பாபாவும் நானும் (4)

வேண்டுதல்

- Advertisement -

ஓம் சாய்ராம்,


சென்ற வாரம் என் வேலை பறிபோனதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எனக்கு வேலை பறிபோக முக்கியக் காரணம் எங்கள் அலுவலகத்தில் தலைமை நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றமே. நான் வேலையிழக்கும் முன்னரே சில தலைமை நிர்வாகிகள் மாற்றப்பட்டு ஒரு சீக்கியர் எங்கள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன் ஒரு ஆஸ்திரேலியர் அந்தப் பொறுப்பில் இருந்தார்.


புதிதாக பொறுப்பேற்றிருந்த தலைமை நிர்வாகிக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. அவர் என்னிடம் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று மட்டுமே வாதாடிக்கொண்டிருந்தார். அவரிடம் வாதாடி ஒன்றும் செய்ய முடியாது என்று மட்டும் தெரிந்துகொண்டேன். அவர் தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறினார். என் வேலையைத் திருப்பித் தாருங்கள் என்பதைத் தவிர வேறு என்ன நான் கேட்க முடியும்?

எனக்கு இரண்டு மாதங்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதைப் பணமாகக் கொடுத்து அன்றே என்னை வேலையை விட்டு நீக்கிவிடலாம். இல்லை மேலும் இரண்டு மாதங்கள் வேலை செய்து விட்டுச் செல்லலாம். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். காரணம் சிங்கப்பூரில் நான் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் என்று அழைக்கப்படும் வேலை அனுமதி விசாவில் வேலை செய்து வருகிறேன். அந்த வேலை அனுமதி விசா நான் வேலை செய்யும் நிறுவனத்தின் வழி தான் எனக்குக் கிடைக்கும். ஒருவேளை அன்றே என் வேலைப் பறிக்கப்பட்டால் நான் அந்த நிறுவனத்தின் ஊழியன் அல்ல. அப்போது என் விசா தானாக ரத்து செய்யப்பட்டுவிடும். வேலை அனுமதி விசா ரத்து செய்யப்பட்டுவிட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு சோசியல் விசிட் என்றழைக்கப்படும் சுற்றுலா விசா வழங்கப்படும். அந்த ஒரு மாதத்திற்குள் நான் வேலை தேடவேண்டும் இல்லாவிட்டால் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.

அதே நான் மேலும் இரண்டு மாதங்கள் இதே நிறுவனத்தில் இருப்பதன் மூலம் எனக்கு வேலை தேட மூன்று மாதங்கள் கிடைக்கும்.  தலைமை நிர்வாகியான அந்த சீக்கியர் உனக்கு என்ன உதவி வேண்டுமோ கேள் செய்கிறேன் என்ற அந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தேன். அதாவது நான் இரண்டு மாதங்கள் இங்கே வேலை செய்கிறேன் அதே நேரம் எனக்கு இடையில் வேறு ஏதாவது வேலை வாய்ப்பு வந்தால் அதனை நான் உடனடியாக எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன். இரண்டு மாதங்கள் முழுமையாக இருக்க மாட்டேன் என்றேன்.

அவரும் பதிலுக்கு நீ இரண்டு மாதங்கள் இங்கே முழுதாக வேலை செய்தால் நான் இரண்டு மாதங்களுக்கான சம்பளத்தைத் தருவேன் நீ இடையில் சென்றுவிட்டால் நோட்டீஸ் பீரியடுக்கான சம்பளத்தைத் தரமாட்டேன். நீ எப்போது வரை வேலை செய்கிறாயோ அதுவரை உள்ள சமபளத்தை மட்டுமே தருவேன் என்றார். அவர் சொன்னது எனக்கு ஏற்புடையதாகத் தானிருந்தது.  சில வேலை வாய்ப்புகள் உடனடியாக சேர்ந்துகொள்ளும் படியிருக்கும். நோட்டீஸ் பீரியடைக் காரணம் காட்டி அப்படிப்பட்ட வேலை வாய்ப்புகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டேன்.
என்னுடைய வேலை தேடும் படலம் தொடங்கியது. அதுநாள் வரை தாடியோடு திரிந்த நான் முகத்தைச் சிரைத்துக் கொண்டேன். எங்கோ டப்பாவிற்குள் புதைந்து கிடந்த டையைத் தேடி எடுத்தேன். அழுக்கேறி இருந்து கருப்பு சப்பாத்துகளைத் துடைத்து கருமை பூசினேன். பொதுவாக நான் என் அலுவலகத்திற்கு டீ-சர்ட் ஜீன்ஸ் மற்றும் கேன்வாஸ் அணிந்து தான் செல்வேன். நேர்முகத்தேர்விற்கு அப்படிச் செல்ல முடியாது. 

அதுநாள் வரை வேலை தேடவேண்டும் என்ற எண்ணமே இல்லாமலிருந்ததால் ரெஸ்யும் (Resume – பயோட்டா) கூட தயாரித்து வைக்கவில்லை. அன்று இரவு தான் நான் இதற்கு முன் எத்தனை நிறுனங்களில் வேலை செய்தேன் என்னென்ன ப்ராஜெக்ட்கள் செய்திருக்கிறேன் என்று கணக்கெடுத்து ரெஸ்யுமை தயார் செய்தேன். உண்மையில் இந்த ரெஸ்யும் தயார்செய்வதென்பது மிகப் பெரிய வேலை. நாம் சொல்வது உண்மையாகவும் இருக்க வேண்டும் உண்மை போலவும் இருக்க வேண்டும் நேர்முகத் தேர்வில் பதில் சொல்லக்கூடியவற்றை மட்டும் போட வேண்டும் அதே நேரம் நம்முடைய விண்ணப்பத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கத் தேவையான அத்தனையும் போட வேண்டும். எப்படியோ ஒரு இரண்டு நாள் உழைப்பில் என் ரெஸ்யும் தயாரானது. 

அடுத்து விண்ணப்பிக்கத் தொடங்கினேன் கண்ணில் படும் வேலைகளுக்கெல்லாம் விண்ணப்பித்தேன். இரவு முழுவதையும் படித்தே கழித்தேன். புதிதுபுதிதாக நிறையக் கற்றுக்கொண்டதை விட மறந்து போன பலவற்றை மீண்டும் மீண்டும் படித்து ஞாபகப்படுத்திக் கொண்டேன். நான் டாட் நெட் வேலைக்கு விண்ணப்பித்திருப்பேன் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்து ஜாவா தெரியுமா? டெல்பி தெரியமா? C++? என்பார்கள். எனக்குத் தெரியும் ஆனால் வேலை அனுபவம் இல்லை வாய்ப்புக் கொடுத்தால் வேலையைக் கற்றுக்கொள்வேன் என்பேன். சரி மீண்டும் அழைக்கிறேன் என்பார்கள். அப்படிச் சொன்ன எந்த அழைப்பும் அதன் பின் வந்ததேயில்லை. இங்கு யாருக்கும் வேலை பழக வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள். வேலை செய்யத் தெரிந்தால் மட்டுமே வாய்ப்பு. 

இப்படியே இரண்டு வாரங்கள் ஓடியது. ஒரேயொரு நேர்முகத்தேர்வு மட்டும் தான் வாய்த்திருந்தது அதிலும் எழுத்துத்தேர்வு. அதற்கு முன் பத்துவருட வேலை அனுபவம் இருந்தாலும் எழுத்துத்தேர்வு எழுதினால் தான் அடுத்த கட்ட நேர்முகத்தேர்விற்குச் செல்ல முடியும். நான் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டேன். ஆனால் எங்கோ ஏதோ சொதப்பிவிட்டது. நன்றாகத் தான் தயார் செய்திருந்தேன். கிட்டத்தட்ட நான் எதிர்பார்த்த கேள்விகள் தான் அத்தனையும் எனக்கு நன்றாக தெரிந்தவைகள் தான். ஆனாலும் திக்கித் திணறி கோட்டைவிட்டுவிட்டேன். அவர் வாயளவில் மீண்டும் அழைக்கிறேன் என்று கூறினாலும் அவர் அழைக்கமாட்டார் என்று என் உள்ளம் கூறியது. வாய் ஓயாமல் பாபாவின் நாமம் சொல்லிக்கொண்டிருந்தது.

மேலும் இரண்டு வாரங்கள் ஓடின அந்த அலுவகத்தில் இருந்து எந்த அழைப்பும் இல்லை. வேறு எந்த அலுவகத்தில் இருந்தும் சாதாரணமாக வரும் நேர்முகத் தேர்வுக்கான விசாரிப்பு அழைப்புகள் கூடயில்லை. என் நண்பர் சுதர்சன் அண்ணனுக்கு விசயத்தைக் கூறினேன். அவர் எனக்காக அவருக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டார். அவர் வழியில் சில நிறுவன மேலாளர்கள் என்னை அழைத்தனர் ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பும் என் வேலையும் ஒத்துப்போகவில்லை. அவர்களுக்கு கணக்கர்கள் (அக்கொண்ட்ஸ்) தேவையாக இருந்தார்கள்.  

“கவலைப்படாத தம்பி பாபா உன் கூட இருக்காரு.” என்று சுதர்சன் அண்ணன் நம்பிக்கையூட்டினார்..

இந்தத் தருணத்தில் எனக்கு அழைத்து ஆறுதல் சொல்லி எனக்காக தன் நண்பர்களிடமெல்லாம் வேலை கேட்ட அண்ணன் ஸ்ரீகாந்த் மற்றும் பல நண்பர்களை நான் இங்கு நினைவு கூறுகிறேன். அவர்கள் அளித்த தன்னம்பிக்கையும் பிராத்தனையும் தான் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

ஒவ்வொரு வியாழனும் தவறாமல் பாபாவைத் தரிசித்துக்கொண்டிருந்தேன்.வேலை பறிபோன அந்தத் தம்பியைப் பேருந்தில் சந்தித்து நான்கு வாரங்கள் ஓடிவிட்டன. அவரை அதன் பின் நான் சந்திக்கவேயில்லை. இன்னும் ஒரு மாதம் தான் இந்த வேலையில் நான் ஒட்டிக்கொண்டிருக்க முடியும். ஒரு வேலை செய்யும் போதே இன்னொரு வேலை கிடைக்கும் பட்சத்தில் நம் சம்பளத்தைக் குறைக்க மாட்டார்கள். வேலையில்லாமல் சென்றோமானால் முடிந்தமட்டும் பேரம் பேசிக் குறைப்பார்கள். நமக்கும் வேறு வழியிருக்காது. 

பொதுவாக கணினித்துறையில் ஒரு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்து அதன் பின் நேர்முகத்தேர்விற்கான தேதியைக் குறிக்கவே ஒரு வாரம் ஆகும் அதன் பின் அதற்கான முடிவு சில நேரம் ஒரு மாதம் கூட ஆகலாம். இப்போது வரை எனக்கு ஒரு அழைப்புகூட வரவில்லை. 

இப்படியாக ஒரு வியாழன் காலை என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்தேன். பொதுவாக கஷ்டங்கள் எதையும் வீட்டில் சொல்லக்கூடாது என்று நினைப்பேன் ஆனால் ஒருவேளை மொத்தமாக வேலையே கிடைக்காமல் ஊருக்குச் சென்றால் அவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருக்குமே என்பதற்காக என் அம்மாவிடம் சொல்லி வைத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் மாலையில் தான் என் அம்மாவிற்கு அழைப்பேன். அன்று ஏனோ என் அம்மா அதிகாலையிலேயே என்னை அழைத்தார்.

“குமாரு ஒண்ணும் கவலை படாதப்பா. நல்லா சாமியக்கும்பிடு. நம்ம குல தெய்வம் உன்னை கைவிடமாட்டாரு. அப்படியே இங்க வந்தா கூட என்னடா இங்க ஒரு வேலையப் பார்த்து பொழச்சுக்கலாம். சும்மா கவலைப்படாம தைரியமா இரு…”

இப்படி எனக்குத் தைரியம் சொல்லிக்கொண்டே ஒரு கட்டத்தில் அவர் அழுது விட்டார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. என் அம்மாவிற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. நான் என்னை கட்டுப்படுத்திக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது. ஒருவழியாக அப்படி இப்படி ஏதோ பேசி அவரே அறுதல் படுத்திக்கொண்டு எனக்கும் ஆறுதல் கூறினார். 

அழைப்பைத் துண்டித்துவிட்டு கண்ணாடி முன் மஞ்சள் துணியின் மீது இருந்த பாபா படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என் அம்மா அழுதது என்னை ஏதோ செய்தது என் இதயம் நெஞ்சாங்கூட்டின் மத்தியில் வந்து ஓங்கி ஓங்கி இடிப்பது போல் உணர்ந்தேன். உடலின் படபடப்பில் உஷ்ணம் ஏறி கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது. 

“பாபா நீ தான் எனக்கு. உன்னைத் தவிர நான் உதவி கேட்க வேற யாருமில்லை. ஒரு மாசம் ஓடிடுச்சு வேலை கிடைக்கிறதுக்கு ஒரு அறிகுறி கூடயில்லை. இன்னைக்கு வியாழக்கிழமை. உன்னோட நாள். இந்தநாள்ல எனக்கு ஏதாவது ஒரு அறிகுறி காட்டு. குறைந்தபட்சம் ஒரு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாவது வரணும். இன்னைக்கு சாயங்காலம் உன்னை நான் பார்க்க வர்றதுக்கு முன்ன இது நடந்தே ஆகணும் ஆமா….”

கண்களைத் துடைத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். அந்த நாளில் எனக்கு என்ன நடந்தது. என் வேண்டுதலுக்கான பாபாவின் அருள் மழை எப்படிப் பொழிந்தது. அடுத்த வாரம் எழுதுகிறேன்.

ஓம் சாய்ராம். 

– சாயி நாமம் ஒலிக்கும்

அடுத்தப் பதிவைப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

பாபாவும் நானும் (5)

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -