நான்காம் பரிமாணம் – 65

14. அக அதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். அக அதிகாரத்தில் உலகிலுள்ள பொருளியல் சார்ந்த அகத்தைப் பற்றி பரவலாக பார்த்துவிட்டோம். இந்தப் பகுதியில், மனம் என்னும் அகத்தையும் பார்த்துவிட்டு இந்த அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரலாமா?

மனதிற்குள் ஒரு குப்பைத்தொட்டி

உங்கள் வீட்டருகே உள்ள குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யாமல் தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் விளைவுகளை சென்ற பகுதியில் பார்த்தோம். வெளியில் உள்ள குப்பைத் தொட்டியை சாதாரணமாக நோட்டம் விடுவது மூலமாகவே அதன் நிலைமையை உங்களால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் மனதிற்குள் சேரும் குப்பையை தெரிந்து கொள்வது எப்படி? உங்கள் புறக்கண்களால் மனதிற்குள் ஊடுருவ முடியாது. அதனால் மனதின் குப்பையை அளப்பதற்கு சிறந்த அளவை என்பது உங்கள் மனத்தை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதுதான். இதனை இன்னும் விரிவாக கூறுகிறேன் கேளுங்கள். உங்கள் வீடு என்னும் அகத்தை நீங்கள் மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அங்கே வசிப்பதற்கு நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் ஆசைப்படுவார்கள் தானே. அதே சமயத்தில் அந்த வீடு மிகவும் அசுத்தமாக இருந்தால், நீங்கள் உட்பட அனைவருமே அந்த வீட்டை விட்டு விலகி இருப்பதற்கு தான் முயற்சிப்பீர்கள். இதே விளக்கம் உங்கள் மனதுக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் மனதை சுத்தமாக வைத்திருந்தால், உங்களுக்கு பொழுதுபோக்கு, போதை பழக்கம் போன்ற எதுவுமே தேவையில்லை. போதைப்பழக்கம் என்ற உடன் மிகவும் ஆபத்தான லாகிரி வஸ்துகள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் அன்றாடம் செய்யும் சிறு செயல்கள் கூட ஒரு போதை பழக்கமாக மாறக்கூடும். உதாரணமாக, சிலர் வாகனங்கள் ஓட்டும் பொழுது மிகவும் சந்தோஷமான ஒரு நிலையில் காணப்படுவர். இதற்கு காரணம் என்னவென்றால், முழு கவனத்தையும் செலுத்தி வாகனத்தை ஓட்டும் பொழுது மனதின் ஓட்டத்தை பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் முழுமையாக மனதிடம் இருந்து விடுதலைப் பெற்று வாழ முடிகிறது. அந்த சமயத்தில் மனதின் எந்த ஒரு குப்பையும் உங்களை சிரமத்திற்கு உள்ளாக்க முடியாது. எனவே நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறீர்கள். அதனால். உங்கள் மனதில் எவ்வளவு குப்பை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் மிகவும் எளியது தான். ஒரு சில நிமிடங்கள் மட்டும் வேறு எந்த ஒரு வெளிப்புற செயலையும் செய்யாமல் கண், காது போன்ற புலன்களை பயன்படுத்தாமல் அமைதியாக உட்கார்ந்து கொள்ள முயற்சி செய்தால், நீங்கள் எந்த மனநிலையில் நிலை பெறுகிறீர்கள் என்பதுதான் உங்கள் அகத்தின் உண்மை நிலவரம். அகம் முழுவதும் சுத்தமாக இருந்தால் வேறு எந்த ஒரு தேவையும் இல்லாமல் மகிழ்ச்சி அடைந்து விடுவீர்கள். அதே சமயத்தில் மனதின் அழுக்கு அதிகமாக இருந்தால், கோபம், பயம், வெறுப்பு, பேராசை போன்ற பல்வேறு குணங்கள் தானாகவே வெளிவருவதை  நீங்கள் காணலாம். 

சரி. அகத்துக்குள் இருக்கும் பல்வேறு குப்பைகளை கண்டுகொண்டால், அதனை எவ்வாறு தான் சரி செய்வது? கோபத்தை அடக்க முயல்பவர்கள் பெரும்பாலும் அதனிடம் தோற்றுப்போய் அதன் காரணமாகவே பெரும் கோபத்துக்கு உள்ளாகின்றனர். அதையும் மீறி மனதை சுத்தமாக சிறிதுகாலம் வைத்துக்கொண்டாலும் மீண்டும் எப்படியோ மனதுக்குள் அழுக்கு நுழைந்து விடுகிறது. இந்தப் போராட்டத்துக்கு நடுவில் வாழ்வதே ஒரு மிகப்பெரும் சவால் ஆகிவிடுகிறது. இதனை சரி செய்வது உண்மையிலேயே மிகவும் எளிதானது. இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்து அகமும் சுத்தமாக இருப்பதற்கு ஒரே ஒரு விதியை மட்டும் பின்பற்றினால் போதும்! பெரும்பாலான வீடுகள் சுத்தமாக இருப்பதற்கும் அதே சமயத்தில் அந்த வீடுகள் அருகே இருக்கும் குப்பைத்தொட்டிகள் அசுத்தமாக இருப்பதற்கும் காரணம் ஒன்றுதான். தாங்கள் வசிக்கும் வீடுகளை மக்கள் தங்களுடையதாக நினைத்துக் கொள்கின்றனர் அதே சமயத்தில் அருகில் இருக்கும் பொதுவான குப்பைத்தொட்டியை தனக்கு சொந்தமானதாக நினைத்துக் கொள்வதில்லை. ஆகவே தன்னுடைய பொருட்களுக்கு ஒருவிதமான விதியையும் தனக்கு சொந்தமில்லாத பொருளுக்கு வேறு ஒரு விதியையும் தனக்குத் தெரியாமலேயே மனிதன் உருவாக்கி விடுகிறான். அப்படிச் செய்யாமல், அனைத்துக்கும் ஒரே விதி என்று மனிதன் உருவாக்கினால், எந்த அகமும் சுத்தமாக மட்டும்தான் இருக்கும். அந்த விதி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணத்திற்கு ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதன் உடமையை திருடினால் சரி என்ற ஒரு விசித்திரமான விதியை ஒருவன் உருவாக்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், தான் திருடும் பொழுது அவனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி மற்றவர்கள் தன்னிடமிருந்து திருடும் போதும் வர வேண்டும். அப்படி வராமல் இருப்பதனால்தான் திருடும் குணம் தவறு எனப்படுகிறது. அதே இடத்தில், திருடுவதற்கு பதில் அன்பு செலுத்துவது என்னும் பழக்கத்தை வைத்துப் பாருங்கள். மற்றவர்களிடம் அன்புடன் இருப்பது, அவர்களிடம் இருந்து அன்பை பெற்றுக் கொள்வது இரண்டுமே சந்தோஷத்தை தரக்கூடிய செயல் அல்லவா? இதற்கு காரணம் தனக்கு மட்டும் ஒரு விதியை வைத்துக்கொள்ளாமல் பொதுவாக அனைவருக்கும் ஒரே விதி என்று வைத்துக் கொள்வதால்தான். இதன் காரணமாகவே எந்த ஒரு குழுவுக்கும் விதி எனப்படும் சட்டம் இயற்கையாகவே உருவாகிவிடுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய அகத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் அந்த இடம்தான் சொர்க்கம் எனும் வார்த்தைக்கு தகுதியான இடமாக மாறுகிறது. அந்த மனநிலையில் இருக்கும் எந்த ஒரு இடத்திலும் நோய்கள் கூட அதிகம் வருவதில்லை என்பதை சமீப காலத்தில் உங்கள் விஞ்ஞானம் கூட ஒப்புக் கொண்டிருக்கிறது. நான் கூறிய ஒரே ஒரு எளிமையான விதியை மட்டும் பின்பற்றினால் வரக்கூடிய இந்த மிகப்பெரும் நன்மையை பெறுவதற்கு ஒரு முறையாவது முயற்சித்துப் பாருங்களேன்?

கடந்த ஐந்து பகுதிகளாக அக அதிகாரத்தை பார்த்து வந்த நாம் இத்துடன் இந்த அதிகாரத்தை நிறைவு செய்து புதியதொரு தலைப்பில் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -