மகிழ் இனி

சிறுகதை

- Advertisement -

அல்லி குளத்தின் மேற்பரப்பை குத்திகிழித்துவிட முயற்சித்து கொண்டிருந்தன மழைத் துளிகள். சின்னச்சின்ன கெண்டைக்குஞ்சிகளோ குழுமையின் காரணமறிய அவ்வப்போது துள்ளி எழுந்து மீண்டும் தண்ணீர் திரைக்குள் மறைந்தன.

மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற ஆடு, மாடுகளை வீடுநோக்கி விரட்டிக்கொண்டு வந்த கிழவனாரின் கையிலிருந்த பணைமட்டை குடை காற்றின் வேகத்தால் அவரை அங்குமிங்கும் அலைகளித்து
அழைத்துச் சென்றது.

குளக்கரை ஓரமாக சீராக போய்க்கொண்டிருந்த ஆட்டு மந்தையினை அங்குமிங்குமாகச் சிதரடித்து கிழவனாரின் வசையை வாங்கிகட்டிக்கொண்டு குதூகலமாக சிரித்தபடி குதியாட்டம் போட்டு வருகிற மகிழினியன் மழை வந்தாலே மயில் போல ஆகிவிடுவான். கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் வீசும் குளிர் காற்றும்,ஆங்காங்கே விழுந்த மழை துளிகள் எழுப்பும் மண்வாசனையும் அவனுக்கு மட்டுமல்லாமல் மற்ற உயிர்களுக்கும் உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தது. ஆனால், இதில் மாடிவீட்டு சந்தோஷ் மட்டும் விதிவிலக்கு.

சந்தோஷ்க்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை,காரணம் அவன் வீட்டிலிருக்கும் கூண்டுக் கிளியின் கூச்சல்தான்.

பிறந்தநாள் பரிசாக அவன் அப்பா வாங்கிதந்தது. அதன் பெயர் ‘செல்லா’என்றும், அது நாம் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்லும் என அப்பா சொன்னதை கேட்டவுடன் உடனே மலர்ந்த முகத்தோடு முயற்சித்து பார்த்தான். பதிலேதும் வராததால் தனது இயல்பான கடுகடுப்பான முகத் தோற்றத்தை அடைந்தான். பின் அந்த கூண்டை வழக்கமாக பரிசுகளையும், விளையாட்டு பொருட்களையும் போட்டு வைக்கும் அறையினுள் வைத்துவிட்டு, கடந்த பதினோரு வருடமாக அப்பா அவனுக்கு வாங்கி தந்திருந்த பொருட்கள் அனைத்தையும் பார்த்தபிறகு முகத்தை சுழித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினான்.

அன்றுமுதல் தினம்தோறும் கிளிக்கு தானியங்கள் கொடுக்கவும்,தண்ணீர் வைக்கவும் மட்டுமே அதன் அருகில் சென்று வருவான், அப்படி போகும் ஒவ்வொரு முறையும்

“செல்லா…சந்தோஷ் ன்னு
சொல்லு .சந்தோஷ்..ன்னு ..ம்ம்
சொல்லு”
(கிளி சத்தமேதும் இல்லாமல் உர்ரென இருக்கும்)

“நீ பேரும் சொல்லமாட்ட கீரும் சொல்லமாட்ட ” என கூண்டை ஓங்கி ஒரு தட்டு தட்டி அரட்டுவான். கிளி சிறகை படப்படவென அடித்துக்கொண்டு கீச்சிடும்.

“சனியனே இப்போ மட்டும் ஏன் சத்தம் போடுற”

உன்னை ஒரு நாள் என்ன பண்றேன் பார். எப்போதும் இப்படி ஏதாவது கத்தியபடியே அறை கதவை படாரென அடித்து சாத்திவிட்டு வெளியேறுவான். அன்றும், அப்படி வெளியேறியபோது யாரோ சிரிக்கும் சத்தத்தை கேட்டு சற்று துணுக்குற்ற சந்தோஷிற்கு, அது எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுகொள்ள அவ்வளவாக அவகாசம் தேவைப்படவில்லை.

அவன் தான்,அவனே தான் . தன் வீட்டிற்கு அருகிலிருக்கும் குளக்கரையில் குடியிருக்கும் பண்ணையாளின் மகன்தான். என சொல்லிக்கொண்டே பால்கனிக்கு வந்தான்.

வெளியில் மேகங்கள் திரண்டு இருட்டிக்கொண்டிருந்தன, குளத்துநீரில் பட்டுவரும் குளிர்ந்த காற்று உடலில் பட்டு உரோமங்கள் சிலிர்க்க நின்றான். மரங்கள் எல்லாம் காற்றுக்கு நடனமாடி கொண்டிருந்தன, பறவைகள் ஆனந்தமாக கீச்சிட்டபடி தத்தம் கூடு நோக்கி விரைந்துக்கொண்டிருந்தன.

அவைகளோடு சேர்ந்து தானும் பறப்பதுபோல கைகளை சிறகுபோல் விரித்துக்கொண்டு வீசும் காற்றுக்கு எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்தான் மகிழினியன். சட்டை பொத்தான்களை கழட்டி விட்டிருந்தபடியால் அதும் காற்றின் வேகத்திற்கு தக்க சிறகுபோல பறந்து சடசடத்தது. அவன் எழுப்பும் சிரிப்பொலி காற்றில் கலந்து எல்லாதிசைகளிலும் எதிரொலித்தது.

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த சந்தோஷ் க்கு ஏனோ கோவம் மேலும் பொங்கியது. இவன் ஏன் பைத்தியம் பிடித்தவன் போல அங்குமிங்கும் ஓடுகிறான். இவனுக்கு இந்தளவு மகிழ்ச்சி தரக் கூடியது என்னவாக இருக்கும், அவனிடம் அப்படி என்ன விளையாட்டு பொருள் இருக்கக்கூடும்,இப்படி சத்தமாக சிரிக்க காரணம் என்னவாக இருக்குமென பலவாறு யோசித்துக்கொண்டே,மீண்டும் கிளியை வைத்திருக்கும் அறையினுள் நுழைந்து தன்னையும் அவன்போல் மகிழ்விக்க கூடிய பொருள் ஏதாவது தன்னிடம் இருக்கிறதா என சுற்றிப்பார்த்தான். ரிமோட் கார்,குட்டி விமானம், பந்துகள்,தண்ணீர் துப்பாக்கி, பொம்மைகளென எக்கச்சக்கமான விளையாட்டு பொருட்கள் இருந்தாலும் அவை எதுவுமே தன்னை திருப்தி படுத்தியதில்லை என்பதாலே இங்கே சிறையிருக்கிறது என்பதை உணர்ந்து பெருமூச்சுவிட்டு உதட்டை பிதிக்கிக்கொண்டு நின்றான்.

இப்போது அந்த சிறுவனின் சிரிப்பொலி வீடெங்கும் கேட்க துவங்கியது,அது தன்னை பரிகசிப்பதாய் நினைத்துகொண்டு குமைந்தான். அதோடு சேர்ந்தாற்போல் கிளியும் கீச்சிடவே,மொத்த கோபத்தையும் அதன் மீது காட்ட முடிவு செய்தான்.

‘ஏய் செல்லா…. நீயும் கிண்டல் பண்றியா … என் பேர சொல்லு சந்தோஷ் ன்னு சொல்லு …..சொல்லு….. இப்போ சொல்ல போறியா, இல்ல உன்ன அந்த கொளத்தில கொண்டுபோய் மூழ்கடிச்சி கொல்லட்டா…. சொல்லு…… ‘

ஆத்திரமாக கத்த ஆரம்பித்தவன் சட்டென கூண்டை கையில் எடுத்தான். நிகழப்போகும் ஆபத்தை உணர்ந்த கிளி எழுப்பிய சத்தம் அவனுக்கு அந்த சிறுவனின் சிரிபொலியாகவே கேட்க துவங்கியது. அது மேலும் அவன் கோபத்திற்கு தூபம் போட்டு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. ஏதோ முடிவு செய்துவிட்டவன் போல கூண்டோடு வீட்டைவிட்டு வெளியேறி குளத்தை நோக்கி நடந்தான்.

குளக்கரையில் ஏராளமாக மண்டிக்கிடக்கும் ஐம்பனை, வயல் சுள்ளி, பூனமீசை ,பொடுதலை,கொழிஞ்சி செடிகளின் ஊடே ஊசித் தட்டான், யானை தட்டான்,செகப்பு தட்டானென வகைவகையான தும்பிகள் படையெடுத்து பறந்துகொண்டிருந்தன. அதற்கு நடுவே தும்பை செடியை கையில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் தாவிக்கொண்டிருந்தான் மகிழினியன்.எப்படியோ லாவகமாக யானைத்தட்டான் ஒன்றை பிடித்துவிட்டான்.

அதன் வாலில் மெல்லிய நூலை கட்டி பறக்கவிட்டுக்கொண்டு ஓடிவன்தவன். வீட்டைவிட்டு வெளியேறி வந்து கொண்டிருந்த சந்தோஷ் மீது மோதி கீழே விழுந்தான். அவனை சந்தோஷ் முறைத்து பார்த்தபடி நின்றான்.

மகிழினியன் எழுந்து உடைகளில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டுக்கொண்டு லேசாக புன்னகைத்து நிலைமையை சமாளிக்க முயற்சி செய்தான். சந்தோஷிடம் எவ்வித மாறுதலும் காணப்படாததால், தானே உரையாடலை துவங்கினான்.

‘என் பேரு மகிழினி.உன் பேரு என்ன.?’என்றான்.

அவன் பதிலளிக்கும் முன் கூண்டிலிருந்த கிளி கிரீச்சித்தது ,அது மகிழினி என்பதுபோல கேட்டதும், இருவரின் கவனமும் கிளியின் மீது படர்ந்தது.

“ஹை .!! இந்த கிளி பேசுமா, இது பேரு என்ன, இதை எங்க எடுத்துட்டுபோற” என ஆர்வம் மிகுந்த மகிழினி கேட்டுவிட்டு ,முழங்காலிட்டி அமர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தான். அதனோடு விளையாட ஆசைப்படுபவனாக காணப்பட்டான்.

அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை சகிக்க முடியாத சந்தோஷ் .அதை உடனடியாக குழைத்துவிட, குரூரமான வார்த்தைகளால் தான் செய்யவிரும்பும் காரியத்தை பற்றிச் சுருக்காக சொல்லி முடித்தான். அதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மகிழினியன் முகத்தில் இவ்வளவு நேரம் தெரிந்த புன்னகை மறைந்து சோகம் குடிகொண்டு அலர்போல் வாடிபோனதை கவனித்த சந்தோஷ் க்கு நினைத்ததை நிறைவேற்றி விட்டவன் போல முகத்தில் மகிழ்ச்சி ரேகை தோன்றியது.

“என்ன சொல்ற..!! ஏன்?இந்த கிளியை கொல்லனும், நீ சொல்றது சுத்த பொய். அது உன்னை தொல்ல பண்ணிருக்காது, நீ தான் அதை கூண்டில் அடைச்சி கொடுமை படுத்துற.அது பாவமில்லயா. உனக்கு பிடிக்கலன்னா என்கிட்ட கொடுத்திடு” என கெஞ்சும் தொனியில் கேட்டுவிட்டு கிளியையே பரிதாபமாக பார்த்து கலங்கி நின்றான் மகிழினியன்.

“சரி கொடுக்கிறேன். அதுக்கு , நீ ஒரு உண்மைய சொல்லனும். நான் உன்கிட்ட கேக்குறத நீ கொடுக்கனும்.”

“என்ன உண்ம… என்ன கொடுக்கனும்… புரியுற மாதிரி சொல்லு.”

“நீ சிரிக்கிர சத்தத்தை நான் தெனமும் கேக்குறேன், எங்க வீட்டு மாடி வரைக்கும் கேக்குது”.அந்த அளவுக்கு உன்ன சிரிக்க வைக்கிற விசயம் என்ன. அப்படி இருக்கிறது என்னவோ அதை என்கிட்ட கொடுப்பியா. என் அப்பா எனக்கு நிறைய விளையாட்டு பொருள் வாங்கி தந்திருக்காரு ,நான் கேட்குற எல்லாம் வாங்கி தராரு. ஆனாலும்,அது எல்லாமே சீக்கிரத்தில எனக்கு சலிச்சி போய்டுது. உன்கிட்ட கையில இருக்கிற இந்தச் செடிய தவிற வேற எதுவும் இருக்கிறதா தெரியல பின்ன எதைவச்சி விளையாடுற, நீ மட்டும் எப்படி தெனமும் சிரிச்சிக்கிட்டே இருக்க. சொல்லு.”

சந்தோஷ் சொல்வதை சுவாரஷியமாக கேட்டுக்கொண்டிருந்த மகிழினியன் சட்டென சிரிக்க துவங்கிவிட்டான்,சந்தோஷின் முகம் கடுகடுப்பானதை அறிந்துகொண்டு சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

“கோச்சிக்காதப்பா நீ இப்படி கேக்குறதே எனக்கு சிரிப்பா இருக்கு. சிரிக்க காரணமோ, வெளாட்டு ஜாமனோ வேணும்னு எனக்கு தெரியாது’. எனக்கு ஏன் சிரிப்பு வருது, அதுக்கு காரணம் என்ன அதெல்லாமும் புரியாது. எதை பாத்தாலும் அதுபோலவே நானும் பண்ணி பாப்பேன் வேற எதுவுமில்ல.”

சற்று யோசித்துவிட்டு அவனே தொடர்ந்தான். “ஆனாலும்,நீ கேட்டதுக்காக ஒன்னு சொல்றேன்.உன்ன சிரிக்க வைக்க என்கிட்ட ஒரு மந்திரம் இருக்கு அதை வேணும்னா சொல்லவா?”

“மந்திரமா… என்ன மந்திரம் அதையாச்சும் சொல்லேன்”

“அதுக்கு முதல்ல எனக்கு இந்த கிளி வேணுமே”

கொஞ்சம் யோசித்துவிட்டு கூண்டை மகிழினியனிடம் கொடுத்தான் சந்தோஷ். அதை வாங்கி உற்றுபார்த்துவிட்டு அக்கம் பக்கத்தை பார்த்தான்.

“கண்ணை மூடி நான் சொல்றத கவனமா கேட்டு திருப்பி சொல்லணும் சரியா?” இப்படி சொல்லிக்கொண்டே இந்த கிளி ஏன் இப்படி பரபரப்பாக கூண்டுக்குள் அங்குமிங்கும் பறந்து தவிக்கிறது என்பதை உணர்ந்ததை போல்,லேசாக புன்னகைத்துக்கொண்டு “ராம்…ரீம்…கிரீம் ….” என சொல்லிக்கொண்டே கூண்டை தூக்கிக்கொண்டு சற்று தொலைவிற்கு ஓடிச் சென்றான் மகிழினியன் .

என்ன செய்கிறான் என்பது புரியாமல்,ஓடும் சத்தம் கேட்டதால் கண்களை லேசாக திறந்து பார்த்த சந்தோஷ். திடீரென “ஏய்… என்ன செய்ற ? வேணாம் அத தெறந்து விட்றாத” என கத்திகொண்டே மகிழினியனை நோக்கி ஓடினான்.

அவன் நெருங்கி ஓடிவந்து தடுமாறி விழுவதற்கும், திறக்கப்பட்ட கூண்டிலிருந்து கிளி பறப்பதற்கும் சரியாக இருந்தது.

பறக்கும்போது கிரீச்சித்த ஒலி சந்தோஷ் என்பதுபோல் எல்லாம் திசைகளிலும் எதிரொலித்தது. கோபமாக வந்து விழுந்த சந்தோஷின் முகத்தில் ஆச்சரியம் கலந்த புன்னகை அரும்பியது.

மழை துளிகள் மண்ணை நனைக்க துவங்கிவிட்டன. கூண்டை திறந்துவிட்டுவிட்டு பட்டாம்பூச்சியை துரத்தி சென்று கொண்டிருந்த மகிழினியன் ஓடிய திசையில்”மகிழினி மகிழினி”என அவனை சத்தமாக அழைத்தபடி சிரித்துக்கொண்டே சட்டை பொத்தான்களை கழட்டிவிட்டு கையை விரித்து பறவை போல அசைத்துக்கொண்டு ஓடினான் சந்தோஷ்.

கிளி அதன் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு கீச்சிட்டு பறந்தது.வானின் அமுத நீரூற்று பூமியை குளிர்விக்கத் தொடங்கியது…

தமிழ் வாணன்
தமிழ் வாணன்https://minkirukkal.com/author/tamilvanan/
மகாதேவப்பட்டிணம்,எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தை பின்புலமாக கொண்ட நான். இயந்திரவியலில் இளங்கலை பட்டம் பெற்று .தற்போது கப்பல் சார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருக்கிறேன். Msg: நடிப்பு,கவிதை,கதை எழுதுவதில் ஆர்வமுண்டு. அவ்வப்போது அதற்கான முயற்சியையும் செய்து வருகிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -