் “நீ ஒழுங்கா படி… அதான் சம்பளம்…” என்றுவிட்டார். அடுத்து வந்த இடைத்தேர்வில் என்பது மதிப்பெண்களுக்கு மேல் பெற்றேன். என் அம்மா அந்த மதிப்பெண்ணும் போதவில்லை என்று அந்த ஆசிரியரிடம் முறையிட்டார். அந்த ஆசிரியருக்கு என் மீது நம்பிக்கை இருந்தது. “அவன் நல்லாத் தான் படிக்கிறான். இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. பப்ளிக் பரீட்சைல நிச்சயம் நல்ல மார்க் வாங்குவான். கவலைப்படாதீங்க” என்று சொல்லி அனுப்பினார்.

அவர் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறவே சிரமப்படும் சில பிள்ளைகளை அழைத்துவந்தார். “அவன் ரொம்ப அமைதியான பையன். உங்க வால்தனத்தை அவன்கிட்ட காமிக்காதீங்க” என்று மிரட்டும் தொனியில் கூறினார். அதுவே அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வப்போது ஆசிரியர் வேறு வேலையாக வீட்டிற்குள் செல்லும் போதெல்லாம் “ஏய்.. என்ன… நல்லா படிப்பியா? இல்லை எங்களை மாதிரி நீயும் மக்கா?” என்று வம்பிழுக்கத் தொடங்கிவிடுவார்கள். பரமசிவன் கழுத்துப் பாம்பு போலத் தான் அவர்கள். என்னால் அவர்களை பதிலுக்குக் கேலி கூட செய்ய முடியாத சூழல். நல்லவன் என்ற பெயர் போய்விடுமே? முடிந்த அளவிற்கு “ஈஈஈ…” என்று பல்லைக்காட்டி சமாளித்துவிடுவேன். அந்தப் பெண்கள் மூலமாகத் தான் தெரிந்துகொண்டேன். அந்த ஆசிரியர் பார்க்கத் தான் சாந்த முகம் பள்ளியில் அனைத்துப் பிள்ளைகளும் அவர் பெயரைக் கேட்டாலே அலறுவார்களாம். அடிக்கிற அடியில் அடிஸ்கேல் முறிந்துவிடுமாம்.

அடுத்தடுத்து வந்த மூன்று மாதிரி தேர்வுகளிலும் கணிதத்தில் தொண்ணூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றேன். பொதுத் தேர்வில் தொண்ணூற்றி ஒன்பது மதிப்பெண்கள் பெற்றேன். என் அம்மாவோடு சில பழங்களை வாங்கிக்கொண்டு அதில் ஒரு சொற்பத் தொகையை வைத்து அவரிடம் சென்று கொடுத்தேன். “இதெல்லாம் எதுக்கு?” என்று கேட்டார். நாங்கள் வற்புறுத்தியதால் எடுத்துக்கொண்டார். விடைபெறும் போது எப்போதும்போல “வாயைத்திறந்து நல்லா பேசிப் பழகு… ஊமையா இருக்காத” என்ற அதே அறிவுரையை வழங்கினார். நான் எப்போதும் போல தலையை மட்டும் ஆட்டிவிட்டு வந்துவிட்டேன்.

அதற்குப்பின் என் தங்கையை அந்த ஆசிரியர் வேலை செய்யும் பள்ளியில் சேர்க்க வேண்டுமென்று அவரிடம் உதவி கேட்டேன். அந்தப் பள்ளியில் என் தங்கைக்கு இடம் கிடைத்தது.

பள்ளி முடித்து, கல்லூரி, வெளியூர், வெளிநாடு என்று சுற்றிவிட்டு பல வருடங்கள் கழித்து அவரை என் திருமணத்திற்கு அழைக்கச் சென்றேன். பத்திரிக்கையை வாங்கிக்கொண்டு “இன்னுமும் அப்படியே தான் இருக்கியா? வாயைத்திறந்து பேசு?” என்றார்.

‘நான் அப்படிலாம் நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. பேச ஆரமிச்சா வாய் ஓயாம பேசுவேன்’ என்றெல்லாம் சொல்லத்தோன்றும். அது என்னவென்றே தெரியவில்லை அவரின் மீது கொண்ட மரியாதையோ என்னவோ எனக்கு அவரின் முன் பேச வாய்வருவதேயில்லை. புன்னகைத்துவிட்டு தலையை மட்டும் ஆட்டினேன்.

என் அம்மாவை வழியில் பார்த்து பழக்கம் அவ்வளவு தான். மற்றபடி அந்த ஆசிரியருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடவுள் நம் முன் நேரடியாகத் தோன்றுவதில்லை அவர் வேறு உருவம்கொண்டு வந்து உதவுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த ஆசிரயர் அப்படி வந்தவர் தானோ?

இன்று நான் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையில் இருக்க பலர் காரணம். அதில் மிக முக்கியமானவர் இவர்.

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் -12

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -