நீர்மை ஓவியங்கள்

கவிதை

- Advertisement -

மரத்தினூடே புகுந்தோடுகிறது காற்று
கிச்சு கிச்சு மூட்டலில்
சிரிக்கிறது மரம்
குழந்தை விளையாட்டு
ஆயிரம் உண்டிங்கு சாதி
அடிதடி அதன் நீதி
அழிவில் திளைக்குது மனிதஜாதி
புண்கள் பூக்களானது
பூக்கள் புண்களானது
மண்ணெங்கும் வலி
தொலைந்து தொலைந்து
காலத்தின் சுவடுகள்
என்னுள் பூக்களாய் பூத்து பூத்து
என்னை நினைவுபடுத்துகின்றன
பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள்
பிடிக்காதவர்கள் பிடித்தவர்கள்
அவரவர் மனசு மட்டுமே அறிந்தது
அடங்கியிருங்கள்
சொற்படி கேளுங்கள்
குழந்தைகள் முளையிலே கிள்ளப்படுகிறார்கள்
சிம்மம் வேட்டையாடுகிறது
சிங்கத்தைக் கண்டதும்
இரையை விட்டு விலகுகிறது
பெண்ணை ஆண்
ஆளுகை செய்கிறான்
ஆடைக்குப் பின்னால் அரசியல்
அடங்கா வெறி கொண்டு கொக்கரிக்கிறது
ஆடையின்றி அதிகாரம் கோலோச்சியதில்லை
கனவுகளை வரைய முனைகிறேன்
நவீன ஓவியங்களாய் குவிகின்றன
அதில் நான் கண்ட கனவு எதுவுமில்லை.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -