நான்காம் பரிமாணம் – 80

16. காற்றதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். காற்றதிகாரத்தில் காட்டுக்கும் உங்கள் வாழ்வுக்கும் உள்ள பல்வேறு சம்பவங்களை பற்றி கூறிக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த அதிகாரத்தின் நிறைவுப் பகுதியாக உங்கள் உடல் மற்றும் மனதுக்குள் காற்று எவ்வாறு செயல்படுகிறது என்று விளக்கப் போகிறேன்.


மூச்சுக்காற்று


நீங்கள் அனைவரும் மூச்சு விடுவதற்கு காற்று இன்றியமையாதது என்று உங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இதற்கும் உயிருக்கும் வேறு ஒரு தொடர்பும் உள்ளது. அதனை விளக்குவதற்கு முன்னால் ஒரு சிறிய எடுத்துக்காட்டை கூறிவிடுகிறேன். ஒரு சிறிய மர அடுப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த அடுப்பு நன்கு எறிவதற்கு ஊதுகுழல் கூட இருக்கும். ஊது குழல் மூலமாக காற்றை அனுப்பும் பொழுது அடுப்பு எரிந்து அதன் சூடு வேகமாக பாத்திரத்தில் பரவும். அந்த அடுப்புக்கு நீங்கள் பயன்படுத்தும் கருவி மற்றும் வகை தான் இரும்பை உருக்கும் பட்டறையில் கூட பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் அடுப்பில் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கும் நீங்கள் வைத்திருக்கும் சாதாரண ஊதுகுழலுக்கு பதிலாக ஒரு இயந்திரத்தின் மூலமாக வேகமாக காற்றை ஊதுவார்கள். ஆக நீங்கள் சாதாரணமாக அடுப்பு எரிப்பதற்கும் பட்டறையில் இரும்பை உருக்குவதற்கும் உள்ள வித்தியாசம் காற்றின் வேகம் மட்டும் தான். இரும்பு பட்டறையில் இறக்கவும் கழியும் மிகவும் வேகமாக தீர்ந்துவிடும். ஆனால் வீட்டில் அடுப்பெரிக்கும் பொழுது பிறகு மிகவும் மெதுவாகத்தான் காலியாகும்.


இதற்கும் உங்கள் உடலுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் உலகில் உள்ள விஞ்ஞானிகள் இதனை ஒரு மிகப் பெரும் ஆராய்ச்சியாக செய்தனர். ஒரே மாதிரி உடல் வலிமையும் ஆரோக்கியமும் கொண்ட மனிதர்களை கண்டுபிடித்து அவர்களுடைய சராசரி இதயத் துடிப்பை அளந்து பார்த்தனர். ஒரே மாதிரி ஆரோக்கியம் கொண்ட மனிதர்களுக்குக் கூட இதயத்துடிப்பில் சில வித்தியாசம் இருந்தது. சிலருக்கு அது மிகவும் வேகமாகவும் மற்ற சிலருக்கு மிகவும் மெதுவாக துடித்தது. பின்பு அவர்களை தொடர்ந்து கவனித்து வந்தது விஞ்ஞானிகளுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. ஒரே மாதிரியாக உடல் வலிமை கொண்டவர்கள் கூட இதயத்துடிப்பு மாற்றத்தால் அவர்களுடைய வாழ்நாள் கணக்கு முற்றிலும் மாறியது. அதாவது மெதுவாக இதயம் துடிப்பவர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழ்ந்தனர். அதே உடல் வலிமையுடன் இதயம் வேகமாக துடிக்கும் நபர்கள் அனைவரும் மற்றவர்களைவிட வேகமாக இறந்து விட்டனர்! இது ஒருவரிடம் மட்டும் நடத்தப்பட்ட ஆராய்ச்சி கிடையாது. ஒரு மிகப்பெரும் குழுவை தொடர்ந்து கவனித்து வந்து அதன் பின்பு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் ஆகும். 


நீங்கள் சின்ன வயதில் ஆமை முயல் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். முயல் வேகமாக ஓட முடிந்தாலும் தன்னுடைய சோம்பேறித்தனத்தால் அது ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போனது அல்லவா? அதுபோலவே முயல் வேறு ஒரு முக்கியமான விஷயத்திலும் ஆமையிடம் தோற்றுப்  போகிறது. முயலானது ஒரு நிமிடத்திற்கு சுமார் 200 இதயத் துடிப்புகள் வரை கூட கொண்டிருக்கும். ஆனால் இதன் அதிகபட்ச ஆயுட்காலம் வெறும் ஒன்பது ஆண்டுகள் மட்டும்தான். ஆனால் மறுபுறத்தில் மிகவும் மெதுவாக இயங்கும் பசுபிக் கடலில் இருக்கும் ஒரு வகையான ஆமை ஒரு நிமிடத்திற்கு வெறும் ஆறு இதயத்துடிப்பு மட்டும்தான் கொண்டிருக்கும். அதே சமயத்தில் சுமார் 300 ஆண்டுகள் வரை இது உயிர் வாழும்! பாலூட்டிகளில் மிகவும் வேகமாக இதயம் துடிக்கும் Pygmy Shrew எனும் விலங்குக்கு ஒரு நிமிடத்திற்கு 1400 முறை இதயம் துடிப்பதால் இதன் அதிகபட்ச ஆயுட்காலம் ஒன்னேகால் வருடம் தான். இதிலிருந்து ஒன்றை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ளலாம். உயிர் வாழ்வது என்பது நீங்கள் காற்றை எவ்வாறு உங்கள் உடலுக்குள் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்துதான். நீங்கள் அதிக காலம் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தால் உங்கள் மூச்சை சரியான முறையில் கட்டுப்படுத்தி பயன்படுத்த வேண்டும். 


மூச்சை எவ்வாறு கட்டுப்படுத்துவது? குறைவாக இதயம் துடிப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அமைதியை கடைபிடிக்க வேண்டும். ஒரு தெரு நாய் உங்களை பின் தொடர்ந்து துரத்தி வருவது போல கனவு வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் இதயம் மிகவும் வேகமாக துடிக்க ஆரம்பித்து விடும். நீங்கள் உண்மையிலேயே ஓடாமல் உறங்கிக்கொண்டிருந்தால் கூட இதயம் மிகவும் வேகமாக துடிக்க ஆரம்பித்து விடும். அதே சமயத்தில் உங்கள் மனதில் அன்பும் கருணையும் நிறைந்து ஒரு ஆனந்தமான நிலையில் இருந்தால் இது மிகவும் லேசாகிவிடும். ஆகவே இதயத்தில் இருக்கும் அன்பு உங்கள் இதயத்துடிப்பை சீராக்கி உங்கள் வாழ்நாளை யும் அதிகரிக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும். ஆனால் காற்றின் பங்களிப்பு அத்துடன் நின்று போய் விடுவதில்லை. உங்கள் மூச்சை தொடர்ச்சியாக நீங்கள் கவனித்து வந்தால் அதற்குள் இருக்கும் உங்களைப்பற்றிய தன் உணர்வை தூண்டி வேறு ஒரு அமைதியான நிலைக்கு எடுத்து செல்லும். புத்தர் முதலாக உலகில் வாழ்ந்த பல்வேறு முகங்களும் இதனை கடைபிடித்து வாழ்க்கையின் ஒரு உன்னத நிலையை அடைந்தனர். முடிந்தால் நீங்களும் முயன்று பாருங்கள்.


உலகின் தொடக்கம் முதலாக உங்கள் உள்ளுணர்வு வரை காற்று எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கடந்த ஐந்து பகுதிகளில் கூறி வந்தேன். இத்துடன் இந்த அதிகாரத்தை முடித்துக் கொண்டு அடுத்த பகுதியில் வேறு ஒரு புதிய அதிகாரத்தில் சந்திப்போம்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -