நான்காம் பரிமாணம் – 74

15. இருமை அதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


காலம் என்னும் நான் இருமை அதிகாரத்தில் உலகியல் விஷயங்களில் நடக்கும் பல்வேறு இருமைகளைப் பற்றியும் சென்ற பகுதியில் பார்த்து வந்தோம். இந்த இருமையானது வெளியுலகில் மட்டுமல்லாமல் உடலுக்குள்ளும் கூட முக்கியமான பங்காற்றுகிறது. இதுக்கு முதலில் உங்கள் மூளையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதனை இந்த பகுதியில் பார்க்கலாம்.


செம்புரையாக்கம்


உலகில் உள்ள முதுகெலும்பு உள்ள அனைத்து பிராணிகளின் மூளைக்கு ஒரு முக்கியமான ஒற்றுமை உள்ளது. இதனை மூளையின் செம்புரையாக்கம் (Brain laterization) என்று கூறுவார்கள். இதற்கும் இருமைக்கும் என்ன சம்பந்தம் என்பதைத்தான் உங்களுக்கு விரிவாக கூறப்போகிறேன். அதற்கு முன்பாக ஒரு சிறிய எடுத்துக்காட்டை கூறிவிடுகிறேன். உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு நவீன மருத்துவ முறையை பின்பற்றினால் முதலில் என்ன செய்வீர்கள்? உங்கள் உடலில் உள்ள நோயின் தன்மையை அடிப்படையாக அறிந்துகொள்ள ஒரு பொது மருத்துவரை அணுகுவீர்கள் அல்லவா? அதன்பின்பு நோயின் குணத்திற்கு ஏற்ப அந்தந்த பகுதிகளுக்கான சிறப்பு மருத்துவரை அணுகுவீர்கள். இதற்கு என்ன காரணம்? பொது மருத்துவர் என்பவர் உடலின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு அணுகாமல் மொத்த உடலையும் பொதுவாக பரிசோதனை செய்வதால் எந்த பகுதியில் பிரச்சனை இருக்கிறது என்று கண்டுபிடிப்பார். மொத்த உடலையும் பரிசோதனை செய்ய முடிந்த மருத்துவர் அதன் உள்ளே இருக்கும் சிறு பகுதிக்குள் மட்டும் அதிக நேரம் செலவிட முடியாததால் அந்த வேலையை சிறப்பு மருத்துவரிடம் விட்டுவிடுவார். சிறப்பு மருத்துவர் என்பவர் மொத்த உடலையும் பார்க்காமல் ஒரு சிறு பகுதிக்குள் தன்னுடைய கவனத்தை செலுத்துவதால் அந்தப் பகுதிக்குள் உள்ள அனைத்து நோய்களையும் கண்டறியும் வல்லமை பெற்று இருப்பார். அது சரி. இந்த எடுத்துக்காட்டும் உங்கள் மூளைக்கும் என்ன சம்பந்தம்?

உலகில் உயிர்கள் முதலில் தோன்றிய பொழுது அதனுடைய மூளை என்பது முழுவதும் வளர்ச்சி அடையாமல் இருந்தது. இந்த மூளைக்கு உடலை முழுமையாக கட்டுப்படுத்தும் திறன் அவ்வளவாக இல்லை. அதனால் மூளைக்கு உடலில் உள்ள ஒவ்வொரு திசுஉடன் தொடர்பு கொள்ள வேண்டிய நரம்புகள் கூட அவ்வளவாக வளர்ச்சியடையவில்லை. இந்த ஆதிகால மிருகங்களின் மூளை பொதுமருத்துவர் போன்றது. இந்த மூளையின் உதவியால் அந்த உயிரினங்களாக உயிர் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் இவைகளுக்கு அதிகமான புத்திசாலித்தனம் கிடையாது. அதன் பின்பு மூளை சிறிது சிறிதாக வளர்ச்சியடையத் தொடங்கிய உடன் உடலிலுள்ள அனைத்து திசுக்களையும் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வசதியான தொடர்பு சாதனம் தேவைப்பட்டது. அந்தத் தொடர்பு சாதனம் என்ன முதுகுத்தண்டு. தற்பொழுது கூட முதுகுத்தண்டு உள்ள அனைத்து உயிரினங்களும் மற்ற உயிரினங்களை விட அறிவாற்றல் அதிகம் கொண்டு இருப்பதை உங்களால் பார்க்க முடியும். மனிதர்களாகிய நீங்கள் கூட இந்த முதுகுத்தண்டு உள்ள விலங்குகளில் ஒருவர்தான். 


இந்த முதுகுத்தண்டு உள்ள அனைத்து பிராணிகளுக்கும் செம்புரையாக்கம் எனப்படும் ஒரு விசேஷ குணம் உலகில் உண்டு என்று ஆரம்பத்தில் கூறியிருந்தேன். அது என்னவென்றால் மூளையின் மொத்த பகுதியும் ஒரே வேலையை செய்யாமல் ஒவ்வொரு பகுதியும் தனக்கென்று ஒரு பணியை எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக இருமை படுத்திக் கொண்டே இருப்பதுதான். இதன் முதல் நிலையாக மூளையில் வலப்புறம் மற்றும் இடப்புறம் தன்னை முழுமையாக இருமை படுத்திக் கொள்கிறது. மனித மூளையின் வலது பக்கம், உங்களுடைய கற்பனை மற்றும் கலைத் திறன் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் இடது புறத்தில் உள்ள மூளை, பகுப்பாய்வு, தர்க்கவியல் போன்ற திறனை கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. ஒன்றாக இருந்த மூளை இரண்டு பாகங்களாக பிரிந்து இயங்கி வருவதால் ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறப்பு மருத்துவர் போல தனக்குரிய திறனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள முடியும். வலது பக்கம் இடது பக்கம் என்று இரண்டாகப் பிரித்து கொள்வதுடன் மட்டும் இந்த இருமை முடிந்துவிடுவதில்லை. அதற்குள்ளேயே தொடர்ச்சியாக இரண்டாக பிரிந்து சென்று தனக்கு தேவையான அனைத்து திறனையும் வளர்த்துக் கொள்ளும் வரை பிரிந்து கொண்டே இருக்கிறது. இந்தத் திறனை வளர்த்துக் கொள்ளும் செயல்தான் அனைத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியாக கூட மாறுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால்  இருமை தான் உங்கள் அறிவாற்றலின் அடிப்படையாக இருக்கிறது. நீங்கள் வாழ்வில் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒருவிதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் மற்ற பல துறைகளிலும் சிறிதுகூட திறமை அற்றவராக இருப்பார். இதற்கு அடிப்படை காரணம் இருமை தான். மூளையின் செயல்பாடு இரண்டாக பிரிந்து கொண்டே வரும் பொழுது, ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்தி மற்ற பகுதிகளை கவனிக்காமல் விடுவதால் வரும் பின்விளைவு தான் இது. இருமை தான் அறிவு என்றும் அழைக்கப்படுகிறது என்று இப்பொழுது உங்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும். ஆனால் இத்துடன் இருமை நின்றுவிடுவதில்லை. உங்கள் மனதின் அடிப்படையாகவும் கூட விளங்குகிறது. அது எப்படி என்று அடுத்த பகுதியில் கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

  1. Wonderful…. ,,

    New dimension way of thinking in your articles…

    Evryone can easily understand while read..
    Please keep it to discover everyone’s understanding…

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -