பாபாவும் நானும் (1)

அறிமுகம்

- Advertisement -

ஓம் சாய்ராம், இந்த மந்திரத்தை நான் எப்போதிருந்து சொல்ல ஆரம்பித்தேனோ தெரியவில்லை. ஆனால் இன்று வரை ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். சீரடி சாய்பாபா எப்படி என் வாழ்வில் நுழைந்து என்னை அவர்பால் ஈர்த்து அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இதை நான் எழுதுகிறேன். ஒருவேளை நீங்கள் கடவுள் நம்பிக்கையற்றவராகக் கூட இருக்கலாம். ஒரு சுவாரசியத்திற்காக தொடர்ந்து படித்துப்பாருங்கள். சுவாரசியமாக இருந்தால், இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நான் இதை எழுதுவதால் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பயனடைந்து பாபாவின் பரிபூரண அருளைப் பெற்றால் கூடப் போதும் நான் எழுதியதின் நோக்கம் நிறைவேறிவிடும். நிச்சயம் இதை நான் விளம்பரத்திற்காகவோ இல்லை மார்க்கெட்டிங் செய்து பாபாவிற்கு ஆள் பிடிப்பதற்காகவோ எழுதவில்லை. அது என் வேலையும் இல்லை. பாபா அவர் விரும்பிய ஆட்களை குருவியின் காலில் நூலைக் கட்டி சுண்டியிழுப்பதைப் போல இழுத்து அவர் அருகில் வைத்துக்கொள்வார் என்னை இழுத்தது போல. 


இந்த உலகில் நடக்கும் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரண காரியத்திற்காகத் தான் நடக்கின்றது என்பதை நான் நம்புகிறவன். இப்போது நான் எழுதுவது நீங்கள் படிப்பது கூட ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் நடக்கிறது. இது என் நம்பிக்கை. இங்கே நான் எழுதப் போகும் அத்தனையும் என் நம்பிக்கை சார்ந்தது மட்டுமே. மற்றவர்கள் நான் நம்பியதை அப்படியே நம்பித்தான் ஆக வேண்டுமென்ற கட்டாயமில்லை. உங்கள் நம்பிக்கையோடு எது பொருந்திப்போகிறதோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 


பாபா எனக்கு எப்படி அறிமுகமானார்?


சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை கொண்டவன் நான். என் பள்ளி நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் எங்கள் ஊர் முத்தி விநாயகர் முன் உக்கி போடாமல் நான் எந்த ஒரு நாளையும் தொடங்கியதேயில்லை. அதற்காக மூடநம்பிக்கைகளில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கையில்லை. விரதம் இருப்பதைக் கூட விரும்பாதவன் நான். ஒரு முழுநாள் அசைவம் சாப்பிடாமல் இருக்கச்சொன்னால் அன்று முழுவதும் கோழிப் பிரியாணியின் ஞாபகத்திலேயே தானிருப்பேன். கடவுள் நம்பிக்கை என்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது. கடவுளுடன் நாம் நம்முடைய மனதால் மட்டுமே பேச முடியும் உடலை வருத்திக்கொள்ள வேண்டியதில்லை கடவுளே அதை விரும்பமாட்டார் என்பதும் என் நம்பிக்கை தான். 

கல்லூரிப்படிப்பை முடித்து சென்னையில் இரண்டு வருடம் வேலை செய்தேன். பின் என் மாமாவின் புண்ணியத்தில் சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன். அப்போது வரை எனக்கு பாபா என்றால் யாரென்று தெரியாது எங்கோ ஏதோ கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை கடவுள்கள் என்றால் கோவில் சிலைகள் அல்லது அதே உருவில் இருக்கும் படங்கள் தான். முருகன், பிள்ளையார், கிருஷ்ணன், இராமன், ஐயப்பன் போன்ற என் குழந்தைப் பருவத்தில் என் பெற்றோர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுள்கள் மட்டுமே. கிறிஸ்தவ பள்ளியில் படித்ததால் கிறிஸ்துவும் அன்னை மரியாளும் கூட எனக்குக் கடவுள் தான். 

கடவுள் உருவமற்று எங்கும் நிறைந்திருக்கிறார் என்று அறிந்திருந்தாலும் அந்த எங்கும் நிறைந்தவனை என் மனதிற்குள் அடக்க. அவனோடு உரையாட அவனை நினைத்து தியானிக்க எனக்கு ஒரு உருவம் தேவையாகத் தானிருந்தது. உருவமில்லாமல் கடவுளை கண்டடைவது என்பது என்னைப் போன்ற சிறியவனுக்கு மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். பாபாவின் கருணையால் வாழ்வில் ஒருநாள் அந்த நிலையையும் அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஆனால் மனித உருவில் ஒருவரை சாமியார் போன்ற தோற்றமுடைய எவரையும் என்னால் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் சாமியார் என்று சொல்லிக்கொண்டு வரும் எவரையுமே எனக்குப் பிடிப்பதில்லை.

இப்படிப்பட்ட நான் எப்படி பாபாவின் பக்தனானேன்! 


“என்னக்கா இவரே ஒரு முஸ்லீம் அவர் போட்டாவ வச்சு கும்பிட்டுக்கிட்டு இருக்கீங்க?” இது என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்த போது அவர் மனைவியிடம் நான் சொன்னது. 

“அப்படியெல்லாம் பேசகூடாது. வாயைமூடு” அந்த அக்கா அதட்டிய பின் நான் பாபா பேச்சை அவர்களிடம் எடுப்பதில்லை. இது நடந்தது 2013.

அடுத்த வருடம் எனக்கு பேஸ்புக்கில் ஒரு நண்பர் ஒரு செய்தி அனுப்புகிறார். “தம்பி உங்க பதிவெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நகைச்சுவையா போட்டு பின்றீங்க உங்ககிட்ட பேசணும்.” நான் பெயரைப் பார்த்தேன் சுதர்சன் என்றிருந்தது ‘டிப் டாப்பா டீசன்ட்டா’ புகைப்படம் போட்டிருந்தார். சரி யாரென்று பேசித்தான் பார்ப்போமே என்று “சரி பேசுங்க” என்றேன். பேஸ்புக்கில் அழைத்தார். பேஸ்புக்கில் எவ்வளவோ எழுதித் தள்ளி எத்தனையோ நாள்களை வீணடித்திருக்கிறேன். அதெல்லாம் வீண் இல்லை அதில் கூட உனக்கு ஒரு பயன் இருக்கு என்பது போல நண்பர் சுதர்சன் வந்து சேர்ந்தார். வயதில் என்னைவிட மூத்தவர் என்பதால் “அண்ணா” என்று அழைத்துப் பழகிவிட்டேன். அதன் பின் அடிக்கடி உரையாட ஆரம்பித்தோம். தமிழக அரசியல் இந்திய அரசியல் சினிமா என ஏதேதோ பேசியிருக்கிறோம். 

எல்லா நாளும் அவருடன் பேச முடியும் ஆனால் வியாழக்கிழமைகளில் பிடிப்பது கொஞ்சம் சிரமம். நடிகர் திரு.விவேக், செல் முருகன் எல்லாரும் அவருடைய நண்பர்கள் என்று கேள்விப்பட்டேன். அவர் மூலமாக நானும் கூட விவேக் அவர்களை சிங்கப்பூரில் ஒருமுறையும் மதுரை விமானநிலையத்தில் ஒரு முறையும் சந்தித்தேன்.

“ஆமாண்ணே… அவரு எல்லாப் படத்துலயும் மூட நம்பிக்கைய ஒழிக்கணும்ன்னு சொல்றாரு. அப்பறம் எப்படி சாய்பாபா பக்தரா இருக்காரு?

இப்படித்தான் பாபாவைப் பற்றிய எங்கள் உரையாடல் தொடங்கியது.  

“மூடநம்பிக்கை வேற பக்தி வேற அவர் மூட நம்பிக்கை கூடாதுன்னு சொல்றாரு. யாரையாவது சாமி கும்பிட வேண்டாம்ன்னு சொல்லிருக்காரா? உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?”

“இருக்குண்ணே வாரத்துல ஒரு நாள் எப்படியாவது கோயிலுக்கு போவேன்.”

“அப்போ சரி, இனிமேல் வியாழக்கிழமை வியாழக்கிழமை நீ பாபா கோயிலுக்கும் போ”

“அட போங்கண்ணே சிங்கப்பூர்ல நான் பாபா கோயிலுக்கு எங்க போவேன்” சொல்லிட்டு சிரிச்சேன்.

“சிங்கப்பூர்ல தானே. எங்க இருக்குன்னு நான் சொல்றேன் நீ போற”

எனக்கு சிங்கப்பூர்ல பாபாவைக் கண்டுபிடித்துக் கொடுத்தது அவர் தான். சிங்கப்பூருக்கு அவர் இதுவரை வந்ததேயில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் அங்க இங்க விசாரித்து எனக்கு முகவரி அனுப்பிவிட்டார். 

“அட போங்கண்ணே. அதெல்லாம் போக முடியாதுண்ணே.”

“நீ உனக்காகப் போக வேண்டாம் எனக்காகப் போ. போய் பாரு பிடிக்கலன்னா அப்பறம் போக வேண்டாம்.” 

எனக்கு கொஞ்சம் பயம். அங்கே சென்றால் ஏதாவது சொல்லி பணம் கேட்பார்களோ என்று யோசித்தேன். சரி பணம் எதுவும் கேட்டால் திரும்பி வந்துவிடலாம் என்று முடிவு செய்து ஒரு வியாழக்கிழமை சென்றேன். அது சிங்கப்பூர் சிரங்கூன் சாலையில் வடபத்திர காளியம்மன் கோவில் வளாகத்தில் மூன்றாவது மாடியில் இருந்தது. 
வடபத்திர காளியம்மன் கோவிலே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பிள்ளையாரில் தொடங்கி கோவிலை சுற்றினேன். வலது பக்கம் பிரமாண்டமாக பத்தடிக்கு மேல் பெரியாச்சியம்மன் எட்டுக் கைகளோடு இருந்தாள். இரண்டு கைகள் ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்கும் இரண்டு குடலை உருவி மாலையாகப் போட்டிருக்கும் ஒரு கையில் குழந்தையும் மற்ற மூன்று கைகளில் ஆயுதங்களும் இருக்கும். காலுக்கடியில் ஒரு அரசனைப் போட்டு மிதித்திருப்பாள். பார்க்க கொஞ்சம் அச்சமாக இருந்தாலும் கற்பவதிகளாய் இருக்கும் பல பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று இந்த தாயாரிடம் தான் வேண்டிக்கொள்வார்கள். சுகமாக குழந்தைகளைப் பெற்றடுத்த தாய்மார்கள் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையைக் கொண்டு வந்து போட்டு அம்மனுக்கு படையலிடுவார்கள். அந்த நாள்களில் கோவிலுக்கு வரும் அத்தனை பேருக்கும் விருந்து சாப்பாடு தான்.

பெரியாச்சியின் வலப்புறம் மதுரைவீரன் பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் இருப்பார். இடப்புறம் முனீஸ்வரன். 
கோவிலின் பின்புறம் பத்தடி உயரத்தில் நான்கு கைகளோடு நாகேஸ்வரியம்மன் ஐந்து தலை நாகத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருப்பாள். பெண்கள் வரிசையாக நின்று அந்த பெரிய சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் சிறிய கரிய அம்மனின் கற்தலைக்கு பாலாலும் நீராலும் அபிசேகம் செய்துகொண்டிருப்பார்கள். அது போக சிவலிங்கம், அகிலாண்டேஸ்வரி, நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை அம்மன், நரசிம்ம லட்சுமி, குபேர லட்சுமி, ஸ்ரீ ராமர், அனுமான், கால பைரவர், முருகன், வடபத்திர காளியம்மன் என தெய்வங்களின் வரிசை என்னை பிரம்மிப்பூட்டியது. நான் இப்போது சொன்ன இந்த வரிசை பிள்ளையாரில் தொடங்கி கோயிலை நான் வலப்புறமாக சுற்றி வந்த வரிசை. மேலும் கோயில் சுற்றுச் சுவரில் தன் பத்துத் தலையில் ஒன்றைப் பிய்த்து வீணை வாசிக்கும்  இராவணன், முருகனின் அறுபடை வீடுகள், அம்மன், முனிவர்கள், கோவில் உயரத்திற்கு வாயிலில் நிற்கும் பிரமாண்டமான பச்சை நிற ஆஞ்சிநேயர், கருடாழ்வார் என அந்தக் கோயில் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

சாமி கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பின் மின்தூக்கியில் ஏறி மூன்றாவது மாடிக்குச் சென்றேன். நீண்ட வரிசை ஒன்று, முதலும் முடிவும் தெரியாமல் நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு முப்பதடி நீளமும் பன்னிரண்டடிலிருந்து பதினைந்தடி அகலமும் கொண்ட சிறிய அறை தான் பாபா கோயில். வெள்ளைப் பளிங்குச் சிலை முழுவதும் மலர் மாலைகள் போர்த்தியிருந்தன. தலையில் பல வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்க கிரீடம் இருந்தது. அந்தச் சிலையை நோக்கி வரிசை வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. வரிசையில் நானும் சேர்ந்துகொண்டேன். வரிசை செல்லும் வழியில் எட்டடி உயரத்தில் தாடை வரை வளர்ந்திருக்கும்  வெண்தாடியோடு காவி உடையில் கைகளை உயர்த்தி ஆசிர்வதித்துக்கொண்டு ஒரு பாபா புகைப்படத்தில் நின்றிருந்தார். அவரின் அந்தக் கண்களும் சிரிப்பும் என்னை ஏதோ செய்தன. எனக்கு முன் சென்றவர்கள் அந்த புகைப்படத்தின் அருகில் சென்றவுடன் வரிசையிலிருந்து விலகி மண்டியிட்டு பாபாவின் பாதம் பணிந்து சென்றார்கள். சில பெண்கள் தங்கள் கைகளைத் தூக்கி பாபாவின் கைகளோடு வைத்து நின்று பின் விழுந்து வணங்கினார்கள். நானும் அருகில் சென்றவுடன் மண்டியிட்டு பாதம் பணிந்தேன்.

வரிசை ஒருவழியாக வளைந்து முடித்து நேராகியது இன்னும் பத்து பேர் என் முன்னே நின்றுகொண்டிருக்கிறார்கள். என் அலைபேசியை எடுத்து அதில் பாபாவை பதிந்து கொண்டேன். எனக்காக இல்லாவிட்டாலும் என்னை கோவிலுக்கு செல்லச் சொல்லி அனுப்பியவருக்கு ஒரு ஆதாரம் அனுப்பலாமே என்று. வரிசை முடிந்து என் முறை வந்தது பூக்களால் மூடி மறைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளிப் பாதணிகள் இருந்தது. பாபா ஒரு மூன்றடி தூரத்தில் அமர்ந்திருந்தார். மண்டியிட்டு அந்தப் பாதணிகளைத் தொட்டு வணங்கினேன். ஓரத்தில் அமர்ந்திருந்த வடஇந்தியப் பெண்மணி ஒரு சிறிய கரண்டியில் சிறிது பொரியையும் பாதாம் முந்திரிப்பருப்பு கலந்த கலவையை அள்ளிக்கொடுத்தார். கையில் வாங்கிக்கொண்டு அங்கே மற்றொரு பாபாவின் படத்திற்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சாம்பலை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன். பாபாவின் ஆடை அலங்காரங்கள் நீக்கப்பட்டு ஒரு காவித் துணியை மட்டும் தலையோடு சேர்த்துப் போர்த்தி அமர்ந்திருந்தார். ஆரத்தி தொடங்கப் போவதாகச் சொன்னார்கள். நான் கூட்டத்தோடு சேர்ந்து அமர்ந்துகொண்டேன். ஆரத்தி முடியும் வரை கண்களை மூடி தியானித்தேன் ஆரத்திப் பாடல் இந்தியில் புரியாமல் இருந்தாலும் ஏதோவொரு உணர்வு மனம் முழுவதையும் ஆட்கொண்டிருந்தது. ஆரத்தி முடிந்து மெல்ல கண்விழித்தேன் என் கால்களில் இரத்தம் கட்டி மரத்துப்போயிருந்தது. தூக்கமுடியாமல் தூக்கித் தட்டி அவற்றை எழுப்பினேன். என்னை போலவே ஒரு நாலு பேர் எழுந்திரிக்க முடியாமல் அமர்ந்திருந்தனர். கால்கள் விழித்த பின் எழுந்து சென்று விளக்கை தொட்டு வணங்கிவிட்டு கீழே சென்றேன்.

ஒரு நீண்ட வரிசை வடபத்திர காளியம்மன் கோவிலைச் சுற்றிக்கொண்டிருந்தது. பிரசாதம் வழங்குவதாகக் கூறினார்கள். அங்கே ஏற்கனவே பிரசாதம் பெற்று உண்டுகொண்டிருப்பவர்கள் தட்டைப் பார்த்தேன். சாம்பார் சாதம், கேசரி, வடை, சோன்பப்டீ, பொங்கல் என செவ்வக வடிவ வெள்ளை தெர்மாக்கோல் தட்டில் வைத்து உண்டுகொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கே நாக்கு ஊறியது. திருமணம் ஆகும் முன் தனியாக அறை எடுத்து தங்கியிருந்த காலம் அது. நல்ல சாப்பாடு கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருப்பவனுக்கு இப்படி ஒரு விருந்து சாப்பாடு கிடைத்தால் விடுவேனா? வரிசையில் நின்று வாங்கி ஒரு கட்டுக் கட்டினேன். வரிசையில் நிற்பவரிடம் கேட்டேன் இப்படித்தான் தினமும் சாப்பாடு தருவார்களா என்று. அவர் எனக்குத் தெரியாது ஆனால் வியாழக்கிழமை நிச்சயம் கிடைக்கும் என்றார். அப்போது முடிவு செய்தேன் இனி ஒவ்வொரு வாரமும் பாபாவை தரிசிக்காமல் விடக்கூடாது என்று. இதை வெறும் நகைச்சுவைக்காக கூறவில்லை. அன்றைய என் மனநிலை அப்படித்தான் இருந்தது. அங்கிருந்து எப்படி இங்கு வந்தேன் என்பதை அடுத்தடுத்த வாரங்களில் எழுதலாம் என்றிருக்கிறேன். வாருங்கள் என்னோடு சேர்ந்து நீங்களும் நான் தரிசித்த பாபாவை தரிசிக்கலாம்.

ஓம் சாய்ராம்

– சாயி நாமம் ஒலிக்கும்

அடுத்தப் பதிவைப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

பாபாவும் நானும் (2)

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -