மணல் மூட்டை

சிறுகதை

- Advertisement -

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் என் கைகள் கட்டப்பட்டு விடும். நான் இங்கிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவும் இறுதி நேரத்தில் நான் முரண்டு விடக்கூடாது என்பதற்காகவும் தான் இந்த கைக்கட்டும் வித்தை. இங்கிருந்து நகரக் கூட என் கால்களுக்கு வலிமை கிடையாது.நகர்வதற்கு மனத்திலும் துணிவுமில்லை. ஒருவேளை என் மனம் மாற்றத்தை எதிர்க்கொண்டு விட்டால் மீண்டும் அந்த நரகத்திற்குள் நுழையவோ, சொல்லடிப்பட்டு வாழவோ நான் மறுப்பிறவி எடுத்துதான் வர வேண்டும்.

ஒவ்வொரு முறையும் என் முரட்டுக் கைகள் அந்தப் பிஞ்சுப் பாதங்களைத் தழுவ நினைக்கும் போதல்லாம் என் உடலெங்கும் அட்டையை விட்டு அவை என் தோலைத் துளைத்துக் கொண்டு சதைகளைத் தின்று பாதியிலேயே விட்டுச் செல்வதைப் போலவே உடல் ரணகளமாகும். கைகள் தானாகப் பின் வாங்கிக் கொள்ளும். வெண்மை நிறத்திலான போர்வை அவளது பாதங்களை மறைத்துக் கொள்வது ஒரு அசூசையாக இருப்பதாக உணர்வுகள் தோண்றிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் மனம் படும்பாடு ஒவ்வொரு முறையும் புதிய வலியாகவே தோன்றி மறையும்.

சில சமயங்களில் அவளை நெருங்கிடும் போது அந்த வெண்மை நிறத்திலான போர்வையில் ஆங்காங்கே சிவப்புப் பொட்டுக்கள் போல தோண்றிக் கண்கட்டும் வித்தைப் போல் மறையும்.கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்தாலும் அந்நேரத்தில் என் கால்கள் நடுக்கத்தால் நரம்புத் தளர்ச்சிக்குத் தள்ளப்படும். சில நேரங்களில் ஆணுறுப்பும் செயலிழந்து சிறுநீர் சிலுவாரைக் கடந்து தரையில் தேங்கிவிடும்.

அன்று உடல் எடை பரிசோதிக்கப்பட்டது.78 கிலோ என்று நிறுவை காட்டியபோது உடல் எடை வெகுவாக குறைந்திருப்பதை உணர முடிந்தது. வாலிப வயதில் முறுக்கு மீசையுடன் உடல்வாகு பயில்வான் போல முரண்டு திரண்டு இருக்கும். தோள்பட்டை அகன்று விரிந்து எல்லையைக் காக்கும் கருப்பர் போலிருக்கும். மார்பு அகன்ற நிலையில் திடலைப் போன்றே விசாலமானது. எல்லோரும் என்னை ‘பயில்வான் கணேசன்’என்று அழைக்கும் போது மனம் ஆணாதிக்கத்தால் பெருமிதம் கொள்ளும். என் வயது ஒத்த பெண்களாக இருந்தாலும் என்னுடம் நட்புக் கொள்ள அஞ்சுவர்.

“மாலா கணேசன்… மாலா கணேசன்… “

என்று இடைநிலைப்பள்ளியில் அமைதியின் உருவமாய் இருந்தவளை சக நண்பர்களின் கோர்த்துவிடும் வேளையில் பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டாள் அந்த பேரழகி மாலா. இதெல்லாம் என்னைச் சிறப்பாக தனிமைப்படுத்திக் காட்டுவதில் ஒருவித தற்பெருமையாக இருந்தது.

அவள்… என்னிடம் ஒருமுறை கூட முரண்டு கொண்டதில்லை. அலறியதில்லை. ‘வா’ என்று நான் கண் சாடை செய்த போதெல்லாம் அவளது கண்களில் ஒளிந்து சூழ்ந்துக் கொண்டிருக்கும் பயம் என் கண்களில் அடக்குமுறையாக வெளிப்பட்டு நின்றது. எட்டு வயது சிறுமிக்கு என் உடல்வாகு யமனாகத் தோண்றியிருக்க நான் செய்த செயல் மிருகத்தனமானது.

“கணேசா, நீ சித்தப்பா ஆயிட்டடா… பொம்பல வாரிசு… “

இரவு வேலை முடிந்து ஆழ்ந்த உறக்கத்தில் சில்க் சுமித்தாவோடு குளிர்க்காய்ந்து கொண்டிருந்தவனிடம் நான்காவது வீட்டு கருப்பாயி கிழவி காதில் கத்திவிட்டுச் சென்றது எரிச்சலை மூட்டியது. நாள்கள் செல்ல செல்ல அந்த சிசுவைக் கையில் ஏந்தி மார்பில் ஏந்தி பார்வையில் காமம் கலந்தது உடலில் ஏற்பட்ட அணுமாற்றமாகத்தான் முதலில் தோண்றியது.

அறையிலிருந்த சுவர்கடிகாரம் மணி பின்னிரவு இரண்டானதற்கு முன்னதாக எழுப்பிய மணியோசை எனக்கு குடும்பத்தாரின் அழுகையாகத்தான் கேட்டது.

“இது மண்டையில ஏற்படுற உயர்வான அழுத்தம். நரம்பு பாதிப்புதான் காரணம்… ஒரு நாள் ரெண்டு நாள் ஆகலாம். வருஷம் கூட ஆகலாம்…ஒரு விதமான ஆழ்ந்த மயக்கம்… “
பூப்பெய்தி இரண்டாண்டுகள்.இரவில் தனியாக வந்தவளுக்கு ‘துணையாக’ வந்த நான்கு வெறியன்கள்.வக்கரத்திற்கு வடிக்கால் இல்லாத தன்மை உலகை அழித்துக் கொண்டிருக்கிறது. பிறப்புறுப்பு சிதைந்த நிலையில் அவளைக் கண்ட போது அண்ணி அங்கேயே ‘இறந்து’விட்டாள். அவளது கதறலும் கண்ணீரும் என்னை நோக்கிப் பாய்வதாக மட்டுமே என்னால் உணர முடிந்தது.

“ஆ…… “

தரையில் மொய்த்துக் கொண்டிருந்த எறும்புகள் சில என் கால்களை கடித்துக் கொண்டிருக்கின்றன. அட பாவமே, எறும்புக் கடியை இந்த ‘பயில்வான்’ தாங்கிட இயலாதபோது எனது மௌனமாய் நகர்ந்த அச்சுறுத்தல்களும் வற்புறுத்தல்களும் எத்தகைய வலிமை மிகுந்ததாக அவள் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பாள். ஒரு வருடங்களாக அவள் துள்ளிக் குதிக்கவில்லை. முகத்தில் புன்னகையில்லை. நடைமுறையில் செயலில்லை.

எனக்குத் தூக்குத்தண்டனை உறுதியாகிவிட்டது. தலையில் கயிறு போட்டு இறுக்கி முடித்த தருணம் என் ஆணாதிக்க சாம்ராஜ்யம் முடிந்து விடும்.ஒருநாள் இருநாள் குடும்பத்தாரின் உற்றார் உறவினரின் அழுகை, புலம்பல் என் உடல் எறிந்து சாம்பலாகும் முன்னே ஓய்ந்து விடும். எந்தவொரு மரணமும் மௌனமான வலிகளை மட்டுமே நீடித்து வைத்திருக்கும். தனிமரமான எனக்கு அதுவும் கிடையாது. இந்த அறையின் தனிமை எனக்கு நரகம்தான்.

உடல் எடை சரிபார்க்கப்பட்ட அன்றுதான் கயிற்றின் அளவும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ‘பயில்வானைத்’ தாங்க கயிற்றின் பலம் மிக முக்கியமான விடயம்தான். எடை கூடுமானால் கயிற்றின் நீளம் குறைக்கப்பட வேண்டும்.எடைக்கு ஏற்றவாறு நீளம் சரியாக இருந்தால்தான் கயிறு குரல்வளையை நெறித்து நரம்பு அறுப்பட்டு உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிய நேரிடும். சுற்று வட்டாரத்தில் தேடியலைந்தும் கண்ணில் படாத காரணத்தினால் பக்கத்து மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டது. வெண்மை நிறத்திலான பருத்தி கயிறு நன்கு திரிக்கப்பட்டு 2.5 சென்டிமீட்டர் முதல் 4 சென்டி மீட்டர் வரை தடித்த அகலத்திற்கு திரண்டிருந்தது. இரசீதில் வெண்மை நிறமென குறிப்பிடப்பட்ட கயிறு சிவப்பு நிறமாக மாறியிருந்தது. எனது எடைக்கு ஏற்றவாறு கயிற்றின் அளவு நிர்ணயிக்கப்பட்டது. அக்கயிறு பத்திரமாக அந்த இரும்புப் பெட்டிக்குள் வேட்டைக்காக பதுக்கப்பட்டுள்ளது.

78கிலோ எடையிலான மணல் மூட்டையைக் கொண்டு கயிற்றின் பலம் சோதிக்கப்பட வேண்டுமென அன்வார் கூறியது இன்னும் ஞாபகத்தில் உள்ளது. ஒத்திகை நாள்களின் போது மணல் மூட்டையைத் தூக்கிட தோள்பட்டைக் கொடுத்த வலி அவளுக்கு ஏற்பட்ட வலியை நினைவுறுத்தியது. அந்த நான்கு மணல் மூட்டைகளொடு இந்த மணல் மூட்டையும் அவளுக்கு நிரந்தரமான ஆயுள் தண்டனையை வழங்கி விட்டது.

கண்ணதாசன் வரிகள் காதுக்குள் துளைக்க ஆரம்பித்தன. “எல்லோரும் திருடர்கள் ஒரு பெண்ணைப் பார்க்கும் போது” என்றால் அதுவொரு கலாச்சார மாற்றத்தின் வெளிப்பாடாகத்தான் தோண்றுகிறது. வக்ரத்திற்கு வடிக்கால் அமைக்க முயலாமல் போவது பெண்கள் அதிலும் குடும்ப உறுப்பினர்கள் இலகுவான இலக்காக கருதப்படும் கேவலம்தான் உலகின் மிகத் தொய்ந்த தீவிரவாதம்.

“அடியே கிறுக்கு மவலே… மண்ணையும் பொன்னையும் அடுத்தவன் கையில குடுக்கக் கூடாதுன்னு அந்த காலத்லே சொல்லி வைச்சாங்க… நீ வெரங்கெட்டவளா இருக்கே..”

எனது கண் சாடையைப் பக்கத்து வீட்டு சின்னம்மா கிழவி உணர்ந்திருப்பதை அறிய முடிந்தப் போதிலும் அண்ணியின் மௌனம் குடும்ப உறவுகளின் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், மனபலத்தையும் தான் காட்டியது. ஆனாலும்,சமுதாய மனநிலையை விலக்க வைக்கும் மனப்பக்குவம் அவரிடத்தில் இல்லாமல் போனது பெண்மையின் இயந்திர வாழ்க்கையில் அவளது மனமும் துருப்பிடித்துதான் இருக்கிறது. இந்திய வம்சாவழியைச் சார்ந்த பெண்களுக்கு உறவுகளின் மீது எப்போதும் தணிக்கமுடியாத நம்பிக்கைகளும் உறுதிகளும் இருக்கும்.

பின்னிரவு மணி மூன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தது. என் நெற்றியில் வியர்வைத் துளி. கண்களை மேலோக்கிப் பார்த்தேன்.மரண விளிம்பில் பயம் ஆட்கொண்டுவிட்டது. உடலெங்கும் ஒரு வித நடுக்கம் அவஸ்தையை உருவாக்கியது. கண்கள் அங்கும் இங்கும் அலைமோதிக் கொண்டிருக்க மேசையிலிருந்த பத்திரங்களைப் பார்த்தது. மரணவோலை. அவளிடம் ஒப்படைக்க முற்பட்டேன்.

அவளது ஆழ்மயக்கத்தில் ஒரு தளம்பலற்ற நிலைக்கு வந்து கொண்டிருப்பதாக அறிந்தேன். நரம்புப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக மருத்துவர் கூறியதைக் கேட்டதிலிருந்து அவளது அறைக்குள் நுழைவதை நிறுத்திக் கொண்டேன். அந்த உணர்வு நிலைகளிலிருந்து மீள அவளுக்கு மட்டுமல்ல அவளைச் சுற்றியிருந்தவர்களுக்கும் அவகாசம் தேவைப்பட்டது. ஒவ்வொரு முறையும் கைப்பேசியில் அண்ணன் அழைப்பில் இருந்தால்

“மீனு பொழச்சுக்குவாடா…. கணேசா… “

நம்பிக்கை மிகுந்த அவரது வார்த்தைகளில் அன்பின் ஆழமும் குடும்பத்தின் விசேட கவனமும் தெரிந்தது. அவளிடமா கண்ட அந்த சிறு அசைவு கொடுத்த நம்பிக்கை ஒரு காலத்தில் அவளைச் சுற்றி நான் விதித்திருந்த உளவியல் சிக்கலை உன்னிக் கவனித்திருந்தால் இன்று எனக்கான மரணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு குடும்பமே இன்று அவளைப் பொத்திப் பாதுகாக்க அவளது சிதைந்த நிலை காரணமாகிற அவலம்.

கைகள் கட்டப்படும் நேரம் வந்தது. அவளது வழமையான உறக்கம் என்னையும் அழைத்துச் செல்ல போகிறது. என் கைகளைக் கட்டிக் கொள்ள விரும்பவில்லை. அவை நகர்வைத் தேடிப் போவதில்லை. எனது குற்றங்கள் வாசிக்கப்பட்டன. நான் மறுப்புச் சொல்ல எதுவுமில்லை. பெரிய வலிகளுக்கு எதிர்வினையாற்றாமல் இருப்பதே சிறப்பு என மனம் பல தடவை வசைப்பாடி விட்டது.

கறுப்புத் துணியால் முகம் மூடப்பட வேண்டுமென்பது சட்டத்தின் வரையறை. இந்த நான்கு சுவற்றுக்குள் பலநாள்களாக சூழ்ந்து கொண்டிருக்கும் இருளை அக்கறுப்புத் துணியொன்றும் அகற்றிவிடப் போவதில்லை. தூக்கு மேடை தயாரான நிலையில் அந்த இருளில் நான்கு மாதங்களாக என் அறையில் உலாவிக் கொண்டிருந்த மர்ம உருவங்கள் என்னை அழைத்துச் செல்வதை உணர்ந்தேன்.

மரண மேடையில் நின்றபோது உடலைத் தாங்க என் கால்களுக்கு இருந்த வலிமை கட்டிலின் கால்களுக்கு இல்லாமல் போனது. பல ஒத்திகைகளுக்கு அவை ஒத்தாசையாகி கொஞ்சம் வலுவிழந்து விட்டன. வெள்ளை நிறத்திலான நேர்த்தியான படுக்கை விரிப்பு இன்னும் கொஞ்ச நேரத்தில் சிறு சலசலப்புக்குப் பிறகு ஆங்காங்கே கசங்கிப் போகும், இரத்தம் தெறித்தும் இருக்கலாம்.

வட்டவடிவாக திரியப்பட்ட கயிறு அவளின் முகத்தின் அழகைக் காட்டியது. திடிரென உடல் எங்கும் சில்லென்று இதமானது. சன்னலின் கதவு லேசாக திறந்திருந்தது.

“ப்பா… “

குரலின் தொனியில் வலிமையில்லை. என் காதுகளிலும் கூட.கண்முன்னே தொங்கிக் கொண்டிருந்த தூக்குக்கயிறு என் கழுத்தை வட்டமிட ஆரம்பித்தது. கருப்புத் துணியால் என் முகத்தை மூட ஒருபோதும் விரும்பவில்லை. நுகர்வுத் தன்மையில் என்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டு உள்ளக வன்முறைக்குத் தள்ளப்பட்டுக் கிடந்தேன். அன்பிற்கினிய நட்பாக இருந்த ‘கருப்பா’ வடிவேலு என்னை மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். என் வக்ரபுத்தி அவனையும் விட்டு வைக்கவில்லை.

“டேய் மச்சான்… நீ என் நண்பேண்டா….. நான் பெருசா ஒன்னும் நினைக்கல… வாடா மச்சி… டொக்டர பார்த்தா ஆல் புரோபலம் பினிஷ்…எல்லாம் ஒரு அண்டர்தேன்டுங் போன்டிங் மச்சி…”

அப்போதே நான் மரணித்து விட்டேன். சுயமதிப்பை பால்ய நண்பனிடம் தொலைத்தது என் ஆழ்மனத்தில் ஆறாத வடுக்களாக உருமாறியிருந்தது. வெறுப்புணர்ச்சியால் சமயங்காத்துக் கிடந்தேன்.

“பேஸ் பாத்து பேச புரோபலம்னா யூ சீ திஸ் பிச்சர்ஸ்…. என் கேள்விக்கு ஜஸ்ட் அன்ஸ்சர்…. அது போதும்… “

ஆரம்பித்த அடுத்த கணம் என் கால்கள் அறைக்கு வெளியே கருப்பனுக்காகக் கூட நிற்கவில்லை. அன்று அங்கு நான் தொலைத்தது என் வாழ்வை மட்டுமல்ல என்னோடு சதையாய் ஒட்டிக் கொண்டிருந்த கருப்பனையும் தான். அவனை ஞாபகப்படுத்தும் அந்த கருப்பு என் தூக்குக் கயிற்றை அவிழ்த்து விடும்.

இனியும் தாமதித்து விட்டால் விடிந்து விடும். இருளுக்குள் இருக்கிற பயம், நடுக்கம், குற்றயுணர்ச்சி மட்டுமல்ல வறட்டு தைரியம்,வக்ரம் இது போன்றவையும் வெளிச்சத்தில் அடிப்பட்டுப் போவதில்லை.கயிற்றைக் கைகள் கழுத்திற்குள் கொண்டு வந்தன.இறுதி நிமிடத்தில் கண்கள் எதையும் பார்க்க விரும்பவில்லை. இருட்டுக்குள் இருள் சூழ்ந்த கண்களில் அவளது குழந்தை முகம் கீறல்களாலும், காயங்களாலும் அழுது ஓய்ந்த களைப்பில் தொங்கிக் கிடந்தது.

கழுத்தை இறுக்கிய கயிறு என்னை உடனே கொன்று விடப்போவதுமில்லை. மெத்தையின் மீது வைத்திருந்த நாற்காலி கீழே விழுந்ததும் கழுத்து குரல் வளையை நெருக்கியது.தொண்டைக்குள் கணத்த வலி.மூளையின் அணுக்கள் மரணத்தைத் தடுக்க முயற்சிக்கின்றன. ஆக்சிஜன் குறைப்பாடு மூளையைக் கிறுகிறுக்க வைத்தது.உடலில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போனது.

உடல் மரணிப்பது உ….ண…..ர…… மு….. டி….. கி…….

ஆக்கம்
காந்தி முருகன்

காந்தி முருகன்
காந்தி முருகன்https://minkirukkal.com/author/kanthimurugan/
மலேசியாவில் வளர்ந்து வரும் புதிய படைப்பாளர்.இயல் பதிப்பகத்தின் வெண்பலகை சிறுகதை பயிலரங்கில் எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் வழிக்காட்டுதலில் பயிற்சி பெறும் மாணவி. சிறுகதை,கவிதை,விமர்சனப் பார்வை என தனது எழுத்தாற்றலை விரிவாக்கி கொண்டிருக்கிறார்.தமிழ் நாட்டின் பைந்தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டியில் தி.ரா. விருது பெற்றிருக்கிறார். மலேசிய வானொலி மின்னல் பன்பலையில் அமுதே தமிழே நிகழ்ச்சியின் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

2 COMMENTS

  1. சமீபத்தில் நான் வாசித்த படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை. மொழி நடையும், எழுத்து structure-வும் பிரமிக்க வைக்கிறது.

    ‘வெல்கம்’ என்று சொல்லி வரவேற்போம்.

    • தங்களின் ஊக்கமளிக்க கருத்துகளுக்கு நன்றி ஐயா.எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் வழிக்காட்டல்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -