மிடில் கிளாஸ் மெலடிஸ்

சினிமா விமர்சனம்

- Advertisement -

அமேசான் ப்ரைமில் வெளியான தெலுங்குப் படமான ‘மிடில் கிளாஸ் மெலடிஸ்’ நடுத்தர மக்களின் வாழ்க்கையை அழகாகப் படம்பிடித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் வரும் நெடுமாறன் மட்டுமல்ல ‘மிடில் கிளாஸ் மெலடிஸ்’ படத்தில் வரும் ராகவா போன்றவர்களும் சூரர்கள் தான். இவர்கள் மிடில் கிளாஸ் சூரர்கள். 

கொலகளுறு எனும் கிராமத்தில் இருந்து குண்டூர் நகரம் சென்று ஹோட்டல் தொடங்கி வெற்றி பெற வேண்டும் என்பதே படத்தின் நாயகனான ராகவாவின் லட்சியம். அந்த லட்சியத்தை அடைய படம் தொடங்கியதிலிருந்தே அவன் தேடல் தொடங்கிவிடுகிறது. லட்சியம் என்றவுடன் அதை அடைய பயங்கரமான வில்லன்களுடன் மோதல், அடிதடி காட்சிகள், மாஸ்டர் ப்ளான் போட்டு வில்லன்களைத் ஏமாற்றுவது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. படம் முழுவதிலும் ஒரு இயல்பான நடுத்தர வீட்டுப் பையனாகவே நம்மோடு சேர்ந்துகொள்கிறார் ஆனந்த் தேவரகொண்டா. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் என்ன நடக்குமோ அந்த அளவிற்கு எதையும் மிகைப்படுத்தாமல் அதை மட்டுமே படமாக்கியிருப்பது தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி. 

இந்தப் படத்தில் உள்ள எல்லா நடிகர்களும் நடித்திருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். கதாநாயகனின் தந்தை கொண்டல்ராவாக வரும் கோபராஜு ரமணா அசத்தியிருக்கிறார். அவரின் நடிப்பு அவர் வரும் அத்தனை காட்சிகளிலும் மற்ற கதாப்பத்திரங்களைத் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது. ஒரு கோபக்கார மனிதராக, தந்தையாக, கணவனாக வெகு இயல்பாக நடித்திருக்கிறார். இவரின் மனைவி லட்சுமியாக வரும் சுரபி பிரபாவதியும் கணவனைச் சமாளிப்பது, மகனை ஆதரித்துப் பேசுவது என ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவியை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். 

கதாநாயகி சந்தியாவாக வரும் வர்ஷா பொல்லம்மா தன் காதலை காதலனிடம் சொல்ல திணறும் போதும் சரி, அதே காதலை தன் தந்தையிடம் கூறும்போதும் சரி அந்தக் கதாப்பாத்திரம் என்ன செய்யுமோ அதை மட்டுமே செய்திருந்தார். எங்குமே எந்த மிகைப்படுத்தலுமே இல்லாமல் இருந்ததே இந்தப் படத்தை என்னை மிகவும் இரசிக்கவைத்தது. தன் தந்தையால் காதலன் ஏமாற்றப்படப் போகிறான் எனும்போது அவனைக் காப்பாற்ற அவள் ஓடும் அந்தக் காட்சியின் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும். பெரிய ஏமாற்றெல்லாம் இல்லை ஒரு இடத்தை வாங்குவார் அவ்வளவுதான் என்றாலும் வர்ஷா பொல்லம்மாவின் நடிப்பு பரபரப்பை நமக்குள் பரவச்செய்துவிடுகிறது. 

நாயகனின் தோழன் கோபாலாக வரும் சைதன்யா அவருக்கு ஜோடியாக வரும் திவ்யா ஸ்ரீபடா, நாயகியின் தந்தை, தாய், பால்கார கிழவர் அஞ்சையா, கிழவரின் பேத்தியின் கல்லூரி படிப்பிற்கு உதவும் வாத்தியார், சீட்டுப் பிடித்த பணத்தை மக்களுக்கு திருப்பி தர இயலாமல் இருக்கும் குடும்பம், பொட்டிக்கடையில் ரீசார்ஜ் செய்பவர், கிராமத்து மருத்துவர் என படத்தில் நடித்த சின்னச்சின்னக் காதாப்பத்திரங்கள் உட்பட எவரையுமே குறைகூற முடியாத அளவிற்கு ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் வினோத் அனந்தோஜு. 

படம் பிளாஷ்பேக்கில் கதாநாயகன் நாயகியின் பள்ளி நாள்களுக்குள் சென்று நம் பள்ளி நாள்களையும் நினைவுபடுத்துகிறது. படத்தில் பெரிய பஞ்ச் வசனங்கள் இல்லாவிட்டாலும் எளிய குடும்பங்களுக்குள் நிகழும் எளிமையான வசனங்கள் மூலம் இன்றைய இளைஞர்களுக்கான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்கிறது. 

கொண்டல்ராவ் தன் மகனிடம் “வாழ்க்கைன்னா கஷ்டப்பட்டுத் தான் முன்னேற முடியும். கஷ்டப்படுறா…” என்பார். ஐயோ தம்பி எல்லாம் சரியாப் போயிடும் நாளைக்கே அதிர்ஷ்டம் வந்து அள்ளிக்கொடுத்திரும் என்பது போன்ற அவசியமற்ற ஆறுதல் வார்த்தைகள் எல்லாம் இல்லை. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும் போன்ற அழுத்தமான உண்மைகளை வசனங்கள் பேசின. 

மிக நேர்த்தியான அழகான ஒளிப்பதிவு. தொய்வில்லாத அசத்தலான திரைக்கதை. படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. எந்த இடத்திலும் படம் அதன் மையக் கதையில் இருந்து நழுவாமல் செல்கிறது. பாடல்களில் குறிப்பாக குண்டூர் பற்றி வரும் அந்தப் பாடல் மிக அருமை. மதுரை ஜிகர்தண்டா, கறிதோசை போல குண்டூர் மிர்ச்சி பஜ்ஜி, புளியார தோசை, கத்திரிக்கா பஜ்ஜி, கொங்குரா சிக்கன், மசாலா முந்தா, மாளு பூரி, சிட்டி இட்லி எல்லாம் சாப்பிட நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கிவிட்டது. படம் முடிந்தும் பாடலைத் தேடி மீண்டும் மீண்டும் பார்த்தேன். அந்தப் பாடலை இந்த விமர்சனத்தின் கீழே கொடுத்துள்ளேன் நீங்களும் கேட்டு ரசிக்கலாம்.

படத்தில் சில லாஜிக் மீறல்கள் சினிமாத்தனமான காட்சிகள் இருந்தாலும் படத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதுவும் குறிப்பிடும் படி குறையாக இல்லை. நல்ல அழகான, குடும்பத்துடன் எந்தக் கூச்சமும் இல்லாமல் அமர்ந்து பார்க்கக்கூடிய பார்க்கவேண்டிய படம். 


நடுத்தர மக்களின் வாழ்க்கையை மெல்லிசையாக ஒலித்திருக்கிறது இந்த மிடில் கிளாஸ் மெலடிஸ்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -