தேவனுடையதை
தேவனுக்கும்
ராயனுடையதை
ராயனுக்கும்
கொடுக்கச் சொல்கிறது தேவவாக்கியம்
தேவனும் ராயனும் சாத்தான்களாக
காலிப் பானைகளோடு
கண்ணீர் வடிக்கின்றனர்
பசியில் வேகும் ஜனங்கள்.
??????????????????????????
கடலலையில் மிதந்து சென்று
நுரையின் மேலிருக்கும்
அந்த வானத்தை கையில் ஏந்த
விரையும் காற்றின்
கனவுகள் உடைந்தபடியிருக்கிறது.
??????????????????????????
பொம்மையை கொஞ்சுகிறாள்
குழந்தையாய் மாறிவிட்டது
அவளை எல்லோரும்
பைத்தியக்காரி என்கிறார்கள்.
??????????????????????????
கோடுகளை அடுக்கடுக்காக தீற்றுகின்றேன்
ஓவியங்கள் உருவம் பெறுகின்றன
உயிரூட்ட
என் ரத்தத்தை வண்ணம் பூசுகிறேன்.
??????????????????????????
பழைய புதிய பூட்டுகளுக்குச்
சாவிகள் வைத்திருப்பவன்
சந்தையில் இருந்தான்
ஆயிரம் பூட்டுகள்
ஆயிரம் சாவிகள்
அவனிடம் இருந்தன
மரண ஜனன வீடுகளின் பூட்டுகளுக்கான
சாவிகள் மட்டும் இல்லையென்றான்.
??????????????????????????
மண்ணைத் தின்று மகா வீரர் வாழ்ந்திருக்கலாம்
புல்லைத் தின்று புத்தர் பொழச்சிருந்திருக்கலாம்
கறி தின்பதை என்னவோ
எங்களால் தவிர்க்கமுடியாது.
??????????????????????????
குளிர் காற்றில் நடுங்குகிறேன்
உடல் நழுவுகிறது
உயிர் மெல்ல
எட்டிப் பார்க்கிறது.
??????????????????????????
பயணத்தை துவங்குகிறேன்
போய் சேருமிடம் எங்கே ?
தெரியவில்லை
போய்த்தான் ஆகவேண்டும்.
??????????????????????????
பின்னோக்கி போகும்
உலகைப் பார்க்கிறேன்
முன்னோக்கி போகிறேன்
பின்னும் முன்னும் என்பன எவையென்று புரியாமல்.
??????????????????????????
பூ வீழ்கையில்
நீர் ஆடி
சலனமுறுகிறது
நீந்தும் குறுமீன்களின்
மத்தியில்
அதிர்வு பரவுகிறது
சிறு பதட்டம் உண்டாகி
நதி சற்று
நடுங்கி ஓய்கிறது.