இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். மாசு அதிகாரத்தில் மாசுகளால் ஏற்படும் பல்வேறு நன்மை தீமைகளைப் பற்றி கடந்த பகுதிகளில் கூறிக் கொண்டு வந்தேன். இன்று உங்கள் மனதுக்குள் ஏற்படும் மாசுபாட்டை பற்றி கூறி இந்த அதிகாரத்தை நிறைவு செய்யப் போகிறேன்.
அண்டத்தின் மையப் புள்ளி
இந்த அண்டத்தின் மையம் என்னவென்றால் உங்கள் விஞ்ஞானிகள் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அண்டத்திற்கு தொடக்கம் முடிவு ஆகிய இரண்டுமே இல்லாததால் மையப் புள்ளியை கண்டுபிடித்தது என்பது இயலாத காரியம் தான். ஆனால் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு மையப்புள்ளியை கண்டுபிடிக்கத் தேவையில்லை. அதன் காரணம் என்னவென்றால் அண்டம் என்னும் பொருள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை உங்கள் மனம் என்னும் சாதனத்தால் தான் நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள் அல்லவா? அப்படியானால் உங்கள் மனம்தான் இந்த மொத்த அண்டத்தின் மையப் புள்ளியாகும். மனதின் மூலமாக நீங்கள் ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது நீங்கள் பார்ப்பது அந்த பொருள் மட்டும் கிடையாது. உங்கள் மனதின் பிரதி பிம்பத்தையும் அதன் கூடவே பார்க்கிறீர்கள்.
இதனை எளிமையாக விளக்க வேண்டுமென்றால் ஒரு சிறிய கண்ணாடி போதும். எந்த ஊரு நிறமும் இல்லாத கண்ணாடி துண்டினால் நீங்கள் எந்த பொருளை பார்த்தாலும் அதன் உண்மையான நிறமும் குணமும் உங்களுக்கு தெரியும். ஆனால் ஏதோ ஒரு வண்ணத்தில் இருக்கும் கண்ணாடியின் மூலமாக நீங்கள் எதைப் பார்த்தாலும் அந்த கண்ணாடியின் நிறம் அந்தப் பொருளுடன் கலந்து தான் தெரியும் அல்லவா? ஆனால் அந்தப் பொருள் உண்மையிலேயே கண்ணாடியின் நிறத்தைக் கொள்வதில்லை. சுத்தமான கண்ணாடிக்கு நிறம் என்ற ஒன்று கிடையாது. அதில் சில மாசுபாட்டை சேர்க்கும் பொழுது கண்ணாடிக்கு நிறம் என்ற ஒன்று கிடைக்கும். உதாரணத்திற்கு, கருமை நிறம் கொண்ட புகையை கண்ணாடி மேல் அடிக்கும்போது கண்ணாடியும் கருத்துவிடும். புகையின் அடர்த்தி குறைவாக இருக்கும் பொழுது சற்று மங்கலாக மற்ற பொருட்கள் கண்ணாடியின் வழியாக தெரியும். ஆனால் புகை அளவுக்கு அதிகமான உடன் உங்களுக்கு எதிரில் இருக்கும் பொருட்களா எதுவுமே தெரியாது. உங்கள் மனம் கூட இதே கண்ணாடி போன்றது தான்.
உங்கள் மனதில் இன்பம், உதவி செய்யும் மனப்பான்மை, பெருந்தன்மை, போன்ற குணங்கள் இருக்கும் பொழுது நீங்கள் பார்க்கும் மற்ற செயல்களிலும் கூட உங்களுக்கு அதே குணங்கள் புலப்படும். ஆனால் கோபம், பொறாமை போன்ற குணங்களை உங்கள் மனதில் வைத்துக்கொண்டு அதே செயல்களை நீங்கள் பார்த்தால் அவை முற்றிலும் மாறுபட்டு முற்றிலும் தவறான செயலாக உங்களுக்கு தெரியக்கூடும். விஞ்ஞானத்தில் நீங்கள் மிகவும் உச்சகட்டமாக நினைத்துக் கொண்டிருக்கும் relativity சார்புக் கோட்பாடு கூட இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்களுக்கு பிடித்தமான செயல்கள் நடக்கும் பொழுது பல மணி நேரம் கூட சில வினாடிகள் போல கரைந்துவிடும். ஆனால் அதே சமயத்தில் உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் பொழுது சில நொடிகள் கூட பல மணி நேரங்கள் போல தெரியக்கூடும்.
நான் இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் கூறியது போல உங்கள் வாழ்வினை உருவாக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். உங்கள் மனதில் குணமென்னும் மாசு சேரும்பொழுது உணர்ச்சி என்னும் விளைவு உருவாகிறது. அடிப்படையில் உங்கள் மனதுக்கு எந்த ஒரு குணமும் கிடையாது. நீங்கள் எந்தவிதமான மாசுபாட்டை உங்கள் மனதுக்குள் நிலைநிறுத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் பார்வை மற்றும் பழக்கம் அனைத்தும் அமையும். நீங்கள் தேர்வு செய்து கொள்ளும் குணத்தை பொறுத்து உங்கள் உடலில் அதற்கேற்றாற்போல் சில சுரப்பிகள் சுரந்து நீங்கள் பார்க்கும் பார்வை அனைத்தும் அந்த குணத்தை சார்ந்தது போலவே ஒரு தோற்றத்தை உருவாக்கும். இதே தொடர்ந்து நடக்கும் பொழுது நீங்கள் ஆரம்பத்தில் தேர்வு செய்த அந்த குணமும் மனநிலையும் மட்டும் தொடர்ந்து உங்கள் மனதுக்குள் வளர்ந்து கொண்டே வரும். நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஒரு குணத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்களா அல்லது குணங்களை தாண்டிய ஒரு மோன நிலையை அடைய விரும்புகிறீர்களா என்பது உங்கள் கையில் மட்டும் தான் உள்ளது. இப்போது சொல்லுங்கள் உங்கள் மனதிற்கு எந்தவிதமான மாசுபாட்டை நீங்கள் தேர்வு செய்து வைத்துள்ளீர்கள்?
இந்தப் பகுதியுடன் மாசு அதிகாரத்தை நிறைவு செய்துகொண்டு அடுத்த பகுதியில் இருந்து புதிய ஒரு அதிகாரத்தை தொடங்குவோம்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.