தமிழில் சமீப காலமாகக் குறுங்கதைகள் எழுதப்படுவதும் விவாதிக்கப்படுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. மலேசியாவிலும் குறுங்கதை அலை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உருவாகி இன்றுவரை பல வகைகளில் பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் 2019ஆம் ஆண்டு முகநூலில் 50 நாள்கள் 50 குறுங்கதைகள் என்கிற பதிவின் வழி குறுங்கதைக்குப் புத்துயிர் வழங்கியவரும் ‘கனவிலிருந்து தப்பித்தவர்கள்’ என்கிற தமது 35 குறுங்கதைகள் அடங்கிய நூலை எழுதி வெளியிட்டவருமான மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களை மின்கிறுக்கல் மின்னிதழுக்காக நேர்காணலை மேற்கொண்டோம்.
கேள்வி: தாங்கள் எப்பொழுது குறுங்கதை எழுத துவங்கினீர்கள்? ஏன்?
பாலமுருகன்: 2019ஆம் ஆண்டு முகநூலில் பதிவிடலாம் எனத் தொடங்கினேன். எழுத்தாளர் தயாஜிக்கும் இதனை ஒரு சவாலாக முன்வைத்தேன். 50 நாள்கள் 50 குறுங்கதைகள் எழுதலாம் என வேடிக்கையாக ஒரு சவாலில் தொடங்கியதுதான். பின்னர், இருவரும் முகநூலில் குறுங்கதைகளைப் பதிவு செய்தோம். அதற்குரிய வாசகப் பரப்பும் மெல்ல உருவாகத் துவங்கின. எங்களைப் பார்த்து ஆசிரியை கோமதி சுப்ரமணியம் அவர்களும் முகநூலில் குறுங்கதைகள் எழுதிப் பதிவிடத் துவங்கினார். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘நகுலன் வீட்டில் யாருமில்லை’ என்கிற நூலின் வழியேதான் நான் குறுங்கதைகளை வாசிக்கத் துவங்கினேன். துவக்கத்தில் குறுங்கதை என்பதைக் குறுகிய இலக்கிய வடிவம் என்பதோடு ஒரு நவீன நன்னெறிக் கதைகள் என்றே புரிதல் இருந்தது. ஆனால், எஸ்.ராவின் அந்தப் புத்தகம் புரிதலை மாற்றியமைத்தது. குறுங்கதையை எழுத முயலலாம் எனப் பலநாள் இருந்த எண்ணம் 2019ஆம் ஆண்டுதான் நிறைவேறியது.
கேள்வி: கவிதைக்கும் சிறுகதைக்கும் இடைப்பட்ட இலக்கிய வடிவம்தான் குறுங்கதை என நீங்கள் ஒரு கலந்துரையாடலில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி மேலும் தெளிவுப்படுத்த இயலுமா?
பாலமுருகன்: ஆரம்பத்தில் குறுங்கதை மீதான புரிதல் சிக்கலாகவே இருந்தது. தொடர் வாசிப்புதான் ஒரு கலை வடிவத்தின் மீதான இரசனையை உருவாக்கும். இரசனையே அக்கலை வடிவத்தின் புரிதலை மேம்படுத்த உதவுகிறது. உயிர்மை மின்னிதழில் தொடர்ச்சியாக வெளிவந்த பெருந்தேவியின் குறுங்கதைகளை வாசித்தபோதும் மேலும் சில பன்மொழி குறுங்கதைகளை வாசித்தபோதும் குறுங்கதையின் மீதான எனது புரிதலை விரிவாக்கின. குறுங்கதை, கவிதையிடமிருந்து கவித்துவத்தையும் சிறுகதையிடமிருந்து கதை சொல்லலையும் பெற்று உருப்பெற்ற வடிவமாக உணர்கிறேன். கவிதை சொற்பமான சொல்லாடல்களின் ஊடே கவித்துவத்தை எட்ட உதவும் பண்பைக் கொண்டிருக்கும். சிறுகதைப் பெருங்கதையாடலையும் தமக்குள் உள்வாங்கிக் கொண்டு ஒரு கச்சிதமான கதை சொல்லல் பண்பையும் கொண்டிருக்கும். இவை இரண்டினையும் தமது இரு எல்லை கோடுகளாகக் கொண்டு குறுங்கதை ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்துகிறது.
கேள்வி: குறுங்கதை எழுதும் போது வார்த்தைகள் கூடிவிடுமா என்கிற தயக்கத்தில் சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியாமல் தவித்த அனுபவங்களும் உண்டா?
பாலமுருகன்: தொடக்கத்தில் குறுங்கதை எழுதும்போது அது பக்க அளவில் சிறுகதையைப் போலவே நீண்டு சென்றதுண்டு. குறுங்கதை என்றால் ஒரு பக்க அளவிலும் 250 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்றும் சில விதிமுறைகள் நிலவுவதை அறிய முடிந்தது. நான் குறுங்கதைகள் எழுதும்போது இந்த விதிமுறைகளைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எந்தவொரு இலக்கிய வடிவத்தையும் பக்க அளவில் வைத்து அளவிட முடியாது. அவை கொண்டிருக்கும் தன்மைகளின் அடிப்படையிலேயே குறுங்கதைக்கும் சிறுகதைக்கும் ஒரு நூதனமான வேறுபாட்டை அறிய முடியும் என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக சிறுகதைக்கே உரிய நுட்பமான சித்தரிப்புகள் குறுங்கதைக்கு மிகுதியாகத் தேவையல்ல எனத் தோன்றும். சிறுகதை நுட்பமான காட்சிப்படுத்துதலின் வாயிலாக கூர்மை கொள்கிறது என்றால் குறுங்கதை அவற்றிலிருந்து சிறு பொறியைப் போன்ற அளவிலான காட்சி சித்தரிப்பில் கூர்மை அடைகிறது எனப் புரிந்து கொள்ளலாம். எனது சில குறுங்கதைகள் ஒரு பக்கத்திலே முடிந்ததுண்டு; சில ஒன்றரைப் பக்கம் வரை சென்றதுண்டு. பக்க அளவைப் பற்றிய பிரக்ஞையோடு நான் குறுங்கதைகளை எழுதியதில்லை.
கேள்வி: உலக இலக்கியங்களில் குறுங்கதைகள் தனித்த இலக்கிய வடிவமாக கொண்டாடப்பட்டாலும் தமிழில் அதற்கான போதுமான முயற்சிகள் இல்லை என எழுத்தாளர் எஸ்.ராவின் கருத்தை எவ்வாறு விவாதம் கொள்வீர்?
பாலமுருகன்: தமிழில் சிறுகதைக்கு இருக்கும் அளவில்கூட குறுங்கதைக்குத் தொடக்கத்திலிருந்து போதுமான இலக்கிய கவனம் கிடைத்ததில்லை என்கிற விமர்சனம் இருக்கவே செய்கிறது. ஒரு பக்கக் கதை, நொடிக் கதை, கடுகுக் கதை, பட்டாசுக் கதை, அரைப்பக்கக் கதை, படம் சொல்லும் கதை என்கிற பற்பல வடிவில் குறுங்கதைகள் வணிக இதழ்களின் பக்கங்களை நிரப்பி மலிந்து கிடந்த ஒரு காலகட்டம் உண்டு. வாழ்க்கையைப் பற்றிய ஆழமான அவதானிப்புகளும் புரிதல்களும் அற்று வெறும் திருப்புமுனை உண்டாக்கும் வாசக இன்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்படும் வடிவம்தான் குறுங்கதைகள் என்கிற போக்கு காலப்போக்கில் உண்டானதும் இதற்குக் காரணமாகும். இவ்வாறான சூழ்நிலையில் குறுங்கதைக்கு இலக்கியத் தகுதி இல்லை என்றும் சிறுகதை, நாவல் அளவிற்கு வாழ்க்கையின் கதையாடல்களை நிகழ்த்தும் அளவுக்கு நுட்பமற்ற ஒரு கலை வடிவம் எனவும் தீவிரப் படைப்பாளிகளும் குறுங்கதைகளை ஒதுக்கியிருக்கலாம் எனக் கருதுகிறேன். அதனாலேயே கடந்த காலங்களில் குறுங்கதைகள் தமிழில் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம். ஆனால், நான் முன்பே சொன்னது போல கவிதையும்கூட சொற்ப சொற்களால் இயற்றப்பட்டாலும் ஒரு நாவல் உருவாக்கும் கலை உச்சத்தைக் கவிதையினாலும் ஒரு வாசகனுக்குக் கொடுத்துவிட இயலும் என்கிற இலக்கியப் புரிதலுடன் குறுங்கதையை அணுகினால் அதன் கலைப் பெருமானத்தையும் உணர்ந்து கொள்ள இயலும் எனக் கருதுகிறேன்.
கேள்வி: எர்னெஸ்ட் ஹெமிங்வே, அகஸ்டா மாண்டிராஸோ போன்ற உலக இலக்கியவாதிகளின் சொற்ப சொற்களில் இருக்கும் குறுங்கதைகள் ஏற்படுத்தியிருக்கும் பெருமளவு தாக்கத்தை நோக்கும்போது பத்து பதினைந்து பக்கங்களுக்கான சிறுகதை இலக்கியம் அவசியம்தானா?
பாலமுருகன்: வாழ்வியலின் தருணத்தை ஒரு படைப்பாளன் எழுத நினைக்கும்போதே அதற்குரிய இலக்கிய வடிவத்தையும் தீர்மானித்துக் கொள்கிறான். இங்கு கவிதையாக்க வேண்டிய வாழ்க்கை, சிறுகதையாக்க வேண்டிய வாழ்க்கை என்று பாகுபாடுகள் இல்லை. தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வடிவத்திற்கேற்ற கலைத்தன்மையுடன் ஒரு படைப்பாளன் அனுபவத்தைத் திறக்கிறான். ஓர் இலக்கிய வடிவத்தின் மகத்துவம் என்பது அதன் பக்க அளவில் இல்லை என்பதை நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். அரைப்பக்கத்தில் எழுதப்படும் குறுங்கதையாக இருந்தாலும் இருபது சொற்களில் எழுதப்படும் கவிதையாக இருந்தாலும் இருநூறு பக்கங்களில் எழுதப்படும் நாவலாக இருந்தாலும் வாழ்வினைக் கடத்தும் கலை உச்சங்களை ஒரு படைப்பாளனால் தான் தேர்ந்தெடுக்கும் வடிவத்தைக் கொண்டு மொழியால் நிகழ்த்த முடியுமாயின் அதுவே மானுடத்தால் கொண்டாடப்படுகிறது. தாக்கம் என்பது பக்க அளவில் இல்லை; வாசகனும் படைப்பும் சந்தித்துக் கொண்டு இரசனை அலையால் அடையும் பேரனுபவத்திற்கான இடைவெளியை ஒரு படைப்பாளனால் உருவாக்க முடிவதில்தான் இலக்கிய வெற்றி அடங்கியுள்ளது.
கேள்வி: சிறுகதை, நாவல் எழுவதைவிடக் குறுங்கதை முயற்சி சவாலானது என்கிறீர்களா? இந்தச் சவாலை ஓர் ஆரம்பகால எழுத்தாளன் எவ்வாறு கையாள்வது?
பாலமுருகன்: படைப்பதே ஒரு சவால்தான். இன்று சிந்தித்து நாளையே எழுதிவிடும் அளவிற்கு அத்தனை எளிமையானதல்ல படைப்பு. படைப்பாளனின் மனத்தில் ஊறி, செரித்தும் பெருத்தும் பின்னர் கலையாவதற்கான நுட்பங்களைப் பெற்றும் தன்னை எழுத்தாக விரிவாக்கிக் கொள்கிறது. என் அனுபவத்தில் ஒரு நாவலைவிட கவிதை எழுதுவதைத்தான் நான் சவாலாகப் பார்க்கிறேன். கவிதை அத்துணைக் கூர்மையான செறிவான கலை வடிவம் என உணர்கிறேன். இது மற்ற படைப்பாளருக்கு மாறுபடலாம். சிலருக்கு சிறுகதையைவிட நாவல் எழுதுவது சவாலாக இருக்கக்கூடும். வெகுசிலர் நாவல் பெரிய கலை வடிவம், ஆக நான் கவிதை எழுதுகிறேன் என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அது சரியான இலக்கியப் புரிதலில்லாமல் அவர்கள் எடுக்கும் முடிவு. நாவல் நிறைய பக்கங்கள் எழுத வேண்டும் என்றும் கவிதையை ஒரே பக்கத்தில் வடித்துவிடலாம் என்றும் ஆக தனக்குக் கவிதைதான் எழுத முடியும் என்றும் மிகவும் தட்டையான ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இங்குப் பக்க அளவைக் கொண்டு இலக்கிய வடிவத்தின் கலை மதிப்பு தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
ஓர் இலக்கிய வடிவம் ஏற்படுத்தும் சவாலைப் படைப்பாளன் எப்படிச் சமாளிப்பது என்று கேட்டால் முதலில் அவன் தேர்ந்தெடுத்த அனுபவத்தை இலக்கியப் புரிதலுடன் அணுகும் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாசிப்பின் வாயிலாகத் தான் அடைந்த இலக்கிய நுண்ணுணர்வைக் கொண்டு எழுதும் போக்கைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் தமிழிலும் தமிழைத் தாண்டியும் விரிவான இலக்கிய வாசிப்பைக் கொண்டிருக்க வேண்டும். இவை எப்பொழுதும் சொல்லப்படுபவைகள்தான் என்றாலும் இதுவே செறிவான வழிமுறையும்கூட. இலக்கியம் வாசிப்பதையும் விவாதிப்பதையும் இளைஞர்கள் தீவிரப்படுத்திக் கொள்வதன் மூலம் இலக்கிய நுண்ணுர்வை எட்ட முடியும்.
கேள்வி: உங்களது குறுங்கதைகள் பெரும்பாலும் அளவான சொல்லாடல்களால் பிரபஞ்சத்தை நோக்கிய புரிதல்கள், தேடல்கள், அறிவியல் புனைவுகள் என விசாலமான பார்வையை முன் வைக்கின்றன. ஓர் எழுத்தாளன் குறுங்கதைகளுக்காக எவ்வாறான கதைக்கருவினைக் களமாக கொள்ளலாம்?
பாலமுருகன்: ஒரு வகைமைக்குள்தான் எழுதுவேன் என்கிற முடிவு இல்லாதவரை ஓர் எழுத்தாளன் பற்பல தளங்களில் பயணித்துத் தனக்கான கதைக்கருவினைப் பெற்றுக் கொள்ள முடியும். புலன்களைத் திறந்து வைத்தாலே கிட்டுவது ஆயிரம் என்பார்கள். எல்லாமே அனுபவங்களிலிருந்து தொகுத்துக் கொள்வதுதான். நான் கண்டதைக் கொண்டு அதனை இன்னும் கூர்மையாக்கி இலக்கியத் தன்மைகளோடு வழங்குகிறேன்; படைப்பிற்குள் இருக்கும் வாசக இடைவெளியின் வாயிலாக வாசகன் என்னையும் தாண்டிச் சென்று ஒரு புதிய அனுபவத்தைக் கண்டடைகிறான். அங்கணமே அவனுக்குள் கலை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தரிசனமாகவோ புரிதலாகவோ அவனுக்குள் விரிவடைகிறது. இப்படித்தான் கதைக்கருவினை நான் உற்று நோக்குகிறேன். எனக்கு ஏற்பட்ட மறுகணமே அவ்வனுபவம் இலக்கியமாகுமாயின் எவ்வாறான கலை நுட்பங்களையும் கலை அமைதியையும் கொண்டு புனைய சாத்தியப்பாடுகள் உண்டு என்பதையே ஆராய்வேன். கிடைக்கும் பட்சத்தில் அதனைப் புனைவாக்குவேன்; இல்லாவிட்டால் கடந்து சென்றுவிடுவேன். இந்தக் கதைக்கருதான் எனக்கு வேண்டும் இதைத்தான் நான் எழுதுவேன் போன்ற திட்டமெல்லாம் எனக்கில்லை.
கேள்வி: தற்கால இலக்கியச் சூழலில் குறுங்கதைகள் எனும் பெயரில் எழுத்து வடிவங்கள் நிறைந்து வருகின்றன. இதைக் குறித்து உங்கள் பார்வை என்ன?
பாலமுருகன்: பெரும்பாலும் இளைஞர்களும் எழுத்தாளர்களும் போட்டிகளுக்காக எழுதும் குறுங்கதைகளை வாசிக்க முடிகிறது. மனித மாண்புகளை உணர்த்தும் போக்கே அதீதமாகப் புனையப்படுவதாக உணர்கிறேன். நட்பு, உறவில் இடைவெளி, தொழில்நுட்பத்தால் உண்டாகும் இழப்பு, இயற்கைச் சீரழிவு, கோவிட் பெருந்தொற்றின் பாதிப்புகள் உருவாக்கிய விளைவுகள், அன்பு, காதல், மனிதநேயம் என இத்தகைய மானுட உயர்வுகளை மீண்டும் கட்டமைக்கும் பணியையே சமீபத்தில் எழுதப்படும் குறுங்கதைகளும் செய்கின்றன எனத் தோன்றுகிறது. வாசகனுக்கு இடைவெளி கொடுக்காமல் இதற்கு முன்பான நன்னெறிக் கதைகள் செய்ததையே நவீன நன்னெறிக் கதைகள் என்கிற சாயத்துடன் இவை நிகழ்த்துகின்றன. இவற்றைப் பெருங்குறையெனச் சொல்லவில்லை. இவற்றிலிருந்து மேம்படுவதற்கான சாத்தியங்களை உருவாக்கிக் கொள்ளத் தொடர்ந்து தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவசியம் என உணர்த்துகிறேன்.
கலையின் செயல்பாடு மானுட விழுமியங்களைப் பேசுவது மட்டும்தானா என்கிற கேள்விகளை இளைஞர்கள் எழுப்பிக் கொள்ள வேண்டும். வாழ்வினையும் மனிதர்களையும் இழிவுகளைவும் சிதைவுகளையும் இயற்கையையும் இயற்கையோடு உருவாகும் உறவுகளையும் முரண்களையும் என இன்னும் பற்பல தளத்தில் தத்துவம், அறிவியல், வரலாறு, உளவியல் என விரிவாக்கிக் கொண்டு கலையின் அமைதி கெடாமல் தர்க்கம் செய்து அடையும் இடமே இலக்கியமெனப் புரிந்து கொண்டு நகர்ந்திட வேண்டும். அவை நிகழுமாயின் தற்போதைய எழுத்து முறையும் மாறுபடும்.
கேள்வி: மலேசியாவில் தற்சமயம் குறுங்கதையின் வளர்ச்சி எப்படி உள்ளது?
பாலமுருகன்: மலேசியாவில் குறுங்கதை தொடர்பான உரையாடல்கள், போட்டிகள், விமர்சன அரங்குகள் தொடங்கி சிறப்பாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புலனக் குழுவில் பயணிக்கும் எழுத்தாளர்களுக்குக் குறுங்கதை போட்டி நடத்தியிருந்தது. அப்போட்டிக்கு நான் நடுவராக இருந்து குறுங்கதைகளுக்கான விமர்சன அரங்கையும் வழிநடத்தினேன். தற்சமயம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ராகா பண்பலையும் இணைந்து இளைஞர்களுக்கான குறுங்கதை போட்டியையும் நடத்தி வருகிறது. மேலும், எழுத்தாளர் தயாஜி அவர்கள் ‘அந்தக் கண்கள் விற்பனைகல்ல’ என்கிற தமது 101 குறுங்கதைகள் அடங்கிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து தன் வலைப்பக்கத்தில் குறுங்கதைகள் எழுதியும் வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் பூச்சோங் வாசகர் வட்டமும் தேசிய அளவில் குறுங்கதை போட்டி நடத்தியுள்ளார்கள். கடந்தாண்டு தொடங்கி குறுங்கதைகள் தொடர்பான போட்டிகள் மிகுந்த கவனம் பெற்று வருவதை நல்ல தொடக்கமாகப் பார்க்க முடிகிறது. அதே சமயம் விமர்சனமும் இதுபோன்ற படைப்பின் தரத்தினை மேம்படுத்த உதவும் என்பதையும் இயக்கங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆரோக்கியமான முறையில் இலக்கியப் பின்புலத்துடன் வைக்கப்படும் விமர்சனத்தை ஏற்கும் பண்பினை இளையோர்கள் மத்தியில் வளர்ப்பதும் அவசியமாகும். தனக்குப் பாராட்டு மட்டும்தான் வேண்டும் என்று ஒரு வேலி போட்டுக் கொள்வது காலப்போக்கில் அவர்களின் எழுத்திற்குச் செய்து கொள்ளும் துரோகமாகிவிடும். இது அனைத்துக் கலை வடிவத்திற்கும் பொருந்தும்.
நேர்காணல்: காந்தி முருகன், ஜெயக்குமார்
நல்ல விளக்கம் பாலா.
மிக்க நன்றி சார்