பாபூஜியின் நினைவுக் கோவை

நூலாசிரியர்: மனுபென் காந்தி

- Advertisement -

ஆசிரியர்: மனுபென் காந்தி
தமிழில் : தா.நா.குமாரஸ்வாமி
வெளியீடு : அழிசி

காந்தியின் இறுதிக் காலத்தில் அவர் கூடவே இருந்து அவருக்குப் பணிவிடை செய்தவர் மனுபென் காந்தி. 14 வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். குஜராத்தியில் அவர் எழுதிய டைரிக் குறிப்புகள் பனிரெண்டு வால்யூம்களாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. காந்தி சுடப்பட்ட போது, இவர் மீது நிலைகுலைந்து விழ, இவர் கையிலிருந்த டைரி நழுவி கீழே விழுந்தது. அன்றோடு டைரி எழுதும் பழக்கத்தை நிறுத்தியவர் பின்னர் காந்தி குறித்த புத்தகங்களை எழுதத் தொடங்கினார். 1969 ஆம் ஆண்டு தனது 42 வது வயதில் உயிர் துறக்கும் வரையில் அந்தப் பணியைச் செய்தார்.

மனுபென், காந்தியுடனான தனது சில அனுபவங்களை குஜராத்தியில் ‘ பாபூ நா ஜீவனப் ரஸங்கோ ‘ என்ற தலைப்பில் எழுதியதை திரு.த.நா.குமாரஸ்வாமி சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
காந்தி பற்றி எத்தனை நூல்கள் வாசித்தாலும் ஒவ்வொரு நூலிலும் அவர் குறித்து அதிசயக்கத்தக்க வகையில் தகவல்கள் கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு சிறுமியின் பார்வையில் இருந்து இந்நூலில் சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளன. உண்மையில் நூலை வாசிக்கையில் நான் வியந்தது மானுபென் குறித்துதான். காந்தியின் சிறு செய்கையிலும் தனக்கான ஒரு உயர்ந்த பாடத்தை அவர் கற்றுக் கொள்கிறார். வயதை மீறிய பொறுமையும் பணிவும் அவர் செயல்களில் தெரிகிறது.

காந்தியின் செயல்பாடுகள் பற்றி படித்தவர்களுக்கு தெரியும். அவர் எவ்வளவு பிடிவாதம் மிக்கவர் என்பது. நாட்காட்டியில் கிழிக்கப்படும் காகிதங்களை புத்தகமாகத் தைத்து வைத்து குறிப்புகள் எழுதப் பயன்படுத்துவார் காந்தி. இது தெரியாத மனுபென், அந்தத் தாள்களை கிழித்து எறிந்து விடுகிறார். வழக்கம்போல் அந்த தாள்களை காந்தி தேடியுள்ளார். தான் அதைக் கிழித்து எறிந்து விட்டதாக கூற, உடனே அதனைத் தேடி எடுத்து வரும்படி கூறியிருக்கிறார் காந்தி. அதிர்ச்சியடைந்தாலும் ஒரு வழியாக கசங்கி சுருண்டு கிடந்த அந்தத் தாளைக் கொண்டுவந்து காந்தியிடம் கொடுத்திருக்கிறார். ஒரு நூறு ரூபாய் நோட்டு கிடைத்த நிம்மதியில் அதனை வாங்கி பத்திரப்படுத்தியிருக்கிறார் காந்தி. நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் இன்றைய தலைமுறைக்கு, அவர் கடைபிடித்த சிக்கனம் சற்று அதிகப்படியாகத் தோன்றினாலும் இது போன்ற சிறு விஷயங்களில் அவர் காட்டிய கவனம் தான் அவரை ஒரு மகாத்மாவாக மாற்றியது என்பதை மறுக்க இயலாது.

நூலில் பல இடங்களில் காந்தியின் கொள்கைகள் குறித்து பெருமையோடு குறிப்பிடும் மனுபென், சில வேளைகளில் தனக்கு சரி எனத் தோன்றியதை தைரியமாக கூறவும் தயங்கவில்லை. அவர் ஒருமுறை கையில் வளையல் அணிந்திருந்ததை கண்டு காந்தி அதற்குப் பதில் மனுபென் நூற்ற நூல் இழைகளை அணியச் சொல்லியிருக்கிறார். அது பிடிக்காத மனு, தனது எதிர்ப்பைத் தெரிவித்து, அது பற்றிய தனது கருத்தையும் முன் வைத்துள்ளார். அவரது கருத்தை ஏற்றுக் கொண்ட காந்தி, ” இப்படி மனதில் உள்ளதை பயமின்றி தெளிவாக வெளிப்படுத்தும் பெண்கள் ஐந்து பேர் என் பக்கத்தில் இருப்பின் நான் ஏற்றுள்ள பணி எவ்வளவோ எளிதாக நிறைவேறி இருக்குமே ” எனப் பாராட்டியுள்ளார்.

26 அத்தியாயங்கள் கொண்ட சிறு நூல் இது. காந்தி பற்றித் தெரிந்து கொள்ள வயது தடையில்லை என்றாலும் பதின்ம வயதினர் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நூலாக இதனைப் பரிந்துரை செய்கிறேன். இதில் வெளிப்படும் காந்தியின் தனி மனித ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு இன்றைய இளம் வயதினருக்கு கட்டாயம் அவசியம்.

இந்நூல் அமேசான் கிண்டிலில் வாசிக்க கிடைக்கிறது.

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -