கடந்த பத்துக்கிழமைகளாக இயக்குநரும் பாடலாசிரியருமான ஆர்.வி.உதயகுமாருடன் இணைந்து நம் பாடும்நிலா பாடிக்கலக்கிய முத்தான பத்து பாடல்களைப் பார்த்தோம்.. எல்லாமே மெல்லிசை வகையான பாடல்கள்தாம்.. இயக்குநரின் விருப்பம் அவ்வாறு அமைந்திருப்பதே முதற்காரணம். சிற்றூர்ப்பின்னணியில் அமைந்த படங்களில் மாலைத்தென்றல் வீசுவதுபோல மெல்லிசைப்பாடல்கள் வைப்பதே சாலச் சிறந்ததாக இருக்கும் என்று இயக்குநர் எண்ணிருப்பாரோ! ஆனாலும் அதில் குறையேதுமில்லை.. காட்சிக்கு மேலும் அழகு சேர்ப்பதாகவே அமைந்திருக்கின்றன அத்தனை பாடல்களும்..
அதில் இன்னும் பார்க்காத சில பாடல்களைப்பற்றி ஒரு தனிப்பதிவாகச் சொல்லலாம் என்று எண்ணினேன். அதுதான் இப்பதிவு.
உன் சின்ன இடை மின்னல் என தினமும்
நெளியுதே நெளியுதே …
பாவையின் வேதனை பார்வையில் தீருமா?…
பொன்னாரமே கண் பாரம்மா
முந்தானை தான் பாரமா…
ராத்திரி ராத்திரி வாசனைப் பூப்பறி
வாசக் கதவை ஹேய் சாத்தலாமா?
பாயும் பாயும் சேர்க்கலாமா? ..
என்று விரகதாபம் கலந்த குரலில் நம் எஸ்.பி.பி கிறக்கும் குரலில் பாடுவதைக்கேட்டு நீங்களும் கிறங்காமலிருந்தால் வியப்புதான்..! பெரிய குடும்பம் படத்தில் வரும் தத்தி தத்தித் தாவிடும் தங்கக்கிளி நான்தானே என்ற பாடல்தான் இது. நம் பாடும்நிலாவுடன் சின்னகுயில் சித்ரா இணைந்து மயக்கிய ஒரு பாடல்.
நந்தவன வண்டு மோகம் அது உண்டு
மஞ்சள் வெயில் போல உன்னைச் சுட்டுவிட்டதா…
பொழியும் பனியிலே இதயம் இளகுதே…
என்று சரணத்தில் பாடிக்கொண்டே வரும் நம் பாடும்நிலா இறுதியில்
இனம் புரியா ஓஓ …
பரவசமா ஹ்ம்ம் ஹாஹாஹா…
என்ற வரியில் அந்தப் பரவசமா என்று கேட்கும் அழகில் நம்மை மயக்கிச் சுருட்டிவிடுவார்..
தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் எனச் சொல்லி முத்தம் இட்டதா
என்ற இப்பாடல் சுபாஷ் படத்தில் அமைந்த ஒரு மென்துள்ளிசைப்பாடல்.. பாடும்நிலாவுடன் ஈடுகொடுத்து இணைந்து கிறக்கியிருப்பார் நம் சின்ன குயிலும்… கேட்டுவிடுங்கள் மறவாமல்…
பட்டு மொகத்த வானத்துல பதிச்சா
நட்சத்திரங்கள் பட்டிமன்றம் நடத்தும்
எட்டி நில்லு வெண்ணிலவே தூரம் தூரம்
ஆடிடும் துளசிப் பூவே கண்ணன் உன்னை மறந்தானா?
அர்ச்சனைக்கு நீயும் போனால் வேண்டும் வரம் தருவானா?
காத்தக் கேளு தாயி ஒன்னப் பத்திப் பாடும் —
என்று தான் பாசம் காட்டிய பெண்ணைப்பற்றி புகழ்ந்து பாடுகிறார் எஸ்.பி.பி. அதிலும் அந்த ஆடிடும் துளசிப் பூவே , அர்ச்சனைக்கு நீயும் போனால் என்ற வரிகளைக் குரலுயர்த்திப்பாடிவிட்டு அதன்பின் வரும் கண்ணன் உன்னை மறந்தானா? , வேண்டும் வரம் தருவானா? என்ற வரிகளை சட்டென்று குரலிறக்கி மென்மையாகப் பாடுவது அத்துணைச் சிறப்பாக இருக்கிறது.
காக்கைச்சிறகினிலே என்ற படத்தில் வருகின்ற
கோலக்கிளியே கோலக்கிளியே கூடவே நீயும் வா வா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே மயக்கம் ஏன் மயிலே வா வா — பாடல்தான் இது.. அழகானதொரு தனிப்பாடல் இது…
கரும்பு கரும்புதான் – கடிக்குதே
எறும்பு எறும்புதான் – வயசுல
அரும்பு அரும்புதான் – மனசுல
துரும்பு துரும்புதான் – அழகுல
முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி
முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை
என்ற வரிகளில் துள்ளலையும் எள்ளலையும் ஆங்காங்கே கூட்டிக்குறைத்து நம் எஸ்.பி.பி பாடும் சுவையே தனிச்சுவைதான்.. தன்னிடம் வம்பு செய்த பெண்ணை நேரம்பார்த்துக் கிண்டலும் கேலியும் செய்வதாக அமைந்த பாடல்.. சும்மாவே ஆடும் குரல்வளைக்குச் சலங்கை கட்டிவிட்டால் என்னாகும்? இயல்பாகவே குறும்பும் விளையாட்டுத்தனமும் கொண்ட நம் பாடும் நிலா இம்மாதிரியான பாடல்களையெல்லாம் அல்வாத்துண்டுபோல பாடிவிடுவார்..
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
என்று அவர் பாடும்போது நம் செவிகளும் அவர் காலடியில் வழுக்கி விழுந்துவிடுகின்றன. கிழக்கு வாசல் படத்தில் அமைந்த இப்பாடல் நம் பாடும் நிலாவின் தனிப்பாடல்.
வெட்டி கதையில வேகம் கொறையல
வீண் பேச்சு ஏன் மானே
தட்டி கேட்டுக்க கிட்ட ஆளில்ல
நீ ஒன்னு தா மானே …
வெத்தலைய போட்டு போட்டு முத்தக்கறை நீ போட..
என்று காதல் முறுக்கில் தாபமேற்றிப் பாடும் எஸ்.பி.பி அடுத்து வரும்
பட்டி தொட்டி பக்கம் எல்லாம் லவ்வு லவ்வு லவ் ஆச்சி .. வரியில் குழைந்து உருகி நம்மையும் உருக்கிவிடுகிறார்..
பொன்னுமணி திரைப்படத்தில் வரும்
ஆத்துமேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா மொத்த கடன் தீராது
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா கெட்ட மனம் தேறாது
என்ற பாடல்தான் இது.. பாடலை கேட்டுவிட்டு நீங்கள் உடனே வெத்தலையைத் தேடிப்போய்விடாதீர்கள் மக்களே!!!
இவ்வாறு பல நல்ல பாடல்களை நம் எஸ்.பி.பிக்குக் கொடுத்ததன்மூலம் நம்மைப் பேரின்பத்தில் ஆழ்த்திய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்க்கு எத்துணை நன்றி சொன்னாலும் போதாதுதான்.. அதுவும் ஒருமுறை ஒருபாடலை எஸ்.பி.பிதான் பாடவேண்டும் என்று உறுதியாய் நின்று அதற்காக இசைஞானியின் சினத்திற்குக் கூட ஆளானாராம் ஆர்.வி. ஏனென்றால் அப்போது எஸ்.பி.பி அமெரிக்காவில் இருந்திருக்கிறார். என்ன ஆனாலும் பரவாயில்லை, அவர் வந்தபின் அவரே பாடட்டும் என்று காத்திருந்து அவரைப் பாட வைத்திருக்கிறார். அதுதான் “பச்ச மலப்பூவு நீ உச்சிமலத்தேனு ” என்ற மிகச்சிறப்பான பாடல். அதையெல்லாம் இன்னொருவர் குரலில் கற்பனைகூட செய்துபார்க்க துளியும் இடமளிக்காதபடி நம் செவிவழிநுழைந்து நம் மனத்தினில் நீக்கமற நிறைந்துவிடுவார்…
தனது படங்களில் பெரும்பாலான பாடல்களையும் பிற இயக்குநர்களுக்காக சில பாடல்களையும் எழுதியிருக்கும் இயக்குநரும் பாடலாசிரியருமான ஆர் .வி. உதயகுமார் இன்னும் நிறைய பாடல்கள் எழுதியிருக்கலாமே என்று நம்மை ஏங்க வைத்துவிடுகிறார். கொஞ்சுதமிழ், கெஞ்சுதமிழ் இரண்டையும் கலந்து நம் மனத்தைக்கட்டிப்போடும் பூமாலை வரிகளைக் கொடுத்திருக்கும் சிறந்ததொரு பாடலாசிரியர். அவருடன் இணைந்து நம் பாடும்நிலா செய்த பாட்டுப்பயணம் என்பது குளிர் நீரோடையின் மேற்பரப்பில் தென்றல் செய்யும் பயணத்தைப்போன்று இனிமையானது.
இரண்டு பாடலாசிரியர்களுடன் நம் எஸ்.பி.பியின் பாட்டுப்பயணத்தைப் பார்த்திருக்கிறோம்.. அடுத்த வாரம் புதிதாய் வேறொரு பாடலாசிரியரைப் பார்க்கலாம். அவரோடு நம் எஸ்.பி.பியின் பரிமாணங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்று ஒவ்வொரு பாடலாகப் பார்த்துத் திளைப்போம்.
பல்திறனாளர் ஒருவரின் முரணான பாடல்வரிகளுக்கு நம் எஸ்.பி.பி உயிரூட்டியிருக்கிறார்… முரண்களைக்கூட இத்தனை சுவையாக எழுதமுடியுமா? என்று பாடலாசிரியரும் , முரண்களை இத்தனை அழகாக்கப்பாடி நம்மை முணுமுணுக்க வைக்க முடியுமா? என்று நம் எஸ்.பி.பியும் வியக்க வைத்துவிடுகின்றனர்.
அடுக்குமொழி வானில் துள்ளிவிளையாடும் நிலா இன்றுமுதல்..!
இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்.. கவிதாயினி பிரபா தேவி அவர்களே.. கடந்த இருபத்தி இரண்டு வாரங்களாக கங்கை அமரன், உதயகுமார் ஆகிய மிகச்சிறந்த கவிஞர்கள் எழுதிய பாடல்களை சலித்தெடுத்து ஒவ்வொரு பாடலின் கவித்துவத்தையும் எங்களோடு மின் கிறுக்கல் மூலமாக பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி… ❣️?????
அடுத்த வாரம் யாராயிருக்கும்..?
அடுக்குமொழிக் கவிஞரென்றால்..TR இருக்குமோ!!!
ஒவ்வொரு பதிவையும் படித்து அதற்கான கருத்துகளை எடுத்துரைத்துத் தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் தங்களின் பேரன்புக்கு என் பேரன்பும் மகிழ்வாழ்த்தும் உரித்தாகுக அண்ணா ??????
ஆமாமாம்… அவரே அவரே…! ????