பதின்மம்
கூத்தடிக்கும்
ரகளை பண்ணும்
வெறி கொண்டு ஆடும்
நேசிக்கும்
வீரம் காட்டும்
கனவுகள் காணும்
சாகஸங்கள் நிகழ்த்தும்
கற்பனைகளில் அலையும்
கட்டு மீறும்
வெடித்துரைக்கும்
அடங்க மறுக்கும்
சட்டென உடைந்து போகும்
ஏங்கும்
ஏமாறும்
கண்மூடித் தாவும்
துள்ளும்
துடிக்கும்
வெடிக்க உறுமும்
சாத்தானையும் கடவுளையும்
சமமாகப் பாவிக்கும்
சரி தப்பு அறியாது குழம்பும்
வெளித்தோற்றத்திற்கு மயங்கும்
உள் மனதுள் யாவற்றையும் புதைக்கும்
சுண்ணாம்புக்கும் வெண்ணெய்க்கும்
வித்தியாசம் தெரியாது
வெளுத்தெல்லாம் பாலென நம்பும்
மாற்று உடலை மோகிக்கும்
மாறுவதை மறுக்கும்
காற்றென நிலை மாற்றும்.
??????????????????????????
ஏணி பற்றிய கவலை
ஏணியின் மேல்
ஏறினேன்.
படிகள்
வளர்ந்து கொண்டேயிருந்தன.
இன்னும்
உச்சி வந்து சேர்ந்தபாடில்லை.
சலித்து
இறங்க முனைந்தால்
கீழ்படியில்
என்னை மாதிரி பலர்.
ஏறவா? இறங்கவா?
எனும் குழப்பத்தில்.
எனக்கென்னவோ
ஏணி பற்றிய
கவலை வந்தது.
??????????????????????????
அவள் என்னும் அழகிய ஓவியம்
முகம்
பிங்க் வண்ணக் கண்ணாடி..
கூந்தல்
கருமணல் புயல்..
இமைகள்
எருக்கம்பூ பஞ்சுகள்..
கண்கள்
வெண் கரும் மீன்கள்..
நாசி
தாழம்பூவின் மடல்..
செவிகள்
சித்தகத்திப் பூக்கள்..
உதடுகள்
படபடக்கும் பட்டாம்பூச்சிகள்..
பற்கள்
தென்னம்பாளைச் சரங்கள்..
கொங்கைகள்
நுனி சீவிய
செவ்விளநீர்க் காய்கள்..
கைகள்
மூங்கில் குருத்துகள்..
விரல்கள்
பனங்கிழங்குகள்..
உள்ளங்கைகள்
தேனடைகள்..
நகங்கள்
கனகாம்பர மொட்டுகள்..
இடை
உடுக்கையின் நடுப்பாகம்..
கால்கள்
தாமரைத் தண்டுகள்..
தொடைகள்
கோபுரங்கள் தாங்கும்
தந்தத் தூண்கள்..
பாதங்கள்
பாலாடை அடுக்குகள்..
கால் விரல்கள்
சலங்கை மணிகள்..
பசுங்கொடியாய்
என்னைப் பற்றிப் படருகிறாள்….